செவ்வாய், 2 அக்டோபர், 2012

NEPV… ஓர் இன்ப அவஸ்தை


நீதானே என் பொன் வசந்தம்… ஆல்பம் வெளியாகி சரியாக ஒரு மாதம் ஆகிவிட்டது. பாடல்கள் பற்றி எழுத வேண்டும் என்ற நினைப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போனது. இசைக்கும் நமக்கும் பல பிரபஞ்ச தூரம் என்பதால், ஆட்டம் போட்ட மனதை அடக்கியே வைத்திருந்தேன்.

டிஎப்எம்பேஜில் ராஜா ரசிகர்கள் பகிர்ந்து கொள்ளும் கருத்துகளை பக்கம் பக்கமாய் படித்ததில் NEPV பைத்தியம் பிடிக்காத குறை! காலையில் எழுந்ததும், குளிக்கும்போது, பேருந்து பயணம், அலுவலகத்தில் தேநீர் இடைவேளை, இரவில் படுக்கும்போது, அப்புறம் எப்போது நேரம் கிடைத்தாலும்… என்று கேட்டு, கேட்டு கருந்துளையால் ஈர்த்து இழுக்கப்பட்ட கிரகமாய் ஒரு முடிவில்லா சுழலில் உழலும் இன்ப அவஸ்தை!

எப்போது கேட்டாலும் சுகம் என்றாலும், ஹெட்போன் மாட்டிக் கொண்டு இரவின் நிசப்தத்தில், இருளில் கேட்கும் அந்த அனுபவம் – சொர்க்கம் கண்ணுக்குள்.

எட்டு பாடல்களில் எந்தப் பாடல் பிடித்தமானது? சத்தியமாய் இனம் காண முடியவில்லை. ஒவ்வொரு பாடலைக் கேட்கும்போதும், அது மனதுக்கு மிக நெருக்கமானதாகத் தோன்றும் அதிசயம். அரதப் பழசு கான்செப்டான கல்லூரி கலாட்டா பாடல் புடிக்கல மாமூ கூட கிடார் – டிரம்ஸ் கூட்டணியின் முன்னிசை, இடையிசை அமர்க்களத்தில் பிடித்துப் போகிறது.

முதல் முறை, சற்று முன்பு பாடல்கள் ஜூனியர், சீனியர், சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிகளில் இளம் பாடகியர் தங்கள் திறமையை வெளிச்சமிட மிகச் சிறந்த… அதே சமயம் சவாலான தேர்வாக இருக்கும். பிரிவாற்றாமையில் மனதை சுக்கு நூறாக்கிப் பிசைந்து உருட்டி மீண்டும் பிரித்து மேயும் இந்த பாடல்களை கவுதம் மேனன் எப்படி காட்சிப்படுத்தப் போகிறார் என்று கற்பனை செய்து கூட பார்க்க முடியவில்லை.

வானம் மெல்ல, என்னோடு வா… வா, காற்றை கொஞ்சம் பாடல்கள் மெல்லிய நீரோடை, இளம் தென்றல், மழைச் சாரல், மூடுபனி, மஞ்சள் வெயில் போல அத்தனை அழகு. சாய்ந்து சாய்ந்து… யுவனின் பட்டை தீட்டப்படாத, பிசிறடிக்கும் குரல் உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதில் இருக்கும் உண்மை அப்படியே நச்சென்று நடு மண்டையில் இறங்கி உட்கார்ந்து கொள்கிறது. என் தாயை போல ஒரு பெண்ணை தேடி என்று யுவன் உருக… ஓஹோ என் தந்தை தோழன் ஒன்றான ஆணை என்று ரம்யா மருக பாடலின் இனிமை வழிந்து வழிந்து மனதில் கோலமிடுகிறது! இந்த பாடலுக்கு யுவன் பெயரை சிபாரிசு செய்த கவுதமுக்கு நன்றி சொல்லும் காலம்.

பெண்கள் என்றால்... டாப் 10ல் நீண்ட நாட்களுக்கு முதலிடத்தில் இருந்தால் ஆச்சரியப்படாதீர்கள். இந்தப் பாடலுக்கு யுவன் திரையில் தோன்றினால் இன்னும் நன்றாக இருக்கும் என நினைக்கிறேன். மெத்தை ஒன்று தைக்கச் சொல்லி, மேகம் அள்ளி வைக்கச் சொல்லி எல்லா பாடல்களையும் கண்ணை மூடி சிந்திக்க வைத்த முத்துக்குமாரின் கைகளுக்கு முத்த மழை பொழியலாம்.

மொத்தத்தில் 42 நிமிடம் 20 விநாடிகளுக்கு நாடி நரம்புகளை எல்லாம் சுண்டி இழுத்து செயலற்றுப் போக வைக்கும் அமுத விஷத்தைக் கடைந்தெடுத்துக் கொடுத்திருக்கும் ராக தேவனுக்கு ஒரு கோடி ஓ போட்டாலும் போதாது.

காந்தி ஜெயந்தி விடுமுறை கொடுத்த அவகாசத்தில், சாவகாசமாக உட்கார்ந்து ஏதேதோ எழுத நினைத்து, ஏதோ இந்த அளவுக்காவது கிறுக்க முடிந்ததில் மனசு லேசாகி இருந்தது.

பா.சங்கர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக