திங்கள், 21 ஜனவரி, 2013

பதக்க வேட்டை… அதிகம் எதிர்பார்க்காதீங்க!


லண்டன் ஒலிம்பிக் நெருங்கிவிட்ட நிலையில், இந்தியாவின் பதக்க வேட்டை எப்படி இருக்கப் போகிறதோ என்ற பதற்றத்துடன் கூடிய எதிர்பார்ப்பு ரசிகர்களை தொற்றிக் கொண்டுள்ளது. எப்படிப் பார்த்தாலும் சிங்கிள் டிஜிட்டை தாண்ட வாய்ப்பில்லை என்று கணிப்புகள் கட்டியம் கூறுவதால், அதிகம் அலட்டிக் கொள்ளாமல் வேட்டையை வேடிக்கை பார்ப்போம்.

ஒலிம்பிக் வரலாற்றில் இந்தியா இதுவரை பெற்றுள்ள மொத்த பதக்கங்களின் எண்ணிக்கையே 20தான் என்பதை கவனத்தில் கொண்டால், எதிர்பார்ப்பு என்பதற்கே அவசியம் இல்லை. ஹாக்கியில் கிடைத்த 8 தங்கம், ஒரு வெள்ளி, 2 வெண்கலம் என 11 பதக்கங்களைக் கழித்துவிட்டால், மற்ற விளையாட்டுகளில் கிடைத்தது வெறும் 9 மட்டுமே. தனிநபர் தங்கம் வென்ற ஒரே வீரர் பெய்ஜிங் நாயகன் அபிநவ் பிந்த்ரா மட்டுமே.

ஓஹோவென கொடிகட்டிப் பறந்த இந்திய ஆண்கள் ஹாக்கி அணி, மோசமான நிர்வாகத்தால் இப்போது ஒலிம்பிக்கில் நுழைவதற்கே தகுதிச் சுற்றில் விளையாடி தட்டுத் தடுமாறி வர வேண்டியதாகிவிட்டது. லண்டனில் 6வது இடம் பிடித்தாலே 7வது அதிசயமாக இருக்கும் என்கிறார்கள். அதனால், அபிமான நடிகரின் பிளாப் படத்தில் ‘அந்த ஒரு பாட்டு போதும்… டிக்கெட் காசுக்கு சரியாப் போச்சு’ என்று திருப்திப் பட்டுக்கொள்வது போல ஹாக்கியை ஒரு அளவோடு நிறுத்திக் கொள்வது நல்லது.

‘நான் சாவதற்குள், தடகளத்தில் இந்தியர் ஒருவர் தங்கம் வெல்வதை பார்ப்பதுதான் எனது கடைசி ஆசை. ஆனால், அதற்கான வாய்ப்பு பிரகாசமாக இல்லை என்பதும் எனக்குத் தெரியும். ஏதாவது அதிசயம் நடந்தால்தான் அது சாத்தியமாகும். வட்டு எறிதலில் கிருஷ்ண பூனியாவை எதிர்பார்க்கிறேன்’ என்ற மில்கா சிங்கின் ஆதங்கமே, தடகளத்தில் நமது நிலைமை எத்தனை தடுமாற்றமானது என்பதை தெளிவாக்கிவிடுகிறது. 

பெரிய நம்பிக்கை தருவது சுடுதல், எய்தல், பொருதல் போன்ற உண்மையான வீர விளையாட்டுகள்தான். துப்பாக்கி சுடுதலில் தனிநபர் தங்கம் வென்று சாதனை படைத்த அபிநவ் பிந்த்ரா, லண்டனில் இந்தியாவுக்கு பத்து பதக்கமாவது கிடைக்கும் என்று மிகவும் தன்னம்பிக்கையுடன் கூறுகிறார். அதே சமயம், ‘கிரிக்கெட்டையே பிடித்து தொங்கிக் கொண்டிருந்தால் ஒலிம்பிக்கில் இந்தியா பெரிதாக சாதிக்க முடியாது. சீனாவை போல திட்டமிட்டு செயல்பட்டால், 110 கோடி மக்கள் தொகை கொண்ட நம்மாலும் தங்கங்களை அள்ள முடியும்’ என்று சுட்டுக்! காட்டுகிறார். ஷூட்டிங்கில் அபினவ், ககன் நரங், ரோஞ்சன் சோதி, மானவ்ஜித் மீது நம்பிக்கை வைக்கலாம். இவர்கள் வச்ச குறி பெரும்பாலும் தவறியதில்லை.  

அடுத்த பெரிய நம்பிக்கை வில்வித்தை. அதிலும், உலகின் நம்பர் 1 வீராங்கனை என்ற பெருமையை பெற்றிருக்கும் தீபிகா குமாரி பதக்கம் வெல்வது 100 சதவீதம் உறுதி. தங்கமா? வெள்ளியா? என்பதுதான் கேள்வி என்ற அளவுக்கு அவர் மீது டன் கணக்கில் நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். டாடா வில்வித்தை அகடமியில் மாதம் 500 ரூபாய் ஸ்டைபண்ட் வாங்கியவர், இப்போது டாடா ஸ்டீல் நிறுவனத்தில் மேலாளராகப் பணியமர்த்தப்படும் அளவுக்கு உயர்ந்திருக்கிறார். ‘தீபிகா உச்சகட்ட பார்மில் இருக்கிறார். இளமை, ஆற்றல், வெற்றிக்காக கடைசி வரை போராடும் உறுதி லண்டன் ஒலிம்பிக்கில் அவரை நிச்சயம் சாதிக்க வைக்கும்’ என்கிறார் பயிற்சியாளர் லிம்பா ராம். தீபிகாவுடன் சேர்ந்து கணைகளைத் தொடுக்கக் காத்திருக்கும் பாம்பேலா தேவி, செக்ரவோலு ஸ்வரோ, தாலுக்தார், ராகுல், தருண்தீப் ஆகியோரையும் ஒதுக்கிவிட முடியாது. இவர்களின் அம்புகள் இலக்கை துளைத்து பதக்கம் பறிக்க வாழ்த்துவோம்.

‘குத்துச்சண்டையில் விஜேந்தர், சங்வான், ஷிவா தாபா, விகாஸ், தேவேந்திரோ தங்கம் வெல்வது சற்று கடினம் என்றாலும் வெள்ளி அல்லது வெண்கலம் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது’ என்கிறார் மெல்போர்ன் காமன்வெல்த்தில் தங்கம் தட்டிவந்த அகில் குமார்.

தொடக்கவிழா அணிவகுப்பில் தேசியக் கொடி ஏந்தி தலைமை வகிக்கும் கவுரவத்தை பெற்றுள்ள மல்யுத்த வீரர் சுஷில் குமார், யோகேஷ்வர் தத் இருவருக்கும் இது மூன்றாவது ஒலிம்பிக். ‘இதுதான் எங்களின் கடைசி வாய்ப்பு. பதக்கம் வென்று நாட்டுக்கு பெருமை சேர்க்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளோம்’ என்று தொடை தட்டுகிறார் யோகேஷ்வர். அனுபவ வீரர்களாக இவர்கள் இறுதி வரை மல்லுக்கட்டுவார்கள் என எதிர்பார்க்கலாம்.

பயஸ், பூபதி என இரண்டு மகத்தான வீரர்கள் இருந்தாலும், அவர்கள் பரம்பரை எதிரிகளைப் போல கத்திச்சண்டை போடுவது டென்னிஸ் களத்தை ரணகளமாக்கிவிட்டிருக்கிறது. பயஸ் – விஷ்ணு, பூபதி – போபண்ணா, பயஸ் – சானியா ஜோடிகளிடம் இருந்து எதையும் எதிர்பார்க்காமல் இருப்பது உத்தமம். இவர்களின் பயிற்சிக்காக கோடிக் கணக்கில் வாரி இறைத்துள்ள நிலையில், ஈகோ கிளாஷால் பதக்க வாய்ப்பு கை நழுவிப் போவது வேதனையாக உள்ளது.

‘நம்பிக்கை வைப்பதும் முயற்சிப்பதும் மட்டுமே என்னால் முடியும். பதக்கம் வெல்வேனா என்பதை கணிக்க முடியாது’ என்று அடக்கி வாசிக்கிறார் பேட்மின்டன் வீராங்கனை சாய்னா நெஹ்வால். பெய்ஜிங் ஒலிம்பிக்கில் டீன் ஏஜராகப் (18) பங்கேற்ற சாய்னா கால் இறுதி வரை முன்னேறினார். நான்கு ஆண்டுகளில் பல பட்டங்களை வென்று உலகின் முன்னணி வீராங்கனையாக வளர்ந்திருக்கும் அவர் ஒலிம்பிக் பதக்கத்தையும் வெல்வார் என்பதில் எனக்கு சந்தேகம் இல்லை என்கிறார் பயிற்சியாளர் முகமது ஆரிப்.

இரட்டையர் பேட்மின்டனில் ஜுவாலா கட்டா – வலியவீட்டில் திஜு, ஜுவாலா – அஷ்வினி ஜோடிகளும் வரிந்து கட்டுகின்றன. ’மகளிர் இரட்டையர், கலப்பு இரட்டையர் என இரண்டு பிரிவிலுமே பதக்கம் வெல்ல முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது. பல டாப் ஜோடிகளை நாங்கள் ஏற்கனவே வீழ்த்தியுள்ளோம். விமர்சனங்களைப் பற்றி கவலைப்படாமல் சாதித்துக் காட்டுவோம்’ என்று ஜுவாலை வீசுகிறார் கட்டா.

இந்தியா சார்பில் மொத்தம் 81 பேர் களமிறங்க உள்ளனர். ஒலிம்பிக்கில் இந்தியாவின் மிகப் பெரிய அணி இதுதான். பெய்ஜிங்கில் நமக்கு கிடைத்ததை விட (3), லண்டனில் நிச்சயம் அதிகமாகவே கிடைக்கும் என்பது மட்டும் உறுதி. நமது பொருளாதார வளர்ச்சியை அடிப்படையாக வைத்து கணக்கு போட்டு பார்த்ததில், லண்டனில் இந்தியாவுக்கு 2 தங்கம் உள்பட 5 பதக்கம் கிடைக்க வாய்ப்பு இருப்பதாக கணித்திருக்கிறது கோல்ட்மேன் சேக்ஸ் வங்கியின் ஆய்வுக் குழு. இதுவே பெரிய முன்னேற்றம்தான்.  

பா.சங்கர் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக