செவ்வாய், 9 ஏப்ரல், 2013

மயிலைக்கு வந்த மண்வாசம்...


மயிலாப்பூர் அறுபத்து மூவர் உற்சவம். ஊரே களைகட்டி இருந்தது. சினிமாவுக்கு செட் போட்ட மாதிரி, அப்படியே ஒரு அக்மார்க் கிராமத்து திருவிழா காட்சி கண் முன்னே விரிந்தது.

உயர உயரமாக கொம்புகள் நட்டு தோரணம் கட்டியிருந்தார்கள். ஐந்து அடிக்கு ஒரு அன்னதானம் நடந்து கொண்டிருந்தது. சுடச்சுட வெஜிடபிள் பிரிஞ்ஜி, சாம்பார் சாதம், தயிர் சாதம், சர்க்கரைப் பொங்கல், வெண் பொங்கல், சுண்டல், மோர், பானகம், ரஸ்னா, இஞ்சி டீ, பிஸ்கட், சாக்லேட், சூப்… என்று வகை வகையாய் கூப்பிட்டு கூப்பிட்டு கொடுத்துக் கொண்டிருந்தார்கள். கூச்சம் பார்க்காமல் கூட்டத்தோடு கூட்டமாய் எல்லா ஐட்டங்களையும் ஒரு வாய் பார்த்தபடி நான்கு மாட வீதியையும் வலம் வந்தோம்.

சாலை ஓரங்களில் தினுசு தினுசாய் கடைகள் முளைத்திருந்தன. குழந்தைகளுக்கான விளையாட்டுப் பொருட்கள்தான் அதிகம். பனை ஓலை விசிறி, மத்து, பானை, சட்டி, கருங்கல் உலக்கை - குழவிக்கு சரியான மவுசு! மஞ்சள் வெயில் மாலையில் பாசி மணி மாலைகள் வைர வைடூரியமாய் ஜொலித்தன. குவியல் குவியலாய் உண்டிவில்.

குருவிக்காரர்கள் நிறைய பேர் கடை விரித்திருந்தார்கள். பச்சை குத்தும் இடத்தில் இளைஞர் கூட்டம் மொய்த்தது. டிராகன், சூரியன், சிங்கம் என்று வித விதமாய் அட்டையில் அச்சு செய்து வைத்திருந்தார்கள். டாட்டூ போடுவதற்காக சிறிய மோட்டாரில் சுழலும் ஊசி. பேட்டண்ட் வாங்காத அதிநவீன உள்ளூர் தயாரிப்பு! சத்தமே இல்லாமல் இயங்கியது. மீசை முளைக்காத சிறுவன், கை தேர்ந்த கலைஞனாய் பச்சை குத்திக் கொண்டிருந்தான். முகம் சுளித்தபடி வலியை பொறுத்துக் கொண்டு, தோள் பட்டையில் சிரிக்கும் சூரியனை ஆவலுடன் பார்த்தார் வாலிபர்.

டிராகன் படம் குத்துப்பா என்று குத்துக்காலிட்டு உட்கார்ந்த ஒருவர், உஷாராக ‘காசு எவ்ளோ’ என்று கேட்டார். எரனூறு ரூபா என்ற பதிலைக் கேட்டதும் பதற்றத்துடன் கையை பறித்துக் கொண்டு நடையை கட்டினார். குறைந்தபட்சம் நூறு ரூபாய் வாங்கினார்கள். ஊசியைக் கழுவிய மாதிரி தெரியவில்லை. ஆர்வக் கோளாறில் குத்திக் கொள்பவர்கள், நீக்க வேண்டும் என்றால் லேசர் ட்ரீட்மெண்ட்டுக்கு ஆயிரக் கணக்கில் செலவழிக்க வேண்டியிருக்கும் என்பதை நினைவில் கொள்க.

நேரம் ஆக ஆக… கூட்டம் கூடிக் கொண்டே போனது. நாம் நடக்கவே வேண்டாம். அப்படியே தள்ளிக் கொண்டுபோய் சேர்த்துவிடுவார்கள் போல. இதற்கு மேல் தாக்குப்பிடிக்க முடியாது என்று அப்படியே ஓரம்கட்டி ஒதுங்கி கரை சேர்ந்தோம். எங்கு பார்த்தாலும் சாப்பிட்டு போட்ட காகிதத் தட்டுகள். பலரும் உணவுப் பொருட்களை வீணடித்திருந்தார்கள். அடுத்த ஆண்டாவது பத்து அடிக்கு ஒரு குப்பைக் கூடை வைக்க வேண்டும் என்று உத்தரவு போட வேண்டும். 

ஒரே நாளில் ஓவராய் சாப்பிட்டதில் தெப்பக்குள மீன்கள் நீந்த முடியாமல் திணறிக் கொண்டிருந்தன. அலுவலகத்தின் அரை மணி நேர தேநீர் இடைவேளையில் புஷ்ப பல்லக்கு, லட்ச தீபம், கிரிவலம், மசானக் கொள்ளைக்கு நிகரான ஒரு விழாக்கோலத்தை சென்னையில் பார்க்க முடிந்த திருப்தியுடன் திரும்பினோம்.

எழுத்து, படங்கள்: பா.சங்கர்   
   
 
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக