க்ரீச்... என சத்தமெழுப்பியபடி அழுத்தமாக பிரேக் அடித்து அரை வட்டமாகச் சுழன்று நிற்கிறது அந்த வாகனம். தடதடவென இறங்கும் திடகாத்திரமான ஆசாமிகள், திடீரென வீட்டுக்குள் நுழைந்து விட அதிர்ச்சியில் வாயடைத்துப் போகிறது அந்தக் குடும்பம்.
''ஏய்... ஏய்... யாருடா நீங்க, உங்களுக்கு என்ன வேணும்?'' வெளிறிப் போன முகத்தோடு வினா தொடுக்கிறார் குடும்பத் தலைவர்.
அலட்டிக் கொள்ளாமல் சிரித்தபடியே பேசுகிறான் கும்பலின் தலைவன்.
'' இங்க பாருங்க... வீணா முரண்டு பண்ணாதீங்க. உங்களுக்கு ரெண்டு நாள் டைம் கொடுக்கறேன். சத்தம் போடாம வீட்டைக் காலி பண்ணிடுங்க... சரியா! எங்கே... பெரிய பொண்ணு, காலேஜ்லே இருந்து இன்னும் வரலியா ?'' அவன் பேசப் பேச மெளனமாய்த் தலையசைக்கிறார்.
இது ஏதோ திரைப்படத்தில் வரும் ஒரு காட்சியல்ல. சென்னை நகரில் வெளிச்சத்துக்கு வராமல் திரை மறைவில் அரங்கேறும் உண்மைச் சம்பவம். ஆம். 'கட்டப் பஞ்சாயத்து' என்ற கலாச்சார இருள் சென்னை நகரின் மீது கவியத் தொடங்கிவிட்டது. சொத்து விஷயமாக நீதிமன்றத்தில் உறவினருடன் போராடிக் கொண்டிருந்த அந்த அப்பாவிக் குடும்பத் தலைவர், அச்சுறுத்தலுக்குப் பயந்து அடுத்த நாளே வீட்டைக் காலி செய்கிறார். சட்டத்திற்குப் புறம்பான இத்தகைய நடவடிக்கைகள் ஒரு தொழிலாகவே வளர்ந்து வருகிறது.
இதன் பின்னணியில் பண பலம், அரசியல், அடியாட்கள் என்று இருப்பதால் இதை எதிர்த்துச் சாமானியர்களால் குரல் எழுப்ப முடிவதில்லை. நகரில் கட்டப் பஞ்சாயத்து செய்வதற்கெனப் பல குழுக்கள் இயங்கி வருகின்றன.
வழக்குரைஞர்கள், பெண்கள் உள்பட சமூகத்தில் உயர்நிலை வகிக்கும் பலர் இத்தகைய குழுக்களில் இடம் பெற்றிருப்பதுதான் ஆச்சரியம். இவர்கள் பயன்படுத்தும் வாகனங்கள், தகவல் தொடர்புக் கருவிகள் இத் தொழிலின் செல்வாக்கை வெளிச்சமிடுவதாக உள்ளன.
இதில் பல குழுக்கள் தங்களை ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் பிரதிநிதிகளாக அடையாளம் காட்டிக் கொள்வதும் குறிப்பிடத்தக்கது. பல கோடி ரூபாய் சம்பந்தப்பட்ட பிரச்சினையிலிருந்து சாதாரண கூலித் தகராறு வரை இவர்கள் மூக்கை நுழைக்காத இடமே இல்லை எனலாம். குடித்துவிட்டுப் பொறுப்பின்றி நடந்து கொண்டதற்காக ஓட்டுநரைப் பணி நீக்கம் செய்தது ஒரு தனியார் நிறுவனம்.
கட்டப் பஞ்சாயத்துக் கும்பல் தலையிட அந்த ஓட்டுநரை மீண்டும் பணியமர்த்த வேண்டிய தர்மசங்கடமான நிலை அந்த நிறுவனத்துக்கு ஏற்பட்டிருக்கிறது.
அடுக்கு மாடிக் கட்டடங்களின் நில உரிமையாளர்கள் இக் குழுக்களால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். எந்தப் பிரச்சினை என்றாலும் இவர்களின் தலையீடு இருந்துவிட்டால் அங்கு சட்டம் ஒழுங்கு இதற்கெல்லாம் துளி கூட இடமில்லை.
தனியார் வங்கி ஒன்றின் 'கடன் அட்டை' பணம் வசூலிக்கும் பொறுப்பிலிருக்கும் ஒரு பெண்மணியின் நடவடிக்கை மிரள வைக்கிறதாம். இதில் விசேஷம் என்னவென்றால், பாதிக்கப்பட்டவர்கள் காவல் துறையினரிடம் புகார் செய்வது என்பது மிக மிக அபூர்வம் என்பதுதான்.
''நாங்கள் நடவடிக்கை எடுக்கத் தயாராகவே இருக்கிறோம். ஆனால் வெகு சிலரே தைரியமாக முன் வந்து புகார் செய்கின்றனர்'' என்கிறார் ஒரு காவல் துறை அதிகாரி.
உள்ளூர் அரசியல்வாதிகள், கவுன்சிலர்கள், அரசியல் செல்வாக்கு மிகுந்த குடும்பத்துடன் தொடர்பு கொண்டவர்கள் என்று இக் குழுக்களில் இடம் பெற்றிருப்பதால் பாதிக்கப்பட்டவர்கள் வாய் திறக்க அஞ்சுகின்றனர்.
இப்படியான ஒரு கட்டப் பஞ்சாயத்து குழுவில் இடம் பெற்றுள்ள அமைந்தகரையைச் சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர், ''எங்கள் நடவடிக்கைகள் எந்த வகையிலும் சட்டத்திற்குப் புறம்பானவை அல்ல. நாங்கள் ஒடுக்கப்பட்டவர்களுக்காகவும், சமூகத்தில் இழிவான நிலையில் உள்ளவர்களுக்காகவும் போராடுகிறோம்... அவ்வளவுதான்'' என்கிறார்.
எப்படியிருப்பினும் சட்டம், ஒழுங்கு, நீதி ஆகியவற்றைத் தனி நபர்கள் தங்கள் கையில் எடுத்துக் கொள்வதை எந்த வகையிலும் அனுமதிக்க முடியாது. அரசு விரைந்து செயலாற்றி இந்த விஷச்செடியை முளையிலேயே கிள்ளி எறிய ஆவன செய்ய வேண்டியது அவசியம்.
பா.சங்கர்
ஆறாம்திணை இணைய இதழில் எழுதியது (1999)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக