'' ஹைய்....யா 'ஹை லைட்ஸ்' வந்தாச்சு....'' குழந்தைகளின் கூக்குரலில் வீடே கிடுகிடுக்கிறது. யார் முதலில் படிப்பதென்று கடுமையான போட்டி. படத்தில் ஒளிந்திருக்கும் பொருள்களைத் தேடித் தேடிக் கண்டுபிடிக்கும் குழந்தைகளின் முகத்தில் குதூகலம். படிக்க வேண்டும் என்றாலே முகத்தைச் சுளிக்கும் குழந்தைகள் ஆர்வத்தோடு அந்தப் புத்தகத்தைப் பக்கம் பக்கமாய்ப் பரவசத்துடன் படிப்பதை வியப்புடன் பார்க்கிறோம்.
புத்தகத்தின் முகப்பில் 'ஹை லைட்ஸ்' என்ற தலைப்பு உயரொளி பாய்ச்சுகிறது. அமெரிக்காவிலிருந்து வெளிவரும் இந்தக் குழந்தைகள் புத்தகம் உலக அளவில் மிகப் பெரிய வாசகர் வட்டத்தை வளர்த்துக் கொண்டுள்ளது. அரை நூற்றாண்டுக்கும் மேலாகச் சுட்டிக் குழந்தைகளைச் சுண்டியிழுத்துப் படிக்கும் ஆர்வத்தை வளர்த்து வரும் 'ஹைலைட்ஸ்' இப்போது இந்தியாவிலும்.
ஆங்கிலத்தில் வெளிவரும் 'ஹைலைட்ஸ்' படிப்பதை ஒரு இனிய அனுபவமாக மாற்றுகிறது. அழகிய வண்ணப்படங்களுட,ன் சிறுவர்களின் சிந்தனையைத் தூண்டும் விதமாக... அறிவியல் பூர்வமான அணுகுமுறையுடன் படிக்கத் திகட்டாத பல்வேறு விஷயங்கள் பக்கத்துக்குப் பக்கம் அணி வகுக்கின்றன.
குழந்தைகளுக்கான புத்தகங்களில் 'ஹைலைட்ஸ்' ஒரு முன்னோடி என்றால் அது கொஞ்சமும் மிகையாகாது. 'ஹைலைட்ஸ்' தோன்றிய கதையே சுவையானது. இந்தக் குழந்தைகள் பத்திரிகையின் உருவாக்கத்தின் பின்னணியில் ஓர் ஆசிரியத் தம்பதிகள் இருப்பதில் வியப்பேதுமில்லை.
கேரி கிளீவ்லேண்ட் மையர்ஸ், கரோலின் கிளார்க் மையர்ஸ் இருவருமே ஆசிரியப் பணியில் மிகுந்த அனுபவம் வாய்ந்தவர்கள். எழுதுவதையும், படிப்பதையும் கற்பிப்பதில் நிபுணர்கள். உளவியலில் டாக்டர் பட்டம் (கொலம்பியா பல்கலைக் கழகம்) பெற்றவர் கேரி மையர்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது.
முதல் உலகப் போரின் போது தம்பதிகள் இருவரும், கல்வியறிவில்லாத படைவீரர்கள் பலருக்கும் அறிவொளி வழங்கும் அரியதொரு பணியை மேற்கொண்டனர்.
அமெரிக்க ராணுவத்தில் பணியாற்றிய முதல் ஆசிரியை என்ற பெருமை திருமதி. மையர்ஸ் அவர்களைச் சேரும். பின்னர் கிளீவ்லேண்டில் உள்ள 'கேஸ் வெஸ்டர்ன் ரிசர்வ்' பல்கலைக் கழகத்தின் ஆசிரியர்களுக்கும், மாணவர்களின் பெற்றோருக்கும் போதிக்கும் பணியை மேற்கொண்டனர். தேசிய அளவில், குழந்தைகளின் முன்னேற்றத்திற்கான கல்வி எனும் அம்சத்தின் குறிப்பிடத்தக்க ஒரு சாதனையாளராக சுமார் 41 ஆண்டுகள் அயராது பணியாற்றிய டாக்டர். மையர்ஸ் 'பெற்றோர்களின் பிரச்சினைகள்' என்ற தலைப்பில் பத்திரிகைகளில் எழுதி வந்த தொடர் கட்டுரைகள் மிகப் பிரபலமானவை.
தம்பதிகளிடையே இருந்த ஒருங்கிணைப்பு மிகவும் அபூர்வமானது. இருவருமாக இணைந்து பல நூல்களை இயற்றியுள்ளனர்.
பல்லாண்டுகளாகக் குழந்தைகள், அவர்களின் பெற்றோருடன் நெருங்கிப் பழகி அவர்களின் விருப்பங்கள், குண நலன்கள் ஆகியவற்றை ஒரு ஆய்வு நோக்கோடு தங்கள் அனுபவக்களஞ்சியத்தில் சேர்த்து வந்தனர். அந்த அனுபவங்களின் மூலம் குழந்தைகளுக்கான ஒரு பத்திரிகை எப்படி இருக்க வேண்டும் ? அதில் என்னென்ன அம்சங்கள் இடம் பெற வேண்டும் என்பது குறித்த ஒரு தெளிவான சிந்தனை அவர்களுக்குள் உருவானது.
'சில்ட்ரன்ஸ் ஆக்டிவிடீஸ்' என்ற பெயரில் வெளிவரும் ஒரு பத்திரிகையில் பணிபுரியும் வாய்ப்பும் அவர்களுக்குக் கிடைத்தது. ஆனால், அங்கு அவர்களின் சிந்தனைகளுக்கு முழுமையான செயல் வடிவம் தர இயலாத சூழல் இருந்ததால், தாங்களே சுயமாக ஒரு சிறுவர் பத்திரிகை வெளியிட வேண்டும் என முடிவெடுத்தனர். இதைத் தொடர்ந்தே 1946 ஆம் ஆண்டு பென்சில்வேனியாவில் உள்ள ஹோன்ஸ்டேல் பகுதியிலிருந்து குழந்தைகளுக்கான மாத இதழாக 'ஹை லைட்ஸ்' வெளிச்சமிடத் தொடங்கியது. அன்று முதல் இன்று வரை 'ஹை லைட்ஸ்' இதழின் பிரகாசம் கூடிக்கொண்டே வருகிறது என்றே சொல்ல வேண்டும்.
சந்தாதாரர்களின் எண்ணிக்கை அடிப்படையில், மிகப் பெரிய அளவிலான குழந்தைகள் பத்திரிகையாக 'ஹை லைட்ஸ்' மிளிர்கிறது. 2.5 மில்லியன் குடும்பங்களில் 'ஹை லைட்ஸ்' ஆர்வமுடன் படிக்கப்படுகிறது.
கல்வித்துறையில் உலக அளவில் அங்கீகரிக்கப்பட்டு மதிக்கப்படும் ஒரு சிறுவர் மாத இதழாக 'ஹை லைட்ஸ்' திகழ்கிறது. உண்மையில், பெரியவர்களும் விரும்பிப் படிக்கும் ஓர் இதழாகவே 'ஹை லைட்ஸ்' உள்ளது என்பது குறிப்பிடத்தக்க விஷயம்.
சிறுகதைகள், நகைச்சுவைத் துணுக்குகள், அறிவியல், தொழில்நுட்பம் குறித்த கட்டுரைகள், உலகின் தலைசிறந்த மனிதர்களின், சாதனையாளர்களின் வாழ்க்கை வரலாறு, விடுகதைகள், சிந்தனையைத் தூண்டும் புதிர்கள், பொது அறிவுக் கேள்வி-பதில், கலையம்சமுள்ள கைவினைப் பொருள்களின் செய்முறை விளக்கங்கள் என 'ஹை லைட்ஸ்' இதழின் சிறப்பியல்புகள் ஒளி மிகுந்தவை.
'படத்தில் ஒளிந்திருக்கும் பொருள்களைக் கண்டுபிடி' என்ற பகுதியை முயற்சி செய்யும் குழந்தைகளின் கண்கள் ஆர்வ மிகுதியில் ஒளிர்வதைக் காண மகிழ்ச்சியாக இருக்கிறது.
உலகெங்கிலுமிருந்தும் குழந்தை வாசகர்கள் அனுப்பும் கடிதங்கள், ஓவியங்கள் பிற தகவல்கள் 'ஹை லைட்ஸ்' இதழில் தவறாமல் இடம் பெறுகின்றன.
'' குழந்தைகளின் சிந்திக்கும் திறனையும், கற்பனை வளத்தையும் பெருக்குவதே 'ஹை லைட்ஸ்' இதழின் அடிப்படை நோக்கம்'' என்கின்றனர் மையர்ஸ் தம்பதிகள். வேடிக்கைப் புதிர்கள், கணிதப்புதிர்கள், அறிவியல் புத்தகங்கள், விதவிதமான டைனோசார்கள் குறித்த புத்தகங்கள், சிறுகதைகள் என 'ஹை லைட்ஸ்' அவ்வப்போது தொகுப்புகளையும் வழங்கி வருகின்றது.
படித்துவிட்டுத் தூக்கி எறிந்துவிடக் கூடியதாக அல்லாமல் என்றென்றும் போற்றிப் பாதுகாக்க வேண்டிய அறிவுப் பெட்டகமாக, சிறு நூலகமாக 'ஹை லைட்ஸ்' இதழ்கள் விளங்குகின்றன.
கணனி மூலம் கற்பதற்கான சி.டி. ரோம்களையும் 'ஹை லைட்ஸ்' வெளியிடுவது சிறப்பம்சமாகும். 'ஹைலைட்ஸ்' இதழின் வெளியீடுகளான இந்தக் கையடக்கக் கணனி வட்டுகளுக்கும் அமோக வரவேற்பு உலகெங்கும் இருக்கிறது.
உலகத் தரம் வாய்ந்த 'ஹை லைட்ஸ்' இதழ் இந்தியாவிலும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது சந்தாதாரர்களுக்கு மட்டுமாக என்ற அளவில் 'லோட்டஸ் லேர்னிங்' நிறுவனம் 'ஹை லைட்ஸ்' இதழை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. அரையாண்டு சந்தாவாக ரூ. 500 ம் ஆண்டுச் சந்தாவாக ரூ. 850 ம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விலை சற்றுக் கூடுதலாகத் தோன்றினாலும் 'விஷயம்' இல்லாமல் இல்லை. குழந்தைகளின் மனதை ஒருமுனைப்படுத்துவதிலும் சிந்தனை மற்றும் செயல்திறனை வளர்ப்பதிலும் 'ஹைலைட்ஸ்' குறிப்பிடத்தக்க மாற்றத்தை... முன்னேற்றத்தை உருவாக்கும் என்றே தோன்றுகிறது.
பா.சங்கர்
ஆறாம்திணை இணைய இதழில் வெளியானது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக