செவ்வாய், 30 ஆகஸ்ட், 2016

ஆக்கபூர்வ நடவடிக்கை

ரியோ ஒலிம்பிக்சில் இரண்டு பதக்கங்களுடன் திருப்தி அடைந்திருக்கிறது இந்தியா. அதிகம் எதிர்பார்க்கப்பட்ட நட்சத்திர வீரர், வீராங்கனைகள் சாதிக்க தவறிய நிலையில் மல்யுத்தத்தில் சாக்‌ஷி மாலிக், பேட்மின்டனில் பி.வி.சிந்து பதக்கம் வென்று ஆறுதல் அளித்தனர்.

ஒலிம்பிக் போட்டி தொடங்குவதற்கு முன்பாக, வெளிநாட்டு செய்தி நிறுவனம் ஒன்று வெளியிட்ட கணிப்பில், இந்தியாவுக்கு அதிகபட்சமாக 2 பதக்கம் மட்டுமே கிடைக்க வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. அந்த கணிப்பு இவ்வளவு துல்லியமாக பலித்தது துரதிர்ஷ்டவசம் என்று தான் சொல்ல வேண்டும்.

துப்பாக்கி சுடுதலில் அபினவ் பிந்த்ரா, மகளிர் ஜிம்னாஸ்டிக்சில் தீபா கர்மாகர் நூலிழையில் பதக்க வாய்ப்பை நழுவவிட்டனர். ஸ்டீபிள் சேஸ் பைனலுக்கு முன்னேறிய லலிதா பாபர், வில்வித்தையில் பாம்பேலா தேவி, கலப்பு இரட்டையர் டென்னிசில் சானியா - போபண்ணா ஜோடியும் கூட பதக்கம் வெல்ல வாய்ப்பு இருந்தும் கை கூடவில்லை. மிகச் சிறிய நாடுகள் கூட பதக்க வேட்டையில் பாய்ச்சல் காட்டிய நிலையில், 125 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியாவால் 2 பதக்கம் மட்டுமே பெற முடிந்தது பெரிய ஏமாற்றம் தான்.

விளையாட்டு நிர்வாகத்தில் அரசியல் குறுக்கீடு, வீரர்கள் தேர்வில் பாரபட்சம், நிதி ஒதுக்கீட்டில் முறைகேடு என்று வழக்கம் போல தோல்விக்கான காரணங்கள் வரிசை கட்டுகின்றன. ‘வெளி நாடுகளில் விளையாட்டு போட்டிகளுக்கான அடிப்படை கட்டமைப்பு, உபகரணங்கள் மற்றும் பயிற்சிக்காக செலவிடப்படும் தொகையில் ஒரு சதவீதம் கூட இந்தியாவில் ஒதுக்கப்படுவதில்லை. இந்த நிலையில், நமது வீரர், வீராங்கனைகள் பதக்கங்களை அள்ளிக் குவிக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது நியாயம் இல்லை’ என்று ஆதங்கப்படுகிறார் ஒலிம்பிக்சில் தனிநபர் தங்கம் வென்ற ஒரே இந்தியர் என்ற பெருமைக்குரிய பிந்த்ரா.

பதக்கங்களை வென்று சாதனை படைத்த சாக்‌ஷி, சிந்துவுக்கு போட்டி போட்டுக் கொண்டு கோடிகளை அள்ளிக் கொடுக்கும் அரசுகள், அந்த வெற்றிக்கு தேவைப்படும் அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பதில் கஞ்சத்தனமாக நடந்து கொள்வதை என்னவென்று சொல்வது? வீரர்கள் தேர்வில் இன்னும் கவனம் தேவை.

இந்தியாவில் திறமைக்கு பஞ்சமில்லை. மூட்டை தூக்கும் இளைஞனை பளுதூக்குதலில் பயிற்சியளித்து களமிறக்குங்கள். கடல் அலைகளை துச்சமாக நினைத்து நீந்தி விளையாடும் மீனவ சிறுவனுக்கு நீச்சல் பயிற்சி, சாலையோரம் கழைக்கூத்தாடும் சிறுமிக்கு ஜிம்னாஸ்டிக்ஸ், பள்ளி செல்வதற்காக தினமும் பல மைல் தூரம் நடக்கும் மலை கிராம மாணவர்கள்... என்று தேடித் தேடி தேர்வு செய்தால் ஓராயிரம் உசேன் போல்ட், மைக்கேல் பெல்ப்ஸ், லியோனல் மெஸ்ஸி கிடைப்பார்கள்.

அடுத்த ஒலிம்பிக் போட்டி 2020ல் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடக்கப் போகிறது. இன்னும் நான்கு ஆண்டுகள் இருக்கிறது. உருப்படியாக ஏதாவது செய்தால் மட்டுமே கணிசமான பதக்கங்களைப் பெற முடியும். இந்த கவலை பிரதமர் மோடிக்கும் வந்திருக்க வேண்டும். அதனால் தான் அடுத்த மூன்று ஒலிம்பிக் போட்டிக்கு தயாராகும் வகையில் அனுபவமும், நிபுணத்துவமும் கொண்ட ‘செயலாக்கப் படை’ ஒன்றை சில தினங்களுக்குள்ளாகவே உருவாக்க உள்ளதாக அறிவித்துள்ளார்.

விளையாட்டு தொடர்பான ஒட்டுமொத்த கட்டமைப்பு வசதிகளை உருவாக்குவதற்கான திட்டமிடல், பயிற்சி, வீரர்கள் தேர்வு ஆகியவற்றை உள்ளடக்கிய அனைத்து அம்சங்களையும் ஆய்வு செய்து இந்த செயலாக்கப் படை அளிக்கும் ஆலோசனைகளின் அடிப்படையில் ஆக்கபூர்வமான முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று உறுதியளித்திருக்கிறார். வரவேற்கத்தக்க முடிவு. வெறும் அறிவிப்போடு நின்று விடாமல் முழு மூச்சாக செயல்படுத்தினால் வெற்றி நிச்சயம்.   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக