செவ்வாய், 16 ஆகஸ்ட், 2016

கவுரவமாக விலகியிருக்கலாம்...

ரியோ ஒலிம்பிக் போட்டியின் ஆண்கள் 100 மீட்டர் பிரீஸ்டைல் நீச்சல் தகுதிச் சுற்றில் 59 வீரர்கள் களமிறங்கினர். அகன்ற மார்பு, உறுதியான தோள்கள், ‘சிக்ஸ் பேக்’ உடற்கட்டுடன் பதக்க வேட்டைக்கு தயாராக நின்ற வீரர்களின் இடையே ஒருவர் மட்டும் தொந்தியும் தொப்பையுமாக நின்றது வித்தியாசமான காட்சியாக இருந்தது. விறுவிறுப்பாக நடந்த பந்தயத்தில், எத்தியோப்பியாவை சேந்த ரோபெல் கிரோஸ் ஹாப்தே என்ற அந்த வீரர் சர்வதேச தரத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் கடைசி இடம் பிடித்ததில் யாருக்கு ஆச்சரியம் ஏற்படவில்லை. அவரது தோற்றமும், அதிகமான எடையால் நீந்த முடியாமல் தடுமாறியதும் சமூக வலைதளங்களில் கேலிப் பொருளாகி பரபரத்தது. ‘ரோபெல் தி வேல்’ என்று அவரை திமிங்கலமாக வர்ணித்தனர். எத்தியோப்பியாவுக்கு மிகப் பெரிய அவமானத்தை ஏற்படுத்திவிட்டதாக அந்நாட்டு ரசிகர்கள் புலம்பித் தீர்த்தனர். தொடக்க விழா அணிவகுப்பில் தேசியக் கொடி ஏந்தி தலைமை வகித்தவர் தான் இந்த ரோபெல். விளையாட்டுப் போட்டிகளின் மணிமகுடமாக திகழும் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க, இது போன்ற தகுதியற்ற நபரை எப்படி அனுமதித்தார்கள் என்று கேட்டவர்கள் எல்லாம்... எத்தியோப்பிய நீச்சல் கூட்டமைப்பு தலைவர் கிரோஸ் ஹாப்தேவின் மகன் தான் ரோபெல் என்ற பதிலால் வாயடைத்துப் போனார்கள். ‘இரண்டு மாதங்களுக்கு முன் ஏற்பட்ட கார் விபத்தில் படுகாயம் அடைந்து பயிற்சி மேற்கொள்ள முடியாமல் ஓய்வெடுத்ததே எனது மோசமான நீச்சலுக்கு காரணம். 80 கிலோவாக இருந்த எடை 120 கிலோவாக அதிகரித்துவிட்டது. எவ்வளவோ முயன்றும் குறைக்க முடியவில்லை. கடுமையான விமர்சனங்களால் சோர்ந்துவிட மாட்டேன். கடுமையாக பயிற்சி செய்து உலக நீச்சல் சாம்பியன்ஷிப்பில் எனது திறமையை நிரூபிப்பேன்’ என்று விளக்கம் அளித்திருக்கிறார் ரோபெல்.‘ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் அளவுக்கு உடல்தகுதி இல்லை என்று தெரிந்த பிறகும், எதற்காக ரியோ சென்று நாட்டுக்கு அவப்பெயரை உண்டாக்க வேண்டும். தொடக்க விழா அணிவகுப்பில் தலைமையேற்க அவருக்கு என்ன தகுதி உள்ளது. வீரர்கள் தேர்வில் பாரபட்சமும் அதிகார துஷ்பிரயோகமும் காட்டப்படுவதற்கு இதை விட சிறந்த உதாரணம் இருக்க முடியாது’ என்று கொதிக்கிறார் எத்தியோப்பிய மாரத்தான் வீரர்.நீண்ட தூர ஓட்டப்பந்தயங்களில் ஆதிக்கம் செலுத்தக் கூடிய வீரர், வீராங்கனைகளுக்கு அந்த கவுரவத்தை கொடுத்திருக்கலாமே என்ற ஆதங்கம் நியாயமானதே. அதை உறுதி செய்யும் வகையில், மகளிர் 10,000 மீட்டர் ஓட்டத்தில் உலக சாதனையுடன் தங்கம் வென்று அசத்தியிருக்கிறார் எத்தியோப்பிய வீராங்கனை அல்மாஸ் அயனா. முழு உடல்தகுதி இல்லாத நிலையில், கவுரவமாக விலகியிருந்தால் இந்த அவப்பெயரை தவிர்த்திருக்கலாம். திறமையான வேறொரு வீரர் பங்கேற்கவும் வாய்ப்பு கிடைத்திருக்கும். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக