செவ்வாய், 25 அக்டோபர், 2016

பழிதீர்க்கும் முயற்சி?

விளையாட்டும் ஊக்கமருந்து சர்ச்சையும் பிரிக்க முடியாததாகிவிட்டன. ஊக்கமருந்து உபயோகிப்பதால் கிடைக்கும் கூடுதல் ஆற்றல், நேர்மையான வீரர், வீராங்கனைகளின் வெற்றி வாய்ப்பை தட்டிப் பறித்துவிடுவதை எந்த வகையிலும் ஏற்க முடியாது.

பரிசோதனையில் சிக்குவது எத்தனை பெரிய நட்சத்திரமாக இருந்தாலும், தக்க தண்டனையை அனுபவித்தே தீர வேண்டும்.ரஷ்யாவில் விளையாட்டுத் துறை நிர்வாகிகளும், மருத்துவ நிபுணர்களும் கை கோர்த்து ஊக்கமருந்து உபயோகத்தை மிக சாமர்த்தியமாக யாரும் கண்டுபிடிக்க முடியாத வகையில் அரங்கேற்றி வந்தது அம்பலமானதால், அந்த நாட்டை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகளுக்கு ரியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க அனுமதி மறுக்கப்பட்டது.

ரஷ்ய டென்னிஸ் நட்சத்திரம் மரியா ஷரபோவா கூட ஊக்கமருந்து சர்ச்சையில் சிக்கி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.நாங்கள் மட்டும் தான் தவறு செய்கிறோமா... அமெரிக்கா என்ன யோக்கியமா? என்று கேட்கும் வகையில், உலக ஊக்கமருந்து தடுப்பு நிறுவனம் ‘வாடா’ இணையதளத்தில் ஊடுருவிய  ரஷ்யாவை சேர்ந்த மென் பொறியாளர்கள், அமெரிக்க டென்னிஸ் நட்சத்திரங்கள் செரீனா வில்லியம்ஸ், வீனஸ் வில்லியம்ஸ், ஜிம்னாஸ்டிக் வீராங்கனை சிமோன் பைல்ஸ், கூடைப்பந்தாட்ட வீராங்கனை எலினா டெல் டன் ஆகியோர் பற்றிய ரகசிய ஆவணங்களை திருடி வெளியிட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அவர்களும் தடை செய்யப்பட்ட ஊக்கமருந்துகளை உபயோகித்துள்ளனர். எனவே அவர்களது பதக்கங்களை பறிப்பதுடன் சாதனைகளையும் ரத்து செய்ய வேண்டும் என்பது ரஷ்ய தரப்பு வாதம். ‘ரியோ ஒலிம்பிக்சில் அமெரிக்கர்கள் சிறப்பாக விளையாடினார்கள். ஆனால், நேர்மையாக அல்ல’ என்று கிண்டலடிக்கிறது ‘பேன்சி பியர்ஸ்’ என்ற ரஷ்ய இணையதளம்.இதற்கு ‘வாடா’ கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

‘விளையாட்டு வீரர், வீராங்கனைகள் பல்வேறு உடல்நல பாதிப்புகளுக்காக குறிப்பிட்ட சில மருந்துகளை உரிய அனுமதி பெற்று உபயோகிப்பது வழக்கமான நடைமுறை தான். அமெரிக்க வீராங்கனைகள் தங்களின் சிகிச்சை விவரங்களை முறையாக பதிவு செய்துள்ளனர். அவர்களது சாதனைகளை களங்கப்படுத்துவது, ரஷ்யாவின் கோழைத்தனமான பழிதீர்க்கும் முயற்சி’ என்கிறார் அமெரிக்க ஊக்கமருந்து தடுப்பு நிறுவன தலைமை செயலதிகாரி டிராவிஸ் டைகார்ட்.செரீனா, வீனஸ், பைல்ஸ் ஆகியோரும் தாங்கள் ஊக்கமருந்து உட்கொண்டதில்லை என்று உறுதியாக தெரிவித்துள்ளனர்.


இது போன்ற சர்ச்சைகளை தவிர்க்க ‘வாடா’ அமைப்பு தனது பரிசோதனை முறைகளில் வெளிப்படைத்தன்மையை கையாள வேண்டும். சோதனை முடிவுகளை உடனுக்குடன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடுவதும் அவசியம். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக