விளையாட்டில்
சாதனைகளின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது. முந்தைய சாதனைகளை முறியடிக்க வேண்டும்
என்ற உத்வேகமே வீரர், வீராங்கனைகளுக்கு புதிய உற்சாகத்தை கொடுத்து ஊக்குவிக்கும் என்பதில்
சந்தேகம் இல்லை. மற்ற போட்டிகளை விட ஒலிம்பிக்கில் படைக்கப்படும் சாதனைகள்
மகத்தானவை, ஈடு இணையற்றவை. அந்த வகையில், லண்டன் 2012 ஒலிம்பிக்கில் இதுவரை பதிவான
புதிய சாதனைகள் விவரம்:
- ஆண்கள் பளுதூக்குதல் 62 கிலோ எடை பிரிவில் வட கொரிய வீரர் கிம் அன் கக் மொத்தம் 337 கிலோ தூக்கி புதிய ஒலிம்பிக் மற்றும் உலக சாதனையுடன் தங்கப் பதக்கம் வென்றார். அவர் ஸ்நேட்ச் முறையில் 153 கிலோ மற்றும் கிளீன் & ஜெர்க் முறையில் 174 கிலோ தூக்கி அசத்தினார். முன்னதாக, சீன வீரர் ஸாங் ஜி 2008 ஆசிய சாம்பியன்ஷிப்பில் 336 கிலோ தூக்கியதே உலக சாதனையாக இருந்தது.
- மகளிர் பளுதூக்குதல்
58 கிலோ எடை பிரிவில் சீன வீராங்கனை லி ஸூயிங் 2 ஒலிம்பிக் சாதனையுடன் தங்கம் வென்றார்.
இவர் ஸ்நேட்ச் முறையில் 108 கிலோ தூக்கியதும், கிளீன் & ஜெர்க் முறையில் சேர்த்து
மொத்தமாக 246 கிலோ தூக்கியதும் ஒலிம்பிக் சாதனையாக அமைந்தது. 2008 பெய்ஜிங் ஒலிம்பிக்கில்
சக சீன வீராங்கனை சென் யாங்கிங் 244 கிலோ தூக்கியதே முந்தைய சாதனையாக இருந்தது.
- ஆண்கள் 100 மீட்டர் பிரெஸ்ட்ஸ்ட்ரோக் பிரிவில் தென் ஆப்ரிக்காவின் கேமரான் வாண்டெர் பர்க் புதிய உலக சாதனையுடன் தங்கம் வென்றார். அவர் 58.46 விநடிகளில் பந்தய தூரத்தைக் கடந்தார். முன்னதாக, 2009ல் பிரெண்டன் ரிக்கார்ட் படைத்த சாதனையை கேமரான் 0.05 விநாடி வேகமாக நீந்தி முறியடித்தார்.
-
மகளிர் 100 மீட்டர்
பேக்ஸ்ட்ரோக் பிரிவில் ஆஸ்திரேலிய வீராங்கனை எமிலி சீபோம் புதிய ஒலிம்பிக் சாதனை படைத்தார்.
அவர் 58.23 விநாடிகளில் பந்தய தூரத்தைக் கடந்து, 2008 பெய்ஜிங் ஒலிம்பிக்கில் ஜிம்பாப்வே
வீராங்கனை கிறிஸ்டி கவென்ட்ரி படைத்த சாதனையை (58.77 வி.) தகர்த்தார்.
-
படகு போட்டி ரெகட்டா
பிரிவில் நியூசிலாந்து வீரர்கள் ஹமிஷ் பாண்ட், எரிக் மர்ரே இருவரும் புதிய ஒலிம்பிக்
மற்றும் உலக சாதனையுடன் (6:08.50) அரை இறுதிக்கு தகுதி பெற்றனர். ஆண்கள் இரட்டையர்
ஸ்கல்ஸ் படகு போட்டியில் உலக சாம்பியன்களான நியூசிலாந்து வீரர்கள் நாதன் கோகன், ஜோசப்
சல்லிவன் ஜோடி புதிய ஒலிம்பிக் சாதனை (6:11.30) படைத்தது.
-
மகளிர் 400 மீட்டர்
தனிநபர் மெட்லி பிரிவில் சீன வீராங்கனை யி ஷிவென் 4 நிமிடம் 28.43 விநாடியில் பந்தய
தூரத்தைக் கடந்து உலக சாதனையுடன் தங்கம் வென்றார். ஒலிம்பிக்கில் 3 முறை தங்கம் வென்ற
ஆஸ்திரேலிய வீராங்கனை ஸ்டெபானி ரைஸ் சாதனையை யி ஷிவென் முறியடித்தார்.
-
மகளிர் 100 மீட்டர்
பிரெஸ்ட்ஸ்ட்ரோக் பிரிவில் லிதுவேனியாவை சேர்ந்த 15 வயது சிறுமி ரூடா மெய்லுடைட் தங்கப்
பதக்கம் வென்று (1:05.47) சாதனை படைத்தார். லிதுவேனியாவுக்காக நீச்சலில் முதல் ஒலிம்பிக்
பதக்கம் வென்றவர் என்ற பெருமையை பெற்றுள்ள ரூடா, லண்டன் பிளைமவுத் பள்ளி மாணவி என்பது
குறிப்பிடத்தக்கது. ஆஸ்திரேலிய முன்னாள் நட்சத்திரம் ஷேன் கவுல்ட் தனது 15வது வயதில்
1972 மூனிச் ஒலிம்பிக்கில் 3 தங்கம், ஒரு வெள்ளி, ஒரு வெண்கலம் வென்று சாதனை படைத்துள்ளார்.
இளம் வயதில் ஒலிம்பிக் தங்கம் வெல்லும் இந்த சாதனையை 40 ஆண்டுகளுக்கு பிறகு சிறுமி
ரூடா சமன் செய்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக