சனி, 13 ஆகஸ்ட், 2016

நம்பிக்கை ஒளி

உலகமே ஆவலுடன் எதிர்பார்த்த 31வது ஒலிம்பிக் போட்டித் தொடர், பிரேசில் நாட்டில் ரியோ டி ஜெனிரோ நகரில் வண்ணமயமான கலைநிகழ்ச்சிகள் மற்றும் வாணவேடிக்கையுடன் கோலாகலமாகத் தொடங்கியிருக்கிறது.ஒலிம்பிக் போட்டியை நடத்தும் முதல் தென் அமெரிக்க நாடு என்ற பெருமை ஒரு பக்கம் இருந்தாலும், இந்த தொடரை நடத்துவதில் பிரேசில் எதிர்கொண்டுள்ள சவால்கள் ஏராளம். ஜிகா வைரஸ் தொற்று அபாயம், அரசியல் குழப்பங்கள், பொருளாதார நெருக்கடி, அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் என்று பல்வேறு தடைக்கற்களை தாண்டி தொடக்க விழா சிறப்பாக நடைபெற்றுள்ளது திருப்தி அளிக்கிறது. இன்னும் இரண்டு வார காலத்துக்கு எந்த சிக்கலும் இல்லாமல் போட்டிகளை வெற்றிகரமாக நடத்தி முடிப்பார்கள் என்ற நம்பிக்கையும் ஏற்பட்டுள்ளது.ஒலிம்பிக் வரலாற்றிலேயே முதல் முறையாக அகதிகள் அணி பங்கேற்க வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது மனித நேயத்தின் போற்றத்தக்க வெளிப்பாடு. தொடக்க விழா அணிவகுப்பில் அகதிகள் அணி வீரர், வீராங்கனைகளை வரவேற்று பேசிய சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தலைவர் தாமஸ் பாச், ‘பிரச்னைகள், அவநம்பிக்கை, உறுதியற்ற தன்மை கொண்ட உலகில் தான் நாம் அனைவரும் வாழ்ந்து வருகிறோம். இவற்றுக்கான தீர்வை இந்த ஒலிம்பிக் போட்டியின் மூலமாகக் காண முடிகிறது. 206 நாடுகளை சேர்ந்த பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட திறன்மிக்க வீரர், வீராங்கனைகள் பதக்கங்களை வெல்வதற்காக தங்களுக்குள் போட்டியிட்டாலும், ஒலிம்பிக் கிராமத்தில் அமைதியாகவும் நட்புணர்வுடனும் ஒன்றாகத் தங்கியிருந்து உணவு, உறைவிடம் மட்டுமல்லாது தங்களின் உணர்வுகளையும் பகிர்ந்து ஒற்றுமையுடன் வாழ்வதில் இருந்து ஒவ்வொருவரும் பாடம் கற்க வேண்டும். நம்மை பிரித்தாள நினைக்கும் சக்திகளை விடவும், மனிதநேயத்துடன் கூடிய நமது ஒற்றுமையின் ஆற்றல் அதிகம். இங்கே அணிவகுக்கும் அகதிகள் அணி வீரர், வீராங்கனைகள் இந்த உலகுக்கு விலைமதிப்பில்லா தகவலை சுமந்து வருகிறீர்கள். உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான அகதிகளுக்கு நம்பிக்கை ஒளியாக விளங்குகிறீர்கள். வன்முறை, ஏழ்மை, சமத்துவமின்மை காரணமாக உங்கள் வீடுகளை விட்டு, தாய்நாட்டை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டாலும், உங்களின் திறமையாலும் போராட்ட குணத்தாலும் தலைநிமிர்ந்து நிற்கிறீர்கள். உங்களை வரவேற்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம்’ என்றார்.அந்த தருணத்தில் அகதிகள் அணி வீரர்களின் முகங்களில் தோன்றிய உணர்வுகளை வெறும் வார்த்தைகளால் சொல்லிவிட முடியாது. அடுத்து வரும் ஒலிம்பிக் போட்டிகளில் இந்த அணியின் எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்து, உலகில் அகதிகள் என்று யாருமே இல்லை என்ற நிலை ஏற்பட வேண்டும். அதற்கான நம்பிக்கை ஒளியாகவே ஒளிர்கிறது ரியோ ஒலிம்பிக்.   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக