திங்கள், 21 ஜனவரி, 2013

சச்சின் ‘ஆட்டம்’ காண்கிறாரா?


பெயரைக் கேட்கும் போதே உலக அளவில் எந்த ஒரு பவுலருக்கும் உள்ளுக்குள் உதறல் எடுக்க வைப்பவர் சச்சின். கிட்டத்தட்ட கால் நூற்றாண்டாக இதே நிலைதான். இன்றும் கூட அதில் மாற்றம் இல்லை. ஆனால், சமீபத்திய போட்டிகளில் அவரது ஆட்டம் கடுமையாக விமர்சிக்கப்படுகிறது. நியூசிலாந்து டெஸ்ட் தொடரில் தொடர்ச்சியாக 3 முறை கிளீன் போல்டு ஆனதால், அவர் உடனடியாக ஓய்வு பெற வேண்டும் என்ற கருத்தும் ஓங்கி ஒலிக்கத் தொடங்கியிருக்கிறது.

சச்சின் ஆட்டம் அவ்வளவுதானா? டிராவிட், லஷ்மண் கூட கடைசி கட்டத்தில் இப்படித்தான் தடுமாறினார்கள். ஸ்டம்புகளைக் குறி வைத்து சற்று அளவு கூடுதலாக வீசப்படும் பந்துகளை சச்சினால் சமாளிக்க முடியவில்லை. வயதாகிவிட்டதால் பார்வை மங்கிவிட்டது. நினைத்த ஷாட்டை விளையாட உடல் ஒத்துழைக்க மறுக்கிறது. ஃபுட் ஒர்க் சுத்தமாக இல்லை… என்று அடுக்கிக் கொண்டே போகிறார்கள்.

தனது ஆட்டத்தில் அவருக்கும் திருப்தி இல்லை என்பது பெங்களூர் டெஸ்டின் 2வது இன்னிங்சில் கிளீன் போல்டு ஆனபோது நன்றாகத் தெரிந்தது. வழக்கமாக உணர்ச்சிகளை வெளிப்படுத்தாமல் அமைதியாக வெளியேறும் சச்சின், அன்று மட்டையை ஆக்ரோஷமாக சுழற்றி தனது விரக்தியை வெளிப்படுத்தியது, பார்க்கவே கஷ்டமாக இருந்தது.

சாதிக்கவோ, சம்பாதிக்கவோ இனி மிச்சம் மீதி எதுவும் இல்லை என்ற அளவுக்கு எல்லா வகையிலும் சிகரம் தொட்டவருக்கு இந்த நிலை தேவையா? கவுரவமாக விலகிக் கொண்டு இளைஞர்களுக்கு வழி விடலாமே என்ற கேள்வியில் நியாயம் இருந்தாலும், எப்போது ஓய்வு பெற வேண்டும் என்பதில் அவர் சரியான நேரத்தில் சரியான முடிவை எடுப்பார் என்ற நம்பிக்கை இருக்கிறது.

கங்குலி, டிராவிட், லஷ்மண் என்று அனுபவ வீரர்கள் ஒவ்வொருவராக வெளியேறி, இந்திய அணி புதிய தலைமுறையின் கைகளில் ஒப்படைக்கப்படுவது படிப்படியாக நிகழ்ந்து வருகிறது. இப்படியொரு மாற்றம் எந்த ஒரு அணியையுமே நிலைகுலையச் செய்யும் என்றாலும், இந்திய அணி அதிலும் கூட பெரிய சரிவை சந்திக்காமல் எதிர்நீச்சல் போட்டு கரையேறி இருக்கிறது என்பதே பெரிய சாதனைதான். புஜாரா, கோஹ்லி ஆட்டம் அதை உறுதி செய்துள்ளது. அடுத்து இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்கா என்று பலம் வாய்ந்த அணிகளுடன் மோத உள்ள நிலையில், சச்சின் இப்போது ஓய்வு பெறுவது என்பது சரியான முடிவாக இருக்காது. எப்படிப் பார்த்தாலும், அதிகபட்சமாக இன்னும் ஓராண்டு காலம் மட்டுமே அவரால் தாக்குப்பிடிக்க முடியும். ஆரம்பத்தில் இருந்தே, டி20 இளைஞர்களுக்கான ஆட்டம் என்று ஒதுங்கிக் கொண்டவர், இப்போது ஒருநாள் போட்டிகளையும் தேர்வு செய்தே விளையாடி வருகிறார். டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே கவனம் செலுத்தி வரும் சச்சினின் ஆட்டத்தை சமீபத்திய தோல்விகளின் அடிப்படையில் மதிப்பிடுவது தவறு.

அவர் மீதான அதிக எதிர்பார்ப்பும், பெரிய ஸ்கோர் அடிக்காததால் ஏற்படும் ஏமாற்றமுமே விமர்சனங்களின் வீச்சையும் பெரிதாக்கிவிடுகிறது. டெஸ்ட் போட்டிகளில் ரெய்னா இன்னும் தன்னை நிலைப்படுத்திக் கொள்ள முடியாமல் தடுமாறி வரும் நிலையில், சச்சின் ஓய்வு பெறுவது அணியை நிச்சயமாக பாதிக்கவே செய்யும்.

டென்னிஸ் எல்போ பாதிப்பால் தனது இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாமல் சற்றே திணறியபோது கூட இப்படித்தான் கடும் விமர்சனத்தை அவர் சந்திக்க நேர்ந்தது. ஆனால், சவால்களை சந்திக்க ஒருபோதும் தயங்காத சச்சின், அதிலிருந்து மீண்டு வந்து அடுக்கடுக்காக புதிய சாதனகளைப் படைத்ததை மறுக்க முடியாது.

இப்போதும் கூட, ‘சச்சின் ரன் மெஷின் இந்த நெருக்கடியை சமாளித்து மீண்டும் முழு வேகத்தில் இயங்கும்’ என்று கவாஸ்கர், மஞ்ரேக்கர் உட்பட பிரபலங்கள் பலரும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். டாப் அணிகளின் சவாலை அவர் எப்படி எதிர்கொள்ளப் போகிறார் என்பதை பொருத்திருந்து பார்ப்போம். அந்த தொடர்களின் முடிவில் தலைப்புக் கேள்விக்கான விடை நிச்சயமாகத் தெரிந்துவிடும்.           
– பா.சங்கர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக