நீதானே
எம் பொன்வசந்தம்
ஒருநாள் போட்டிகளில்
இருந்து ஓய்ந்திருக்கிறது, இந்திய அணிக்காக 23 ஆண்டுகளாய் ஓடித் தேய்ந்த சச்சின் ரன்
மெஷின். டெஸ்ட் போட்டிகளில் மோசமான பார்மில் இருக்கும்போது, யாருமே எதிர்பார்க்காத
வகையில் ஒண்டேயில் இருந்து ஒதுங்கிக் கொண்டிருக்கிறார் மாஸ்டர் பேட்ஸ்மேன்.
பாகிஸ்தான், இங்கிலாந்து
அணிகளுக்கு எதிராக சொந்த மண்ணில் நடக்கும் ஒருநாள் தொடர்களில் நிச்சயம் விளையாடுவார்
என்றே எல்லோரும் எதிர்பார்த்தனர். இந்த தொடர்களில் விளையாட அவர் விருப்பம் தெரிவித்துள்ளதாகவும்
கூட தகவல் கசிந்தது. தேர்வுக் குழு கூட்டம் நடப்பதற்கு சில மணி நேரம் முன்னதாக ஓய்வு
முடிவை அறிவித்து அதிர்ச்சி அளித்தார்.
1989ல் 16 வயது
சிறுவனாக பாகிஸ்தான் மண்ணில் அறிமுகமானவர், 23 ஆண்டுகளுக்கு பிறகு மகத்தான சாதனை மன்னனாக
ஒருநாள் அரங்கில் இருந்து விடை பெற்றிருக்கிறார். ஒருநாளில்… ஓவர் நைட்டில் அவர் ஒப்பற்ற
வீரராகிவிடவில்லை. பாகிஸ்தானுடன் முதல் போட்டியில் டக் அவுட்! அடுத்து நியூசிலாந்துக்கு
எதிராகவும் முட்டை. ஒன்பதாவது இன்னிங்சில் முதல் அரை சதம். பேட்டிங் ஆர்டரில் பின்
வரிசை, நடு வரிசையில் 69 இன்னிங்சில் விளையாடிய பிறகுதான் தொடக்க ஆட்டக்காரராக முன்னேறினார்.
அதுவும் கூட அதிர்ஷ்ட
வாய்ப்புதான். ஆக்லாந்தில் நியூசிலாந்துக்கு எதிரான போட்டி; வழக்கமான ஓபனர் சிக்சர்
சித்து காயம் அடைந்ததால், யாரை பலிகடா ஆக்கலாம் என்று அணி நிர்வாகம் தலையை பிய்த்துக்
கொண்டிருந்த நிலையில், நான் போகிறேன் என்று முன் வந்தார் சச்சின். இந்திய அணியின் குள்ளன்
அன்று எடுத்தான் விஸ்வரூபம்! 49 பந்தில் 15 பவுண்டரி 2 சிக்சருடன் 82 ரன் விளாசி ஆட்ட
நாயகன் விருதை அபகரித்தார். அதிலிருந்து தொடங்கியது புது அவதாரம்.
1998ல் ஷார்ஜாவில்
நடந்த முத்தரப்பு தொடரில் ஆஸ்திரேலிய அணியை புரட்டி புரட்டி அடித்தார். கடைசி லீக்
ஆட்டத்தில் 143 ரன் விளாசி பைனல் வாய்ப்பை உறுதி செய்தவர், இறுதிப் போட்டியில் 134
ரன் அடித்து கோ கோ கோலா கோப்பையை கைப்பற்றி ரசிகர்களின் இதயங்களை கொள்ளை அடித்தார்.
சுழன்றடித்த அந்த பாலைவனப் புயலில் ஆஸி. பவுலர்கள் பிளெமிங், கேஸ்பரோவிக்ஸ், ஷேன் வார்ன்,
வாஹ் சகோதர்கள் எல்லாம் சருகுகளாய் பறந்தார்கள். பெரிய அணிகளை நம்மாலும் வீழ்த்த முடியும்
என்ற நம்பிக்கையை விதைத்ததில் சச்சினின் பங்கு மகத்தானது.
463 ஒருநாள் போட்டியில்
18,426 ரன் (அதிகம் 200*, சராசரி 44.83, சதம் 49, அரை சதம் 96, பவுண்டரி 2016, சிக்சர்
195)… படிக்கும் போதே மூர்ச்சையாகும் அளவுக்கு மூர்க்கத்தனமான சாதனைகள். உலக கோப்பையில்
அதிக ரன் குவிப்பு, அதிக ஆட்ட நாயகன் விருது, முதல் இரட்டை சதம், அதிக சதம், கங்குலியுடன்
இணைந்து முதல் விக்கெட்டுக்கு அதிக ரன் குவிப்பு… என்று அடுக்கிக் கொண்டே போகலாம்.
ஸ்பெஷலிஸ்ட் பவுலர்கள் விக்கெட் எடுக்க முடியாமல் திணறுகிறார்களா? மிரட்டும் பார்ட்னர்ஷிப்பை
உடைக்க வேண்டுமா? பந்தை சச்சினிடம் கொடுங்கள் என்று சொல்லும் அளவுக்கு 154 விக்கெட்
வீழ்த்தி பந்துவீச்சிலும் முத்திரை பதித்து ஆல் ரவுண்டராக ஜொலித்திருக்கிறார்.
இந்தியாவுக்காக
உலக கோப்பையை வெல்ல வேண்டும் என்ற கனவையும் 2011ல் நனவாக்கிக் கொண்டபோதே அவரது கிரிக்கெட்
வாழ்க்கை பூரணத்துவம் பெற்றுவிட்டது. அப்போதே ஓய்வு முடிவை அறிவித்திருக்கலாம் என்கிறார்கள்
சிலர். நட்சத்திர வீரர்கள் இல்லாவிட்டால் டிவி ரேட்டிங்கை தக்கவைக்க முடியாதே என்ற
வாரியத்தின் சுயநலம், வர்த்தக ரீதியான நிர்ப்பந்தங்கள் அவரை தொடர்ந்து ஆட வைத்திருக்கிறது.
இளைஞர்களுக்கு வழிவிடாமல் நந்தியாய் நிற்கிறார் என்ற குற்றச்சாட்டில் உண்மையில்லை.
சர்வதேச டி20ல்
ஒரு ஆட்டமே போதும் என்று ஒதுங்கிக் கொண்டவர் அவர். உலக கோப்பைக்கு பிறகு, ஒருநாள் தொடர்களைக்
கூட வெகுவாக குறைத்துக் கொண்டார். டெஸ்ட் சொதப்பல்தான் எல்லோரையும் எரிச்சலாக்கிவிட்டது.
அடுத்து ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்கா என்று பலமான அணிகளுடன் மோதப் போவதால்தான் அணியில்
நீடிக்க முடிவு செய்திருப்பதாகத் தெரிகிறது. எப்படிப் பார்த்தாலும் அதிகபட்சம் 6 மாதம்
ஆடுவார். அதற்கான உரிமை அவருக்கு இருக்கிறது என்பதை யாரும் மறுக்க முடியாது.
டெஸ்ட் கதையை அப்புறம்
பார்த்துக் கொள்ளலாம். ஒருநாள் வரலாற்றைப் பொறுத்தவரை ஒரு ஈடு இணையற்ற சகாப்தம், பொற்காலம்,
பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய சாதனை சரித்திரம் முடிவுக்கு வந்துள்ளது என்பதில்
எள்ளளவும் சந்தேகமில்லை. அவரது சாதனைகளை முறியடிக்கவும் ஒரு வீரர் வரலாம். என்ன… அதற்கு
இன்னும் ஒரு அரை நூற்றாண்டாவது தேவைப்படும்!
பெங்களூரில் பாகிஸ்தானுடன்
நடந்த டி20 போட்டியின்போது, இந்திய வீரர்கள் ஒரு பேனரை தொங்கவிட்டிருந்தார்கள். ‘சச்சின்
உங்களை ரொம்பவே மிஸ் செய்கிறோம். ஆனால், இனி எங்களுக்கு விருப்பமான இசையை கேட்டு ரசிப்போம்’
என்று அதில் ஜோக் அடித்திருந்தார்கள். முகமது ரபி, கிஷோர் குமார் பாடல்கள் என்றால்
சச்சினுக்கு அத்தனை உயிர். வீரர்கள் தங்கள் விருப்பம் போல இசையை மாற்றிக் கொள்ளட்டும்.
வெற்றி, பணம்,
புகழ் என எதையுமே மண்டைக்குள் ஏற்றிக் கொள்ளாத சச்சினின் அடக்கம், ஒழுக்கம், அர்ப்பணிப்பு,
கடுமையான உழைப்பு போன்ற பண்புகளில் இருந்து பாடம் கற்பதை மட்டும் மறந்துவிடக் கூடாது.
குட்பை சச்சின்.
பா. சங்கர்