பிரபல பள்ளியில்
எல்கேஜி சேர்வதற்காக தந்தையுடன் வரும் சிறுவன்.
இண்டர்வியூவுக்காக
பிரின்சிபால் அறை முன்பாக காத்திருக்கிறார்கள்.
பியூனிடம் சிறுவன்:
அங்கிள் பிரின்சிபால் சார் உள்ள இருக்காரா?
பியூன்: இன்னும்
வரல.
சிறுவன்: இண்டர்வியூ
பத்து மணிக்குன்னு லெட்டர் அனுப்பியிருக்கீங்க. நாங்க ஷார்ப்பா வந்துட்டோம். பிரின்சி
என்னடான்னா இன்னும் வரல்லேங்கறீங்க. பங்சுவாலிட்டினா என்னன்னு அவருக்கு தெரியாதா?
பியூன்: இன்னா
சார் பொடியன் இந்த பேச்சு பேசறான்… நீங்க சும்மா இருக்கீங்க.
அப்பா: ராஜா கீப்
கொயட்.
ராஜா: சாரி டாட்.
அங்கிள் நீங்க எதுக்கு தேவையில்லாம டென்ஷன் ஆகறீங்க. நான் பிரின்சி ஏன் லேட்டுன்னுதானே
கேட்டேன். எங்க அப்பா அப்ளிகேஷன் வாங்க எவ்வளவு கஷ்டப்பட்டார் தெரியுமா?
அப்பா: யெஸ் பிரதர்.
ராத்திரியில இருந்து காலைல வரைக்கும் ஸ்கூலுக்கு வெளியதான் படுத்துக் கிடந்தேன். வீட்டுல
பேசிக்கிறோம் இல்ல. பையன் எல்லாத்தையும் கவனமாக கேட்டு வச்சுப்பான். அதான்.
பியூன்: எல்லா
பேரண்ட்சுமே அப்படிதான் சார் காத்துகிட்டு இருந்து பார்ம் வாங்குறாங்க. நாங்களா வந்து
கியூவுல நில்லுங்கன்னு சொன்னோம்.
அப்பா: சீட் கெடைக்கணுமேங்கிற
கவலதான். வேற என்ன…
பியூன்: சரி… சரி…
பேசாம கொஞ்ச நேரம் உட்காருங்க. சார் இப்போ வந்துருவார்.
அப்பா: இந்த வருஷம்
எவ்ளோப்பா வாங்குறாங்க?
பியூன்: ஒரு ரூபா
வரைக்கும் போகுதுன்னு சொல்றாங்க. அதுக்கே கெடைக்கலையாம். நீங்க எதுக்கும் இன்னும் கொஞ்சம்
அதிகமா கொடுக்கறதா சொல்லுங்க.
ராஜா: ஜஸ்ட் ஒன்
ருபீயா அங்கிள். அத நானே கொடுத்துடறேன்.
பியூன்: ஏங்க இவன
வீட்ல எப்படீங்க சமாளிக்கறீங்க? டீச்சருங்க என்ன பாடு படப் போறாங்களோ…
அப்பா: அதுக்கப்புறம்
ஃபீஸ் வேற இருக்கே.
பியூன்: அட என்னங்க
நீங்க… இதுக்கே பயப்பட்டா எப்படி? ஒவ்வொருத்தர் ரெண்டு மூனு பசங்கள படிக்க வெக்கறாங்களே!
அவங்கள்ளாம் என்ன பண்ணுவாங்க யோசிச்சு பாருங்க.
அப்பா: அதான் டொனேஷன்
எல்லாம் கொடுக்கறோம் இல்ல. அப்புறம் எதுக்கு இண்டர்வியூ அது இதுன்னு டார்ச்சர் பண்றீங்க?
பியூன்: அடடா…
என்ன எதுக்குங்க நீங்க டார்ச்சர் பண்றீங்க. எல்லாத்தையும் பிரின்சிபால் கிட்ட கேட்டுக்குங்க.
அதோ அவரே வந்துட்டார். வணக்கம் சார்.
எல்லோரும் எழுந்து
வணக்கம் சொல்கிறார்கள்.
பிரின்சி: ஒவ்வொருத்தரா
அனுப்புப்பா. அதுக்கு முன்னால ஒரு காபி.
பியூன்: ஓகே சார்.
(காபி எடுத்து வர ஓடுகிறார்)
ராஜா: அங்கிள்
ஸ்டிராங்கா மீடியமா லைட்டா… சக்கர போட்டா போடாமயா எல்லாம் கேட்டுக்கிட்டு போங்க. அப்புறமா
அதுக்காக லேட் பண்ணிடப் போறீங்க.
பியூன்: அதெல்லாம்
எங்களுக்குத் தெரியும். நீ கொஞ்சம் சும்மா இருந்தா போதும்.
ராஜா: சும்மா இருக்கறது
ரொம்ப கஷ்டம் அங்கிள். வடிவேலு ஜோக்லாம் நீங்க பாக்குறது இல்லயா?
பியூன்: டேய் வாணாம்…
சார் இவன் மட்டும் இந்த ஸ்கூல்ல சேர்ந்தா… நான் வேலய விட்டே போய்டுவேன் நெனைக்கிறேன்.
ராசி பலன்ல இன்னிக்கு நேரம் சரியில்லே. சிறு உபாதைகள் வந்து நீங்கும்னு போட்டுருந்தான்.
அது இவ்ளோ சிறுசா (ராஜாவைக் காட்டி) இருக்கும்னு தெரியாம போச்சு.
ராஜா: ஏன் அங்கிள்
இப்படி மூட நம்பிக்கைல மூழ்கிக் கெடக்கறீங்க. நல்லது நெனச்சா நல்லதே நடக்கும் தெரியுமா?
பியூன்: கடவுளே
இவனுக்கு அட்மிஷன் கெடைக்க கூடாது. வேண்டிக் கொண்டே பிரின்சிக்கு காபி கொடுத்துவிட்டு
வருகிறார்.
பிரின்சி அறையில்
இருந்து மணி அடிக்கிறது.
பியூன்: சார் நீங்க
மொதல்ல போயிட்டு வந்துருங்க. அப்பதான் இவன்கிட்டயிருந்து நான் தப்பிக்க முடியும்.
ராஜாவும் அவன்
அப்பாவும் பிரின்சி ரூமுக்குள் நுழைகிறார்கள்.
இருவரும் கோரசாக:
வணக்கம் சார்.
பிரின்சி: வணக்கம்.
வாங்க. உட்காருங்க. காபி சாப்பிடறீங்களா?
ராஜா: நான் பூஸ்ட்தான்
குடிப்பேன் சார்.
பிரின்சி: சிரித்துக்
கொண்டே… ஓ அதான் உன்னோட எனர்ஜி சீக்ரெட்டா? எங்க சார் உங்க ஒய்ப் வரலையா?
அப்பா: இல்ல சார்.
அவங்களுக்கு டெலிவரி டைம்… அதான் கூட்டிட்டு வர முடியல.
பிரின்சி: ஓகே
ஓகே அவங்களும் கிராஜுவேட்தானே?
அப்பா: யெஸ் சார்.
எம்பிஏ முடிச்சிருக்காங்க.
பிரின்சி: வெரி
குட். அப்பதான் வீட்டுல நல்லா சொல்லிக் கொடுக்க முடியும் இல்லயா. அதுக்குதான் பேரண்ட்ஸ்
ரெண்டு பேரும் டிகிரி வாங்கியிருக்கணும்கறதுல கண்டிப்பா இருக்கோம்.
ராஜா: அப்போ டீச்சருங்க
நல்லா சொல்லிக் கொடுக்க மாட்டாங்களா சார்?
பிரின்சி: நாட்டி
பாய். கொஞ்சம் அதிகமா பேசுவான் போல… பசங்க டிவி பாத்து கெட்டுப் போயிடறாங்க.
ராஜா: ரொம்பவே
அதிகமா பேசுவேன் சார். ஆனா டிவி கொஞ்சமாத்தான் பார்ப்பேன்.
பிரின்சி: அதுக்கே
இப்படியா? போதும்பா போதும். ஏபிசிடி ஒன் டூ த்ரீ எல்லாம் தெரியுமா?
ராஜா: ஒன் போர்
த்ரீ கூட தெரியும் சார்.
பிரின்சி: அது
என்னப்பா ஒன் போர் த்ரீ?
ராஜா: ஐ லவ் யூ
சார். இது கூடவா ஒங்களுக்கு தெரியாது.
பிரின்சி: அடக்
கடவுளே… இந்த காலத்து பசங்க கிட்ட பேசவே கூடாது போல. சரி குறள் ஏதாவது தெரியுமா?
ராஜா: பல குரல்
தெரியும் சார்.
பிரின்சி: எங்க
சொல்லு பார்க்கலாம்.
ராஜா: கண்ணா லட்டு
திண்ண ஆசையா…
(எம்ஜிஆர், சிவாஜி,
நம்பியார், கமல், ரஜினி என பல குரலில் மிமிக்ரி செய்து காட்டுகிறான்)
அதிர்ச்சியில்
உறைந்துபோன பிரின்சி… தம்பி நான் கேட்டது இந்தக் குரல் இல்லப்பா… திருக்குறள் தெய்வப்
புலவர் திருவள்ளுவர் எழுதின குறள்ள்ள்ள்…
ராஜா: ஓ அதுவா?
உங்க குரல் உச்சரிப்பு கொஞ்சம் சரியில்ல சார். அதான் கொஞ்சம் மிஸ் ஆயிடுச்சு.
இப்போ குறள் சொல்றேன்
பாருங்க…
அகர முதல எழுத்தெல்லாம்
ஆதி
பகவன் முதற்றே
உலகு
பிரின்சி: பலே…
வாயாடியா இருந்தாலும் படு சுட்டியா இருக்கானே. சரி கடி ஜோக் ஏதாவது சொல்லு பார்க்கலாம்.
ராஜா: கடியில பல
வகை இருக்கு சார். காக்கா கடியா மாங்கா கடியா இல்ல காது கடியா?
பிரின்சி: ஒரு
கடியும் வேணாம். இப்பவே சேம் பிளட் கதையா ஆயிடும் போல இருக்கு… காதை தொட்டுப் பார்த்துக்
கொள்கிறார்.
ராஜா: இல்ல சார்
இதுக்கு மட்டும் ஆன்சர் சொல்லுங்க பார்க்கலாம்.
பிரின்சி: சரி
கேளு…
ராஜா: ஃபிரம் சிக்ஸ்
டூ சிக்ஸ்டி… இத தமிழ்லே டிரான்ஸ்லேட் பண்ணுங்க பார்க்கலாம்?
பிரின்சி: அலட்சியமாக
சிரித்துக் கொண்டே…. ஆறிலிருந்து அறுபது வரை… எப்பூடி (பெருமையாகப் பார்க்கிறார்)
ராஜா: தப்பு சார்…
அது இல்ல
பிரின்சி: சரி
நீயே சொல்லு பார்க்கலாம்.
ராஜா: விடுநர்
– ஆறு…. பெறுநர் – அறுபது
வியர்த்து போன
முகத்தை கர்சீப்பால் துடைத்துக் கொள்கிறார் பிரின்சி.
ராஜா: போதுமா சார்.
இல்ல இன்னும் ஒரு ஜோக் சொல்லட்டுமா?
பிரின்சி: இல்ல
இல்ல இதுவே அதிகம். சார் நீங்க நாளைக்கு வந்து கேபிடேஷன் பீஸ் கட்டிட்டு போங்க. டியூஷன்
பீஸ் எல்லாம் அடுத்த வாரம் கூட கட்டலாம். சொல்லியபடியே
மணி அடிக்க, பியூன் ஓடி வருகிறார்.
ராஜா: தேங்க் யூ
சார்… சீ யூ பை பை.
பிரின்சி: கூலா
குடிக்க ஏதாவது கொடுப்பா.
பியூன்: என்ன சார்
ராஜா டார்ச்சர் பண்ணிட்டானா? நக்கலாகக் கேட்க… பிரின்சி ஙே என விழிக்கிறார்.
அப்பாவுடன் வீட்டுக்கு
கிளம்பும் ராஜா: டாடி சொல்றேன்னு தப்பா நெனச்சுக்காதீங்க. எனக்கு இந்த ஸ்கூல் வேண்டாம்.
அந்த ஒரு லட்சத்த பிக்சட்ல போடுங்க. நான் கவர்ன்மெண்ட் ஸ்கூல்லயே சேர்ந்து படிக்கிறேன்.
அப்பா: அதாண்டா
நானும் யோசிக்கிறேன். சரி வா அம்மாகிட்ட பேசி பார்க்கலாம்.
பா.சங்கர்
சங்கர்! இன்றைய நடைமுறையை மிகவும் தெளிவாகவும் நகைச்சுவையாகவும் பதிவு செய்திக்கிறாய். மிகவும் அருமை!
பதிலளிநீக்குசிட்டிபாபு ஸ்ரீனிவாசன் பெங்களுரில் இருந்து.
பதிலளிநீக்குசங்கர்! இன்றைய நடைமுறையை மிகவும் தெளிவாகவும் நகைச்சுவையாகவும் பதிவு செய்திக்கிறாய். மிகவும் அருமை!
பதிலளிநீக்கு