திங்கள், 21 ஜனவரி, 2013

இனி நாடோடி அணியா இந்தியா?


ஒரு ஒலிம்பிக் அவமானம்

இந்திய ஒலிம்பிக் சங்கத்தை அதிரடியாக சஸ்பெண்ட் செய்துள்ளது சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில். நிர்வாகிகள் தேர்தலில் ஒலிம்பிக் அமைப்பின் விதிகளை கடைப்பிடிக்காமல், அரசின் புதிய விளையாட்டு நெறிமுறைகளின் கீழ் நடத்துவதுதான் காரணம் என்கிறார்கள். இவர்களின் அரசியல் விளையாட்டில் வீரர், வீராங்கனைகளை நாடோடிகளாக்கி விட்டார்கள்.

இந்திய விளையாட்டு அமைப்புகளில் கோஷ்டி பூசலும் அரசியல் ஆதிக்கமும் சர்வ சாதாரணம். பல நிர்வாகிகள் ‘பசை’ போட்டு ஒட்டிக்கொண்டு பதவியில் நீடித்து வருகிறார்கள். காமன்வெல்த் போட்டியில் ஊழல் சர்ச்சை வெடித்து கல்மாடி, பனோட் கைதானபோது இந்திய ஒலிம்பிக் சங்கம் கலகலத்தது.

புதிய நிர்வாகிகளை தேர்வு செய்ய வேண்டிய கட்டாயம். எதிர்ப்பு கோஷ்டி நீதிமன்றத்தில் வழக்கு போட்டதில், மத்திய அரசின் விதிமுறைகளின் கீழ் தேர்தலை நடத்த வேண்டும் என்று உத்தரவு போடப்பட்டது. இதில்தான் சிக்கல் ஆரம்பம்.

‘தேர்தலில் அரசு குறுக்கீட்டை ஏற்க முடியாது. எங்கள் விதிகளின்படி தான் நடத்த வேண்டும். இல்லை என்றால் சஸ்பெண்ட் செய்துவிடுவோம்’ என்று பல மாதங்களுக்கு முன்பாகவே சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில் (ஐஓசி) கண்டிப்பாக சொல்லிவிட்டது. பிரஷர் தாங்க முடியாமல் தலைமை தேர்தல் கமிஷனர் குரேஷி ராஜினாமா செய்துவிட நவம்பரில் நடக்க இருந்த தேர்தல், டிசம்பர் முதல் வாரத்துக்கு ஒத்திவைக்கப்பட்டது. அதற்கு முன்பே, காமன்வெல்த் ஊழல் சர்ச்சையில் கைதாகி சிறை சென்ற லலித் பனோட் பொதுச் செயலாளராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக அறிவித்தார்கள். ஏகத்துக்கு கடுப்பாகிப்போன ஐஓசி, இந்திய ஒலிம்பிக் சங்கத்தை அதிரடியாக சஸ்பெண்ட் செய்துவிட்டது.

நீதிமன்ற உத்தரவுக்கு கட்டுப்பட்டே அரசின் விதிமுறைகளின் கீழ் தேர்தலை நடத்த வேண்டி உள்ளது என்ற விளக்கத்தை ஐஓசி ஏற்கவில்லை. மேலோட்டமாக பார்த்தால் இதனால் என்ன பெரிய பாதிப்பு என்று தோன்றும். உண்மையில் இதைவிட பெரிய அவமானம் ஒரு நாட்டுக்கு இருக்க முடியாது. நிதியுதவி நிறுத்தப்படுவதையும், நிர்வாகிகள் புறக்கணிக்கப்படுவதையும் சமாளித்துவிடலாம். ஒலிம்பிக் தொடக்க விழாவில் தேசியக் கொடி ஏந்தி அணி வகுக்கும் உரிமையை இந்திய வீரர், வீராங்கனைகள் இழந்துவிடுவார்கள். ஐஓசி கொடியின் கீழ் நாடோடிகளாய் வேண்டுமானால் பங்கேற்கலாம். எங்கள் விதிகளை பின்பற்றும் வரை இதே நிலை நீடிக்கும் என்று ஐஓசி அறிவித்துவிட்டது.

நிர்வாகிகளுக்கான வயது வரம்பு, பதவிக் காலம் இந்த இரண்டும்தான் சர்ச்சைக்கு முக்கிய காரணம். தலைவர் பதவிக்கு அதிகபட்சமாக 12 ஆண்டுகள். ஐஓசி விதிப்படி தொடர்ச்சியாக 8 ஆண்டு, 4 ஆண்டு இடைவெளி விட்டு மீண்டும் போட்டியிடலாம். அரசின் விதியில் இடைவெளிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை. எழுபது வயதை கடந்தவர்கள் நிர்வாகிகளாக இருக்க முடியாது.

இதில் எதையுமே இந்திய விளையாட்டு அமைப்புகள் பின்பற்றுவதில்லை. வில்வித்தை சங்கத்தின் தலைவராக ஏற்கனவே 33 ஆண்டுகளை பூர்த்தி செய்துவிட்ட 80 வயது புரொபசர் வி.கே.மல்கோத்ரா, மீண்டும் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். தொடர்ச்சியாக 37 ஆண்டுகளுக்கு அவர்தான் தலைவர். ஜூடோ கூட்டமைப்பின் தலைவர் ஜெகதீஷ் டைட்லர் (16 ஆண்டு), கபடி கூட்டமைப்பின் தலைவர் கெலாட் (26 ஆண்டு)… என்று இந்த பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.

சஸ்பெண்ட் உத்தரவை அலட்சியப்படுத்திவிட்டு தங்கள் விருப்பம் போல தேர்தலை நடத்தியிருக்கிறார்கள். விளையாட்டு தீர்ப்பாயத்தை அணுகி தடையை நீக்கிக் கொள்ளலாம் என்ற நப்பாசை. தென் ஆப்ரிக்கா (நிறவெறி), ஆப்கானிஸ்தான் (தலிபான்) வரிசையில் இந்தியாவும் சேர்ந்துவிட்டதே என்று விளையாட்டு வீரர்களும் ஆர்வலர்களும்தான் அங்கலாய்க்கிறார்கள். கெட்டதில் ஒரு நல்லது என்பார்கள்… அது போல அவமானகரமான இந்த நிகழ்வுக்கு பிறகாவது விளையாட்டு அமைப்புகளை சீர் செய்வதற்கான வாய்ப்பாக இதை எடுத்துக் கொண்டு களையெடுக்க வேண்டும். விளையாட்டு நிர்வாகத்தில் அரசியல் தலையீடு அறவே இல்லாமல் பார்த்துக் கொள்வது அவசர அவசியம்.

பா.சங்கர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக