ஒரு தங்கம் கூட
கிடைக்கவில்லை என்றாலும், இந்தியாவுக்கு லண்டன் ஒலிம்பிக் மிக வெற்றிகரமான போட்டி என்பதில்
சந்தேகமே இல்லை. இரண்டு வெள்ளி, 4 வெண்கலம் என மொத்தம் 6 பதக்கங்களை வென்றது இந்தியாவுக்கு
புதிய ஒலிம்பிக் சாதனையாக அமைந்தது. பெய்ஜிங்கில் 3 பதக்கம் வென்றதே அதிகபட்சம் என்ற
முந்தைய சாதனை அளவை இரட்டிப்பாக்கி அசத்தியிருக்கிறார்கள். அடுத்து, பிரேசிலின் ரியோ
டி ஜெனிரோவில் 2016ம் ஆண்டு நடக்கவுள்ள ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவின் பதக்க வேட்டை
இரட்டை இலக்க எண்ணிக்கையை எட்டும் என்ற நம்பிக்கை எழுந்துள்ளது.
அசத்தினார் சுஷில்
லண்டன் ஒலிம்பிக்
போட்டியின் கடைசி நாளில் களமிறங்கிய மல்யுத்த வீரர் சுஷில் குமார் (66 கிலோ பிரீஸ்டைல்
பிரிவு) அடுத்தடுத்து வெற்றிகளைக் குவித்து பைனலுக்கு முன்னேறியதால் தங்கம் வெல்வார்
என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது. துரதிர்ஷ்டவசமாக வாந்தி, வயிற்றுப்போக்கு காரணமாக மிகுந்த
சோர்வுடன் பைனலில் விளையாட நேரிட்டதால், ஜப்பான் வீரர் யோனமிட்சுவிடம் தோற்ற சுஷில்
வெள்ளியுடன் திருப்தி அடைந்தார். இந்த பதக்கத்துடன் இந்தியாவின் எண்ணிக்கையை 6 ஆக அதிகரித்து
புதிய சாதனை படைக்க உதவிய சுஷில், தொடர்ச்சியாக இரண்டு ஒலிம்பிக்கில் தனிநபர் பதக்கம்
வென்ற முதல் இந்திய வீரர் என்ற சாதனையை தனதாக்கினார்.
ஜமாய்த்தது ஜமைக்கா
உலகின் அதிவேக
வீரர் உசேன் போல்ட் இருக்க ஜமைக்கா அணிக்கு என்ன கவலை? ஆண்கள் 4 X 100 மீட்டர் தொடர்
ஓட்டத்தில் நெஸ்டா கார்ட்டர், மைக்கேல் பிரேட்டர், யோகன் பிளேக், உசேன் போல்ட் ஆகியோர்
அடங்கிய ஜமைக்கா அணி 36.84 விநாடிகளில் பந்தய தூரத்தைக் கடந்து புதிய உலக சாதனையுடன்
தங்கம் வென்றது. இந்த தொலைவை 37 விநாடிகளுக்கும் குறைவாகக் கடந்த முதல் அணி என்ற பெருமையும்
ஜமைக்காவுக்கு கிடைத்தது. 2011 டேகு உலக தடகள சாம்பியன்ஷிப்பில் ஜமைக்கா அணி 37.04
விநாடியில் ஓடி படைத்த உலக சாதனையை லண்டன் ஒலிம்பிக்கில் அந்த அணியே தகர்த்தது.
அமெரிக்க அமர்க்களம்
மகளிர் 4 X
100 மீட்டர் தொடர் ஓட்டத்தில் அமெரிக்க அணி 27 ஆண்டுகால உலக சாதனையை முறியடித்து தங்கம்
தட்டியது. டியானா மேடிசன், அலிசான் பெலிக்ஸ், பியான்கா நைட், கார்மெலிடா ஜெட்டர் ஆகியோர்
அடங்கிய அமெரிக்க அணி 40.82 விநாடிகளில் பந்தய தூரத்தைக் கடந்து 1985ல் கிழக்கு ஜெர்மனி
படைத்த சாதனையை (41.37 வி.) தவிடுபொடியாக்கியது.
Ø
மகளிர்
நவீன பென்டத்லான் போட்டியின் 200 மீட்டர் பிரீஸ்டைல் நீச்சல் பிரிவில் ஹங்கேரி வீராங்கனை
சரோல்டா கோவாக்ஸ் புதிய ஒலிம்பிக் சாதனை படைத்தார். அவர் 2 நிமிடம் 8.11 விநாடிகளில்
நீந்தி பெய்ஜிங் ஒலிம்பிக்கில் அமெரிக்காவின் ஷீலா டவோர்மினா படைத்த முந்தைய சாதனையை
(2:08.86) முறியடித்தார்.
Ø
ஒலிம்பிக்
மகளிர் கூடைப்பந்து போட்டியில் அமெரிக்க அணி தொடர்ந்து 5வது முறையாக தங்கம் வென்று
சாதனை படைத்தது. பைனலில் பிரான்ஸ் அணியை 86 – 50 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்திய
அமெரிக்காவுக்கு இது தொடர்ச்சியான 41வது வெற்றியாகும். கடந்த 8 ஒலிம்பிக்கில் அந்த
அணி 7 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. 1992 பார்சிலோனா ஒலிம்பிக் அரை இறுதியில்
மட்டுமே ரஷ்ய அணியிடம் அமெரிக்கா தோற்றுள்ளது. ஒலிம்பிக்கில் அந்த அணி 55 வெற்றிக்கு
ஒரு தோல்வி மட்டுமே பெற்றுள்ளது.
Ø
மகளிர்
20 கிலோ மீட்டர் நடை பந்தயத்தில் ரஷ்ய வீராங்கனை யெலினா லஷ்மனோவா ஒரு மணி 25 நிமிடம்
02 விநாடிகளில் இலக்கை எட்டி புதிய உலக சாதனை படைத்தார்.
Ø
ஆண்கள்
நவீன பென்டத்லான் போட்டியின் வாள்வீச்சு பிரிவில் செக் குடியரசின் டேவிட் ஸ்வபோதா
26 வெற்றிக்கு 9 தோல்வி என்ற கணக்கில் புதிய ஒலிம்பிக் சாதனை படைத்தார்.
Ø
இசைக்கேற்ப
நடனமாடியபடி நீந்தும் போட்டியில் ரஷ்ய அணி தொடர்ச்சியாக 4வது தங்கம் வென்று சாதனை படைத்தது.
Ø
ஆண்கள்
800 மீட்டர் ஓட்டத்தில் கென்ய வீரர் டேவிட் ருடிஷா ஒர் நிமிடம் 40.91 விநாடியில் பந்தய
தூரத்தைக் கடந்து புதிய உலக சாதனை படைத்தார். 2010ல் தான் படைத்த முந்தைய உலக சாதனையை
(1:41.01) அவரே முறியடித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக