அறிமுக டெஸ்டிலேயே
அதிவேக சதம் விளாசி, உலக சாதனையுடன் விஸ்வரூபம் எடுத்திருக்கிறார் இந்திய அணி தொடக்க
வீரர் ஷிகார் தவான் (27). இவரது அதிரடி ஆட்டத்தால் தான் மொகாலி டெஸ்டில் இந்தியாவின்
சாதனை வெற்றி சாத்தியமாகியது என்பதில் சந்தேகமே இல்லை.
தவானின் ருத்ரதாண்டவத்தை
பார்க்கும்போது, சேவக்தான் இடது கை ஆட்டக்காரராக களமிறங்கி ஆடிக் கொண்டிருக்கிறாரோ
என்ற பிரமையை ஏற்படுத்தியது. ஆஸி. பந்துவீச்சாளர்களுக்கும் அதே பிரமிப்புதான். செய்வதறியாமல்
வேடிக்கை பார்ப்பதை தவிர வேறு வழியில்லாமல் நிலைகுலைந்து போனார்கள்.
அப்படி ஒரு அதிரடி
தொடக்கம் கிடைத்ததால் தான், முதல் இன்னிங்சில் இரு அணிகளுமே 400+ ரன் குவித்தும் நான்கு
நாட்களில் முடிவு கிடைத்தது. ஒரே இன்னிங்சில் கோடிக்கணக்கான ரசிகர்களின் உள்ளங்களை
கொள்ளையடித்துவிட்டார். இத்தனை நாளாய் எங்கே இருந்தார் என்று தலையை பிய்த்துக்கொள்ளும்
ரசிகர்களுக்காக, தவமாய் தவமிருந்த தவானின் கதை இதோ…
டெஸ்ட் அரங்கில்
எப்போதோ கால் பதித்திருக்க வேண்டியவர். 2004ல் தாக்காவில் நடந்த இளைஞர் உலக கோப்பை
போட்டியில் (யு-19) இவர் குவித்த 505 ரன் (சராசரி 84.16, சதம் 3) சாதனையை இன்று வரை
யாரும் முறியடிக்கவில்லை. அதே தொடரில் விளையாடிய தினேஷ் கார்த்திக், ராபின் உத்தப்பா,
சுரேஷ் ரெய்னா, ஆர்.பி.சிங், ரோகித் ஷர்மாவுக்கெல்லாம் வாய்ப்பு கிடைத்தாலும் இவருக்கு
மட்டும் அந்த அதிர்ஷ்டம் வாய்க்கவே இல்லை.
ஒருநாள், டி20ல்
கிடைத்த சில வாய்ப்புகளில் சொதப்பியதால் தேர்வுக் குழுவினர் கண்டுகொள்ளவில்லை. இத்தனைக்கும்
ரஞ்சி சீசனில் அடித்து நொறுக்கிக் கொண்டுதான் இருந்தார். கடந்த ஆண்டு 4 சதங்களுடன்
833 ரன் விளாசினார். ஐபிஎல் போட்டியிலும் கிறிஸ் கேல் (733), கம்பீருக்கு (590) அடுத்தபடியாக
மூன்றாவது இடம் (569). சேவக், கம்பீர் என்று இரண்டு அனுபவ தொடக்க வீரர்கள் முதல் 2
இடங்களையும் ஆக்கிரமித்து இருந்ததுதான் இவரது துரதிர்ஷ்டம்.
இருவருமே பார்மை
இழந்து தடுமாறி அணியில் இருந்து வெளியேற்றப்பட்ட நிலையில்தான், மொகாலியில் தவானுக்கு
கிடைத்தது அந்த அரிய வாய்ப்பு. சரியாய் பயன்படுத்தி சாதித்து விட்டார்.
டெல்லி கிரிக்கெட்
வட்டாரத்தில் தவான் என்றாலே தனி மதிப்புதான். சேவக், கம்பீர், கோஹ்லி, உன்முக்த் என்று
எத்தனை நட்சத்திரங்கள் ஜொலித்தாலும், இவருக்கு என்று தனி ரசிகர் பட்டாளம். பயிற்சிக்கு
வரும்போது கை இல்லாத பனியன், ஷார்ட்ஸ் அணிந்து 1000 சிசி - 25 லட்சம் ரூபாய் பைக்கில்
அலட்சியமாக வந்து இறங்குவார். ஸ்டாலோன், அர்னால்டு மாதிரி அமர்க்களமான உடற்கட்டு, தோள்களில்
வசீகரமான டாட்டூ, கூலிங் கிளாஸ் அணிந்து மீசையை முறுக்கிவிட்டபடி வரும் ஸ்டைல் எல்லாமே
அவரை ஒரு சூப்பர் ஸ்டாராக அடையாளம் காட்டும்.
தோற்றம் ஒரு பக்கம்
இருந்தாலும் களத்தில் இவர் காட்டும் அதிரடி ஆட்டம் இன்னும் மிரட்டலாக இருக்கும். டெல்லி
அணி சக வீரர்களே ஒருவித மிரட்சியோடு ‘கபார்’ என்றுதான் (ஷோலே வில்லன் அம்ஜத்கானின்
பெயர்) அழைப்பார்கள். அமர்க்களமான ஆட்டத் திறன் இருந்தாலும் அலட்சியம், பொறுப்பு இல்லாமல்
தேவையற்ற ஷாட் அடித்து விக்கெட்டை இழப்பது இவரது பலவீனமாக இருந்தது.
கேர்பிரீயாக சுற்றித்
திரிந்தவரை மாற்றியது மனைவி ஆயிஷா முகர்ஜியும் 2 மகள்களும் தான் (முதல் கணவருக்கு பிறந்தவர்கள்).
பெங்காலி – இங்கிலாந்து பெற்றோருக்கு பிறந்த ஆயிஷா, குழந்தைகளுடன் மெல்போர்னில் வசித்தாலும்
நேரம் கிடைக்கும் போதெல்லாம் இந்தியா வந்துவிடுகிறார். குழந்தைகள் மீது தவானுக்கு கொள்ளை
பிரியம். அவர்களுக்காகவே கையில் பச்சை குத்திக் கொண்டாராம்.
‘ஆயிஷா என்னை முழுவதுமாக
மாற்றிவிட்டார். வெற்றியை விட தோல்விகள் தான் ஒரு மனிதனை முழுமையாக்குகின்றன என்பதை
எனக்கு உணர்த்தியவர்’ என்கிறார் பெருமையாக. பேஸ்புக்கில் பார்த்து, நட்பு கோரி, பழகி
மலர்ந்த இணைய காதல்! மனைவி வந்த நேரம் தவானுக்கு ஒர்க் அவுட் ஆகியிருக்கிறது. அமர்க்கள
ஆட்டம் தொடரும் என எதிர்பார்க்கலாம்.
பா.சங்கர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக