ஆப்கானிஸ்தானுக்கு
எதிரான உலக கோப்பை டி20 லீக் போட்டியில் இந்தியாவின் மட்டமான ஆட்டம் கடுமையாக விமர்சிக்கப்பட்டது.
கற்றுக்குட்டி அணியிடமே இப்படி தள்ளாடினால், பலமான அணிகளிடம் செம உதை வாங்குவார்கள்
என்றார்கள். அடுத்து சாம்பியன் இங்கிலாந்துடன் நடந்த போட்டியில் ஹர்பஜன், சாவ்லா சுழல்
ஜாலம் மிகப் பெரிய வெற்றியைக் கொடுக்க, கொஞ்சம் நம்பிக்கை பிறந்தது.
அந்த போட்டியில்
7 பேட்ஸ்மேன், 5 பவுலர் என்ற பார்முலாவை டோனி பயன்படுத்தினார். அது சூப்பராக ஒர்க்
அவுட்டானது திருப்தியாக இருந்தாலும், அடுத்தடுத்த போட்டிகளுக்கு வீரர்களைத் தேர்வு
செய்வதில் புதிய தலைவலியை உண்டாக்கிவிட்டது.
தொடக்க வீரராக
மீண்டும் சேவக் விளையாடுவாரா? இல்லை… இர்பானுக்கே தொடர்ந்து வாய்ப்பு கொடுக்கப்படுமா?
ஹர்பஜனை சேர்த்தால் யாரை நீக்குவது? இப்படி பல்வேறு இம்சையான கேள்விகள். போதாக்குறைக்கு,
டோனி – சேவக் பனிப்போர் உச்சக்கட்டத்துக்கு போய்விட்டது. வேண்டுமென்றே அவரை பெஞ்ச்சில்
உட்கார வைத்துவிட்டார். டி20 உலக கோப்பையை வெல்லாவிட்டால், டோனியின் பதவி அம்போ என்று
கிளப்பிவிட்டார்கள்.
சூப்பர் 8 சுற்றில்
ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்கா, பாகிஸ்தான் என்று அநியாயத்துக்கு கஷ்டமான பிரிவில் இந்தியா
மாட்டிக் கொண்டது டென்ஷனை இன்னும் அதிகமாக்கிவிட்டது. கொஞ்சம் அசந்தாலும் அரை இறுதி
வாய்ப்பு நழுவி விடும் என்பது அப்பட்டமாகத் தெரிகிறது.
போட்டியை
நடத்தும் இலங்கையும், டி20ல் புதிய
சக்தியாக எழுச்சி கண்டிருக்கும் வெஸ்ட்
இண்டீசும் ரேசில் சேர்ந்து கொண்டதால்
இதுவரை இல்லாத அளவுக்கு போட்டிகளில் அனல் பறக்கிறது. ஆஸ்திரேலியாவின் வாட்சன் ஆல் ரவுண்டராக
அமர்க்களப்படுத்திக் கொண்டிருக்கிறார். வாட்சன் – வார்னர் ஜோடியின் அதிரடி எதிரணி பவுலர்களைக்
கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது. ஒருநாள் மற்றும் டெஸ்ட் அரங்கில் சாம்பியனாக சாதித்துக்
காட்டியதுடன் நீண்ட காலம் ஆதிக்கம் செலுத்திய ஆஸ்திரேலிய அணிக்கு டி20 போட்டியில் அளிக்கப்பட்டிருக்கும்
‘அண்டர் டாக்’ அந்தஸ்து விரைவில் காலாவதியாகிவிடும் என்றே தோன்றுகிறது.இந்தியாவின்
சமீபத்திய பார்மை வைத்துப் பார்க்கும்போது கோப்பை கைக்கு எட்டினாலும் வாய்க்கு எட்டுமா?
என்பது சந்தேகமாகவே உள்ளது. டி20ல் எதையும் கணிக்க முடியாது என்பதால் நம்பிக்கையுடன்
காத்திருப்போம்.
அசைக்க முடியாத
கேப்டன், அதிர்ஷ்ட கேப்டன் என்ற பெருமை எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாய் கரைந்து டோனியின்
தலைக்கு மேல் கத்தி தொங்குவது கண்கூடாய்த் தெரிகிறது. ஸ்ரீகாந்த் தலைமையிலான தேர்வுக்குழுவின்
பதவிக்காலம் முடிந்து புதிய தேர்வுக்குழு பொறுப்பேற்றுள்ள நிலையில், அணியில் அதிரடி
மாற்றங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கிறார்கள். அணியின் ஒற்றுமை அடிக்கடி கேள்விக்குறியாக்கப்படுவதை
தவிர்க்க வேண்டியது உடனடி அவசியம். அனுபவ வீரர்களைக் கையாள்வதிலும் கூடுதல் கவனம் தேவை.
இங்கிலாந்து, ஆஸ்திரேலியா
என்று மிக வலுவான அணிகளை சொந்த மண்ணில் இந்திய அணி சந்திக்கவுள்ள நிலையில், டோனியை
மாற்றுவது சரியாக இருக்காது. உள்ளூரில் நடக்கும் டெஸ்ட் போட்டிகளில் வெற்றிகளைக் குவித்து
இழந்த பெருமையை மீட்டால் டோனியின் தலைமை தப்பலாம். இளம் வீரர் கோஹ்லி விஸ்வரூபம் எடுத்து
வருவதால் இந்திய அணிக்கு டெஸ்ட், ஒருநாள், டி20ல் தனித் தனி கேப்டன்கள் நியமிக்கப்படும்
கட்டாயம் ஏற்பட்டால் ஆச்சரியப்ப வேண்டாம்.
பா.சங்கர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக