திங்கள், 21 ஜனவரி, 2013

100+ கோடி நன்றி நரங்…


எங்கே வெறும் கையோடு திரும்பி 100+ கோடி இந்தியர்களையும் தலை குனிந்து கூனிக் குறுகவைத்து விடுவார்களோ என, உள்ளூர பயப்பந்து உருண்டு கொண்டிருந்த வயிற்றுக்கு வெண்கலப் பால் வார்த்திருக்கிறார் ககன் நரங். 

பெய்ஜிங் ஹீரோ அபினவ், ககன் இருவரும் லண்டன் ஒலிம்பிக் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் களமிறங்கியதுமே ரசிகர்களை பதற்றம் பற்றிக் கொண்டது. வீரர்கள் கூலாக சுட்டுக் கொண்டிருந்தாலும், தகுதிச் சுற்றில் அபினவ் துரதிர்ஷ்டமாக வெளியேறியது அச்சத்தை அதிகரிக்க, ககன் 3வது இடத்துடன் பைனலுக்கு முன்னேறி ஆறுதல் தந்தார். இறுதிச் சுற்றின் பரபரப்பு தாங்க முடியாமல் நாம் நகத்தோடு சதையையும் சேர்த்து பிய்த்துக் கொண்டிருக்க, நரங் வெண்கலப் பதக்கம் வென்று ஆர்ப்பாட்டம் இல்லாமல் கையை லேசாக உயர்த்தி புன்னகைத்தார்.

டிவி நேரடி ஒளிபரப்பில் சிறப்பு வர்ணனையாளராக வந்திருந்த வெள்ளி வேந்தன் ராஜ்யவர்தன் ரத்தோர் மகிழ்ச்சியில் ஆனந்தக் கண்ணீர் வடித்து இந்திய ரசிகர்களின் மனநிலையை வெளிச்சமிட்டார். இந்தியாவுக்கு முதல் பதக்கம்… பளபளத்த பிளாஷ் செய்தி ரசிகர்களின் முகங்களில் ஆயிரம் வாட்ஸ் பல்பை எரியவிட்டது. வெண்கலம்தானா? என்று அங்கலாய்ப்பவர்கள், தங்கம், வெள்ளி வென்ற ரோமானிய (702.1), இத்தாலி (701.5) வீரர்களுக்கும் நரங்குக்கும் (701.1) நூலிழை வித்தியாசம்தான் என்பதை மறந்துவிடக் கூடாது.  

பார்க்க அழுத்தமான மனிதராகத் தெரிந்தாலும், நரங் உணர்ச்சிவசப்படக் கூடியவர் என்பதற்கு இதோ ஒரு உதாரணம். உலக சாம்பியன்ஷிப்பில் (2006-2010) 3 தங்கம், 2 வெண்கலம், மெல்போர்ன் காமன்வெல்த்தில் 4 தங்கம் சுட்ட பிறகும் ‘கேல் ரத்னா’ விருது தராமல் அலட்சியப்படுத்துகிறார்களே என்ற வெறுப்பில், டெல்லி காமன்வெல்த் போட்டியை புறக்கணிக்கப் போவதாக அறிவித்துவிட்டார். பயிற்சியாளரும் குடும்பத்தாரும் தான் ஆறுதல்படுத்தி பங்கேற்க வைத்தனர். தயக்கத்தோடு களமிறங்கினாலும் அலட்டிக் கொள்ளாமல் 4 தங்கம் அள்ளி அசத்தினார்.

என்னதான் உலக சாதனைக்கு சொந்தக்காரர் என்றாலும் ஒரு ஒலிம்பிக் பதக்கம் இல்லையே என்ற ஆதங்கம் ககன் மனதில் இருக்கத்தான் செய்தது. லண்டனில் வெண்கலத்தை முத்தமிட்டதும், ‘அப்பாடா, மார்பு மேல் இருந்த பெரிய பாரம் இறங்கியதைப் போல இருக்கிறது. இந்த தருணத்தை என்னால் மறக்கவே முடியாது. பிந்த்ரா பைனலுக்கு முன்னேறாதது வருத்தமாக இருக்கிறது. எல்லோரும் அவர் ஏமாற்றிவிட்டார் என்கிறார்கள். அப்படியில்லை. எல்லா வீரர்களையும் போலவே அவரும் தன்னால் முடிந்த அளவுக்கு சிறப்பாகவே செயல்பட்டார். அவர் பெய்ஜிங் ஒலிம்பிக்கில் தங்கம் வென்றது எத்தனை பெரிய சாதனை என்பதை என்னால் இப்போது நன்றாக உணர முடிகிறது’ என்று சக வீரருக்கு ஆதரவாக குரல் கொடுத்தார்.

‘இந்தியாவில் திறமைக்கு பஞ்சம் இல்லை. ஆனால், அதை அடையாளம் கண்டு ஊக்குவிக்கத்தான் யாரும் முன்வர மறுக்கிறார்கள். வீரர்கள் தேர்வில் மிகப் பெரிய மாற்றங்களை செய்தால்தான் வசதி, வாய்ப்பு இல்லாமல் தவிக்கும் இளைஞர்களும் ஒலிம்பிக்கில் களமிறங்கி பதக்கங்களை அள்ள முடியும்’ என்று மனம் திறக்கிறார்.

ஒலிம்பிக் பதக்கத்துக்கு பிறகுதான் திருமணத்தை பற்றி யோசிப்பேன் என்று கங்கனம் கட்டிக் காத்திருந்தவருக்கு, வீட்டில் இப்போதே பெண் பார்க்கத் தொடங்கிவிட்டார்கள். அதற்குள் என்ன அவசரம், இன்னும் இரண்டு போட்டி பாக்கி இருக்கிறதே என்று சிரித்தபடியே நழுவும் நரங், இந்நேரம் பதக்க எண்ணிக்கையை அதிகரித்திருந்தால் ஆச்சரியப்படாதீர்கள். நன்றி நரங்… வாழ்த்துக்கள்.

 பா.சங்கர்

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக