செவ்வாய், 25 அக்டோபர், 2016

மோதல் போக்கு

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் நிர்வாகத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய சீர்திருத்தங்கள் குறித்து, லோதா கமிட்டி செய்த பரிந்துரைகளை பிசிசிஐ நிராகரித்தது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.

ஐபிஎல் தொடரில் எழுந்த சூதாட்ட சர்ச்சை குறித்து விசாரணை நடத்திய ஓய்வு பெற்ற முன்னாள் நீதிபதி ஆர்.எம்.லோதா தலைமையிலான குழு, கிரிக்கெட் வாரிய நிர்வாகத்தில் உள்ள சீர்கேடுகளை சுட்டிக் காட்டி கடும் கண்டனம் தெரிவித்ததுடன் பல்வேறு சீர்திருத்தங்களை பரிந்துரைத்தது.


கிரிக்கெட் சங்கங்கள் சார்பில் ஒரு மாநிலத்துக்கு ஒரு ஓட்டு மட்டுமே அனுமதி, 70 வயதுக்கு மேற்பட்டவர்கள் நிர்வாகிகளாக நீடிக்கக் கூடாது, அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் பிசிசிஐ நிர்வாகத்தில் இடம் பெறத் தடை, ஆதாயம் தரும் இரட்டைப் பதவி வகிக்கக் கூடாது உள்பட பல்வேறு பரிந்துரைகள் அதில் இடம் பெற்றிருந்தன.

உச்ச நீதிமன்றத்தில் லோதா கமிட்டி சமர்ப்பித்த இந்த பரிந்துரைகளை அமல் செய்யாமல் கிரிக்கெட் வாரியம் இழுத்தடித்து வருகிறது. சர்வாதிகாரமாக நடந்து கொள்ள முயற்சிக்காதீர்கள் என்று உச்ச நீதிமன்றம் கடுமையாக எச்சரித்த நிலையில், சிறப்பு பொதுக் குழுவை கூட்டி ஆலோசித்த பிசிசிஐ ஒரு சில பரிந்துரைகள் தவிர்த்து மற்றவற்றை ஏற்க முடியாது என்று ஒருமனதாக முடிவு செய்துள்ளது.

லோதா கமிட்டி பரிந்துரைகளை அமல்படுத்தினால் கிரிக்கெட் வாரியத்தின் அஸ்திவாரமே ஆட்டம் கண்டுவிடும் என்று உறுப்பினர்கள் அச்சம் தெரிவித்திருக்கிறார்கள். ‘ஐபிஎல் தொடருக்கான அட்டவணையில் மாற்றம் செய்தால் நூறு கோடி ரூபாய் இழப்பு ஏற்படும். இந்த தொடரில் இருந்து கிடைக்கும் வருமானத்தில் தான் முன்னாள் வீரர்களுக்கு உதவித் தொகை வழங்கி வருகிறோம். இதையெல்லாம் லோதா கமிட்டி கருத்தில் கொள்ளவில்லை’ என்கிறார் பிசிசிஐ தலைவர் அனுராக் தாக்கூர்.


சில பரிந்துரைகள் மிகக் கடுமையானவை என்று முன்னாள் கேப்டன்கள் சுனில் கவாஸ்கர், கபில் தேவ் ஆகியோரும் கருத்து தெரிவித்துள்ளனர். நிர்வாகத்தில் பல்வேறு குளறுபடிகள் இருப்பதை உறுதி செய்த பிறகே, சீர்திருத்த நடவடிக்கைகளை லோதா கமிட்டி பரிந்துரைத்துள்ளது. ஒட்டுமொத்தமாக அவற்றை நிராகரிப்பது கிரிக்கெட் வாரியத்தின் நம்பகத்தன்மையை கேள்விக்குறியாக்கி விடும்.

செயல்பாடுகளில் வெளிப்படைத் தன்மை வேண்டும் என்று எதிர்பார்ப்பதை எப்படி குறை கூற முடியும். நியாயமான சீர்திருத்த நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு கொடுக்காமல் மோதல் போக்குடன் நடந்து கொள்வது சரியல்ல. உச்ச நீதிமன்றம் கடுமையான உத்தரவுகளை பிறப்பித்தால், கிரிக்கெட் வாரியம் இதை விட தர்மசங்கடமான நிலைக்கு தள்ளப்படுவது நிச்சயம். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக