புதன், 3 நவம்பர், 2010

சங்கீத பொம்மலாட்டம்... மாறாத கலை வண்ணம்

அழகிய வண்ண வண்ண பொம்மைகள். கதைக்கேற்ப, நடிப்பதும்,கை, கால் அசைத்துப் பாடலுக்கு நடனமிடுவதும் அற்புதமாக உள்ளது. அரங்கினுள் விளக்குகள் அணைக்கப்பட்டு, திரை விலகிக் காட்சிகள் விரிய விரிய பொம்மைகள் அசைய அசைய நாம் அந்தக் கனவுலகில் அப்படியே ஐக்கியமாகிறோம். அரிச்சந்திர புராணத்தின் அத்தனை கதாபாத்திரங்களும் உயிர் பெற்று வந்தனவோ என எண்ணும்படியாக 'சங்கீத பொம்மலாட்டம்' நம்மை ஆக்கிரமித்துக் கொள்கிறது.

வாருங்கள்...

மேடையில் இயங்கும் பொம்மைகளையும், அவற்றைத் திரைக்குப் பின்னாலிருந்து இயக்கும் பொம்மலாட்டக் கலைஞர்களையும் சற்று அருகில் சென்று ஆராய்வோம்...

மரப்பாவைக் கூத்தின் மறு பெயர்தான் சங்கீத பொம்மலாட்டம். இக் கலையில் 60 ஆண்டு அனுபவம் உள்ள கும்பகோணம் 'ஸ்ரீ முருகன் சங்கீத பொம்மலாட்டக் குழு' வின் உரிமையாளர் சங்கரநாதன் வழிவழியாக வளர்ந்து, பல தலைமுறைகளைக் கடந்து தளராத மன உறுதியுடன் இக்கலையைத் தாங்கிப் பிடித்து வருகிறார். தற்போது கோயில் மாநகரான கும்பகோணத்தில் வசித்து வருகிறார்.

சங்கரநாதன் இக் கலையைக் கற்றுக் கொண்டது அவரது தந்தை மணிகண்டனிடம். சங்கீத பொம்மலாட்டத்தில் மிகத் திறமை வாய்ந்தவரான புதுக்குடி ராமநாதக் குருக்களிடம் சிஷ்யராக இருந்த மணிகண்டன், வெகு சிரத்தையாக பொம்மலாட்டப் பாடம் படித்தார். கட்டுக்கோப்பான குரு குலவாசம், அவரைத் திறமையான கலைஞனாக வார்த்தெடுத்தது. குருவின் ஆசியுடன் சுயமாக பொம்மலாட்டக் குழுவைத் துவக்கினார். நல்ல வரவேற்பு. தனது மகனையும் பொம்மலாட்டக் கலைஞனாக்க வேண்டும் என்பதில் மணிகண்டன் உறுதியாக இருக்க, சங்கரநாதனுக்கு 10 வயதில் பயிற்சி துவங்கியது.

கும்பகோணம் பிடில் ராஜமாணிக்கம் பிள்ளையிடம் சங்கீதப் பயிற்சி. நான்கைந்து வர்ணத்துடன் சரி. தந்தையின் நிகழ்ச்சிகளில் எடுபிடியாக வேலை செய்ய ஆரம்பித்தார். அவரோ, மகன் என்பதால் சலுகை காட்டாது கடுமையாகப் பயிற்சியளிப்பார் கெடுபிடியாக.அனுபவப் படிப்பல்லவா? பசுமரத்தாணியாய்ப் பதிந்து கொண்டது.

சுருதி சுத்தமாய்ப் பாடுவதில் இருந்து, ஏற்ற இறக்கங்களோடு வசனங்களை உணர்ச்சிகரமாய் உச்சரிப்பது வரை அனைத்திலும் சங்கரநாதனின் தேர்ச்சி அவரது தந்தையைப் பெருமிதம் கொள்ளச் செய்தது.

தந்தையின் திடீர் மறைவுக்குப் பின் குழுவின் தலைமைப் பொறுப்பை சங்கரநாதன் ஏற்றுக் கொண்டார். பல சிரமங்களுக்கிடையிலும் 35 ஆண்டுகளாகத் தனது குழுவை வெற்றிகரமாக வழி நடத்தி வந்துள்ள அவர், தனது மகனையும் இதே துறையில் தயார் செய்திருப்பது அவரது கலையார்வத்தை வெளிப்படுத்துவதாக உள்ளது.

இதோ... அவரின் தாலாட்டும் ஞாபகங்கள்....

''கிராமங்களில் பொம்மலாட்டம் போட்டுக் குதித்துக் குதித்துக் கத்துவோம். மின்விளக்கு, ஒலிபெருக்கி வசதியெல்லாம் அப்போது கிடையாது. இரண்டு அகல் விளக்குகள் மட்டுமே இருக்கும். அந்த அகல் விளக்கு வெளிச்சத்தில்தான் முழு நிகழ்ச்சியையும் நடத்த வேண்டும். நாலரைக் கட்டையில் பாட வேண்டும். அடுத்த தெரு வரை கேட்கும் ! பாடல், இசை , வசனம் பொம்மைகளின் அசைவுகள் எல்லாம் ஒருங்கிணைந்துப் பிசகின்றி பிசிறின்றி அமைய வேண்டும்.

பொம்மைகளை ஆட்டுவிக்கும் நபர்தான் சூத்திரதாரி. கை, கால்களில் நூலைக் கட்டிக் கொள்ள வேண்டும். கடுமையான ஒத்திகை இதற்கு மிகவும் அவசியம். அசைவுகள் அனைத்திற்கும் அளவுகள் உண்டு. பொம்மையின் ஒவ்வொரு பாகத்தையும் தனித்தனியே செய்து நூலால் ஈணைத்திருப்போம். ஒரு சில பாவங்களைத்தான் ந்த பொம்மைகளில் கொண்டு வர முடியும்.

முதலில் கதை, வசனம், பாடல்கள் எல்லாம் தயார் செய்து கொள்வோம். பின்னர்தான் பொம்மைகள். இவற்றைச் செய்வது என்பது சற்றுக் கடினமான வேலைதான். மூன்று மாத காலம் உழைத்தால்தான் ஆறு பொம்மைகளையாவது செய்ய முடியும். கல்யாண முருங்கை மரத் துண்டுகளை வெயிலில் காய வைத்து, அதில் உடல் பாகங்களைச் செதுக்கி, அவற்றில் துளையிட்டு, அந்தத் துளைகளின் ஊடாக நரம்பு போல் கயிறுகளை இணைத்து அவயவங்கள் எல்லாம் நன்கு அசைவதை உறுதி செய்து... இப்படி மிகச் சிரமமான வேலை. பொம்மைகள் சாதாரணமாக மூன்றரை அடி உயரம் இருக்கும்.

எல்லாவற்றையும் தயார் செய்து கொண்ட பின்பே நிகழ்ச்சிகளுக்குச் செல்வோம். கோயில்களிலிருந்துதான் அதிகமான அழைப்புகள் வரும். விநாயகர் புராணம், வள்ளித்திருமணம், சுவாமி ஐயப்பன் கதை, அருணகிரிநாதர், திருத்தொண்ட நாயன்மார், ராமாயணம், சீதா கல்யாணம், பக்தப் பிரகலாதா, பக்த ருக்மாங்கதா, ஆண்டாள் கல்யாணம், பாமா விஜயம் இப்படிப் பல கதைகள்...[ மூச்சு வாங்கச் சொல்கிறார்]. 'அரிச்சந்திர புராணம்'தான் எங்களின் பிரதான பிரியமான நிகழ்ச்சியாகும்.

மாதத்திற்கு நான்கு நிகழ்ச்சிகள் கிடைக்கும் ; சமயத்தில் பத்து நிகழ்ச்சிகள் கூடக் கிடைப்பதுண்டு. அதே நேரத்தில் ஒன்றுமில்லாமல் போவதும் உண்டு. காட்சிகளுக்குத் தகுந்தபடி பொம்மைகளைச் சரியாக மாற்றிக் கொண்டே இருக்க வேண்டும். பொம்மைகளை ஆட்டுவிக்கும் சூத்திரதாரி சிறு தவறு செய்தாலும், பெரும் குழப்பமாகப் போய் விடும். பாடல்களெல்லாம் 'சொக்கையிரா' மாதிரி பாடுவோம். நாடக பாணிதான் பெரும்பாலும் கைகொடுக்கும்.

அரிச்சந்திர புராணத்தில் மயான காண்டம் வருமல்லவா ? அதில் 'பதி இழந்தனம்... பாலனை இழந்தனம்' என்ற பாடல் வரும். அதை நாலரைக் கட்டைக்கு கேதார கெளரி ராகத்தில் பாட வேண்டும். அப்போதுதான் எடுபடும். முகாரி, அகானா, கேதார கெளரி என ராகங்களை எல்லாம் காட்சிக்கேற்றாற் போல் மாற்றிக் கொண்டோம். [பாடலைப் பாடிக் காட்டுகிறார்]

முன்பெல்லாம் நான்கு, ஐந்து மணி நேரம் நிகழ்ச்சி நடக்கும். கிராமங்களில் அதைத்தான் விரும்புவார்கள். ஆனால், இந்த நவீன யுகத்துக்கேற்ப எல்லாமே இப்போது மாறி விட்டது. ஒன்றரை இரண்டு மணி நேரமாகச் சுருங்கி விட்டது. உடம்பும் அதற்கு மேல் ஒத்துழைக்க மாட்டேன் என்கிறது.

கதை முழுவதும் கருப்புத் திரையின் பின்னணியில்தான் நடக்கும். காட்சி மாற்றத்தின் போது விளக்குகளை அணைத்து விடுவோம். எல்லாம் தொடர்ச்சியாக நடக்கும். புதிய பொம்மை வருவதற்குத் தயாராக இருக்கும். அதற்கான ஆட்கள் தயாராக இருப்பார்கள். பொம்மைகளை இயக்கும் சூத்திரதாரிகள் இருவர்தான் என்றாலும், பொம்மையை கொண்டு வர, வெளியில் எடுக்க பலர் பின்னணியில் பரபரப்பாக இயங்குவார்கள். எல்லோரும் ஒத்தியங்கினால் மட்டுமே நிகழ்ச்சி சிறப்பாக அமையும்.

பாட்டு சொல்வதற்குத்தான் ஆள் கிடைக்காது. ஒருவருக்குப் பாட்டு வரும்; வசனம் வராது. வசனம் வந்தால் பாட்டு வராது. எல்லாம் பாவத்தோடு வர வேண்டும். யாவற்றையும் மனப்பாடம் செய்தாகணும். ஒத்திகை மிக மிக அவசியம். ஒருவரே பல குரல்களில் பேசுவதும் உண்டு.

கிட்டப்பா, டி.ஆர். மகாலிங்கம், கே.பி. சுந்தரம்பாள் பாடல்களெல்லாம் நாடகத்திற்கு நன்கு பொருந்தி வரும். சங்கரதாஸ் சுவாமிகள் எல்லாம் இருக்கும் போது சினிமாப் பாட்டெல்லாம் பாட முடியாது. தேவாரம், திருப்புகழ் தான் பாட முடியும்.

தற்போது எங்கள் குழுவில் 10 பேர் இருக்கிறோம். நிகழ்ச்சிக்கு 6000, 7000 ரூபாய் வாங்குவோம். போக்குவரத்துச் செலவு எங்களுடையது தான். தங்கும் வசதி, சாப்பாடு ஏற்பாடு செய்து தர வேண்டும்.

பொம்மைகள் செய்வதற்கு, அரசுத் தரப்பில் இரண்டாண்டுக்கு ஒருமுறை 5 ஆயிரம் ரூபாய் தருகிறார்கள். ஒருபொம்மை செய்வதற்கே குறைந்தது மூவாயிரம் தேவைப்படுகிறது. எங்களுக்குக் கிடைக்கும் இந்த உதவித் தொகை என்பது மிக மிகக் குறைவு.

எனக்குக் கிடைத்த மிகப் பெரிய விருதாக காஞ்சிபுரம் மகா பெரியவாள் எங்களை வாழ்த்தியதைத்தான் குறிப்பிடுவேன். 1969 ல் காஞ்சி சென்று நிகழ்ச்சி நடத்தினேன். நிகழ்ச்சியை ரசித்துப் பார்த்த பெரியவர் 'பொம்மலாட்டம்தான் உங்களுக்கு நல்லாயிருக்கும், நன்றாகப் பாடுகிறீர்கள். இந்தக் கலையை விட்டுவிடாமல் தொடர்ந்து நடத்துங்கள்' என வாழ்த்தினார். அதற்காகவே இன்னமும் ஒரு வைராக்கியத்துடன் தொடர்கிறேன்.'' கண்களில் உறுதி மின்ன தீர்க்கமான குரலில் சொல்கிறார்.

சங்கர நாதனைத் தொடர்ந்து அவரது மகன் முருகன் பேசுகிறார். அவர்தான் பொம்மாலாட்ட நிகழ்ச்சியில் பல குரல்களில் வசனம் பேசுபவர். பெண்ணாக, சிறுவனாக, ஆண் குரலில் எனப் பல விதமாகப் பேசிக் காட்டுகிறார். 'கீ-போர்டு' வாசிப்பது, பொம்மைகள் தயாரித்து அவற்றுக்கு வண்ணங்கள் பூசுவது என்று ஈடுபட்டு வருகிறார்.

''முதலில் சென்னை தமிழ் இசை நாடகச் சங்கத்தில்தான் நிகழ்ச்சிகள் நடத்திக் கொண்டிருந்தோம். பின், அவர்கள் மூலமாகவே கல்கத்தா... பாம்பே எல்லாம் சென்று நிகழ்ச்சி நடத்தியிருக்கிறோம். உடுப்பி, ராஜஸ்தான், திருவனந்தபுரம், விஜயவாடா இங்கெல்லாம் நிகழ்ச்சிகள் நடத்தியிருக்கிறோம். ஒருமுறை ரஷ்யாவுக்குப் போயிட்டு வந்தோம். அப்போது பிரதமராக இருந்த ராஜீவ்காந்தி எங்களுக்கு விருந்தளித்தார். அவர்களது வீட்டில் 10 நிமிட நிகழ்ச்சி ஒன்றுக்கும் தஞ்சாவூர் கந்தன் ஏற்பாடு செய்திருந்தார். பத்து கலைஞர்கள் சென்றிருந்தோம். பொய்க்கால் குதிரை, மயிலாட்டம், பொம்மலாட்டம் எல்லாம் நடத்தினோம். எங்கள் பொம்மலாட்டத்தைப் பார்த்து பிரியங்கா ரொம்ப சந்தோஷப்பட்டது இன்னமும் என் கண்ணிலேயே இருக்கிறது. பொம்மைகளை ஆசையோடு தடவிப் பார்த்தார்கள். கடைசியில் நிதியெல்லாம் கொடுத்து கெளரவித்தார்கள். து நடந்தது 1986 ல் என்று நினைக்கிறேன். சோனியாகாந்தி தன் கையால் பணம் கொடுத்தார். அதை சபாவிற்குச் செலவு செய்தோம். அந்தக் கணக்கையும் அவர்களுக்குத் தவறாது அனுப்பி வைத்தோம். தில்லி நாடக சபா எங்களுக்கு விருது வழங்கியது. தில்லி நண்பர் ஒருவரும் தமிழ்ப் பல்கலைக் கழகமும் எங்களை அறிமுகப்படுத்தியது.

இப்போது புதுப்புது டெக்னிக் எல்லாம் செய்யறோம். பொம்மை சூடம் ஏற்றி சாமி கும்பிடுவது, தீபாராதனை காண்பிப்பது, பாம்பு வரும் போது வாய் திறந்து மூடுவது, கண் அசைவது எல்லாம் செய்கிறோம். இதையெல்லாம் பார்த்து விட்டு ஆர்.எஸ்.மனோகர் அவர்கள் மிகவும் பாராட்டினார். சென்னை, திருச்சி எல்லா இடங்களிலும் அமோக வரவேற்பு.''

மீண்டும் சங்கரநாதன் தொடர்கிறார்.''ராஜஸ்தான் மாநிலம் உதய்பூர்ல ஒரு பப்பட் ஸ்டேடியம் இருக்கு, அங்கு எல்லா வித பப்பட்டையும் வைத்திருந்தார்கள். கிழக்காசியாவில் உள்ள கலைஞர்கள் எல்லோரையும் அழைத்திருந்தார்கள். தமிழ்நாட்டிலிருந்து நாங்கள் சென்றிருந்தோம். எங்களுக்கு ரொம்பவும் நல்ல பெயர் கிடைத்தது. இப்போதெல்லாம் முன்பு போல் வெளியே செல்ல முடிவதில்லை. எனது தம்பி, மகன் இருவரும்தான் இந்தக் கலையைத் தொடர்ந்து காப்பாற்ற வேண்டும். காப்பாற்றுவார்கள் என்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது'' என்று முடிக்கிறார் சங்கரநாதன். இப்படி ஒரு லட்சிய வெறி கொண்ட கலைஞர்கள் இருக்கும் வரை 'சங்கீத பொம்மலாட்டம்' வெற்றியுடன் தொடர்ந்து கொண்டுதானிருக்கும் என்ற நம்பிக்கை நம்முள் துளிர்க்கிறது. அரசாங்கமும் இக் கலைஞர்களின் தேவையைப் பூர்த்தி செய்து 'சங்கீத பொம்மலாட்டம்' தழைத்தோங்க உதவ வேண்டும்.

சந்திப்பு : கண்ணம்மா
தொகுப்பு : பா.சங்கர்

ஆறாம்திணை இணைய இதழில் வெளியானது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக