ஒரு தேசியக் கட்சியின் தலைவி. பிரதமர் பதவிக்கான வேட்பாளராகக் கருதப்படுபவர். மிகப் பெரிய அரசியல் பாரம்பரியம் சார்ந்த குடும்பத்தைச் சேர்ந்தவர் வேட்பு மனு தாக்கல் செய்த விதம் அதிர்ச்சியும், அதிருப்தியும் அளிக்கிறது. சோனியா காந்தி போட்டியிடவிருக்கும் தொகுதி குறித்து ஆரம்பம் முதலே ஒருவிதமான ரகசிய அணுகுமுறையைக் காங்கிரஸ் கையாண்டது.
இந்த அணுகுமுறை எதிர்விளைவையே ஏற்படுத்தியுள்ளது. பிரதான எதிரியான பா.ஜ.க. விழித்துக் கொண்டது. வலுவான வேட்பாளரை எதிர்கொள்ளவிருப்பதைத் தவிர்க்கவே காங்கிரஸ் தலைவர் சோனியா முயல்கிறார் என்ற உண்மையை அக் கட்சியே 'குதிருக்குள் இல்லை' எனும் விதமாக உணர்த்தியது வேடிக்கையானது.
சோனியா போட்டியிட பாதுகாப்பான தொகுதிகள் என்று அமேதி (உத்தரப்பிரதேசம்), பெல்லாரி (கர்நாடகம்), மற்றும் கடப்பா (ஆந்திரம்) ஆகிய தொகுதிகளைக் காங்கிரஸ் தேர்வு செய்திருந்தது.
அமேதி தொகுதியில் சோனியாவை எதிர்பார்த்த பா.ஜ.க., அங்கு அனுபவம் வாய்ந்த சஞ்சய்சிங்கைக் களமிறக்கி விட்டது. இதனால் பின்வாங்கிய காங்கிரஸ் ஆலோசகர்கள் பெல்லாரி அல்லது கடப்பாவில் சோனியாவைப் போட்டியிட வைப்பதென்று முடிவு செய்தனர். ஆனால் காங்கிரசின் ஒவ்வொரு அசைவையும் பா.ஜ.க. கூர்ந்து கவனிக்கத் தவறவில்லை. வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான இறுதி நாள் நெருங்கிவிட்ட நிலையில் பரபரப்பு உச்சக்கட்டத்தை அடைந்தது.
சோனியா போட்டியிடப் போவது பெல்லாரியா? கடப்பாவா? காங்கிரஸ் கட்சியினரே கைகளைப் பிசைந்தனர்.
இந்நிலையில் தான் சோனியாகாந்தி கடந்த செவ்வாயன்று (17.08.99) காலை ஹைதராபாத் வந்தார். காங்கிரஸ் தலைவர்கள் ஒய்.எஸ். ராஜசேகர் ரெட்டி மற்றும் குலாம் நபி ஆசாத் இருவரும் சோனியா கடப்பா தொகுதியில் போட்டியிடுவார் என்று குறிப்பிட்டனர். கடப்பா தொகுதியில் ஏற்பாடுகள் எப்படி உள்ளன என்று மேற்பார்வையிட, ராஜசேகர் ரெட்டி விரைந்தார். இது கடப்பாவில் சோனியா போட்டியிடுகிறார் என்ற செய்தியை ஊர்ஜிதம் செய்வதாக அமைந்தது.
புதன்கிழமை காலை குலாம் நபி ஆசாத் செய்தியாளர்களிடம், ''நாங்கள் கடப்பா செல்கிறோம் அங்கிருந்து திரும்பியதும் சோனியா உங்களைச் சந்திப்பார்'' என்று அறிவித்தார்.
''நீங்கள் பெல்லாரி செல்லவில்லையா?'' என்று செய்தியாளர்கள் மடக்கினர். ''பெல்லாரி செல்வதாயிருந்தால் நாங்கள் எதற்கு ஹைதராபாத் வரவேண்டும் ?'' என்று சாமர்த்தியமாகப் பதிலளித்தார் ஆசாத்.
சோனியா விமானநிலையத்திற்குப் புறப்படும் முன்பாக முன்னாள் காங்கிரஸ் அமைச்சர் முகமது கனி, கடப்பாவில்தான் சோனியா போட்டியிடுகிறார் என்று அறிவித்தார். சோனியா ஹைதராபாத் வந்தவுடனேயே பா.ஜ.க. சுறுசுறுப்படைந்தது. கடப்பாவில் சோனியாவை எதிர்த்து யாரை நிறுத்துவது என பா.ஜ.க. உயர்மட்டத் தலைவர்கள் அவரச ஆலோசனை செய்துள்ளனர்.
பிரதமர் வாஜ்பாய், உள்துறை அமைச்சர் அத்வானி இருவரும் நடிகை விஜயசாந்தியை நிறுத்த முடிவு செய்தனர். ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவும் இதற்கு சம்மதித்துள்ளார்.
சென்னையில் இருந்த நடிகை விஜயசாந்தியை அவசரம் அவசரமாகக் கடப்பா வரவழைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்கென மூன்று மூத்த தலைவர்களை நாயுடு நியமித்துள்ளார். அவர்கள் விமான நிலையத்தைத் தொடர்பு கொண்டு கேட்ட போது சோனியா பெல்லாரிக்கு சென்றிருப்பதாகத் தெரிந்தது.
கடப்பாவில் ஆவலோடு காத்திருந்த அனைவருக்கும் ஏமாற்றம். அதே வேளையில் பெல்லாரி சென்ற சோனியா அங்கு தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார் . ஆனால் அங்கும் பா.ஜ.க. தயாராகவே காத்திருந்து.
முன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் சோனியாவை எதிர்த்து மனு தாக்கல் செய்தார். காங்கிரஸ் கட்சி எதைத் தவிர்க்க வேண்டும் என நினைத்ததோ அது நடக்கவில்லை.சோனியாவின் சிறப்புப் பாதுகாவலர்களுக்குக் கூட அவரது பெல்லாரி பயணம் குறித்து தெரிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பெல்லாரி தொகுதி காங்கிரஸ் கட்சியின் கோட்டை என்பது அரசியலில் அரிச்சுவடி படிப்பவருக்குக் கூட தெரிந்த விஷயம். 1957 இல் இருந்து காங்கிரஸ் வசம் உள்ள இத் தொகுதியில் காங்கிரஸ் தோற்றதாக வரலாறே இல்லை. அப்படிப்பட்ட ஒரு வலுவான தொகுதியில் ராஜ கம்பீரத்தோடு, தொண்டர்கள் புடை சூழ அமர்க்களமாக மனு தாக்கல் செய்வதை விட்டு இப்படி ஒரு மர்ம நாடகத்தைக் காங்கிரஸ் அரங்கேற்றியிருப்பது தேவைதானா?
இது அக் கட்சியின் நம்பிக்கையின்மையைப் பறைசாற்றுவதாக மக்கள் நினைக்க மாட்டார்களா? அரசியல் சாணக்கியத்தனமும் இதில் இல்லை. அப்படி இருந்தால் அதை அமல் செய்வதற்கான சாதுர்யமும் அவர்களிடம் இல்லை என்றுதான் எண்ண வேண்டியுள்ளது.
எப்படிப் பார்த்தாலும் இந்த மர்ம நாடகம் காங்கிரஸ் கட்சிக்குப் பெருமை சேர்ப்பதாக இல்லை.
பா.சங்கர்