மெல்ல அசைந்து வரும் கோயில் தேரின் அனைத்து மூலைகளிலும் அசைந்தாடும் அந்தத் தேர்ச்சீலைகள் மற்றும் உருளை வடிவ வண்ணத்தோரணங்கள், கண்ணைப் பறிக்கும் வண்ணங்களில் குஞ்சங்களுடன் கூடிய அலங்காரத்தோரணங்கள் அனைவரது கவனத்தையும் ஈர்க்கின்றன. அவற்றின் மறுபெயர் 'தொம்பை! சுவாமி வீதியுலா வரும்பொழுது உயர்த்திப் பிடிக்கப்பட்டு ஊர்வலம் வரும் வண்ணக் குடைகள். திருவிழாப்பந்தலின் விதானத்தில் இழுத்துக் கட்டப்பட்டிருக்கும் வண்ணச்சீலையில் புராணக்காட்சிகள்... இவை யாவுமே 'கலம்காரி' கலைஞர்களின் படைப்புகள்.
தஞ்சை மாவட்டம் திருப்பனந்தாளுக்கு அருகில் உள்ள ஒரு சிறு கிராமம் சிக்கநாயக்கன்பேட்டை. திருவிடைமருதூர் தாலுக்காவில் பரம்பரை பரம்பரையாக இந்தத் தேர்ச்சீலைத் தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறது ஒரு குடும்பம். தமிழகத்திலேயே இங்கு மட்டும்தான் இந்தக் கலம்காரி தொழில் கைத்தொழிலாக நடைபெறுகிறது. இத்தொழிலில் பல தலைமுறைகளாக ஈடுபட்டு வருபவர் எம்பெருமாள். இவர் ஒரு பள்ளி ஆசிரியரும் கூட.
தந்தை எஸ்.எம். ராதாகிருஷ்ண நாயுடு, தாத்தா மன்னார் நாயுடு, கொள்ளுத் தாத்தா முத்துநாயுடு என்று பல தலைமுறைகளைப் பின்னோக்கி நினைவு கூர்கிறார். அரச வம்சத்தினருக்கும் பின்னர் ஜமீன்தார்களுக்கும் 'கலம்காரி' படைப்புகளைத் தங்கள் வம்சாவழியினர் செய்து கொடுத்ததைப் பெருமிதத்துடன் விளக்குகிறார் எம்பெருமாள்.
''அரசர்கள் நகர்வலம் மேற்கொள்ளும் போது வீரர்கள் முன்னெடுத்துப் போகும் மகட தோரணத்தில் மகரமீன் பொறிக்கப்பட்டிருக்கும். அதில் குஞ்சம் வைத்துத் தொங்கிக் கொண்டிருக்கும் துணி, மேலும் அரச சின்னம் பொறித்த கொடிகள் யாவற்றிற்கும் 'கலம்காரி' கலைஞர்களே பொறுப்பேற்றிருக்கின்றனர்.''
இந்தக் கலம்காரி தொம்பைகள் மற்றும் தேர்ச்சீலைகள் குறித்து நோடிகா வரதராஜன் எனும் பெண்மணி எழுதியுள்ள ஆய்வுக்கட்டுரையில் - தஞ்சை அரண்மனை, தருமபுர ஆதீனம், திருப்பனந்தாள் ஆகிய சமஸ்தானங்களோடு கலம்காரி கலைஞர்கள் இணைந்து பணியாற்றியிருப்பது பற்றிக் குறிப்பிட்டுள்ளார். மிகப் பழமையான கலம்காரி வேலைப்பாடுகள் செய்யப்பட்ட துணிகள் லண்டன் அருங்காட்சியத்திலும் பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கின்றதாம்.
கலம்காரி தயாரிப்புகளில் தொம்பை, அஸ்மானகரி, மகடதோரணம் ஆகியவை வெகுபிரசித்தம். அஸ்மானகரி என்பது திருவிழாப்பந்தலின் கூரையில் கட்டும் கலம்காரித் துணியாகும். தேர்களின் சிகரம் மற்றும் தொம்பைகளில் காணப்படுவதும் கலம்காரிக் கைவண்ணமே. கொடிகளில்... சிவன் கோயில் என்றால் நந்தியும், முருகன் கோயில் என்றால் வேலும் வரையப்படுகிறது. அடுத்து வருவது சிகரம். அதைத் தொடர்ந்து மூன்று அடுக்குகளாகத் தட்டிகள்.
குறிப்பிட்ட கோயிலின் மூலவர் திருவுருவம் இந்தத் தட்டிகளை அலங்கரிக்கிறது. எந்தக் கோயில் தேராக இருந்தாலும் விநாயகர் படம் மட்டும் கண்டிப்பாக இடம் பெறும். ஆனால் எந்தக் கடவுளுடையே தேரோ... அந்தக் கடவுளின் உருவம் மட்டுமே முதல் தட்டியில் வருவதுதான் சம்பிரதாயம். தொம்பைகளின் அளவு, தேருக்கு ஏற்றாற்போல் மாறுபடும். இப்படியான தகவல்களைச் சொல்லிக் கொண்டே தங்களது தொழிற்கூடத்திற்குள் அழைத்துச் செல்கிறார் எம்பெருமாள்.
நவீன காலத்துக்கேற்றாற் போல திரைச்சீலைகள், மேசை விரிப்புகள், சன்னல் திரைகள், வாயிற்தோரணங்கள், நவீன பாணி ஓவியங்களில் மிளிரும் சேலைகள் எல்லாமும் இப்போது கலம்காரி ஓவியக்கலையின் மூலம் தயாராகிறது.
மற்ற ஓவிய முறையைப் போல்தானே இதுவும் இருக்கப்போகிறது என்று அலட்சியமாக நினைத்து விட முடியாதபடி கலம்காரி ஓவியங்கள் தயாராகின்றன. கலம்காரி ஓவியத்திற்குத் தேவைப்படும் அத்தனைப் பொருள்களையும் அவர்களாகவே தயாரித்துக் கொள்கின்றனர். ஓவியத்திற்கான துணி, வண்ணங்கள் தூரிகைகள் யாவுமே இக் கலைஞர்களால் கண்ணும் கருத்துமாகத் தயார் செய்யப்படுகிறது. பருத்தியாலான துணியைப் பதப்படுத்துவதற்கு இவர்கள் எடுத்துக் கொள்ளும் முயற்சியை பிரம்மப்பிரயத்தனம் என்று சொன்னால் அது கொஞ்சமும் மிகையில்லை.
சாதாரண காடாத்துணியை சாணக்கரைசலில் ஊற வைத்து நன்கு பிசைகிறார்கள். பின்னர் பிரித்து மீண்டும் மீண்டும் கரைசலில் அழுத்தி, சாணிப்பாலைத் துணியில் முழுவதுமாக உள்வாங்கச் செய்கின்றனர். இரவு முழுவதும் அப்படியே வைத்திருந்து காலையில் உலர்த்துகின்றனர். புல்தரையில்தான் உலர்த்த வேண்டும். துணி உலர உலர வாளியில் இருக்கும் தண்ணீரைத் தெளித்துக் கொண்டேயிருக்கிறார்கள்.
மூன்று அல்லது நான்கு மணி நேரம் காய்ந்த பிறகு துவைத்து அலசி மீண்டும் காய வைக்க வேண்டும். மறுநாளும் சாணக் கரைசலில் முக்கி எடுத்துக் காய வைத்துத் துவைத்து அலசி என மீண்டும் அதே செய்முறை திரும்பவும் செய்யப்படுகிறது.
காய்ந்த துணியை மடித்து அது அழுந்துவதற்காகஅதன் மீது ஒரு பலகையை வைத்து விடுகிறார்கள். இது முழுக்க ஒருநாள் பணி. அடுத்ததாக இதற்கெனத் தனியாகத் தயாரிக்கப்படும் அடிப்படை திரவக்கரைசல் கலவையில் மீண்டும் துணியை ஊற வைக்கிறார்கள்.
கடுக்காயை நன்கு ஊற வைத்து சாந்து போல் அரைத்து எடுத்து கொண்டு அதனுடன் சமஅளவு பால் மற்றும் சாதம் வடித்த கஞ்சியைச் சேர்க்கின்றனர். இந்தக் கலவையை நன்கு கலக்கிய பிறகு அடிப்படை திரவக்கரைசல் தயார். வெளிர்மஞ்சள் நிறத்தில் இருக்கும் இந்தக் கரைசலில் மடித்து வைத்திருக்கும் துணியைப் போட்டு நன்கு பிசைந்து - பிரித்து - பிசைந்து பின்னர் பிழிந்து நன்றாக உதறி நிழலில் காய வைக்கின்றனர். இந்தச் செய்முறை மூன்று முறை திரும்பத் திரும்பச் செய்யப்படுகிறது. இவ்வ்வளவுக்குப் பிறகும் துணியை அழுத்தமாகப் பிழியக் கூடாது என்று எச்சரிக்கிறார் எம்பெருமாள்.
காய்ந்த பிறகு அந்தத் துணி, துணியைப் போலத் துவளாமல் தகடைப் போல் ஆகி மொடமொடப்பாக விடுகிறது. அதைத் திருப்பிப் போட்டு காய விடுகிறார்கள். மறுபடி மடித்து அதன்மீது பலகை வைப்பதுடன் கூடுதல் எடைக்காகக் கருங்கற்களையும் அடுக்கி வைத்து விடுகிறார்கள்.
அடுத்ததாக , ஒரு தகடு போல் மொடமொடவென இருக்கும் துணியை மிருதுவாக்கும் பணி தொடங்குகிறது. கனமான ஒரு மரத்துண்டு கொண்டு துணியை அடிக்கிறார்கள். பின்புறமாகத் திருப்பி மீண்டும் 'அடி' கொடுக்கும் வைபவம் நடக்கிறது. மிருதுவாகும் வரை இந்த சிகிச்சை ! தொடர்கிறது.
இதோ... கலம்காரி ஓவியம் வரைவதற்கான துணி தயார். அடுத்தது என்ன?
முதலில் எல்லைகளை வரையறுத்துக் கொள்ள வேண்டும். எல்லாவற்றிற்கும் அளவுகள் உண்டு. கறுப்பு வண்ணக்கரைசலில் நூலினைத் தோய்த்தெடுத்து வரிகளைப் பதிவு செய்து கொள்கிறார்கள். பின்னர் ஓவியத்திற்கான அடிப்படை வரிவடிவங்களை வரைதல்.
வரைவதற்குப் பயன்படுத்தும் தூரிகையையே கலம் என்கிறார்கள். மூங்கில் பட்டையின் முனையில் சிறு பிளவினை ஏற்படுத்திக்கொண்டு அதில் பருத்தித் துணியைச் சுற்றி நூல் கொண்டு கட்டிவிடுகிறார்கள். பல்வேறு அளவுகளில் கலம் தயார் செய்து கொள்கின்றனர். இந்தியில் எழுதுகோலுக்கு சொல்லப்படும் சொல்லே கலம்.
''பரம்பரையாக இதை ஊறுகோல் என்றுதான் அழைக்கிறார்கள். சமீபத்தில்தான் 'கலம்காரி' என்று மாறிவிட்டது. கலம் செய்வதற்கான மூங்கிலை நன்கு முற்றிய மரத்திலிருந்தே தேர்வு செய்ய வேண்டும். நல்ல பதமான மரத்துண்டை நீரில் ஊறப்போட்டு தேவையான போது எடுத்து கலம் தயாரித்துக் கொள்வோம்'' உற்சாகமாய் விளக்குகிறார் எம்பெருமாள்.
பனை மற்றும் ஈச்ச மரப் பட்டைகளைக் கல்கொண்டு நசுக்கி பெரியதும், சிறியதுமாய்ப் பல தூரிகைகள்? தயார்நிலையில் இருக்கின்றன. அவற்றை சாயக்குச்சி என்றும் சொல்கிறார்கள். வரைவதற்கு முன்பாகத் துணியை நன்கு இழுத்துக் கட்டி விடுகின்றனர். இதற்கென துணியின் இருமுனைகளிலும் பை போன்ற அமைப்பு உள்ளது. அடிப்படைக் கறுப்பு வண்ணக் கோடுகளைப் போட்டு ஆங்காங்கே கட்டி விடுகின்றனர். ஒவ்வொரு வண்ணப் பூச்சுக்குப் பின்னரும் துணி சலவை செய்யப்படுகிறது. வண்ணங்கள் ஒன்றோடொன்று கலந்து விடுவதைத் தடுப்பதற்காக இம்முறை கையாளப்படுகிறது.
மூங்கில்களை ஆறு, குளம் போன்ற நீர்நிலைகளில் பல நாள் ஊறவைத்து மெல்லிய பட்டைகளாக அவற்றைச் செதுக்கி பின்னர் அந்தப் பட்டைகளை வளையங்களாக்கி வைத்திருக்கிறார்கள். பை வடிவத்தில் நீளமாகத் தைக்கப்பட்ட கலம்காரியில் இந்த வளையங்களைப் பொருத்தினால் உருளை வடிவத்தில் தொம்பை தயாராகி விடுகிறது.
கலம்காரியில் கறுப்பு, சிவப்பு, மஞ்சள் மற்றும் நீலம் என்று நான்கு வண்ணங்களையே அடிப்படை வண்ணங்களாகப் பயன்படுத்துகின்றனர். தற்போது பச்சை வண்ணத்தையும் புதிதாகச் சேர்த்துக் கொண்டுள்ளனர். அடிப்படை வண்ணங்களின் அடர்த்தியைக் கூட்டியோ, குறைத்தோ வேறு சில வண்ணங்களையும் உருவாக்குகின்றனர். வண்ணங்கள் அனைத்துமே மூலிகைகளைக் கொண்டு தயாரிக்கப்பட்ட இயற்கை வண்ணக்கலவைகள் என்பது குறிப்பிடத்தக்கது.
கறுப்பு வண்ணத்திற்குப் பழைய இரும்புத்துண்டுகள், வெல்லம், கடுக்காய் ஆகியவற்றை சாதம் வடித்த கஞ்சியில் ஊறப் போடுகிறார்கள். நன்றாக ஊறிய பிறகு இரண்டு வார காலத்திற்குப் பிறகு நுரை பொங்கும் கறுப்பு வண்ணம் தயார்.
சிவப்பு வண்ணத்திற்கு சுருளிப்பட்டை (வெம்பாரைப் பட்டை என்றும் இதனைக் குறிப்பிடுகிறார்கள்) வேர்களுடன் படிகாரத்தையும் கலந்து கொதிக்க வைக்க வேண்டும். நீலி எனப்படும் அவுரி வேருடன் படிகாரம், சுண்ணாம்பு கலந்து கொதிக்க வைக்க மஞ்சள் நிறக்கலவை உருவாகிறது. மஞ்சளுக்குக் கடுக்காய்ப்பூவும் சேர்க்கிறார்கள். நீலத்திற்கு அவுரி மட்டும் சேர்த்தால் போதுமானது.
ஒவ்வொரு வண்ணப்பூச்சுக்குப் பிறகும் சலவை செய்து காய வைத்து மீண்டும் வண்ணமேற்றிய பிறகு, நுட்பமான வேலைப்பாடுகளைக் கவனமுடன் பார்த்துப் பார்த்து முழுமை பெறச் செய்வது சிந்தையைக் கவர்கிறது.
கலம்காரியின் சிறப்பு என்னவென்றால் ஒருமுறை ஒரு குறிப்பிட்ட வண்ணப்பூச்சை முடித்து சலவை செய்து விட்டால் அதன் பிறகு வேறு எந்த ஒரு வண்ணமும் அதன் மீது படியாது என்பதுதான்.
கலம்காரி ஓவிய முறைகளுக்கும் பழமையான சிற்பக்கலை, சுவர் ஓவியங்கள் ஆகியவற்றிற்கும் இடையே பல ஒற்றுமைகளைக் காண முடிகிறது. கலம்காரி கலைஞர்களின் பாரம்பரிய வேர்கள் ஆழமாய் ஊடுருவியிருப்பதை இதன் மூலம் அறிந்து கொள்ள முடியும் என்று பெருமையுடன் குறிப்பிடுகிறார் எம்பெருமாள்.
இன்றைய நவீன துணிகளின் வண்ண வடிவமைப்பிற்கும் முன்னோடியாகக் கலம்காரியைச் சொல்லலாம். கலம்காரி கலைஞர்கள் பலரும் ஆந்திரத்தைச் தாயகமாகக் கொண்டவர்கள். ''மசூலிப்பட்டணத்தில் ஏராளமான கலம்காரிக் கலைஞர்கள் இருக்கின்றனர். ஆனால் அவர்கள் எல்லாம் நவீன முறைகளைப் பயன்படுத்தி மொத்தமாக நூற்றுக்கணக்கில் தயாரிப்பது என்று முழுக்க முழுக்க வணிக நோக்கத்தில் செயல்பட ஆரம்பித்து விட்டனர். நாங்கள் மட்டுமே தளராத மன உறுதியுடன் பாரம்பரிய முறைப்படி கலம்காரி படைப்புகளை உருவாக்கி வருகிறோம்'' என்று பெருமிதத்துடன் கண்கள் மின்னக் கூறுகிறார் எம்பெருமாள்.
தாத்தாவிடமிருந்தும் தந்தையிடமிருந்தும் கலம்காரிக் கலையைக் கற்றுக் கொண்டவர், எம்.ஏ.எம்.எட். பயின்ற ஓர் ஆசிரியர் என்பதும் பதவி உயர்வைக் கூட புறக்கணித்துவிட்டு முழுநேரக் கலம்காரிக் கலைஞராகவே மாறிவிட்டார் என்பதும் கூடுதல் தகவல்கள்.
அயல்நாடுகளில் இருந்தெல்லாம் அழைப்புக்கள் இவரின் வீட்டுக் கதவுகளைத் தட்டத் தொடங்கியிருப்பது மகிழ்ச்சியான செய்தி. அமெரிக்கப் பல்கலைக்கழகம் ஒன்றின் மாணவர் குழு எம்பெருமாளின் பணிமுறையைப் பார்வையிட்டுச் சென்றுள்ளது.
''அப்ளிக் எனப்படும் முறையிலும் கலைப்படைப்புகளை செய்து தருகிறோம். கலம்காரியுடன் ஒப்பிட்டால் இது மிகச் சுலபமானது என்றே சொல்ல வேண்டும்.
கலம்காரி ஓவியங்கள் தீட்டும்போது அலாதியான மனநிறைவு கிடைக்கிறது. அதன் பாரம்பரியம், அதற்கான மதிப்பு ஆகியவற்றை அழிந்து விடாமல் பாதுகாக்க வேண்டும் என்பதே எனது லட்சியமாக இருக்கிறது.
அயல்நாட்டுக் கொடிகளை எல்லாம் கூட கலம்காரியில் செய்து கொடுத்திருக்கிறோம். ரஷ்யாவில் நடைபெற்ற கலாச்சாரத் திருவிழாவுக்கு ஏராளமான கலம்காரி படைப்புகளை அனுப்பி வைத்ததைக் குறிப்பிட்டுச் சொல்லலாம். அவையெல்லாமே நவீன பாணி ஓவியங்கள். 500 மீட்டர் நீளமுள்ள துணியில் வரைந்து கொடுத்ததை ஒரு சாதனை என்றே சொல்வேன்''
எம்பெருமாளின் உறவினர்கள் பலரும் சிக்கல்நாயக்கன்பேட்டையில் வசித்து வந்தாலும், இவர் ஒருவர் மட்டும்தான் கலம்காரித் துணியில் ஓவியம் தீட்டும் பணியைச் செய்து வருகிறார். மூங்கில் பட்டைகள் தயாரிப்பது, முன்னால் சொன்ன துணி தயாரிப்பு, வண்ணக்கலவை தயாரிப்பு போன்றவைகளை ஏனையவர்கள் பார்த்துக் கொள்கிறார்கள்.
கற்றுக் கொண்ட கலைக்காகப் பதவியையும் வசதிகளையும் துறந்து லட்சியப்பயணம் மேற்கொண்டுள்ள இது போன்ற கலைஞர்கள் இருக்கும்வரை கலம்காரி கலை ஒருபோதும் அழிந்து விடாது.
சந்திப்பு : கண்ணம்மா
தொகுப்பு : பா.சங்கர்
ஆறாம்திணை இணைய இதழில் வெளியானது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக