கலகலக்குது டென்னிஸ்
கபே!
லண்டன் ஒலிம்பிக்கில்
பயஸ் – பூபதி இணைந்து களமிறங்குவார்கள் என்று இந்திய டென்னிஸ் சங்கம் உற்சாகமாக அறிவித்தது.
ஆனால், இந்த உற்சாகம் சில மணி நேரம் கூட நீடிக்கவில்லை. பயசுடன் ஜோடி சேர்ந்து விளையாட
கட்டாயப்படுத்தினால் ஒலிம்பிக்கில் இருந்தே விலகிவிடுவேன் என்று பூபதி பெரிய குண்டை
தூக்கிப் போட, 9 புள்ளி ரிக்டராய் இந்திய டென்னிஸ் நடுங்கியது. பூபதி இல்லாவிட்டால்
பரவாயில்லை… போபண்ணா சேர்ந்து விளையாடுவார் என்று சங்கம் சமாளிக்க… பதிலடியாக, பயஸ்
எதிர்ப்பு தீர்மானத்தை போபண்ணாவும் வழிமொழிய, அடுத்தடுத்து அதிர்வலைகள்.
‘ரெண்டு டீமா அனுப்புங்கப்பா…
பயசுடன் ஜூனியர் வீரர் விளையாடட்டும்’ என்று பஞ்சாயத்து செய்தார் விளையாட்டு அமைச்சர்
மேக்கன். ஆகா நம்மள வெச்சு காமெடி பன்றாங்களே என்று சிலிர்த்த பயஸ், ‘விளையாடினா பூபதி
இல்லை போபண்ணாவோட தான்… சின்ன பசங்களோட எல்லாம் ஜோடி போட முடியாது’ என்று தன் பங்குக்கு
குட்டையை குழப்பினார்.
கலப்பு இரட்டையர்
பிரிவிலும் சானியாவோடு ஜோடி சேர்வது யார் என்பதை தீர்மானிக்க முடியாததால் இடியாப்ப
சிக்கல். தரவரிசை அடிப்படையில் பயஸ் – சானியா நேரடியாக ஒலிம்பிக்கில் விளையாடலாம்.
பூபதி – சானியாவுக்கு அந்த அளவுக்கு புள்ளிகள் இல்லை. ஆனால், இரண்டு கிராண்ட் ஸ்லாம்
பட்டம் வென்றுள்ள இந்த ஜோடி நீடிக்க வேண்டும் என்பதிலும் லாஜிக் + நியாயம் இருக்கவே
செய்கிறது. ‘எனக்கும் பயசுக்கும்
ஒத்து வராது. அவனோட பேசியே மாமாங்கம் ஆயிடுச்சு. ஒலிம்பிக்கை மனதில் வைத்துதான் நானும்
போபண்ணாவும் சேர்ந்து பயிற்சி செய்து வருகிறோம். கடைசி நேரத்தில் எங்களை பிரிக்க நினைப்பது
சரியல்ல’ என்கிறார் பூபதி.
‘ஒலிம்பிக் பதக்க
கனவு நனவாக வேண்டும் என்பதற்காக, பாகிஸ்தானின் அல் குரேஷியோட சூப்பர் பார்ட்னர்ஷிப்பை
தியாகம் செய்துவிட்டு பூபதியோடு சேர்ந்து விளையாடி வருகிறேன். அப்படி இருக்க, பயசுடன்
இணைவது என்ற பேச்சுக்கே இடமில்லை’ என்பது போபண்ணாவின் வாதம். பயஸ் – பூபதி சேர்ந்து
களமிறங்கினால் ஒலிம்பிக் பதக்கம் கிடைத்து விடும் என்று டென்னிஸ் சங்கம் நம்புவது சரியான
தமாஷ். அவர்கள் நம்பர் 1 ஜோடியாக இருந்த சமயத்திலேயே அது பகல் கனவு என்பது நிரூபணமாகிவிட்டது.
இவர்கள் ஏற்கனவே நான்கு வாய்ப்பை வீணடித்திருக்கிறார்கள் என்பதை மறந்துவிடக் கூடாது.
தாம்பத்தியத்தையே தவிர்த்து வரும் தம்பதிக்கு இரட்டைக் குழந்தை பிறக்கும் என்று நம்புவதை
என்னவென்று சொல்வது?
உலக அளவில் பிரபலமான
இந்த அனுபவ வீரர்கள் தங்கள் தகுதிக்கு ஏற்ப முதிர்ச்சியுடன் செயல்பட்டிருந்தால் இந்த
குழப்பத்தை நிச்சயம் தவிர்த்திருக்கலாம். இப்போதுள்ள நிலையில் பூபதி – போபண்ணா ஜோடிக்கே
பதக்க வாய்ப்பு அதிகம்; கலப்பு இரட்டையரில் சானியா – பூபதிக்கு பிரகாசம். எனவே, இளம்
வீரருடன் இணைந்து விளையாடும் சவாலை ஏற்று சாதித்துக் காட்ட பயஸ் முன் வர வேண்டும்.
பா.சங்கர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக