செவ்வாய், 9 ஏப்ரல், 2013

மயிலைக்கு வந்த மண்வாசம்...


மயிலாப்பூர் அறுபத்து மூவர் உற்சவம். ஊரே களைகட்டி இருந்தது. சினிமாவுக்கு செட் போட்ட மாதிரி, அப்படியே ஒரு அக்மார்க் கிராமத்து திருவிழா காட்சி கண் முன்னே விரிந்தது.

உயர உயரமாக கொம்புகள் நட்டு தோரணம் கட்டியிருந்தார்கள். ஐந்து அடிக்கு ஒரு அன்னதானம் நடந்து கொண்டிருந்தது. சுடச்சுட வெஜிடபிள் பிரிஞ்ஜி, சாம்பார் சாதம், தயிர் சாதம், சர்க்கரைப் பொங்கல், வெண் பொங்கல், சுண்டல், மோர், பானகம், ரஸ்னா, இஞ்சி டீ, பிஸ்கட், சாக்லேட், சூப்… என்று வகை வகையாய் கூப்பிட்டு கூப்பிட்டு கொடுத்துக் கொண்டிருந்தார்கள். கூச்சம் பார்க்காமல் கூட்டத்தோடு கூட்டமாய் எல்லா ஐட்டங்களையும் ஒரு வாய் பார்த்தபடி நான்கு மாட வீதியையும் வலம் வந்தோம்.

சாலை ஓரங்களில் தினுசு தினுசாய் கடைகள் முளைத்திருந்தன. குழந்தைகளுக்கான விளையாட்டுப் பொருட்கள்தான் அதிகம். பனை ஓலை விசிறி, மத்து, பானை, சட்டி, கருங்கல் உலக்கை - குழவிக்கு சரியான மவுசு! மஞ்சள் வெயில் மாலையில் பாசி மணி மாலைகள் வைர வைடூரியமாய் ஜொலித்தன. குவியல் குவியலாய் உண்டிவில்.

குருவிக்காரர்கள் நிறைய பேர் கடை விரித்திருந்தார்கள். பச்சை குத்தும் இடத்தில் இளைஞர் கூட்டம் மொய்த்தது. டிராகன், சூரியன், சிங்கம் என்று வித விதமாய் அட்டையில் அச்சு செய்து வைத்திருந்தார்கள். டாட்டூ போடுவதற்காக சிறிய மோட்டாரில் சுழலும் ஊசி. பேட்டண்ட் வாங்காத அதிநவீன உள்ளூர் தயாரிப்பு! சத்தமே இல்லாமல் இயங்கியது. மீசை முளைக்காத சிறுவன், கை தேர்ந்த கலைஞனாய் பச்சை குத்திக் கொண்டிருந்தான். முகம் சுளித்தபடி வலியை பொறுத்துக் கொண்டு, தோள் பட்டையில் சிரிக்கும் சூரியனை ஆவலுடன் பார்த்தார் வாலிபர்.

டிராகன் படம் குத்துப்பா என்று குத்துக்காலிட்டு உட்கார்ந்த ஒருவர், உஷாராக ‘காசு எவ்ளோ’ என்று கேட்டார். எரனூறு ரூபா என்ற பதிலைக் கேட்டதும் பதற்றத்துடன் கையை பறித்துக் கொண்டு நடையை கட்டினார். குறைந்தபட்சம் நூறு ரூபாய் வாங்கினார்கள். ஊசியைக் கழுவிய மாதிரி தெரியவில்லை. ஆர்வக் கோளாறில் குத்திக் கொள்பவர்கள், நீக்க வேண்டும் என்றால் லேசர் ட்ரீட்மெண்ட்டுக்கு ஆயிரக் கணக்கில் செலவழிக்க வேண்டியிருக்கும் என்பதை நினைவில் கொள்க.

நேரம் ஆக ஆக… கூட்டம் கூடிக் கொண்டே போனது. நாம் நடக்கவே வேண்டாம். அப்படியே தள்ளிக் கொண்டுபோய் சேர்த்துவிடுவார்கள் போல. இதற்கு மேல் தாக்குப்பிடிக்க முடியாது என்று அப்படியே ஓரம்கட்டி ஒதுங்கி கரை சேர்ந்தோம். எங்கு பார்த்தாலும் சாப்பிட்டு போட்ட காகிதத் தட்டுகள். பலரும் உணவுப் பொருட்களை வீணடித்திருந்தார்கள். அடுத்த ஆண்டாவது பத்து அடிக்கு ஒரு குப்பைக் கூடை வைக்க வேண்டும் என்று உத்தரவு போட வேண்டும். 

ஒரே நாளில் ஓவராய் சாப்பிட்டதில் தெப்பக்குள மீன்கள் நீந்த முடியாமல் திணறிக் கொண்டிருந்தன. அலுவலகத்தின் அரை மணி நேர தேநீர் இடைவேளையில் புஷ்ப பல்லக்கு, லட்ச தீபம், கிரிவலம், மசானக் கொள்ளைக்கு நிகரான ஒரு விழாக்கோலத்தை சென்னையில் பார்க்க முடிந்த திருப்தியுடன் திரும்பினோம்.

எழுத்து, படங்கள்: பா.சங்கர்   
   
 
 

இண்டர்வியூ


பிரபல பள்ளியில் எல்கேஜி சேர்வதற்காக தந்தையுடன் வரும் சிறுவன்.

இண்டர்வியூவுக்காக பிரின்சிபால் அறை முன்பாக காத்திருக்கிறார்கள்.

பியூனிடம் சிறுவன்: அங்கிள் பிரின்சிபால் சார் உள்ள இருக்காரா?

பியூன்: இன்னும் வரல.

சிறுவன்: இண்டர்வியூ பத்து மணிக்குன்னு லெட்டர் அனுப்பியிருக்கீங்க. நாங்க ஷார்ப்பா வந்துட்டோம். பிரின்சி என்னடான்னா இன்னும் வரல்லேங்கறீங்க. பங்சுவாலிட்டினா என்னன்னு அவருக்கு தெரியாதா?

பியூன்: இன்னா சார் பொடியன் இந்த பேச்சு பேசறான்… நீங்க சும்மா இருக்கீங்க.

அப்பா: ராஜா கீப் கொயட்.

ராஜா: சாரி டாட். அங்கிள் நீங்க எதுக்கு தேவையில்லாம டென்ஷன் ஆகறீங்க. நான் பிரின்சி ஏன் லேட்டுன்னுதானே கேட்டேன். எங்க அப்பா அப்ளிகேஷன் வாங்க எவ்வளவு கஷ்டப்பட்டார் தெரியுமா?

அப்பா: யெஸ் பிரதர். ராத்திரியில இருந்து காலைல வரைக்கும் ஸ்கூலுக்கு வெளியதான் படுத்துக் கிடந்தேன். வீட்டுல பேசிக்கிறோம் இல்ல. பையன் எல்லாத்தையும் கவனமாக கேட்டு வச்சுப்பான். அதான்.

பியூன்: எல்லா பேரண்ட்சுமே அப்படிதான் சார் காத்துகிட்டு இருந்து பார்ம் வாங்குறாங்க. நாங்களா வந்து கியூவுல நில்லுங்கன்னு சொன்னோம்.

அப்பா: சீட் கெடைக்கணுமேங்கிற கவலதான். வேற என்ன…

பியூன்: சரி… சரி… பேசாம கொஞ்ச நேரம் உட்காருங்க. சார் இப்போ வந்துருவார்.

அப்பா: இந்த வருஷம் எவ்ளோப்பா வாங்குறாங்க?

பியூன்: ஒரு ரூபா வரைக்கும் போகுதுன்னு சொல்றாங்க. அதுக்கே கெடைக்கலையாம். நீங்க எதுக்கும் இன்னும் கொஞ்சம் அதிகமா கொடுக்கறதா சொல்லுங்க.

ராஜா: ஜஸ்ட் ஒன் ருபீயா அங்கிள். அத நானே கொடுத்துடறேன்.

பியூன்: ஏங்க இவன வீட்ல எப்படீங்க சமாளிக்கறீங்க? டீச்சருங்க என்ன பாடு படப் போறாங்களோ…

அப்பா: அதுக்கப்புறம் ஃபீஸ் வேற இருக்கே.

பியூன்: அட என்னங்க நீங்க… இதுக்கே பயப்பட்டா எப்படி? ஒவ்வொருத்தர் ரெண்டு மூனு பசங்கள படிக்க வெக்கறாங்களே! அவங்கள்ளாம் என்ன பண்ணுவாங்க யோசிச்சு பாருங்க.

அப்பா: அதான் டொனேஷன் எல்லாம் கொடுக்கறோம் இல்ல. அப்புறம் எதுக்கு இண்டர்வியூ அது இதுன்னு டார்ச்சர் பண்றீங்க?

பியூன்: அடடா… என்ன எதுக்குங்க நீங்க டார்ச்சர் பண்றீங்க. எல்லாத்தையும் பிரின்சிபால் கிட்ட கேட்டுக்குங்க. அதோ அவரே வந்துட்டார். வணக்கம் சார்.

எல்லோரும் எழுந்து வணக்கம் சொல்கிறார்கள்.

பிரின்சி: ஒவ்வொருத்தரா அனுப்புப்பா. அதுக்கு முன்னால ஒரு காபி.

பியூன்: ஓகே சார். (காபி எடுத்து வர ஓடுகிறார்)

ராஜா: அங்கிள் ஸ்டிராங்கா மீடியமா லைட்டா… சக்கர போட்டா போடாமயா எல்லாம் கேட்டுக்கிட்டு போங்க. அப்புறமா அதுக்காக லேட் பண்ணிடப் போறீங்க.

பியூன்: அதெல்லாம் எங்களுக்குத் தெரியும். நீ கொஞ்சம் சும்மா இருந்தா போதும்.

ராஜா: சும்மா இருக்கறது ரொம்ப கஷ்டம் அங்கிள். வடிவேலு ஜோக்லாம் நீங்க பாக்குறது இல்லயா?

பியூன்: டேய் வாணாம்… சார் இவன் மட்டும் இந்த ஸ்கூல்ல சேர்ந்தா… நான் வேலய விட்டே போய்டுவேன் நெனைக்கிறேன். ராசி பலன்ல இன்னிக்கு நேரம் சரியில்லே. சிறு உபாதைகள் வந்து நீங்கும்னு போட்டுருந்தான். அது இவ்ளோ சிறுசா (ராஜாவைக் காட்டி) இருக்கும்னு தெரியாம போச்சு.

ராஜா: ஏன் அங்கிள் இப்படி மூட நம்பிக்கைல மூழ்கிக் கெடக்கறீங்க. நல்லது நெனச்சா நல்லதே நடக்கும் தெரியுமா?

பியூன்: கடவுளே இவனுக்கு அட்மிஷன் கெடைக்க கூடாது. வேண்டிக் கொண்டே பிரின்சிக்கு காபி கொடுத்துவிட்டு வருகிறார்.

பிரின்சி அறையில் இருந்து மணி அடிக்கிறது.

பியூன்: சார் நீங்க மொதல்ல போயிட்டு வந்துருங்க. அப்பதான் இவன்கிட்டயிருந்து நான் தப்பிக்க முடியும்.

ராஜாவும் அவன் அப்பாவும் பிரின்சி ரூமுக்குள் நுழைகிறார்கள்.

இருவரும் கோரசாக: வணக்கம் சார்.

பிரின்சி: வணக்கம். வாங்க. உட்காருங்க. காபி சாப்பிடறீங்களா?

ராஜா: நான் பூஸ்ட்தான் குடிப்பேன் சார்.

பிரின்சி: சிரித்துக் கொண்டே… ஓ அதான் உன்னோட எனர்ஜி சீக்ரெட்டா? எங்க சார் உங்க ஒய்ப் வரலையா?

அப்பா: இல்ல சார். அவங்களுக்கு டெலிவரி டைம்… அதான் கூட்டிட்டு வர முடியல.

பிரின்சி: ஓகே ஓகே அவங்களும் கிராஜுவேட்தானே?

அப்பா: யெஸ் சார். எம்பிஏ முடிச்சிருக்காங்க.

பிரின்சி: வெரி குட். அப்பதான் வீட்டுல நல்லா சொல்லிக் கொடுக்க முடியும் இல்லயா. அதுக்குதான் பேரண்ட்ஸ் ரெண்டு பேரும் டிகிரி வாங்கியிருக்கணும்கறதுல கண்டிப்பா இருக்கோம்.

ராஜா: அப்போ டீச்சருங்க நல்லா சொல்லிக் கொடுக்க மாட்டாங்களா சார்?

பிரின்சி: நாட்டி பாய். கொஞ்சம் அதிகமா பேசுவான் போல… பசங்க டிவி பாத்து கெட்டுப் போயிடறாங்க.

ராஜா: ரொம்பவே அதிகமா பேசுவேன் சார். ஆனா டிவி கொஞ்சமாத்தான் பார்ப்பேன்.

பிரின்சி: அதுக்கே இப்படியா? போதும்பா போதும். ஏபிசிடி ஒன் டூ த்ரீ எல்லாம் தெரியுமா?

ராஜா: ஒன் போர் த்ரீ கூட தெரியும் சார்.

பிரின்சி: அது என்னப்பா ஒன் போர் த்ரீ?

ராஜா: ஐ லவ் யூ சார். இது கூடவா ஒங்களுக்கு தெரியாது.

பிரின்சி: அடக் கடவுளே… இந்த காலத்து பசங்க கிட்ட பேசவே கூடாது போல. சரி குறள் ஏதாவது தெரியுமா?

ராஜா: பல குரல் தெரியும் சார்.

பிரின்சி: எங்க சொல்லு பார்க்கலாம்.

ராஜா: கண்ணா லட்டு திண்ண ஆசையா…

(எம்ஜிஆர், சிவாஜி, நம்பியார், கமல், ரஜினி என பல குரலில் மிமிக்ரி செய்து காட்டுகிறான்)

அதிர்ச்சியில் உறைந்துபோன பிரின்சி… தம்பி நான் கேட்டது இந்தக் குரல் இல்லப்பா… திருக்குறள் தெய்வப் புலவர் திருவள்ளுவர் எழுதின குறள்ள்ள்ள்…

ராஜா: ஓ அதுவா? உங்க குரல் உச்சரிப்பு கொஞ்சம் சரியில்ல சார். அதான் கொஞ்சம் மிஸ் ஆயிடுச்சு.

இப்போ குறள் சொல்றேன் பாருங்க…

 

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி

பகவன் முதற்றே உலகு

பிரின்சி: பலே… வாயாடியா இருந்தாலும் படு சுட்டியா இருக்கானே. சரி கடி ஜோக் ஏதாவது சொல்லு பார்க்கலாம்.

ராஜா: கடியில பல வகை இருக்கு சார். காக்கா கடியா மாங்கா கடியா இல்ல காது கடியா?

பிரின்சி: ஒரு கடியும் வேணாம். இப்பவே சேம் பிளட் கதையா ஆயிடும் போல இருக்கு… காதை தொட்டுப் பார்த்துக் கொள்கிறார்.

ராஜா: இல்ல சார் இதுக்கு மட்டும் ஆன்சர் சொல்லுங்க பார்க்கலாம்.

பிரின்சி: சரி கேளு…

ராஜா: ஃபிரம் சிக்ஸ் டூ சிக்ஸ்டி… இத தமிழ்லே டிரான்ஸ்லேட் பண்ணுங்க பார்க்கலாம்?

பிரின்சி: அலட்சியமாக சிரித்துக் கொண்டே…. ஆறிலிருந்து அறுபது வரை… எப்பூடி  (பெருமையாகப் பார்க்கிறார்)

ராஜா: தப்பு சார்… அது இல்ல

பிரின்சி: சரி நீயே சொல்லு பார்க்கலாம்.

ராஜா: விடுநர் – ஆறு…. பெறுநர் – அறுபது

வியர்த்து போன முகத்தை கர்சீப்பால் துடைத்துக் கொள்கிறார் பிரின்சி.

ராஜா: போதுமா சார். இல்ல இன்னும் ஒரு ஜோக் சொல்லட்டுமா?

பிரின்சி: இல்ல இல்ல இதுவே அதிகம். சார் நீங்க நாளைக்கு வந்து கேபிடேஷன் பீஸ் கட்டிட்டு போங்க. டியூஷன் பீஸ் எல்லாம் அடுத்த வாரம்  கூட கட்டலாம். சொல்லியபடியே மணி அடிக்க, பியூன் ஓடி வருகிறார்.

ராஜா: தேங்க் யூ சார்… சீ யூ பை பை.

பிரின்சி: கூலா குடிக்க ஏதாவது கொடுப்பா.

பியூன்: என்ன சார் ராஜா டார்ச்சர் பண்ணிட்டானா? நக்கலாகக் கேட்க… பிரின்சி ஙே என விழிக்கிறார்.

அப்பாவுடன் வீட்டுக்கு கிளம்பும் ராஜா: டாடி சொல்றேன்னு தப்பா நெனச்சுக்காதீங்க. எனக்கு இந்த ஸ்கூல் வேண்டாம். அந்த ஒரு லட்சத்த பிக்சட்ல போடுங்க. நான் கவர்ன்மெண்ட் ஸ்கூல்லயே சேர்ந்து படிக்கிறேன்.

அப்பா: அதாண்டா நானும் யோசிக்கிறேன். சரி வா அம்மாகிட்ட பேசி பார்க்கலாம்.
பா.சங்கர்
 

 

ஸ்டைல் மன்னன் ஷிகார் தவான்


அறிமுக டெஸ்டிலேயே அதிவேக சதம் விளாசி, உலக சாதனையுடன் விஸ்வரூபம் எடுத்திருக்கிறார் இந்திய அணி தொடக்க வீரர் ஷிகார் தவான் (27). இவரது அதிரடி ஆட்டத்தால் தான் மொகாலி டெஸ்டில் இந்தியாவின் சாதனை வெற்றி சாத்தியமாகியது என்பதில் சந்தேகமே இல்லை.

தவானின் ருத்ரதாண்டவத்தை பார்க்கும்போது, சேவக்தான் இடது கை ஆட்டக்காரராக களமிறங்கி ஆடிக் கொண்டிருக்கிறாரோ என்ற பிரமையை ஏற்படுத்தியது. ஆஸி. பந்துவீச்சாளர்களுக்கும் அதே பிரமிப்புதான். செய்வதறியாமல் வேடிக்கை பார்ப்பதை தவிர வேறு வழியில்லாமல் நிலைகுலைந்து போனார்கள்.

 
அப்படி ஒரு அதிரடி தொடக்கம் கிடைத்ததால் தான், முதல் இன்னிங்சில் இரு அணிகளுமே 400+ ரன் குவித்தும் நான்கு நாட்களில் முடிவு கிடைத்தது. ஒரே இன்னிங்சில் கோடிக்கணக்கான ரசிகர்களின் உள்ளங்களை கொள்ளையடித்துவிட்டார். இத்தனை நாளாய் எங்கே இருந்தார் என்று தலையை பிய்த்துக்கொள்ளும் ரசிகர்களுக்காக, தவமாய் தவமிருந்த தவானின் கதை இதோ…  
டெஸ்ட் அரங்கில் எப்போதோ கால் பதித்திருக்க வேண்டியவர். 2004ல் தாக்காவில் நடந்த இளைஞர் உலக கோப்பை போட்டியில் (யு-19) இவர் குவித்த 505 ரன் (சராசரி 84.16, சதம் 3) சாதனையை இன்று வரை யாரும் முறியடிக்கவில்லை. அதே தொடரில் விளையாடிய தினேஷ் கார்த்திக், ராபின் உத்தப்பா, சுரேஷ் ரெய்னா, ஆர்.பி.சிங், ரோகித் ஷர்மாவுக்கெல்லாம் வாய்ப்பு கிடைத்தாலும் இவருக்கு மட்டும் அந்த அதிர்ஷ்டம் வாய்க்கவே இல்லை.
ஒருநாள், டி20ல் கிடைத்த சில வாய்ப்புகளில் சொதப்பியதால் தேர்வுக் குழுவினர் கண்டுகொள்ளவில்லை. இத்தனைக்கும் ரஞ்சி சீசனில் அடித்து நொறுக்கிக் கொண்டுதான் இருந்தார். கடந்த ஆண்டு 4 சதங்களுடன் 833 ரன் விளாசினார். ஐபிஎல் போட்டியிலும் கிறிஸ் கேல் (733), கம்பீருக்கு (590) அடுத்தபடியாக மூன்றாவது இடம் (569). சேவக், கம்பீர் என்று இரண்டு அனுபவ தொடக்க வீரர்கள் முதல் 2 இடங்களையும் ஆக்கிரமித்து இருந்ததுதான் இவரது துரதிர்ஷ்டம்.
இருவருமே பார்மை இழந்து தடுமாறி அணியில் இருந்து வெளியேற்றப்பட்ட நிலையில்தான், மொகாலியில் தவானுக்கு கிடைத்தது அந்த அரிய வாய்ப்பு. சரியாய் பயன்படுத்தி சாதித்து விட்டார்.
டெல்லி கிரிக்கெட் வட்டாரத்தில் தவான் என்றாலே தனி மதிப்புதான். சேவக், கம்பீர், கோஹ்லி, உன்முக்த் என்று எத்தனை நட்சத்திரங்கள் ஜொலித்தாலும், இவருக்கு என்று தனி ரசிகர் பட்டாளம். பயிற்சிக்கு வரும்போது கை இல்லாத பனியன், ஷார்ட்ஸ் அணிந்து 1000 சிசி - 25 லட்சம் ரூபாய் பைக்கில் அலட்சியமாக வந்து இறங்குவார். ஸ்டாலோன், அர்னால்டு மாதிரி அமர்க்களமான உடற்கட்டு, தோள்களில் வசீகரமான டாட்டூ, கூலிங் கிளாஸ் அணிந்து மீசையை முறுக்கிவிட்டபடி வரும் ஸ்டைல் எல்லாமே அவரை ஒரு சூப்பர் ஸ்டாராக அடையாளம் காட்டும்.
தோற்றம் ஒரு பக்கம் இருந்தாலும் களத்தில் இவர் காட்டும் அதிரடி ஆட்டம் இன்னும் மிரட்டலாக இருக்கும். டெல்லி அணி சக வீரர்களே ஒருவித மிரட்சியோடு ‘கபார்’ என்றுதான் (ஷோலே வில்லன் அம்ஜத்கானின் பெயர்) அழைப்பார்கள். அமர்க்களமான ஆட்டத் திறன் இருந்தாலும் அலட்சியம், பொறுப்பு இல்லாமல் தேவையற்ற ஷாட் அடித்து விக்கெட்டை இழப்பது இவரது பலவீனமாக இருந்தது.
கேர்பிரீயாக சுற்றித் திரிந்தவரை மாற்றியது மனைவி ஆயிஷா முகர்ஜியும் 2 மகள்களும் தான் (முதல் கணவருக்கு பிறந்தவர்கள்). பெங்காலி – இங்கிலாந்து பெற்றோருக்கு பிறந்த ஆயிஷா, குழந்தைகளுடன் மெல்போர்னில் வசித்தாலும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் இந்தியா வந்துவிடுகிறார். குழந்தைகள் மீது தவானுக்கு கொள்ளை பிரியம். அவர்களுக்காகவே கையில் பச்சை குத்திக் கொண்டாராம்.
‘ஆயிஷா என்னை முழுவதுமாக மாற்றிவிட்டார். வெற்றியை விட தோல்விகள் தான் ஒரு மனிதனை முழுமையாக்குகின்றன என்பதை எனக்கு உணர்த்தியவர்’ என்கிறார் பெருமையாக. பேஸ்புக்கில் பார்த்து, நட்பு கோரி, பழகி மலர்ந்த இணைய காதல்! மனைவி வந்த நேரம் தவானுக்கு ஒர்க் அவுட் ஆகியிருக்கிறது. அமர்க்கள ஆட்டம் தொடரும் என எதிர்பார்க்கலாம்.
பா.சங்கர்
      

திங்கள், 21 ஜனவரி, 2013

வி மிஸ் யூ சச்சின்…

நீதானே எம் பொன்வசந்தம்



 
ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்ந்திருக்கிறது, இந்திய அணிக்காக 23 ஆண்டுகளாய் ஓடித் தேய்ந்த சச்சின் ரன் மெஷின். டெஸ்ட் போட்டிகளில் மோசமான பார்மில் இருக்கும்போது, யாருமே எதிர்பார்க்காத வகையில் ஒண்டேயில் இருந்து ஒதுங்கிக் கொண்டிருக்கிறார் மாஸ்டர் பேட்ஸ்மேன்.

பாகிஸ்தான், இங்கிலாந்து அணிகளுக்கு எதிராக சொந்த மண்ணில் நடக்கும் ஒருநாள் தொடர்களில் நிச்சயம் விளையாடுவார் என்றே எல்லோரும் எதிர்பார்த்தனர். இந்த தொடர்களில் விளையாட அவர் விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் கூட தகவல் கசிந்தது. தேர்வுக் குழு கூட்டம் நடப்பதற்கு சில மணி நேரம் முன்னதாக ஓய்வு முடிவை அறிவித்து அதிர்ச்சி அளித்தார்.
1989ல் 16 வயது சிறுவனாக பாகிஸ்தான் மண்ணில் அறிமுகமானவர், 23 ஆண்டுகளுக்கு பிறகு மகத்தான சாதனை மன்னனாக ஒருநாள் அரங்கில் இருந்து விடை பெற்றிருக்கிறார். ஒருநாளில்… ஓவர் நைட்டில் அவர் ஒப்பற்ற வீரராகிவிடவில்லை. பாகிஸ்தானுடன் முதல் போட்டியில் டக் அவுட்! அடுத்து நியூசிலாந்துக்கு எதிராகவும் முட்டை. ஒன்பதாவது இன்னிங்சில் முதல் அரை சதம். பேட்டிங் ஆர்டரில் பின் வரிசை, நடு வரிசையில் 69 இன்னிங்சில் விளையாடிய பிறகுதான் தொடக்க ஆட்டக்காரராக முன்னேறினார்.
அதுவும் கூட அதிர்ஷ்ட வாய்ப்புதான். ஆக்லாந்தில் நியூசிலாந்துக்கு எதிரான போட்டி; வழக்கமான ஓபனர் சிக்சர் சித்து காயம் அடைந்ததால், யாரை பலிகடா ஆக்கலாம் என்று அணி நிர்வாகம் தலையை பிய்த்துக் கொண்டிருந்த நிலையில், நான் போகிறேன் என்று முன் வந்தார் சச்சின். இந்திய அணியின் குள்ளன் அன்று எடுத்தான் விஸ்வரூபம்! 49 பந்தில் 15 பவுண்டரி 2 சிக்சருடன் 82 ரன் விளாசி ஆட்ட நாயகன் விருதை அபகரித்தார். அதிலிருந்து தொடங்கியது புது அவதாரம்.
1998ல் ஷார்ஜாவில் நடந்த முத்தரப்பு தொடரில் ஆஸ்திரேலிய அணியை புரட்டி புரட்டி அடித்தார். கடைசி லீக் ஆட்டத்தில் 143 ரன் விளாசி பைனல் வாய்ப்பை உறுதி செய்தவர், இறுதிப் போட்டியில் 134 ரன் அடித்து கோ கோ கோலா கோப்பையை கைப்பற்றி ரசிகர்களின் இதயங்களை கொள்ளை அடித்தார். சுழன்றடித்த அந்த பாலைவனப் புயலில் ஆஸி. பவுலர்கள் பிளெமிங், கேஸ்பரோவிக்ஸ், ஷேன் வார்ன், வாஹ் சகோதர்கள் எல்லாம் சருகுகளாய் பறந்தார்கள். பெரிய அணிகளை நம்மாலும் வீழ்த்த முடியும் என்ற நம்பிக்கையை விதைத்ததில் சச்சினின் பங்கு மகத்தானது.

463 ஒருநாள் போட்டியில் 18,426 ரன் (அதிகம் 200*, சராசரி 44.83, சதம் 49, அரை சதம் 96, பவுண்டரி 2016, சிக்சர் 195)… படிக்கும் போதே மூர்ச்சையாகும் அளவுக்கு மூர்க்கத்தனமான சாதனைகள். உலக கோப்பையில் அதிக ரன் குவிப்பு, அதிக ஆட்ட நாயகன் விருது, முதல் இரட்டை சதம், அதிக சதம், கங்குலியுடன் இணைந்து முதல் விக்கெட்டுக்கு அதிக ரன் குவிப்பு… என்று அடுக்கிக் கொண்டே போகலாம். ஸ்பெஷலிஸ்ட் பவுலர்கள் விக்கெட் எடுக்க முடியாமல் திணறுகிறார்களா? மிரட்டும் பார்ட்னர்ஷிப்பை உடைக்க வேண்டுமா? பந்தை சச்சினிடம் கொடுங்கள் என்று சொல்லும் அளவுக்கு 154 விக்கெட் வீழ்த்தி பந்துவீச்சிலும் முத்திரை பதித்து ஆல் ரவுண்டராக ஜொலித்திருக்கிறார்.
இந்தியாவுக்காக உலக கோப்பையை வெல்ல வேண்டும் என்ற கனவையும் 2011ல் நனவாக்கிக் கொண்டபோதே அவரது கிரிக்கெட் வாழ்க்கை பூரணத்துவம் பெற்றுவிட்டது. அப்போதே ஓய்வு முடிவை அறிவித்திருக்கலாம் என்கிறார்கள் சிலர். நட்சத்திர வீரர்கள் இல்லாவிட்டால் டிவி ரேட்டிங்கை தக்கவைக்க முடியாதே என்ற வாரியத்தின் சுயநலம், வர்த்தக ரீதியான நிர்ப்பந்தங்கள் அவரை தொடர்ந்து ஆட வைத்திருக்கிறது. இளைஞர்களுக்கு வழிவிடாமல் நந்தியாய் நிற்கிறார் என்ற குற்றச்சாட்டில் உண்மையில்லை.

சர்வதேச டி20ல் ஒரு ஆட்டமே போதும் என்று ஒதுங்கிக் கொண்டவர் அவர். உலக கோப்பைக்கு பிறகு, ஒருநாள் தொடர்களைக் கூட வெகுவாக குறைத்துக் கொண்டார். டெஸ்ட் சொதப்பல்தான் எல்லோரையும் எரிச்சலாக்கிவிட்டது. அடுத்து ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்கா என்று பலமான அணிகளுடன் மோதப் போவதால்தான் அணியில் நீடிக்க முடிவு செய்திருப்பதாகத் தெரிகிறது. எப்படிப் பார்த்தாலும் அதிகபட்சம் 6 மாதம் ஆடுவார். அதற்கான உரிமை அவருக்கு இருக்கிறது என்பதை யாரும் மறுக்க முடியாது.
டெஸ்ட் கதையை அப்புறம் பார்த்துக் கொள்ளலாம். ஒருநாள் வரலாற்றைப் பொறுத்தவரை ஒரு ஈடு இணையற்ற சகாப்தம், பொற்காலம், பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய சாதனை சரித்திரம் முடிவுக்கு வந்துள்ளது என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. அவரது சாதனைகளை முறியடிக்கவும் ஒரு வீரர் வரலாம். என்ன… அதற்கு இன்னும் ஒரு அரை நூற்றாண்டாவது தேவைப்படும்!

பெங்களூரில் பாகிஸ்தானுடன் நடந்த டி20 போட்டியின்போது, இந்திய வீரர்கள் ஒரு பேனரை தொங்கவிட்டிருந்தார்கள். ‘சச்சின் உங்களை ரொம்பவே மிஸ் செய்கிறோம். ஆனால், இனி எங்களுக்கு விருப்பமான இசையை கேட்டு ரசிப்போம்’ என்று அதில் ஜோக் அடித்திருந்தார்கள். முகமது ரபி, கிஷோர் குமார் பாடல்கள் என்றால் சச்சினுக்கு அத்தனை உயிர். வீரர்கள் தங்கள் விருப்பம் போல இசையை மாற்றிக் கொள்ளட்டும்.

வெற்றி, பணம், புகழ் என எதையுமே மண்டைக்குள் ஏற்றிக் கொள்ளாத சச்சினின் அடக்கம், ஒழுக்கம், அர்ப்பணிப்பு, கடுமையான உழைப்பு போன்ற பண்புகளில் இருந்து பாடம் கற்பதை மட்டும் மறந்துவிடக் கூடாது. குட்பை சச்சின்.

பா. சங்கர்

  

இனி நாடோடி அணியா இந்தியா?


ஒரு ஒலிம்பிக் அவமானம்

இந்திய ஒலிம்பிக் சங்கத்தை அதிரடியாக சஸ்பெண்ட் செய்துள்ளது சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில். நிர்வாகிகள் தேர்தலில் ஒலிம்பிக் அமைப்பின் விதிகளை கடைப்பிடிக்காமல், அரசின் புதிய விளையாட்டு நெறிமுறைகளின் கீழ் நடத்துவதுதான் காரணம் என்கிறார்கள். இவர்களின் அரசியல் விளையாட்டில் வீரர், வீராங்கனைகளை நாடோடிகளாக்கி விட்டார்கள்.

இந்திய விளையாட்டு அமைப்புகளில் கோஷ்டி பூசலும் அரசியல் ஆதிக்கமும் சர்வ சாதாரணம். பல நிர்வாகிகள் ‘பசை’ போட்டு ஒட்டிக்கொண்டு பதவியில் நீடித்து வருகிறார்கள். காமன்வெல்த் போட்டியில் ஊழல் சர்ச்சை வெடித்து கல்மாடி, பனோட் கைதானபோது இந்திய ஒலிம்பிக் சங்கம் கலகலத்தது.

புதிய நிர்வாகிகளை தேர்வு செய்ய வேண்டிய கட்டாயம். எதிர்ப்பு கோஷ்டி நீதிமன்றத்தில் வழக்கு போட்டதில், மத்திய அரசின் விதிமுறைகளின் கீழ் தேர்தலை நடத்த வேண்டும் என்று உத்தரவு போடப்பட்டது. இதில்தான் சிக்கல் ஆரம்பம்.

‘தேர்தலில் அரசு குறுக்கீட்டை ஏற்க முடியாது. எங்கள் விதிகளின்படி தான் நடத்த வேண்டும். இல்லை என்றால் சஸ்பெண்ட் செய்துவிடுவோம்’ என்று பல மாதங்களுக்கு முன்பாகவே சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில் (ஐஓசி) கண்டிப்பாக சொல்லிவிட்டது. பிரஷர் தாங்க முடியாமல் தலைமை தேர்தல் கமிஷனர் குரேஷி ராஜினாமா செய்துவிட நவம்பரில் நடக்க இருந்த தேர்தல், டிசம்பர் முதல் வாரத்துக்கு ஒத்திவைக்கப்பட்டது. அதற்கு முன்பே, காமன்வெல்த் ஊழல் சர்ச்சையில் கைதாகி சிறை சென்ற லலித் பனோட் பொதுச் செயலாளராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக அறிவித்தார்கள். ஏகத்துக்கு கடுப்பாகிப்போன ஐஓசி, இந்திய ஒலிம்பிக் சங்கத்தை அதிரடியாக சஸ்பெண்ட் செய்துவிட்டது.

நீதிமன்ற உத்தரவுக்கு கட்டுப்பட்டே அரசின் விதிமுறைகளின் கீழ் தேர்தலை நடத்த வேண்டி உள்ளது என்ற விளக்கத்தை ஐஓசி ஏற்கவில்லை. மேலோட்டமாக பார்த்தால் இதனால் என்ன பெரிய பாதிப்பு என்று தோன்றும். உண்மையில் இதைவிட பெரிய அவமானம் ஒரு நாட்டுக்கு இருக்க முடியாது. நிதியுதவி நிறுத்தப்படுவதையும், நிர்வாகிகள் புறக்கணிக்கப்படுவதையும் சமாளித்துவிடலாம். ஒலிம்பிக் தொடக்க விழாவில் தேசியக் கொடி ஏந்தி அணி வகுக்கும் உரிமையை இந்திய வீரர், வீராங்கனைகள் இழந்துவிடுவார்கள். ஐஓசி கொடியின் கீழ் நாடோடிகளாய் வேண்டுமானால் பங்கேற்கலாம். எங்கள் விதிகளை பின்பற்றும் வரை இதே நிலை நீடிக்கும் என்று ஐஓசி அறிவித்துவிட்டது.

நிர்வாகிகளுக்கான வயது வரம்பு, பதவிக் காலம் இந்த இரண்டும்தான் சர்ச்சைக்கு முக்கிய காரணம். தலைவர் பதவிக்கு அதிகபட்சமாக 12 ஆண்டுகள். ஐஓசி விதிப்படி தொடர்ச்சியாக 8 ஆண்டு, 4 ஆண்டு இடைவெளி விட்டு மீண்டும் போட்டியிடலாம். அரசின் விதியில் இடைவெளிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை. எழுபது வயதை கடந்தவர்கள் நிர்வாகிகளாக இருக்க முடியாது.

இதில் எதையுமே இந்திய விளையாட்டு அமைப்புகள் பின்பற்றுவதில்லை. வில்வித்தை சங்கத்தின் தலைவராக ஏற்கனவே 33 ஆண்டுகளை பூர்த்தி செய்துவிட்ட 80 வயது புரொபசர் வி.கே.மல்கோத்ரா, மீண்டும் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். தொடர்ச்சியாக 37 ஆண்டுகளுக்கு அவர்தான் தலைவர். ஜூடோ கூட்டமைப்பின் தலைவர் ஜெகதீஷ் டைட்லர் (16 ஆண்டு), கபடி கூட்டமைப்பின் தலைவர் கெலாட் (26 ஆண்டு)… என்று இந்த பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.

சஸ்பெண்ட் உத்தரவை அலட்சியப்படுத்திவிட்டு தங்கள் விருப்பம் போல தேர்தலை நடத்தியிருக்கிறார்கள். விளையாட்டு தீர்ப்பாயத்தை அணுகி தடையை நீக்கிக் கொள்ளலாம் என்ற நப்பாசை. தென் ஆப்ரிக்கா (நிறவெறி), ஆப்கானிஸ்தான் (தலிபான்) வரிசையில் இந்தியாவும் சேர்ந்துவிட்டதே என்று விளையாட்டு வீரர்களும் ஆர்வலர்களும்தான் அங்கலாய்க்கிறார்கள். கெட்டதில் ஒரு நல்லது என்பார்கள்… அது போல அவமானகரமான இந்த நிகழ்வுக்கு பிறகாவது விளையாட்டு அமைப்புகளை சீர் செய்வதற்கான வாய்ப்பாக இதை எடுத்துக் கொண்டு களையெடுக்க வேண்டும். விளையாட்டு நிர்வாகத்தில் அரசியல் தலையீடு அறவே இல்லாமல் பார்த்துக் கொள்வது அவசர அவசியம்.

பா.சங்கர்

என்ன ஆச்சு இந்திய அணிக்கு?


ஈடனில் கடைசி வாய்ப்பு

இந்திய மண்ணில் இங்கிலாந்து அணி காலடி வைத்ததுமே நமது வீரர்கள், மீடியா, ரசிகர்கள் என எல்லோருமே பழிதீர்க்கும் படலத்துக்கு தயாராகிவிட்டார்கள். இங்கிலாந்து சென்று 0-4 என்ற கணக்கில் வாங்கிய மரண அடிக்கு பதிலடி கொடுத்தே ஆக வேண்டும் என்ற வெறி, வேட்கை. பயிற்சி ஆட்டங்களில் சாம்பிளுக்கு ஒரு தரமான ஸ்பின்னரைக் கூட கண்ணில் காட்டாமல் வெகு சாமர்த்தியமாக வியூகம் வகுத்தார்கள்.

அகமதாபாத் டெஸ்டில் ஓஜா – அஷ்வின் மிரட்டியதில் இங்கிலாந்தும் பெட்டிப் பாம்பாய் ஒடுங்கியது. டோனிக்கு தலைகால் புரியவில்லை. இதெல்லாம் ஒரு பிட்ச்சா? மும்பை ஆடுகளம் முதல் நாளில் இருந்தே சுழலுக்கு சாதகமாக இருக்க வேண்டும் என்று கொக்கரித்தார். ஓஜா, அஷ்வின், ஹர்பஜன் என்று சுழல் கூட்டணியின் பலத்தையும் அதிகரித்தார். பத்து ஆண்டு இடைவெளிக்குப் பிறகு ஒரே டெஸ்டில் இரண்டு ஆப் ஸ்பின்னர்களுடன் இந்தியா களமிறங்கியது.

பிரம்மாஸ்திரத்தை பிரயோகிக்கப் போகிறார்கள் என்பது தெளிவாகிவிட, இங்கிலாந்தும் தற்காப்பில் இறங்கியது. வேகத்துக்கு சுத்தமாக வேலையில்லை என்பதால், நாமும் மூன்று ஸ்பின்னர்களை சேர்த்து வைப்போம் என்று பனேசருக்கு இடம் கொடுத்தார்கள்.

டோனியின் ஆணைப்படியே மும்பை ஆடுகளமும் முதல் ஓவரில் இருந்து சுழலுக்கு ஒத்துழைத்தது. அதை எப்படி சமாளிப்பது என்பதைத்தான் இந்திய வீரர்கள் மறந்து போனார்கள். பனேசரின் அசத்தலான சுழலில் டாப் ஆர்டர் மூழ்கினாலும் புஜாரா, அஷ்வின் தயவில் கணிசமான ஸ்கோரை எட்டியதால், இதுவே போதும்பா… நம்ம பசங்க ஈசியா சுருட்டிடுவானுங்க என்று ரசிகர்கள் தெம்பாக இருந்தார்கள்.

ஆனால், அலஸ்டர் குக் - பீட்டர்சன் ஜோடியின் பெவிகால் இணைப்பை பிரிக்க முடியாமல் இந்திய பவுலர்கள் நாக்கு தள்ளினார்கள். இவர்கள் நன்றாக செட்டில் ஆன பிறகே ஹர்பஜனை முயற்சித்தார் டோனி. ஸ்டாக் பவுலர்களான சேவக், யுவராஜை பயன்படுத்தலாம் என்று யோசிக்கும் அளவுக்கு அவரது மூளை அலர்ட்டாக இல்லை. குக்கும், பீட்டர்சனும் அடித்து நொறுக்கிவிட்டார்கள். இருந்தாலும் நம் ரசிகர்களுக்கு ஒரு நப்பாசை. அவனுங்களே இப்படி அடிக்கிறானுங்க… இரண்டாவது இன்னிங்சில் நம்ம ஆளுங்களும் ஒரு கை பார்த்துடுவாங்க என்று நம்பினார்கள். கம்பீர், அஷ்வின் தவிர்த்து ஒருவரும் ஒற்றை இலக்கத்தை தாண்டவில்லை. மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் உள்பட இந்திய விக்கெட்டுகளை அப்படியே விழுங்கி ஏப்பம் விட்ட பனேசரின் எகத்தாள சிரிப்பு அவரது தாடியையும் மீறி பளிச்சிட்டது. சொற்ப இலக்கை விக்கெட் இழப்பின்றி கடந்த இங்கிலாந்து கணக்கை நேர் செய்தது.

சொந்த மண்ணில் அடைந்த படுதோல்வி, அணியையும் ரசிகர்களையும் நிலைகுலைய வைத்துள்ளது. கடந்த பத்து இன்னிங்சில் சராசரியாக 15 ரன் மட்டுமே எடுத்துள்ள சச்சின் கடும் விமர்சனத்துக்கு ஆளாகியிருக்கிறார். எதிர்காலம் குறித்து தேர்வுக்குழுவினரிடம் அவர் பேச வேண்டும் என்று கபில் ஆலோசனை கூற, ‘இது போன்ற நெருக்கடியான கட்டத்தில் சச்சினின் அனுபவம் அவசியம். அவர் அணியில் நீடிக்க வேண்டும்’ என்கிறார் டிராவிட்.

சொதப்பல் காண்டத்தில் சேவக், கம்பீர், கோஹ்லி, யுவராஜ், டோனி என்று மற்ற பேட்ஸ்மேன்களும் சம பங்கு வகிக்கிறார்கள். ஏற்கனவே வெளிநாட்டு தொடர்களில் 8 கேவலமான தோல்விகளை சந்தித்த டோனி, உள்ளூரில் கிடைத்த இந்த உதையால் தலை கிறுகிறுத்துப் போயுள்ளார். இருந்தாலும், மீசையில் மண் ஒட்டவில்லை கதையாய் அடுத்தடுத்த போட்டிகளுக்கும் இதே மாதிரி பிட்ச்தான் வேண்டும் என்று அடம் பிடிக்க, கிரிக்கெட் வாரியமும் ஈடன் கார்டனில் அதற்கு ’ரகசிய’ ஏற்பாடு செய்து கொடுத்துள்ளது.

மும்பை தோல்விக்கு பிறகு, எஞ்சியுள்ள இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கான அணியை தேர்வு செய்வதற்காக கூடியது தேர்வுக் குழு. சாட்டையைக் கையில் எடுப்பார் சந்தீப் பட்டீல் என்று எதிர்பார்த்த நிலையில், அணியில் மாற்றம் இல்லை என்று அறிவித்துவிட்டார்கள். இதற்கும் டோனியின் பிடிவாதமே காரணம். இருந்தாலும், இந்த அணி கொல்கத்தா போட்டிக்கு மட்டும்தான் என்று செக் வைத்திருக்கிறார்கள்.

அணியில் இருந்து தூக்க வேண்டிய முதல் ஆள் டோனிதான் என்கின்றனர் பல விமர்சகர்கள். ‘கேப்டன், பேட்ஸ்மேன், விக்கெட் கீப்பர் என எல்லா பொறுப்பிலும் சொதப்பி வருகிறார். டெஸ்ட் போட்டிகளில் இருந்து அவர் ஒதுங்கிக் கொண்டு பார்திவ் பட்டேல், தினேஷ் கார்த்திக், சாஹா போன்றவர்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும்’ என்கின்றனர்.

அஷ்வின் மந்திரப் பந்துவீச்சையும் அக்கு வேறு ஆணி வேறாக பிரித்து மேய்ந்துவிட்டார்கள் இங்கிலாந்து வீரர்கள். ‘அவர் டி20 போட்டிக்குதான் லாயக்கு. முரளி கார்த்திக், அமித் ஷர்மா அல்லது பியுஷ் சாவ்லாவை சேர்க்கலாம்’ என்ற ஆலோசனையும் உலா வருகிறது. சமீப காலத்தில் இந்திய அணி இந்த அளவுக்கு நெருக்கடியை சந்தித்ததில்லை.

ஒருநாள் போட்டிகளில் இந்த ஆண்டின் மிகச்சிறந்த வீரராக சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் பெருமைமிகு விருதைப் பெற்ற விராத் கோஹ்லியால், டெஸ்ட் அரங்கில் சாதிக்க முடியவில்லை. எல்லா பந்தையும் அடித்து ஆட வேண்டும் என்ற ஆர்வக் கோளாறுதான் காரணம். வாடியிருக்கும் கொக்கின் பொறுமையை அவர் புஜாராவிடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டும்.

ஒட்டு மொத்த அணிக்குமே இதுதான் கடைசி வாய்ப்பு. ஈடன் தோட்டத்தில் வசந்தம் மலருமா? இல்லை கல்லறை கட்டப்படுமா? என்பது மூன்றாவது சோதனையின் முடிவில் தெரிந்துவிடும்.

பா.சங்கர்

டோனியின் கேப்டன் பதவிக்கு ஆபத்தா?


ஆப்கானிஸ்தானுக்கு எதிரான உலக கோப்பை டி20 லீக் போட்டியில் இந்தியாவின் மட்டமான ஆட்டம் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. கற்றுக்குட்டி அணியிடமே இப்படி தள்ளாடினால், பலமான அணிகளிடம் செம உதை வாங்குவார்கள் என்றார்கள். அடுத்து சாம்பியன் இங்கிலாந்துடன் நடந்த போட்டியில் ஹர்பஜன், சாவ்லா சுழல் ஜாலம் மிகப் பெரிய வெற்றியைக் கொடுக்க, கொஞ்சம் நம்பிக்கை பிறந்தது.

அந்த போட்டியில் 7 பேட்ஸ்மேன், 5 பவுலர் என்ற பார்முலாவை டோனி பயன்படுத்தினார். அது சூப்பராக ஒர்க் அவுட்டானது திருப்தியாக இருந்தாலும், அடுத்தடுத்த போட்டிகளுக்கு வீரர்களைத் தேர்வு செய்வதில் புதிய தலைவலியை உண்டாக்கிவிட்டது.

தொடக்க வீரராக மீண்டும் சேவக் விளையாடுவாரா? இல்லை… இர்பானுக்கே தொடர்ந்து வாய்ப்பு கொடுக்கப்படுமா? ஹர்பஜனை சேர்த்தால் யாரை நீக்குவது? இப்படி பல்வேறு இம்சையான கேள்விகள். போதாக்குறைக்கு, டோனி – சேவக் பனிப்போர் உச்சக்கட்டத்துக்கு போய்விட்டது. வேண்டுமென்றே அவரை பெஞ்ச்சில் உட்கார வைத்துவிட்டார். டி20 உலக கோப்பையை வெல்லாவிட்டால், டோனியின் பதவி அம்போ என்று கிளப்பிவிட்டார்கள்.

சூப்பர் 8 சுற்றில் ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்கா, பாகிஸ்தான் என்று அநியாயத்துக்கு கஷ்டமான பிரிவில் இந்தியா மாட்டிக் கொண்டது டென்ஷனை இன்னும் அதிகமாக்கிவிட்டது. கொஞ்சம் அசந்தாலும் அரை இறுதி வாய்ப்பு நழுவி விடும் என்பது அப்பட்டமாகத் தெரிகிறது.

போட்டியை நடத்தும் இலங்கையும், டி20ல் புதிய சக்தியாக எழுச்சி கண்டிருக்கும் வெஸ்ட் இண்டீசும் ரேசில் சேர்ந்து கொண்டதால் இதுவரை இல்லாத அளவுக்கு போட்டிகளில் அனல் பறக்கிறது. ஆஸ்திரேலியாவின் வாட்சன் ஆல் ரவுண்டராக அமர்க்களப்படுத்திக் கொண்டிருக்கிறார். வாட்சன் – வார்னர் ஜோடியின் அதிரடி எதிரணி பவுலர்களைக் கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது. ஒருநாள் மற்றும் டெஸ்ட் அரங்கில் சாம்பியனாக சாதித்துக் காட்டியதுடன் நீண்ட காலம் ஆதிக்கம் செலுத்திய ஆஸ்திரேலிய அணிக்கு டி20 போட்டியில் அளிக்கப்பட்டிருக்கும் ‘அண்டர் டாக்’ அந்தஸ்து விரைவில் காலாவதியாகிவிடும் என்றே தோன்றுகிறது.இந்தியாவின் சமீபத்திய பார்மை வைத்துப் பார்க்கும்போது கோப்பை கைக்கு எட்டினாலும் வாய்க்கு எட்டுமா? என்பது சந்தேகமாகவே உள்ளது. டி20ல் எதையும் கணிக்க முடியாது என்பதால் நம்பிக்கையுடன் காத்திருப்போம்.

அசைக்க முடியாத கேப்டன், அதிர்ஷ்ட கேப்டன் என்ற பெருமை எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாய் கரைந்து டோனியின் தலைக்கு மேல் கத்தி தொங்குவது கண்கூடாய்த் தெரிகிறது. ஸ்ரீகாந்த் தலைமையிலான தேர்வுக்குழுவின் பதவிக்காலம் முடிந்து புதிய தேர்வுக்குழு பொறுப்பேற்றுள்ள நிலையில், அணியில் அதிரடி மாற்றங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கிறார்கள். அணியின் ஒற்றுமை அடிக்கடி கேள்விக்குறியாக்கப்படுவதை தவிர்க்க வேண்டியது உடனடி அவசியம். அனுபவ வீரர்களைக் கையாள்வதிலும் கூடுதல் கவனம் தேவை.

இங்கிலாந்து, ஆஸ்திரேலியா என்று மிக வலுவான அணிகளை சொந்த மண்ணில் இந்திய அணி சந்திக்கவுள்ள நிலையில், டோனியை மாற்றுவது சரியாக இருக்காது. உள்ளூரில் நடக்கும் டெஸ்ட் போட்டிகளில் வெற்றிகளைக் குவித்து இழந்த பெருமையை மீட்டால் டோனியின் தலைமை தப்பலாம். இளம் வீரர் கோஹ்லி விஸ்வரூபம் எடுத்து வருவதால் இந்திய அணிக்கு டெஸ்ட், ஒருநாள், டி20ல் தனித் தனி கேப்டன்கள் நியமிக்கப்படும் கட்டாயம் ஏற்பட்டால் ஆச்சரியப்ப வேண்டாம்.


பா.சங்கர்

சச்சின் ‘ஆட்டம்’ காண்கிறாரா?


பெயரைக் கேட்கும் போதே உலக அளவில் எந்த ஒரு பவுலருக்கும் உள்ளுக்குள் உதறல் எடுக்க வைப்பவர் சச்சின். கிட்டத்தட்ட கால் நூற்றாண்டாக இதே நிலைதான். இன்றும் கூட அதில் மாற்றம் இல்லை. ஆனால், சமீபத்திய போட்டிகளில் அவரது ஆட்டம் கடுமையாக விமர்சிக்கப்படுகிறது. நியூசிலாந்து டெஸ்ட் தொடரில் தொடர்ச்சியாக 3 முறை கிளீன் போல்டு ஆனதால், அவர் உடனடியாக ஓய்வு பெற வேண்டும் என்ற கருத்தும் ஓங்கி ஒலிக்கத் தொடங்கியிருக்கிறது.

சச்சின் ஆட்டம் அவ்வளவுதானா? டிராவிட், லஷ்மண் கூட கடைசி கட்டத்தில் இப்படித்தான் தடுமாறினார்கள். ஸ்டம்புகளைக் குறி வைத்து சற்று அளவு கூடுதலாக வீசப்படும் பந்துகளை சச்சினால் சமாளிக்க முடியவில்லை. வயதாகிவிட்டதால் பார்வை மங்கிவிட்டது. நினைத்த ஷாட்டை விளையாட உடல் ஒத்துழைக்க மறுக்கிறது. ஃபுட் ஒர்க் சுத்தமாக இல்லை… என்று அடுக்கிக் கொண்டே போகிறார்கள்.

தனது ஆட்டத்தில் அவருக்கும் திருப்தி இல்லை என்பது பெங்களூர் டெஸ்டின் 2வது இன்னிங்சில் கிளீன் போல்டு ஆனபோது நன்றாகத் தெரிந்தது. வழக்கமாக உணர்ச்சிகளை வெளிப்படுத்தாமல் அமைதியாக வெளியேறும் சச்சின், அன்று மட்டையை ஆக்ரோஷமாக சுழற்றி தனது விரக்தியை வெளிப்படுத்தியது, பார்க்கவே கஷ்டமாக இருந்தது.

சாதிக்கவோ, சம்பாதிக்கவோ இனி மிச்சம் மீதி எதுவும் இல்லை என்ற அளவுக்கு எல்லா வகையிலும் சிகரம் தொட்டவருக்கு இந்த நிலை தேவையா? கவுரவமாக விலகிக் கொண்டு இளைஞர்களுக்கு வழி விடலாமே என்ற கேள்வியில் நியாயம் இருந்தாலும், எப்போது ஓய்வு பெற வேண்டும் என்பதில் அவர் சரியான நேரத்தில் சரியான முடிவை எடுப்பார் என்ற நம்பிக்கை இருக்கிறது.

கங்குலி, டிராவிட், லஷ்மண் என்று அனுபவ வீரர்கள் ஒவ்வொருவராக வெளியேறி, இந்திய அணி புதிய தலைமுறையின் கைகளில் ஒப்படைக்கப்படுவது படிப்படியாக நிகழ்ந்து வருகிறது. இப்படியொரு மாற்றம் எந்த ஒரு அணியையுமே நிலைகுலையச் செய்யும் என்றாலும், இந்திய அணி அதிலும் கூட பெரிய சரிவை சந்திக்காமல் எதிர்நீச்சல் போட்டு கரையேறி இருக்கிறது என்பதே பெரிய சாதனைதான். புஜாரா, கோஹ்லி ஆட்டம் அதை உறுதி செய்துள்ளது. அடுத்து இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்கா என்று பலம் வாய்ந்த அணிகளுடன் மோத உள்ள நிலையில், சச்சின் இப்போது ஓய்வு பெறுவது என்பது சரியான முடிவாக இருக்காது. எப்படிப் பார்த்தாலும், அதிகபட்சமாக இன்னும் ஓராண்டு காலம் மட்டுமே அவரால் தாக்குப்பிடிக்க முடியும். ஆரம்பத்தில் இருந்தே, டி20 இளைஞர்களுக்கான ஆட்டம் என்று ஒதுங்கிக் கொண்டவர், இப்போது ஒருநாள் போட்டிகளையும் தேர்வு செய்தே விளையாடி வருகிறார். டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே கவனம் செலுத்தி வரும் சச்சினின் ஆட்டத்தை சமீபத்திய தோல்விகளின் அடிப்படையில் மதிப்பிடுவது தவறு.

அவர் மீதான அதிக எதிர்பார்ப்பும், பெரிய ஸ்கோர் அடிக்காததால் ஏற்படும் ஏமாற்றமுமே விமர்சனங்களின் வீச்சையும் பெரிதாக்கிவிடுகிறது. டெஸ்ட் போட்டிகளில் ரெய்னா இன்னும் தன்னை நிலைப்படுத்திக் கொள்ள முடியாமல் தடுமாறி வரும் நிலையில், சச்சின் ஓய்வு பெறுவது அணியை நிச்சயமாக பாதிக்கவே செய்யும்.

டென்னிஸ் எல்போ பாதிப்பால் தனது இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாமல் சற்றே திணறியபோது கூட இப்படித்தான் கடும் விமர்சனத்தை அவர் சந்திக்க நேர்ந்தது. ஆனால், சவால்களை சந்திக்க ஒருபோதும் தயங்காத சச்சின், அதிலிருந்து மீண்டு வந்து அடுக்கடுக்காக புதிய சாதனகளைப் படைத்ததை மறுக்க முடியாது.

இப்போதும் கூட, ‘சச்சின் ரன் மெஷின் இந்த நெருக்கடியை சமாளித்து மீண்டும் முழு வேகத்தில் இயங்கும்’ என்று கவாஸ்கர், மஞ்ரேக்கர் உட்பட பிரபலங்கள் பலரும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். டாப் அணிகளின் சவாலை அவர் எப்படி எதிர்கொள்ளப் போகிறார் என்பதை பொருத்திருந்து பார்ப்போம். அந்த தொடர்களின் முடிவில் தலைப்புக் கேள்விக்கான விடை நிச்சயமாகத் தெரிந்துவிடும்.           
– பா.சங்கர்

இந்தியாவுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி


ஒரு தங்கம் கூட கிடைக்கவில்லை என்றாலும், இந்தியாவுக்கு லண்டன் ஒலிம்பிக் மிக வெற்றிகரமான போட்டி என்பதில் சந்தேகமே இல்லை. இரண்டு வெள்ளி, 4 வெண்கலம் என மொத்தம் 6 பதக்கங்களை வென்றது இந்தியாவுக்கு புதிய ஒலிம்பிக் சாதனையாக அமைந்தது. பெய்ஜிங்கில் 3 பதக்கம் வென்றதே அதிகபட்சம் என்ற முந்தைய சாதனை அளவை இரட்டிப்பாக்கி அசத்தியிருக்கிறார்கள். அடுத்து, பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் 2016ம் ஆண்டு நடக்கவுள்ள ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவின் பதக்க வேட்டை இரட்டை இலக்க எண்ணிக்கையை எட்டும் என்ற நம்பிக்கை எழுந்துள்ளது.

அசத்தினார் சுஷில்

லண்டன் ஒலிம்பிக் போட்டியின் கடைசி நாளில் களமிறங்கிய மல்யுத்த வீரர் சுஷில் குமார் (66 கிலோ பிரீஸ்டைல் பிரிவு) அடுத்தடுத்து வெற்றிகளைக் குவித்து பைனலுக்கு முன்னேறியதால் தங்கம் வெல்வார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது. துரதிர்ஷ்டவசமாக வாந்தி, வயிற்றுப்போக்கு காரணமாக மிகுந்த சோர்வுடன் பைனலில் விளையாட நேரிட்டதால், ஜப்பான் வீரர் யோனமிட்சுவிடம் தோற்ற சுஷில் வெள்ளியுடன் திருப்தி அடைந்தார். இந்த பதக்கத்துடன் இந்தியாவின் எண்ணிக்கையை 6 ஆக அதிகரித்து புதிய சாதனை படைக்க உதவிய சுஷில், தொடர்ச்சியாக இரண்டு ஒலிம்பிக்கில் தனிநபர் பதக்கம் வென்ற முதல் இந்திய வீரர் என்ற சாதனையை தனதாக்கினார்.

ஜமாய்த்தது ஜமைக்கா

உலகின் அதிவேக வீரர் உசேன் போல்ட் இருக்க ஜமைக்கா அணிக்கு என்ன கவலை? ஆண்கள் 4 X 100 மீட்டர் தொடர் ஓட்டத்தில் நெஸ்டா கார்ட்டர், மைக்கேல் பிரேட்டர், யோகன் பிளேக், உசேன் போல்ட் ஆகியோர் அடங்கிய ஜமைக்கா அணி 36.84 விநாடிகளில் பந்தய தூரத்தைக் கடந்து புதிய உலக சாதனையுடன் தங்கம் வென்றது. இந்த தொலைவை 37 விநாடிகளுக்கும் குறைவாகக் கடந்த முதல் அணி என்ற பெருமையும் ஜமைக்காவுக்கு கிடைத்தது. 2011 டேகு உலக தடகள சாம்பியன்ஷிப்பில் ஜமைக்கா அணி 37.04 விநாடியில் ஓடி படைத்த உலக சாதனையை லண்டன் ஒலிம்பிக்கில் அந்த அணியே தகர்த்தது.

அமெரிக்க அமர்க்களம்

மகளிர் 4 X 100 மீட்டர் தொடர் ஓட்டத்தில் அமெரிக்க அணி 27 ஆண்டுகால உலக சாதனையை முறியடித்து தங்கம் தட்டியது. டியானா மேடிசன், அலிசான் பெலிக்ஸ், பியான்கா நைட், கார்மெலிடா ஜெட்டர் ஆகியோர் அடங்கிய அமெரிக்க அணி 40.82 விநாடிகளில் பந்தய தூரத்தைக் கடந்து 1985ல் கிழக்கு ஜெர்மனி படைத்த சாதனையை (41.37 வி.) தவிடுபொடியாக்கியது.

 

Ø  மகளிர் நவீன பென்டத்லான் போட்டியின் 200 மீட்டர் பிரீஸ்டைல் நீச்சல் பிரிவில் ஹங்கேரி வீராங்கனை சரோல்டா கோவாக்ஸ் புதிய ஒலிம்பிக் சாதனை படைத்தார். அவர் 2 நிமிடம் 8.11 விநாடிகளில் நீந்தி பெய்ஜிங் ஒலிம்பிக்கில் அமெரிக்காவின் ஷீலா டவோர்மினா படைத்த முந்தைய சாதனையை (2:08.86) முறியடித்தார்.

Ø  ஒலிம்பிக் மகளிர் கூடைப்பந்து போட்டியில் அமெரிக்க அணி தொடர்ந்து 5வது முறையாக தங்கம் வென்று சாதனை படைத்தது. பைனலில் பிரான்ஸ் அணியை 86 – 50 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்திய அமெரிக்காவுக்கு இது தொடர்ச்சியான 41வது வெற்றியாகும். கடந்த 8 ஒலிம்பிக்கில் அந்த அணி 7 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. 1992 பார்சிலோனா ஒலிம்பிக் அரை இறுதியில் மட்டுமே ரஷ்ய அணியிடம் அமெரிக்கா தோற்றுள்ளது. ஒலிம்பிக்கில் அந்த அணி 55 வெற்றிக்கு ஒரு தோல்வி மட்டுமே பெற்றுள்ளது.

Ø  மகளிர் 20 கிலோ மீட்டர் நடை பந்தயத்தில் ரஷ்ய வீராங்கனை யெலினா லஷ்மனோவா ஒரு மணி 25 நிமிடம் 02 விநாடிகளில் இலக்கை எட்டி புதிய உலக சாதனை படைத்தார்.

Ø  ஆண்கள் நவீன பென்டத்லான் போட்டியின் வாள்வீச்சு பிரிவில் செக் குடியரசின் டேவிட் ஸ்வபோதா 26 வெற்றிக்கு 9 தோல்வி என்ற கணக்கில் புதிய ஒலிம்பிக் சாதனை படைத்தார்.

Ø  இசைக்கேற்ப நடனமாடியபடி நீந்தும் போட்டியில் ரஷ்ய அணி தொடர்ச்சியாக 4வது தங்கம் வென்று சாதனை படைத்தது.

Ø  ஆண்கள் 800 மீட்டர் ஓட்டத்தில் கென்ய வீரர் டேவிட் ருடிஷா ஒர் நிமிடம் 40.91 விநாடியில் பந்தய தூரத்தைக் கடந்து புதிய உலக சாதனை படைத்தார். 2010ல் தான் படைத்த முந்தைய உலக சாதனையை (1:41.01) அவரே முறியடித்தார்.

 

 

 

வெற்றிகரமான ஒலிம்பிக்ஸ்!


விரக்தியூர் டூ நம்பிக்கைபாக்கம்

பெய்ஜிங் அக்கவுன்ட்டை (3) ஓவர் டேக் செய்ததால், ஒலிம்பிக் வரலாற்றிலேயே இந்தியாவுக்கு இதுதான் மிக வெற்றிகரமான போட்டி என்கிறார்கள். ஆலை இல்லாத ஊருக்கு இலுப்பை பூ சர்க்கரை போல ஏதோ ஒரு வெள்ளி, சில வெண்கலத்துடன் ரசிகர்களை திருப்திப்படுத்தியிருக்கிறார்கள். ஹாக்கியில் கிடைத்த அவமானம்தான் நெஞ்சை ரண்களமாக்கியிருக்கிறது.

எதிர்பார்த்த முடிவுதான் என்றாலும் கொஞ்சம் ஏமாற்றம் இருக்கத்தான் செய்கிறது. பொருளாதார வளர்ச்சியின் அடிப்படையில், இந்தியாவுக்கு ஒரு தங்கம் உட்பட அதிகபட்சம் 5 பதக்கம் கிடைக்கும் என்ற கோல்டுமேன் சேக்ஸ் கணிப்பு மெய்ப்பட்டிருந்தால் கூட மெச்சிக் கொண்டிருக்கலாம்.

விஜய் குமாரின் வெள்ளி, ககன், சாய்னா, மேரியின் வெண்கலம் ஓரளவு மானம் காத்திருக்கிறது. பாக்சிங் கால் இறுதியில் விஜேந்தர், தேவேந்திரோ சிங்கின் போராட்டம் பலித்திருந்தால் எண்ணிக்கை எகிறியிருக்கும். வில்வித்தையில் தீபிகா குமாரி அண்ட் கோ அளித்த ஏமாற்றம்தான் ஜீரணிக்கவே முடியவில்லை.

டென்னிஸ் நட்சத்திரங்கள் ஈகோ மோதலைத் தவிர்த்திருந்தால் ஆண்கள் இரட்டையர், கலப்பு இரட்டையரில் நிச்சயம் பதக்கம் கிடைத்திருக்கும். வட்டு எறிதலில் பூனியா, விகாஸ் கவுடா நம்பிக்கை அளித்தாலும் பதக்கத்துக்கும் அவர்களுக்கும் வெகு தூரம். ட்ரிபிள் ஜம்ப் பிரிவில் பங்கேற்ற ரஞ்சித் மகேஸ்வரி 3 வாய்ப்பிலும் தவறு செய்து, இவரையெல்லாம் யார் தேர்வு செய்து ஒலிம்பிக் போட்டிக்கு அனுப்பினார்கள் என்ற அளவுக்கு வெறுப்பேற்றினார்.

பாக்சிங்கில் விகாஸ், சங்வான் ஆகியோருக்கு எதிராக நடுவர்களின் முடிவுகள் அமைந்தது சர்ச்சையை கிளப்பியது. மகளிர் பேட்மிண்டன் இரட்டையர் பிரிவிலும் ஜுவாலா – அஸ்வினி ஜோடிக்கு அதிர்ஷ்டமில்லை. சொல்லி வைத்த மாதிரி இந்திய அணி மேல் முறையீட்டை மட்டும் ஒலிம்பிக் கமிட்டி உடனுக்குடன் தள்ளுபடி செய்தது, ஏதேனும் உள்நோக்கம் இருக்குமோ என்ற சந்தேகத்தை எழுப்பியது.  

மல்யுத்தத்தில் களமிறங்கிய சுஷில், யோகேஸ்வர், அமித், நரசிங், கீதா இந்நேரம் சாதித்திருந்தால் பதக்க எண்ணிக்கையில் ஒன்று அல்லது இரண்டு அதிகரித்திருக்கும். எப்படிப் பார்த்தாலும் ஒற்றை இலக்கத்தை தாண்டாது என்பது ஏற்கனவே தெரியும் என்றாலும், கொஞ்சம் முயன்றிருந்தால் 7 அல்லது 8 கூட எட்டியிருக்கலாம்.  

ஹாக்கி அணி எல்லா லீக் ஆட்டத்திலும் மண்ணைக் கவ்வியதுடன் கடைசி 2 இடத்துக்கு போட்டி போட வேண்டிய கட்டாயத்துக்குள்ளானது மிகப் பெரிய அவமானம் என்பதில் சந்தேகமே இல்லை. வீரர்கள் தேர்வில் ‘ஹாக்கி இந்தியா’ செய்த குளறுபடிதான் இந்த குழப்பத்துக்கு காரணம் என்று பிரபலங்கள் கொதிக்கிறார்கள். நீல நிற ஆடுகளம் தங்களுக்கு சாதகமாக இல்லை என்று சாக்கு போக்கு சொல்லி தப்பிக்கப் பார்ப்பதை விட, தவறு எங்கே… யாரால் என்று கண்டுபிடித்து சரி செய்வதே முக்கியம்.

கிரிக்கெட் கிரிக்கெட் என்று தொங்குகிறார்கள் என்று குறை சொல்வதில் அர்த்தமில்லை. கிரிக்கெட்டில் தோல்விகளை விட வெற்றிகளின் எண்ணிக்கை அதிகம். உலக கோப்பையும் வசமாகி இருக்கிறது. ஹாக்கியில் தங்கம் கிடைத்திருந்தால் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடி இருக்க மாட்டோமா? கோடிக் கணக்கில் பரிசு மழை கொட்டியிருக்காதா? போதிய பயிற்சி வசதி இல்லை என்றும் சொல்ல முடியாது. ஐரோப்பிய நாடுகளில் சுற்றுப்பயணம், பயிற்சி முகாம் என்று எல்லாம் தாராளமாகவே செய்திருந்தார்கள். மீண்டும் பூஜ்ஜியத்தில் இருந்து தொடங்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருப்பது வேதனையாக உள்ளது.

பதக்கம் வென்றவர்களும் மனக் குறையை, குமுறலை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். சர்வதேச அளவில் சாதித்த பிறகும் உரிய கவுரவம் கொடுக்காததால், ராணுவத்தில் இருந்து விலகப் போவதாக விஜய் குமார் கூறியது சலசலப்பை ஏற்படுத்தியது. அதற்குப் பரிகாரம் செய்வது போல, டெல்லி விமான நிலையத்தில் ராணுவம் சார்பில் அமர்க்களமான வரவேற்பு கொடுத்து அசத்திவிட்டார்கள். சுபேதார் மேஜராகப் பதவி உயர்வும் கொடுக்கப் போவதாகத் தகவல். எல்லா ஒலிம்பியன்களுக்கும் விளையாட்டு ஆணையத்தில் ஆபீசர் பதவி என்று அறிவித்திருக்கிறார் அமைச்சர் மாக்கன். இரண்டு வருடமாக கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாமால் இழுத்தடித்துக் கொண்டிருந்த மணிப்பூர் அரசும், மேரி கோமுக்கு ஏஎஸ்பி ஆக பதவி உயர்வு, 2 ஏக்கர் நிலம் என்று பிராயச்சித்தம் தேட முயற்சிக்கிறது.

விளையாட்டில் அரசியலும், சுயநலமும் கலப்பதுதான் இந்தியா பின் தங்கியிருப்பதற்கு காரணம். கடலோர மீனவக் கிராமங்களில் இருந்து திறமையான சிறுவர், சிறுமியரை தேர்வு செய்து பயிற்சி அளித்தால் நீச்சலில் அசத்த மாட்டார்களா? வயிற்றுப் பிழைப்புக்காக தெருவோரம் சாகசம் செய்யும் கழைக்கூத்தாடி சிறுமியை தத்தெடுத்து ஜிம்னாஸ்டிக்சில் தயார் செய்தால் சாதிக்க மாட்டாளா? அரசும், கார்ப்பரேட் நிறுவனங்களும் இதில் கவனம் செலுத்தினால் அடுத்த ஒலிம்பிக்கில் உலகையே அதிர வைக்கலாம்.

பா.சங்கர்     

 

லண்டன் ஒலிம்பிக் சாதனையாளர்கள்


பல சாதனைகளால் அவற்றை படைக்கும் வீரர், வீராங்கனைகளுக்கு பெருமை. சில வீரர்களால் அந்த சாதனைகளுக்கே பெருமை சேர்ந்ததாகச் சொல்வார்கள். அப்படி லண்டன் ஒலிம்பிக்கில் சாதனைக்கு பெருமை சேர்த்த வீரர்களில் அமெரிக்க நீச்சல் நட்சத்திரம் மைக்கேல் பெல்ப்சும், ஜமைக்காவின் அதிவேக மனிதர் உசேன் போல்ட்டும் முதன்மையானவர்கள்.

Ø  பெய்ஜிங் ஒலிம்பிக் 100 மீட்டர் ஓட்டத்தில் 9.69 விநாடியில் பந்தயதூரத்தைக் கடந்து புதிய ஒலிம்பிக் சாதனை படைத்த போல்ட், லண்டன் ஒலிம்பிக்கில் 9.63 விநாடியில் கடந்து தனது முந்தைய சாதனையை தகர்த்தார். தொடர்ச்சியாக 2 ஒலிம்பிக் 100 மீட்டர் ஓட்டத்தில் தங்கம் வென்ற முதல் வீரர் என்ற பெருமையும் அவருக்கு கிடைத்தது. ஜோகன் பிளேக், ஜஸ்டின் காட்லின், அசபா பாவெல் என இதுவரை இல்லாத அளவுக்கு பைனலில் மிகக் கடுமையான போட்டி இருந்த நிலையில், விமர்சனங்களை தவிடுபொடியாக்கி மின்னல் வேகத்தில் ஓடி அசத்தினார் போல்ட்.

 

Ø  ஒலிம்பிக் வரலாற்றிலேயே அதிக பதக்கங்களை அள்ளிய வீரர் என்ற பெருமையை மைக்கேல் பெல்ப்ஸ் தனதாக்கினார். ரஷ்ய ஜிம்னாஸ்டிக்ஸ் வீராங்கனை லரிசா லாடினியா 18 ஒலிம்பிக் பதக்கங்களை அள்ளியதே இதுவரை அதிகபட்சமாக இருந்தது. அவரது சாதனையை முறியடித்த பெல்ப்ஸ் மேலும் 3 பதக்கங்களை வென்று மொத்தம் 22 பதக்கங்களுடன் (18 தங்கம், 2 வெள்ளி, 2 வெண்கலம்) கம்பீரமாக ஓய்வு பெற்றார்.

 

Ø  ஒலிம்பிக் பேட்மிண்டனில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனை சாய்னா நெஹ்வாலுக்கு சொந்தமானது. வெண்கலப் பதக்கத்துக்கான மோதலில் எதிர்த்து விளையாடிய சீன வீராங்கனை காயம் காரணமாக வெளியேறியதால், அதிர்ஷ்டவசமாக இந்த பதக்கம் சாய்னா வசமானது என்றாலும் அவரது தன்னம்பிக்கைக்கும் விடா முயற்சிக்கும் கிடைத்த பரிசு இது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

 

Ø  மகளிர் 200 மீட்டர் பிரெஸ்ட் ஸ்ட்ரோக் பிரிவின் அரை இறுதியில் அமெரிக்க வீராங்கனை ரெபக்கா சோனி 2 நிமிடம் 20 விநாடியில் பந்தய தூரத்தைக் கடந்து படைத்த உலக சாதனையை, பைனலில் மற்றொரு அமெரிக்க வீராங்கனை மிஸ்ஸி பிராங்க்ளின் 2:04.06 விநாடியில் கடந்து முறியடித்தார்.

 

Ø  ஆண்கள் துப்பாக்கி சுடுதல் 50 மீட்டர் ரைபிள் புரோன் பிரிவில் பெலாரஸ் வீரர் செர்ஜி மார்டினோவ் 705.5 புள்ளிகள் குவித்து உலக சாதனை படைத்தார்.

 

Ø  ஆண்கள் 1500 மீட்டர் பிரீஸ்டைல் நீச்சலில் சீன வீரர் யாங் சன் 14 நிமிடம் 31.02 விநாடிகளில் பந்தய தூரத்தைக் கடந்து உலக சாதனை படைத்தார்.

 

Ø  மகளிர் 50 மீட்டர் பிரீஸ்டைல் நீச்சலில் நெதர்லாந்தின் ரனோமி 24.05 விநாடிகளில் பந்தய தூரத்தைக் கடந்தது புதிய ஒலிம்பிக் சாதனையாக அமைந்தது.

 

Ø  ஆண்கள் 20 கிலோ மீட்டர் நடை போட்டியில் இந்திய வீரர் இர்பான் குலோத்தும் தோடி ஒரு மணி 20 நிமிடம் 21 விநாடிகளில் பந்தய தூரத்தைக் கடந்து 10வது இடம் பிடித்தாலும், இது புதிய தேசிய சாதனையாக அமைந்தது.

 

Ø  ஒலிம்பிக்கில் முதல் முறையாக அறிமுகமான மகளிர் குத்துச்சண்டை போட்டியின் 51 கிலோ எடை பிரிவு கால் இறுதியில் துனிசிய வீராங்கனை ரஹாலியை 15 - 6 என்ற புள்ளிக் கணக்கில் மேரி கோம் வீழ்த்தி இந்தியாவுக்கு 4வது பதக்கத்தை உறுதி செய்தார். இதன் மூலம் ஒலிம்பிக் வரலாற்றிலேயே இந்தியாவுக்கு மிக வெற்றிகரமான போட்டியாக லண்டன் ஒலிம்பிக்ஸ் 2012 அமைந்தது. பெய்ஜிங்கில் 3 பதக்கம் வென்றதே அதிகபட்சமாக இருந்த நிலையில், மேரி கோம் தயவால் இந்தியா புதிய சாதனை மைல் கல்லை எட்டியது.  
(பா.சங்கர் - முத்தாரம் இதழில்)

 

100+ கோடி நன்றி நரங்…


எங்கே வெறும் கையோடு திரும்பி 100+ கோடி இந்தியர்களையும் தலை குனிந்து கூனிக் குறுகவைத்து விடுவார்களோ என, உள்ளூர பயப்பந்து உருண்டு கொண்டிருந்த வயிற்றுக்கு வெண்கலப் பால் வார்த்திருக்கிறார் ககன் நரங். 

பெய்ஜிங் ஹீரோ அபினவ், ககன் இருவரும் லண்டன் ஒலிம்பிக் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் களமிறங்கியதுமே ரசிகர்களை பதற்றம் பற்றிக் கொண்டது. வீரர்கள் கூலாக சுட்டுக் கொண்டிருந்தாலும், தகுதிச் சுற்றில் அபினவ் துரதிர்ஷ்டமாக வெளியேறியது அச்சத்தை அதிகரிக்க, ககன் 3வது இடத்துடன் பைனலுக்கு முன்னேறி ஆறுதல் தந்தார். இறுதிச் சுற்றின் பரபரப்பு தாங்க முடியாமல் நாம் நகத்தோடு சதையையும் சேர்த்து பிய்த்துக் கொண்டிருக்க, நரங் வெண்கலப் பதக்கம் வென்று ஆர்ப்பாட்டம் இல்லாமல் கையை லேசாக உயர்த்தி புன்னகைத்தார்.

டிவி நேரடி ஒளிபரப்பில் சிறப்பு வர்ணனையாளராக வந்திருந்த வெள்ளி வேந்தன் ராஜ்யவர்தன் ரத்தோர் மகிழ்ச்சியில் ஆனந்தக் கண்ணீர் வடித்து இந்திய ரசிகர்களின் மனநிலையை வெளிச்சமிட்டார். இந்தியாவுக்கு முதல் பதக்கம்… பளபளத்த பிளாஷ் செய்தி ரசிகர்களின் முகங்களில் ஆயிரம் வாட்ஸ் பல்பை எரியவிட்டது. வெண்கலம்தானா? என்று அங்கலாய்ப்பவர்கள், தங்கம், வெள்ளி வென்ற ரோமானிய (702.1), இத்தாலி (701.5) வீரர்களுக்கும் நரங்குக்கும் (701.1) நூலிழை வித்தியாசம்தான் என்பதை மறந்துவிடக் கூடாது.  

பார்க்க அழுத்தமான மனிதராகத் தெரிந்தாலும், நரங் உணர்ச்சிவசப்படக் கூடியவர் என்பதற்கு இதோ ஒரு உதாரணம். உலக சாம்பியன்ஷிப்பில் (2006-2010) 3 தங்கம், 2 வெண்கலம், மெல்போர்ன் காமன்வெல்த்தில் 4 தங்கம் சுட்ட பிறகும் ‘கேல் ரத்னா’ விருது தராமல் அலட்சியப்படுத்துகிறார்களே என்ற வெறுப்பில், டெல்லி காமன்வெல்த் போட்டியை புறக்கணிக்கப் போவதாக அறிவித்துவிட்டார். பயிற்சியாளரும் குடும்பத்தாரும் தான் ஆறுதல்படுத்தி பங்கேற்க வைத்தனர். தயக்கத்தோடு களமிறங்கினாலும் அலட்டிக் கொள்ளாமல் 4 தங்கம் அள்ளி அசத்தினார்.

என்னதான் உலக சாதனைக்கு சொந்தக்காரர் என்றாலும் ஒரு ஒலிம்பிக் பதக்கம் இல்லையே என்ற ஆதங்கம் ககன் மனதில் இருக்கத்தான் செய்தது. லண்டனில் வெண்கலத்தை முத்தமிட்டதும், ‘அப்பாடா, மார்பு மேல் இருந்த பெரிய பாரம் இறங்கியதைப் போல இருக்கிறது. இந்த தருணத்தை என்னால் மறக்கவே முடியாது. பிந்த்ரா பைனலுக்கு முன்னேறாதது வருத்தமாக இருக்கிறது. எல்லோரும் அவர் ஏமாற்றிவிட்டார் என்கிறார்கள். அப்படியில்லை. எல்லா வீரர்களையும் போலவே அவரும் தன்னால் முடிந்த அளவுக்கு சிறப்பாகவே செயல்பட்டார். அவர் பெய்ஜிங் ஒலிம்பிக்கில் தங்கம் வென்றது எத்தனை பெரிய சாதனை என்பதை என்னால் இப்போது நன்றாக உணர முடிகிறது’ என்று சக வீரருக்கு ஆதரவாக குரல் கொடுத்தார்.

‘இந்தியாவில் திறமைக்கு பஞ்சம் இல்லை. ஆனால், அதை அடையாளம் கண்டு ஊக்குவிக்கத்தான் யாரும் முன்வர மறுக்கிறார்கள். வீரர்கள் தேர்வில் மிகப் பெரிய மாற்றங்களை செய்தால்தான் வசதி, வாய்ப்பு இல்லாமல் தவிக்கும் இளைஞர்களும் ஒலிம்பிக்கில் களமிறங்கி பதக்கங்களை அள்ள முடியும்’ என்று மனம் திறக்கிறார்.

ஒலிம்பிக் பதக்கத்துக்கு பிறகுதான் திருமணத்தை பற்றி யோசிப்பேன் என்று கங்கனம் கட்டிக் காத்திருந்தவருக்கு, வீட்டில் இப்போதே பெண் பார்க்கத் தொடங்கிவிட்டார்கள். அதற்குள் என்ன அவசரம், இன்னும் இரண்டு போட்டி பாக்கி இருக்கிறதே என்று சிரித்தபடியே நழுவும் நரங், இந்நேரம் பதக்க எண்ணிக்கையை அதிகரித்திருந்தால் ஆச்சரியப்படாதீர்கள். நன்றி நரங்… வாழ்த்துக்கள்.

 பா.சங்கர்

 

15 வயதில் ஒலிம்பிக் தங்கம்!

விளையாட்டில் சாதனைகளின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது. முந்தைய சாதனைகளை முறியடிக்க வேண்டும் என்ற உத்வேகமே வீரர், வீராங்கனைகளுக்கு புதிய உற்சாகத்தை கொடுத்து ஊக்குவிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. மற்ற போட்டிகளை விட ஒலிம்பிக்கில் படைக்கப்படும் சாதனைகள் மகத்தானவை, ஈடு இணையற்றவை. அந்த வகையில், லண்டன் 2012 ஒலிம்பிக்கில் இதுவரை பதிவான புதிய சாதனைகள் விவரம்: 

  • ஆண்கள் பளுதூக்குதல் 62 கிலோ எடை பிரிவில் வட கொரிய வீரர் கிம் அன் கக் மொத்தம் 337 கிலோ தூக்கி புதிய ஒலிம்பிக் மற்றும் உலக சாதனையுடன் தங்கப் பதக்கம் வென்றார். அவர் ஸ்நேட்ச் முறையில் 153 கிலோ மற்றும் கிளீன் & ஜெர்க் முறையில் 174 கிலோ தூக்கி அசத்தினார். முன்னதாக, சீன வீரர் ஸாங் ஜி 2008 ஆசிய சாம்பியன்ஷிப்பில் 336 கிலோ தூக்கியதே உலக சாதனையாக இருந்தது.

 
  • மகளிர் பளுதூக்குதல் 58 கிலோ எடை பிரிவில் சீன வீராங்கனை லி ஸூயிங் 2 ஒலிம்பிக் சாதனையுடன் தங்கம் வென்றார். இவர் ஸ்நேட்ச் முறையில் 108 கிலோ தூக்கியதும், கிளீன் & ஜெர்க் முறையில் சேர்த்து மொத்தமாக 246 கிலோ தூக்கியதும் ஒலிம்பிக் சாதனையாக அமைந்தது. 2008 பெய்ஜிங் ஒலிம்பிக்கில் சக சீன வீராங்கனை சென் யாங்கிங் 244 கிலோ தூக்கியதே முந்தைய சாதனையாக இருந்தது. 

  • ஆண்கள் 100 மீட்டர் பிரெஸ்ட்ஸ்ட்ரோக் பிரிவில் தென் ஆப்ரிக்காவின் கேமரான் வாண்டெர் பர்க் புதிய உலக சாதனையுடன் தங்கம் வென்றார். அவர் 58.46 விநடிகளில் பந்தய தூரத்தைக் கடந்தார். முன்னதாக, 2009ல் பிரெண்டன் ரிக்கார்ட் படைத்த சாதனையை கேமரான் 0.05 விநாடி வேகமாக நீந்தி முறியடித்தார்.

 
  • மகளிர் 100 மீட்டர் பேக்ஸ்ட்ரோக் பிரிவில் ஆஸ்திரேலிய வீராங்கனை எமிலி சீபோம் புதிய ஒலிம்பிக் சாதனை படைத்தார். அவர் 58.23 விநாடிகளில் பந்தய தூரத்தைக் கடந்து, 2008 பெய்ஜிங் ஒலிம்பிக்கில் ஜிம்பாப்வே வீராங்கனை கிறிஸ்டி கவென்ட்ரி படைத்த சாதனையை (58.77 வி.) தகர்த்தார்.

 
  • படகு போட்டி ரெகட்டா பிரிவில் நியூசிலாந்து வீரர்கள் ஹமிஷ் பாண்ட், எரிக் மர்ரே இருவரும் புதிய ஒலிம்பிக் மற்றும் உலக சாதனையுடன் (6:08.50) அரை இறுதிக்கு தகுதி பெற்றனர். ஆண்கள் இரட்டையர் ஸ்கல்ஸ் படகு போட்டியில் உலக சாம்பியன்களான நியூசிலாந்து வீரர்கள் நாதன் கோகன், ஜோசப் சல்லிவன் ஜோடி புதிய ஒலிம்பிக் சாதனை (6:11.30) படைத்தது.

 
  • மகளிர் 400 மீட்டர் தனிநபர் மெட்லி பிரிவில் சீன வீராங்கனை யி ஷிவென் 4 நிமிடம் 28.43 விநாடியில் பந்தய தூரத்தைக் கடந்து உலக சாதனையுடன் தங்கம் வென்றார். ஒலிம்பிக்கில் 3 முறை தங்கம் வென்ற ஆஸ்திரேலிய வீராங்கனை ஸ்டெபானி ரைஸ் சாதனையை யி ஷிவென் முறியடித்தார்.

 
  • மகளிர் 100 மீட்டர் பிரெஸ்ட்ஸ்ட்ரோக் பிரிவில் லிதுவேனியாவை சேர்ந்த 15 வயது சிறுமி ரூடா மெய்லுடைட் தங்கப் பதக்கம் வென்று (1:05.47) சாதனை படைத்தார். லிதுவேனியாவுக்காக நீச்சலில் முதல் ஒலிம்பிக் பதக்கம் வென்றவர் என்ற பெருமையை பெற்றுள்ள ரூடா, லண்டன் பிளைமவுத் பள்ளி மாணவி என்பது குறிப்பிடத்தக்கது. ஆஸ்திரேலிய முன்னாள் நட்சத்திரம் ஷேன் கவுல்ட் தனது 15வது வயதில் 1972 மூனிச் ஒலிம்பிக்கில் 3 தங்கம், ஒரு வெள்ளி, ஒரு வெண்கலம் வென்று சாதனை படைத்துள்ளார். இளம் வயதில் ஒலிம்பிக் தங்கம் வெல்லும் இந்த சாதனையை 40 ஆண்டுகளுக்கு பிறகு சிறுமி ரூடா சமன் செய்துள்ளார்.
(பா.சங்கர் - முத்தாரம் இதழில்)

பதக்க வேட்டை… அதிகம் எதிர்பார்க்காதீங்க!


லண்டன் ஒலிம்பிக் நெருங்கிவிட்ட நிலையில், இந்தியாவின் பதக்க வேட்டை எப்படி இருக்கப் போகிறதோ என்ற பதற்றத்துடன் கூடிய எதிர்பார்ப்பு ரசிகர்களை தொற்றிக் கொண்டுள்ளது. எப்படிப் பார்த்தாலும் சிங்கிள் டிஜிட்டை தாண்ட வாய்ப்பில்லை என்று கணிப்புகள் கட்டியம் கூறுவதால், அதிகம் அலட்டிக் கொள்ளாமல் வேட்டையை வேடிக்கை பார்ப்போம்.

ஒலிம்பிக் வரலாற்றில் இந்தியா இதுவரை பெற்றுள்ள மொத்த பதக்கங்களின் எண்ணிக்கையே 20தான் என்பதை கவனத்தில் கொண்டால், எதிர்பார்ப்பு என்பதற்கே அவசியம் இல்லை. ஹாக்கியில் கிடைத்த 8 தங்கம், ஒரு வெள்ளி, 2 வெண்கலம் என 11 பதக்கங்களைக் கழித்துவிட்டால், மற்ற விளையாட்டுகளில் கிடைத்தது வெறும் 9 மட்டுமே. தனிநபர் தங்கம் வென்ற ஒரே வீரர் பெய்ஜிங் நாயகன் அபிநவ் பிந்த்ரா மட்டுமே.

ஓஹோவென கொடிகட்டிப் பறந்த இந்திய ஆண்கள் ஹாக்கி அணி, மோசமான நிர்வாகத்தால் இப்போது ஒலிம்பிக்கில் நுழைவதற்கே தகுதிச் சுற்றில் விளையாடி தட்டுத் தடுமாறி வர வேண்டியதாகிவிட்டது. லண்டனில் 6வது இடம் பிடித்தாலே 7வது அதிசயமாக இருக்கும் என்கிறார்கள். அதனால், அபிமான நடிகரின் பிளாப் படத்தில் ‘அந்த ஒரு பாட்டு போதும்… டிக்கெட் காசுக்கு சரியாப் போச்சு’ என்று திருப்திப் பட்டுக்கொள்வது போல ஹாக்கியை ஒரு அளவோடு நிறுத்திக் கொள்வது நல்லது.

‘நான் சாவதற்குள், தடகளத்தில் இந்தியர் ஒருவர் தங்கம் வெல்வதை பார்ப்பதுதான் எனது கடைசி ஆசை. ஆனால், அதற்கான வாய்ப்பு பிரகாசமாக இல்லை என்பதும் எனக்குத் தெரியும். ஏதாவது அதிசயம் நடந்தால்தான் அது சாத்தியமாகும். வட்டு எறிதலில் கிருஷ்ண பூனியாவை எதிர்பார்க்கிறேன்’ என்ற மில்கா சிங்கின் ஆதங்கமே, தடகளத்தில் நமது நிலைமை எத்தனை தடுமாற்றமானது என்பதை தெளிவாக்கிவிடுகிறது. 

பெரிய நம்பிக்கை தருவது சுடுதல், எய்தல், பொருதல் போன்ற உண்மையான வீர விளையாட்டுகள்தான். துப்பாக்கி சுடுதலில் தனிநபர் தங்கம் வென்று சாதனை படைத்த அபிநவ் பிந்த்ரா, லண்டனில் இந்தியாவுக்கு பத்து பதக்கமாவது கிடைக்கும் என்று மிகவும் தன்னம்பிக்கையுடன் கூறுகிறார். அதே சமயம், ‘கிரிக்கெட்டையே பிடித்து தொங்கிக் கொண்டிருந்தால் ஒலிம்பிக்கில் இந்தியா பெரிதாக சாதிக்க முடியாது. சீனாவை போல திட்டமிட்டு செயல்பட்டால், 110 கோடி மக்கள் தொகை கொண்ட நம்மாலும் தங்கங்களை அள்ள முடியும்’ என்று சுட்டுக்! காட்டுகிறார். ஷூட்டிங்கில் அபினவ், ககன் நரங், ரோஞ்சன் சோதி, மானவ்ஜித் மீது நம்பிக்கை வைக்கலாம். இவர்கள் வச்ச குறி பெரும்பாலும் தவறியதில்லை.  

அடுத்த பெரிய நம்பிக்கை வில்வித்தை. அதிலும், உலகின் நம்பர் 1 வீராங்கனை என்ற பெருமையை பெற்றிருக்கும் தீபிகா குமாரி பதக்கம் வெல்வது 100 சதவீதம் உறுதி. தங்கமா? வெள்ளியா? என்பதுதான் கேள்வி என்ற அளவுக்கு அவர் மீது டன் கணக்கில் நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். டாடா வில்வித்தை அகடமியில் மாதம் 500 ரூபாய் ஸ்டைபண்ட் வாங்கியவர், இப்போது டாடா ஸ்டீல் நிறுவனத்தில் மேலாளராகப் பணியமர்த்தப்படும் அளவுக்கு உயர்ந்திருக்கிறார். ‘தீபிகா உச்சகட்ட பார்மில் இருக்கிறார். இளமை, ஆற்றல், வெற்றிக்காக கடைசி வரை போராடும் உறுதி லண்டன் ஒலிம்பிக்கில் அவரை நிச்சயம் சாதிக்க வைக்கும்’ என்கிறார் பயிற்சியாளர் லிம்பா ராம். தீபிகாவுடன் சேர்ந்து கணைகளைத் தொடுக்கக் காத்திருக்கும் பாம்பேலா தேவி, செக்ரவோலு ஸ்வரோ, தாலுக்தார், ராகுல், தருண்தீப் ஆகியோரையும் ஒதுக்கிவிட முடியாது. இவர்களின் அம்புகள் இலக்கை துளைத்து பதக்கம் பறிக்க வாழ்த்துவோம்.

‘குத்துச்சண்டையில் விஜேந்தர், சங்வான், ஷிவா தாபா, விகாஸ், தேவேந்திரோ தங்கம் வெல்வது சற்று கடினம் என்றாலும் வெள்ளி அல்லது வெண்கலம் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது’ என்கிறார் மெல்போர்ன் காமன்வெல்த்தில் தங்கம் தட்டிவந்த அகில் குமார்.

தொடக்கவிழா அணிவகுப்பில் தேசியக் கொடி ஏந்தி தலைமை வகிக்கும் கவுரவத்தை பெற்றுள்ள மல்யுத்த வீரர் சுஷில் குமார், யோகேஷ்வர் தத் இருவருக்கும் இது மூன்றாவது ஒலிம்பிக். ‘இதுதான் எங்களின் கடைசி வாய்ப்பு. பதக்கம் வென்று நாட்டுக்கு பெருமை சேர்க்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளோம்’ என்று தொடை தட்டுகிறார் யோகேஷ்வர். அனுபவ வீரர்களாக இவர்கள் இறுதி வரை மல்லுக்கட்டுவார்கள் என எதிர்பார்க்கலாம்.

பயஸ், பூபதி என இரண்டு மகத்தான வீரர்கள் இருந்தாலும், அவர்கள் பரம்பரை எதிரிகளைப் போல கத்திச்சண்டை போடுவது டென்னிஸ் களத்தை ரணகளமாக்கிவிட்டிருக்கிறது. பயஸ் – விஷ்ணு, பூபதி – போபண்ணா, பயஸ் – சானியா ஜோடிகளிடம் இருந்து எதையும் எதிர்பார்க்காமல் இருப்பது உத்தமம். இவர்களின் பயிற்சிக்காக கோடிக் கணக்கில் வாரி இறைத்துள்ள நிலையில், ஈகோ கிளாஷால் பதக்க வாய்ப்பு கை நழுவிப் போவது வேதனையாக உள்ளது.

‘நம்பிக்கை வைப்பதும் முயற்சிப்பதும் மட்டுமே என்னால் முடியும். பதக்கம் வெல்வேனா என்பதை கணிக்க முடியாது’ என்று அடக்கி வாசிக்கிறார் பேட்மின்டன் வீராங்கனை சாய்னா நெஹ்வால். பெய்ஜிங் ஒலிம்பிக்கில் டீன் ஏஜராகப் (18) பங்கேற்ற சாய்னா கால் இறுதி வரை முன்னேறினார். நான்கு ஆண்டுகளில் பல பட்டங்களை வென்று உலகின் முன்னணி வீராங்கனையாக வளர்ந்திருக்கும் அவர் ஒலிம்பிக் பதக்கத்தையும் வெல்வார் என்பதில் எனக்கு சந்தேகம் இல்லை என்கிறார் பயிற்சியாளர் முகமது ஆரிப்.

இரட்டையர் பேட்மின்டனில் ஜுவாலா கட்டா – வலியவீட்டில் திஜு, ஜுவாலா – அஷ்வினி ஜோடிகளும் வரிந்து கட்டுகின்றன. ’மகளிர் இரட்டையர், கலப்பு இரட்டையர் என இரண்டு பிரிவிலுமே பதக்கம் வெல்ல முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது. பல டாப் ஜோடிகளை நாங்கள் ஏற்கனவே வீழ்த்தியுள்ளோம். விமர்சனங்களைப் பற்றி கவலைப்படாமல் சாதித்துக் காட்டுவோம்’ என்று ஜுவாலை வீசுகிறார் கட்டா.

இந்தியா சார்பில் மொத்தம் 81 பேர் களமிறங்க உள்ளனர். ஒலிம்பிக்கில் இந்தியாவின் மிகப் பெரிய அணி இதுதான். பெய்ஜிங்கில் நமக்கு கிடைத்ததை விட (3), லண்டனில் நிச்சயம் அதிகமாகவே கிடைக்கும் என்பது மட்டும் உறுதி. நமது பொருளாதார வளர்ச்சியை அடிப்படையாக வைத்து கணக்கு போட்டு பார்த்ததில், லண்டனில் இந்தியாவுக்கு 2 தங்கம் உள்பட 5 பதக்கம் கிடைக்க வாய்ப்பு இருப்பதாக கணித்திருக்கிறது கோல்ட்மேன் சேக்ஸ் வங்கியின் ஆய்வுக் குழு. இதுவே பெரிய முன்னேற்றம்தான்.  

பா.சங்கர்