திங்கள், 21 ஜனவரி, 2013

சிஎஸ்கே விஷி குஷி!


மாஸ்கோவில் உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி…. நம்ம சென்னை பையன் விஸ்வநாதன் ஆனந்துடன் மல்லுக்கட்டியது இஸ்ரேலின் போரிஸ் ஜெல்பாண்ட். விடாக்கண்டன் கொடாக்கண்டனாக இருவரும் இழுத்துப் பிடிக்க, 12 சுற்று முடிவில் 6-6 என சமநிலை.

சாம்பியன் யார் என்பதை தீர்மானிக்க விரைவு சுற்று ‘டை பிரேக்கர்’ ஆட வேண்டும் என்றதுமே ஆனந்த் தரப்பு உற்சாகமாகிவிட்டது. ரேப்பிட் சுற்றில் யோசிக்க அவகாசம் குறைவு. மின்னல் வேகத்தில் அடுத்தடுத்த மூவ் செய்தாக வேண்டும். இது மாதிரி ஆட்டம் என்றால் ஆனந்துக்கு அல்வா சாப்பிடுவது மாதிரி. முதல் ஆட்டம் டிரா ஆனதில் கொஞ்சம் சப் என்று இருந்தாலும், 2வதில் ஆனந்த் அபாரமாக விளையாடி வெற்றியை பறிக்க அவர் கை ஓங்கியது. அடுத்தது டிரா. கடைசி ஆட்டத்தில் டிரா செய்தாலே ஆனந்த் தான் மீண்டும் சாம்பியன் என்பது உறுதியாகிவிட்டதால் செம டென்ஷன்… ரசிகர்களுக்கு!

கொஞ்சமும் அலட்டிக் கொள்ளாமல், தற்காப்பாக ஆடி டிரா செய்த ஆனந்த் 5வது முறையாக உலக சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தினார். இணையத்தில் லைவ் ஆக பாலோ செய்த ரசிகர்கள் ஆனந்தக் கூத்தாடினார்கள். மீடியாக்களில் பிளாஷ் செய்தி பளபளத்தது. ஆனந்தின் பெசன்ட் நகர் வீட்டில் உற்சாக வெள்ளம்.

சிவந்து இறுகிய முகத்துடன் சாம்பியனுக்கு கை கொடுத்து வாழ்த்தினார் ஜெல்பாண்ட். ‘உண்மையில் மிகவும் டென்ஷனாக இருந்தது. வெளியில் காட்டிக் கொள்ளவில்லை. டை பிரேக்கரில் எதுவும் சொல்ல முடியாது. ஒரு மூவில் எல்லாமே தலை கீழாகிவிடும். ஜெல்பாண்டுக்கு நிறைய வாய்ப்பு கிடைத்தது. ஆனால், எல்லாமே எனக்கு சாதகமாக மாறியது அதிர்ஷ்டம் தான். இது வரை விளையாடிய உலக சாம்பியன்ஷிப்பில் இதுதான் மிகவும் கடினமான போட்டி. இப்போதுதான் ரிலாக்சாக இருக்கிறது’ என்று ஆனந்த் சொன்னபோது போட்டியின் கடுமையை உணர முடிந்தது.

என்னதான் 5 முறை உலக சாம்பியன் பட்டம் வென்றாலும், டாப் 10ல் ஆனந்த் 5வது இடத்தில் இருப்பது ரேங்கிங் முறையை கேலிக்கூத்தாக்கி இருக்கிறது. நார்வேயின் மேக்னஸ் கார்ல்சன் (22), ஆர்மேனியாவின் லெவோன் அரோனியன் (28) என்று பொடிசுகள் டாப்பில் இருந்தாலும், 40+ ஆனந்த் தான் இன்னும் அசைக்க முடியாத சாம்பியன் என்பதை அழுத்தமாக நிரூபித்திருக்கிறார்.

எப்படியோ, ஐபிஎல் தோல்வியால் சோகத்தில் இருந்த சென்னை ரசிகர்களை மீண்டும் புன்னகைக்க வைத்திருக்கிறார் இந்த சிஎஸ்கே… செஸ் சூப்பர் கிங் ஆனந்த்! அடுத்த உலக சாம்பியன்ஷிப் போட்டி 2013ல் சென்னையில் நடக்க அதிக வாய்ப்பு என்பதால், செஸ் ரசிகர்கள் இப்போதே துண்டு போட ரெடியாகி விட்டார்கள்.
 

பா.சங்கர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக