திங்கள், 21 ஜனவரி, 2013

வெற்றிகரமான ஒலிம்பிக்ஸ்!


விரக்தியூர் டூ நம்பிக்கைபாக்கம்

பெய்ஜிங் அக்கவுன்ட்டை (3) ஓவர் டேக் செய்ததால், ஒலிம்பிக் வரலாற்றிலேயே இந்தியாவுக்கு இதுதான் மிக வெற்றிகரமான போட்டி என்கிறார்கள். ஆலை இல்லாத ஊருக்கு இலுப்பை பூ சர்க்கரை போல ஏதோ ஒரு வெள்ளி, சில வெண்கலத்துடன் ரசிகர்களை திருப்திப்படுத்தியிருக்கிறார்கள். ஹாக்கியில் கிடைத்த அவமானம்தான் நெஞ்சை ரண்களமாக்கியிருக்கிறது.

எதிர்பார்த்த முடிவுதான் என்றாலும் கொஞ்சம் ஏமாற்றம் இருக்கத்தான் செய்கிறது. பொருளாதார வளர்ச்சியின் அடிப்படையில், இந்தியாவுக்கு ஒரு தங்கம் உட்பட அதிகபட்சம் 5 பதக்கம் கிடைக்கும் என்ற கோல்டுமேன் சேக்ஸ் கணிப்பு மெய்ப்பட்டிருந்தால் கூட மெச்சிக் கொண்டிருக்கலாம்.

விஜய் குமாரின் வெள்ளி, ககன், சாய்னா, மேரியின் வெண்கலம் ஓரளவு மானம் காத்திருக்கிறது. பாக்சிங் கால் இறுதியில் விஜேந்தர், தேவேந்திரோ சிங்கின் போராட்டம் பலித்திருந்தால் எண்ணிக்கை எகிறியிருக்கும். வில்வித்தையில் தீபிகா குமாரி அண்ட் கோ அளித்த ஏமாற்றம்தான் ஜீரணிக்கவே முடியவில்லை.

டென்னிஸ் நட்சத்திரங்கள் ஈகோ மோதலைத் தவிர்த்திருந்தால் ஆண்கள் இரட்டையர், கலப்பு இரட்டையரில் நிச்சயம் பதக்கம் கிடைத்திருக்கும். வட்டு எறிதலில் பூனியா, விகாஸ் கவுடா நம்பிக்கை அளித்தாலும் பதக்கத்துக்கும் அவர்களுக்கும் வெகு தூரம். ட்ரிபிள் ஜம்ப் பிரிவில் பங்கேற்ற ரஞ்சித் மகேஸ்வரி 3 வாய்ப்பிலும் தவறு செய்து, இவரையெல்லாம் யார் தேர்வு செய்து ஒலிம்பிக் போட்டிக்கு அனுப்பினார்கள் என்ற அளவுக்கு வெறுப்பேற்றினார்.

பாக்சிங்கில் விகாஸ், சங்வான் ஆகியோருக்கு எதிராக நடுவர்களின் முடிவுகள் அமைந்தது சர்ச்சையை கிளப்பியது. மகளிர் பேட்மிண்டன் இரட்டையர் பிரிவிலும் ஜுவாலா – அஸ்வினி ஜோடிக்கு அதிர்ஷ்டமில்லை. சொல்லி வைத்த மாதிரி இந்திய அணி மேல் முறையீட்டை மட்டும் ஒலிம்பிக் கமிட்டி உடனுக்குடன் தள்ளுபடி செய்தது, ஏதேனும் உள்நோக்கம் இருக்குமோ என்ற சந்தேகத்தை எழுப்பியது.  

மல்யுத்தத்தில் களமிறங்கிய சுஷில், யோகேஸ்வர், அமித், நரசிங், கீதா இந்நேரம் சாதித்திருந்தால் பதக்க எண்ணிக்கையில் ஒன்று அல்லது இரண்டு அதிகரித்திருக்கும். எப்படிப் பார்த்தாலும் ஒற்றை இலக்கத்தை தாண்டாது என்பது ஏற்கனவே தெரியும் என்றாலும், கொஞ்சம் முயன்றிருந்தால் 7 அல்லது 8 கூட எட்டியிருக்கலாம்.  

ஹாக்கி அணி எல்லா லீக் ஆட்டத்திலும் மண்ணைக் கவ்வியதுடன் கடைசி 2 இடத்துக்கு போட்டி போட வேண்டிய கட்டாயத்துக்குள்ளானது மிகப் பெரிய அவமானம் என்பதில் சந்தேகமே இல்லை. வீரர்கள் தேர்வில் ‘ஹாக்கி இந்தியா’ செய்த குளறுபடிதான் இந்த குழப்பத்துக்கு காரணம் என்று பிரபலங்கள் கொதிக்கிறார்கள். நீல நிற ஆடுகளம் தங்களுக்கு சாதகமாக இல்லை என்று சாக்கு போக்கு சொல்லி தப்பிக்கப் பார்ப்பதை விட, தவறு எங்கே… யாரால் என்று கண்டுபிடித்து சரி செய்வதே முக்கியம்.

கிரிக்கெட் கிரிக்கெட் என்று தொங்குகிறார்கள் என்று குறை சொல்வதில் அர்த்தமில்லை. கிரிக்கெட்டில் தோல்விகளை விட வெற்றிகளின் எண்ணிக்கை அதிகம். உலக கோப்பையும் வசமாகி இருக்கிறது. ஹாக்கியில் தங்கம் கிடைத்திருந்தால் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடி இருக்க மாட்டோமா? கோடிக் கணக்கில் பரிசு மழை கொட்டியிருக்காதா? போதிய பயிற்சி வசதி இல்லை என்றும் சொல்ல முடியாது. ஐரோப்பிய நாடுகளில் சுற்றுப்பயணம், பயிற்சி முகாம் என்று எல்லாம் தாராளமாகவே செய்திருந்தார்கள். மீண்டும் பூஜ்ஜியத்தில் இருந்து தொடங்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருப்பது வேதனையாக உள்ளது.

பதக்கம் வென்றவர்களும் மனக் குறையை, குமுறலை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். சர்வதேச அளவில் சாதித்த பிறகும் உரிய கவுரவம் கொடுக்காததால், ராணுவத்தில் இருந்து விலகப் போவதாக விஜய் குமார் கூறியது சலசலப்பை ஏற்படுத்தியது. அதற்குப் பரிகாரம் செய்வது போல, டெல்லி விமான நிலையத்தில் ராணுவம் சார்பில் அமர்க்களமான வரவேற்பு கொடுத்து அசத்திவிட்டார்கள். சுபேதார் மேஜராகப் பதவி உயர்வும் கொடுக்கப் போவதாகத் தகவல். எல்லா ஒலிம்பியன்களுக்கும் விளையாட்டு ஆணையத்தில் ஆபீசர் பதவி என்று அறிவித்திருக்கிறார் அமைச்சர் மாக்கன். இரண்டு வருடமாக கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாமால் இழுத்தடித்துக் கொண்டிருந்த மணிப்பூர் அரசும், மேரி கோமுக்கு ஏஎஸ்பி ஆக பதவி உயர்வு, 2 ஏக்கர் நிலம் என்று பிராயச்சித்தம் தேட முயற்சிக்கிறது.

விளையாட்டில் அரசியலும், சுயநலமும் கலப்பதுதான் இந்தியா பின் தங்கியிருப்பதற்கு காரணம். கடலோர மீனவக் கிராமங்களில் இருந்து திறமையான சிறுவர், சிறுமியரை தேர்வு செய்து பயிற்சி அளித்தால் நீச்சலில் அசத்த மாட்டார்களா? வயிற்றுப் பிழைப்புக்காக தெருவோரம் சாகசம் செய்யும் கழைக்கூத்தாடி சிறுமியை தத்தெடுத்து ஜிம்னாஸ்டிக்சில் தயார் செய்தால் சாதிக்க மாட்டாளா? அரசும், கார்ப்பரேட் நிறுவனங்களும் இதில் கவனம் செலுத்தினால் அடுத்த ஒலிம்பிக்கில் உலகையே அதிர வைக்கலாம்.

பா.சங்கர்     

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக