செவ்வாய், 30 ஆகஸ்ட், 2016

ஆக்கபூர்வ நடவடிக்கை

ரியோ ஒலிம்பிக்சில் இரண்டு பதக்கங்களுடன் திருப்தி அடைந்திருக்கிறது இந்தியா. அதிகம் எதிர்பார்க்கப்பட்ட நட்சத்திர வீரர், வீராங்கனைகள் சாதிக்க தவறிய நிலையில் மல்யுத்தத்தில் சாக்‌ஷி மாலிக், பேட்மின்டனில் பி.வி.சிந்து பதக்கம் வென்று ஆறுதல் அளித்தனர்.

ஒலிம்பிக் போட்டி தொடங்குவதற்கு முன்பாக, வெளிநாட்டு செய்தி நிறுவனம் ஒன்று வெளியிட்ட கணிப்பில், இந்தியாவுக்கு அதிகபட்சமாக 2 பதக்கம் மட்டுமே கிடைக்க வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. அந்த கணிப்பு இவ்வளவு துல்லியமாக பலித்தது துரதிர்ஷ்டவசம் என்று தான் சொல்ல வேண்டும்.

துப்பாக்கி சுடுதலில் அபினவ் பிந்த்ரா, மகளிர் ஜிம்னாஸ்டிக்சில் தீபா கர்மாகர் நூலிழையில் பதக்க வாய்ப்பை நழுவவிட்டனர். ஸ்டீபிள் சேஸ் பைனலுக்கு முன்னேறிய லலிதா பாபர், வில்வித்தையில் பாம்பேலா தேவி, கலப்பு இரட்டையர் டென்னிசில் சானியா - போபண்ணா ஜோடியும் கூட பதக்கம் வெல்ல வாய்ப்பு இருந்தும் கை கூடவில்லை. மிகச் சிறிய நாடுகள் கூட பதக்க வேட்டையில் பாய்ச்சல் காட்டிய நிலையில், 125 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியாவால் 2 பதக்கம் மட்டுமே பெற முடிந்தது பெரிய ஏமாற்றம் தான்.

விளையாட்டு நிர்வாகத்தில் அரசியல் குறுக்கீடு, வீரர்கள் தேர்வில் பாரபட்சம், நிதி ஒதுக்கீட்டில் முறைகேடு என்று வழக்கம் போல தோல்விக்கான காரணங்கள் வரிசை கட்டுகின்றன. ‘வெளி நாடுகளில் விளையாட்டு போட்டிகளுக்கான அடிப்படை கட்டமைப்பு, உபகரணங்கள் மற்றும் பயிற்சிக்காக செலவிடப்படும் தொகையில் ஒரு சதவீதம் கூட இந்தியாவில் ஒதுக்கப்படுவதில்லை. இந்த நிலையில், நமது வீரர், வீராங்கனைகள் பதக்கங்களை அள்ளிக் குவிக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது நியாயம் இல்லை’ என்று ஆதங்கப்படுகிறார் ஒலிம்பிக்சில் தனிநபர் தங்கம் வென்ற ஒரே இந்தியர் என்ற பெருமைக்குரிய பிந்த்ரா.

பதக்கங்களை வென்று சாதனை படைத்த சாக்‌ஷி, சிந்துவுக்கு போட்டி போட்டுக் கொண்டு கோடிகளை அள்ளிக் கொடுக்கும் அரசுகள், அந்த வெற்றிக்கு தேவைப்படும் அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பதில் கஞ்சத்தனமாக நடந்து கொள்வதை என்னவென்று சொல்வது? வீரர்கள் தேர்வில் இன்னும் கவனம் தேவை.

இந்தியாவில் திறமைக்கு பஞ்சமில்லை. மூட்டை தூக்கும் இளைஞனை பளுதூக்குதலில் பயிற்சியளித்து களமிறக்குங்கள். கடல் அலைகளை துச்சமாக நினைத்து நீந்தி விளையாடும் மீனவ சிறுவனுக்கு நீச்சல் பயிற்சி, சாலையோரம் கழைக்கூத்தாடும் சிறுமிக்கு ஜிம்னாஸ்டிக்ஸ், பள்ளி செல்வதற்காக தினமும் பல மைல் தூரம் நடக்கும் மலை கிராம மாணவர்கள்... என்று தேடித் தேடி தேர்வு செய்தால் ஓராயிரம் உசேன் போல்ட், மைக்கேல் பெல்ப்ஸ், லியோனல் மெஸ்ஸி கிடைப்பார்கள்.

அடுத்த ஒலிம்பிக் போட்டி 2020ல் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடக்கப் போகிறது. இன்னும் நான்கு ஆண்டுகள் இருக்கிறது. உருப்படியாக ஏதாவது செய்தால் மட்டுமே கணிசமான பதக்கங்களைப் பெற முடியும். இந்த கவலை பிரதமர் மோடிக்கும் வந்திருக்க வேண்டும். அதனால் தான் அடுத்த மூன்று ஒலிம்பிக் போட்டிக்கு தயாராகும் வகையில் அனுபவமும், நிபுணத்துவமும் கொண்ட ‘செயலாக்கப் படை’ ஒன்றை சில தினங்களுக்குள்ளாகவே உருவாக்க உள்ளதாக அறிவித்துள்ளார்.

விளையாட்டு தொடர்பான ஒட்டுமொத்த கட்டமைப்பு வசதிகளை உருவாக்குவதற்கான திட்டமிடல், பயிற்சி, வீரர்கள் தேர்வு ஆகியவற்றை உள்ளடக்கிய அனைத்து அம்சங்களையும் ஆய்வு செய்து இந்த செயலாக்கப் படை அளிக்கும் ஆலோசனைகளின் அடிப்படையில் ஆக்கபூர்வமான முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று உறுதியளித்திருக்கிறார். வரவேற்கத்தக்க முடிவு. வெறும் அறிவிப்போடு நின்று விடாமல் முழு மூச்சாக செயல்படுத்தினால் வெற்றி நிச்சயம்.   

பெண்களால் பெருமை

ரியோ ஒலிம்பிக் போட்டி தொடங்கி பத்து நாட்களுக்கு மேலான பிறகும் இந்திய அணியால் பதக்க பட்டியலில் இடம் பெற முடியவில்லை. பூஜ்ஜியத்துடன் திரும்பி பெருத்த அவமானமாகி விடுமோ என்ற கவலை வாட்டி வதைத்தது.125 கோடி பேர் உள்ள நாட்டில், பதக்கம் வெல்ல ஒருவர் கூடவா இல்லை என்ற கேள்வி இதயங்களை துளைத்து எடுத்த நிலையில் தான், ரக்ஷா பந்தன் தின பரிசாக ஒரே நாளில் இரண்டு பதக்கங்கள் இந்தியாவின் வசமானது.

மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக் வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைக்க, மகளிர் பேட்மின்டன் ஒற்றையர் பிரிவு பைனலுக்கு முன்னேறி தங்கம் அல்லது வெள்ளிப் பதக்கம் கிடைப்பதை உறுதி செய்தார் பி.வி.சிந்து.பிரீஸ்டைல் மல்யுத்தம் 58 கிலோ எடை பிரிவு பிளே-ஆப் போட்டியில் கிர்கிஸ்தான் வீராங்கனையுடன் மோதிய சாக்ஷி 0-5 என்ற கணக்கில் பின்தங்கியபோது, மீண்டும் ஒரு பதக்க வாய்ப்பு வீணாகப் போகிறது என்றே தோன்றியது.

ஆனால், மன உறுதியுடன் புலிப் பாய்ச்சல் காட்டி போராடிய அவர் தொடர்ச்சியாக புள்ளிகளைக் குவித்து 8-5 என வெற்றியை வசப்படுத்தியதை பாராட்ட வார்த்தைகள் இல்லை.பெண் குழந்தையை குஸ்தி போட வைப்பதா என்று சாக்ஷியின் பெற்றோரை திட்டித் தீர்த்த கிராம மக்கள், இன்று தேசத்துக்கே பெருமை சேர்த்த சாதனை வீராங்கனையை தங்கள் மண்ணின் மகளாக போற்றிக் கொண்டாடுகிறார்கள். பேட்மின்டன் பைனலில் உலகின் நம்பர் 1 வீராங்கனை கரோலினா மரினை எதிர்கொண்ட பி.வி.சிந்துவும் நம் நாட்டு பெண்கள் யாருக்கும் சளைத்தவர்கள் இல்லை என்பதை அழுத்தம் திருத்தமாக புரியவைத்தார்.

தங்கம் வெல்லும் வாய்ப்பை நழுவவிட்டாலும், உலக சாம்பியனுக்கு ஈடுகொடுத்து விளையாடி பாராட்டுகளை அள்ளினார். இந்தியாவுக்காக ஒலிம்பிக்சில் வெள்ளி வென்ற முதல் வீராங்கனை என்ற சாதனை அவருக்கு சொந்தமாகி உள்ளது. பதக்கம் வென்ற சாக்ஷி, சிந்து மட்டுமல்ல… மகளிர் ஜிம்னாஸ்டிக்ஸ் வால்ட் பிரிவு பைனலில் பங்கேற்று 4வது இடம் பிடித்த தீபா கர்மாகர், 3000 மீட்டர் ஸ்டீபிள்சேஸ் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய லலிதா பாபர், வில்வித்தையில் போராடிய பாம்பேலா தேவி, கலப்பு இரட்டையர் டென்னிசில் போபண்ணாவுடன் இணைந்து கலக்கிய சானியா மிர்சா, காயம் காரணமாக பதக்க வாய்ப்பை இழந்த மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத், பேட்மின்டன் வீராங்கனை சாய்னா நெஹ்வால் உள்பட அனைவருமே தாய்நாட்டுக்கு பெருமை சேர்த்திருக்கிறார்கள். 

செவ்வாய், 16 ஆகஸ்ட், 2016

கவுரவமாக விலகியிருக்கலாம்...

ரியோ ஒலிம்பிக் போட்டியின் ஆண்கள் 100 மீட்டர் பிரீஸ்டைல் நீச்சல் தகுதிச் சுற்றில் 59 வீரர்கள் களமிறங்கினர். அகன்ற மார்பு, உறுதியான தோள்கள், ‘சிக்ஸ் பேக்’ உடற்கட்டுடன் பதக்க வேட்டைக்கு தயாராக நின்ற வீரர்களின் இடையே ஒருவர் மட்டும் தொந்தியும் தொப்பையுமாக நின்றது வித்தியாசமான காட்சியாக இருந்தது. விறுவிறுப்பாக நடந்த பந்தயத்தில், எத்தியோப்பியாவை சேந்த ரோபெல் கிரோஸ் ஹாப்தே என்ற அந்த வீரர் சர்வதேச தரத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் கடைசி இடம் பிடித்ததில் யாருக்கு ஆச்சரியம் ஏற்படவில்லை. அவரது தோற்றமும், அதிகமான எடையால் நீந்த முடியாமல் தடுமாறியதும் சமூக வலைதளங்களில் கேலிப் பொருளாகி பரபரத்தது. ‘ரோபெல் தி வேல்’ என்று அவரை திமிங்கலமாக வர்ணித்தனர். எத்தியோப்பியாவுக்கு மிகப் பெரிய அவமானத்தை ஏற்படுத்திவிட்டதாக அந்நாட்டு ரசிகர்கள் புலம்பித் தீர்த்தனர். தொடக்க விழா அணிவகுப்பில் தேசியக் கொடி ஏந்தி தலைமை வகித்தவர் தான் இந்த ரோபெல். விளையாட்டுப் போட்டிகளின் மணிமகுடமாக திகழும் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க, இது போன்ற தகுதியற்ற நபரை எப்படி அனுமதித்தார்கள் என்று கேட்டவர்கள் எல்லாம்... எத்தியோப்பிய நீச்சல் கூட்டமைப்பு தலைவர் கிரோஸ் ஹாப்தேவின் மகன் தான் ரோபெல் என்ற பதிலால் வாயடைத்துப் போனார்கள். ‘இரண்டு மாதங்களுக்கு முன் ஏற்பட்ட கார் விபத்தில் படுகாயம் அடைந்து பயிற்சி மேற்கொள்ள முடியாமல் ஓய்வெடுத்ததே எனது மோசமான நீச்சலுக்கு காரணம். 80 கிலோவாக இருந்த எடை 120 கிலோவாக அதிகரித்துவிட்டது. எவ்வளவோ முயன்றும் குறைக்க முடியவில்லை. கடுமையான விமர்சனங்களால் சோர்ந்துவிட மாட்டேன். கடுமையாக பயிற்சி செய்து உலக நீச்சல் சாம்பியன்ஷிப்பில் எனது திறமையை நிரூபிப்பேன்’ என்று விளக்கம் அளித்திருக்கிறார் ரோபெல்.‘ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் அளவுக்கு உடல்தகுதி இல்லை என்று தெரிந்த பிறகும், எதற்காக ரியோ சென்று நாட்டுக்கு அவப்பெயரை உண்டாக்க வேண்டும். தொடக்க விழா அணிவகுப்பில் தலைமையேற்க அவருக்கு என்ன தகுதி உள்ளது. வீரர்கள் தேர்வில் பாரபட்சமும் அதிகார துஷ்பிரயோகமும் காட்டப்படுவதற்கு இதை விட சிறந்த உதாரணம் இருக்க முடியாது’ என்று கொதிக்கிறார் எத்தியோப்பிய மாரத்தான் வீரர்.நீண்ட தூர ஓட்டப்பந்தயங்களில் ஆதிக்கம் செலுத்தக் கூடிய வீரர், வீராங்கனைகளுக்கு அந்த கவுரவத்தை கொடுத்திருக்கலாமே என்ற ஆதங்கம் நியாயமானதே. அதை உறுதி செய்யும் வகையில், மகளிர் 10,000 மீட்டர் ஓட்டத்தில் உலக சாதனையுடன் தங்கம் வென்று அசத்தியிருக்கிறார் எத்தியோப்பிய வீராங்கனை அல்மாஸ் அயனா. முழு உடல்தகுதி இல்லாத நிலையில், கவுரவமாக விலகியிருந்தால் இந்த அவப்பெயரை தவிர்த்திருக்கலாம். திறமையான வேறொரு வீரர் பங்கேற்கவும் வாய்ப்பு கிடைத்திருக்கும். 

சனி, 13 ஆகஸ்ட், 2016

நம்பிக்கை ஒளி

உலகமே ஆவலுடன் எதிர்பார்த்த 31வது ஒலிம்பிக் போட்டித் தொடர், பிரேசில் நாட்டில் ரியோ டி ஜெனிரோ நகரில் வண்ணமயமான கலைநிகழ்ச்சிகள் மற்றும் வாணவேடிக்கையுடன் கோலாகலமாகத் தொடங்கியிருக்கிறது.ஒலிம்பிக் போட்டியை நடத்தும் முதல் தென் அமெரிக்க நாடு என்ற பெருமை ஒரு பக்கம் இருந்தாலும், இந்த தொடரை நடத்துவதில் பிரேசில் எதிர்கொண்டுள்ள சவால்கள் ஏராளம். ஜிகா வைரஸ் தொற்று அபாயம், அரசியல் குழப்பங்கள், பொருளாதார நெருக்கடி, அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் என்று பல்வேறு தடைக்கற்களை தாண்டி தொடக்க விழா சிறப்பாக நடைபெற்றுள்ளது திருப்தி அளிக்கிறது. இன்னும் இரண்டு வார காலத்துக்கு எந்த சிக்கலும் இல்லாமல் போட்டிகளை வெற்றிகரமாக நடத்தி முடிப்பார்கள் என்ற நம்பிக்கையும் ஏற்பட்டுள்ளது.ஒலிம்பிக் வரலாற்றிலேயே முதல் முறையாக அகதிகள் அணி பங்கேற்க வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது மனித நேயத்தின் போற்றத்தக்க வெளிப்பாடு. தொடக்க விழா அணிவகுப்பில் அகதிகள் அணி வீரர், வீராங்கனைகளை வரவேற்று பேசிய சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தலைவர் தாமஸ் பாச், ‘பிரச்னைகள், அவநம்பிக்கை, உறுதியற்ற தன்மை கொண்ட உலகில் தான் நாம் அனைவரும் வாழ்ந்து வருகிறோம். இவற்றுக்கான தீர்வை இந்த ஒலிம்பிக் போட்டியின் மூலமாகக் காண முடிகிறது. 206 நாடுகளை சேர்ந்த பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட திறன்மிக்க வீரர், வீராங்கனைகள் பதக்கங்களை வெல்வதற்காக தங்களுக்குள் போட்டியிட்டாலும், ஒலிம்பிக் கிராமத்தில் அமைதியாகவும் நட்புணர்வுடனும் ஒன்றாகத் தங்கியிருந்து உணவு, உறைவிடம் மட்டுமல்லாது தங்களின் உணர்வுகளையும் பகிர்ந்து ஒற்றுமையுடன் வாழ்வதில் இருந்து ஒவ்வொருவரும் பாடம் கற்க வேண்டும். நம்மை பிரித்தாள நினைக்கும் சக்திகளை விடவும், மனிதநேயத்துடன் கூடிய நமது ஒற்றுமையின் ஆற்றல் அதிகம். இங்கே அணிவகுக்கும் அகதிகள் அணி வீரர், வீராங்கனைகள் இந்த உலகுக்கு விலைமதிப்பில்லா தகவலை சுமந்து வருகிறீர்கள். உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான அகதிகளுக்கு நம்பிக்கை ஒளியாக விளங்குகிறீர்கள். வன்முறை, ஏழ்மை, சமத்துவமின்மை காரணமாக உங்கள் வீடுகளை விட்டு, தாய்நாட்டை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டாலும், உங்களின் திறமையாலும் போராட்ட குணத்தாலும் தலைநிமிர்ந்து நிற்கிறீர்கள். உங்களை வரவேற்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம்’ என்றார்.அந்த தருணத்தில் அகதிகள் அணி வீரர்களின் முகங்களில் தோன்றிய உணர்வுகளை வெறும் வார்த்தைகளால் சொல்லிவிட முடியாது. அடுத்து வரும் ஒலிம்பிக் போட்டிகளில் இந்த அணியின் எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்து, உலகில் அகதிகள் என்று யாருமே இல்லை என்ற நிலை ஏற்பட வேண்டும். அதற்கான நம்பிக்கை ஒளியாகவே ஒளிர்கிறது ரியோ ஒலிம்பிக்.   

தடைகளை தாண்டி

ரியோ ஒலிம்பிக்ஸ் தொடங்க இன்னும் சில நாட்களே உள்ளன. உலகமே ஆவலோடு எதிர்பார்க்கும் இந்த விளையாட்டு திருவிழாவுக்கு பிரேசில் முழு அளவில் தயாராகிவிட்டதா? என்றால்... இது வரை இல்லை என்ற பதிலே மிரட்டுகிறது.அரசு ஊழியர்களுக்கு ஒரு மாதமாக ஊதியம் வரவில்லை என்பதால் வீதிக்கு இறங்கி போராடிக் கொண்டிருக்கிறார்கள். ஆர்ப்பாட்டக் காரர்களில் சிலர் ஒலிம்பிக் சுடர் விளக்கை திருடிச் சென்று, எரிந்து கொண்டிருக்கும் ஜோதியை அணைத்து தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். ராணுவம் வரவழைக்கப்பட்டு கண்ணீர்புகை குண்டுவீச்சு, ரப்பர் புல்லட் துப்பாக்கிச்சூடு நடத்தி கலவரக்காரர்கள் விரட்டி அடிக்கப்பட்டிருக்கிறார்கள். பிரச்னை இன்னும் எரிந்து கொண்டுதான் இருக்கிறது.ஜிகா வைரஸ் தொற்று அபாயம் ஒரு பக்கம் அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது. பணிகள் முழுமையாக முடிவடையாத நிலையில் ஒலிம்பிக் கிராமம் திறந்து வைக்கப்பட்டதும் கடும் விமர்சனத்துக்கு ஆளாகி இருக்கிறது.கழிப்பறையில் குழாய்கள் அடைத்துக் கொண்டு தண்ணீர் போகவில்லை, மின் சாதனங்கள் சரியாகப் பொருத்தப்படாமல் கம்பிகள் அறுந்து தொங்கிக் கொண்டிருக்கின்றன என்று கூறி ஆஸ்திரேலிய அணி வீரர், வீராங்கனைகள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட குடியிருப்புகளில் நுழையவே மறுத்துவிட்டனர். அவசரம் அவசரமாக எல்லா குறைகளையும் சரி செய்து அவர்களை தங்க வைத்த நிலையில், ஒரு கட்டடத்தில் தீ விபத்து ஏற்பட்டதால் எல்லோரையும் தற்காலிகமாக வெளியேற்ற வேண்டிய இக்கட்டான நிலை. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. தீயணைப்பு படை வீரர்கள் துரிதமாக செயல்பட்டதால் பெரிய அசம்பாவிதம் தடுக்கப்பட்டிருக்கிறது.‘முதலில் நிலைமை மிக மோசமாகவே இருந்தது. ஒரு வார காலமாக ஊழியர்கள் மிகவும் சிரமப்பட்டு எல்லா குறைகளையும் சரி செய்துவிட்டார்கள். திடீர் தீ விபத்தால் வீரர், வீராங்கனைகள் சற்று பதற்றமாகி விட்டனர். இப்போது எல்லாம் சரியாகவே உள்ளது. ஏற்பாடுகள் திருப்தி அளிக்கின்றன’ என்கிறார் ஆஸி. அணி தலைமை நிர்வாகி கிட்டி சில்லர்.ஊக்கமருந்து சர்ச்சை காரணமாக ரஷ்ய அணி வீரர், வீராங்கனைகள் பலருக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. ரியோ நகரில் திருட்டு, கொள்ளை சம்பவங்கள் சர்வ சாதாரணம் என்பதால் கவனமாக இருங்கள் என்று தங்கள் அணியை சீன அரசு எச்சரித்துள்ளது. ஒலிம்பிக் போன்ற மிகப் பெரிய விளையடடுப் போட்டியை நடத்தும்போது, இது போன்ற
தடங்கல்கள் வருவது சகஜம் தான். எல்லாவற்றையும் சமாளித்து ரியோ ஒலிம்பிக்சை
வெற்றிகரமாக நடத்திக் காட்டுவோம் என்கிறார்கள் பிரேசில் அதிகாரிகள். போட்டிகள் தொடங்கியதும் வீரர், வீராங்கனைகள் தங்கள் திறமையை வெளிப்படுத்தி பதக்கங்களை அள்ளும்போது இந்த சிறு சிறு குறைகள் காணாமல் போய்விடும் என நம்புவோம். 

ரஷ்யாவின் பேராசை

ஊக்கமருந்து சர்ச்சையில் சிக்கியதை அடுத்து, ரஷ்ய தடகள வீரர், வீராங்கனைகள் ரியோ ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்வது கேள்விக் குறியாகி உள்ளது.தங்கள் நாட்டு அணி பதக்கங்களை அள்ளிக் குவிக்க வேண்டும் என்ற பேராசையில், ஊக்கமருந்து உபயோகத்தை அரசும் அதிகாரிகளும் ஊக்குவித்தது வெளிச்சத்துக்கு வந்ததால் ரஷ்யாவை சேர்ந்த 68 வீரர், வீராங்கனைகளுக்கு தடை விதிக்கப்பட்டது.இதை எதிர்த்து விளையாட்டு தொடர்பான சர்ச்சைகளை விசாரிக்கும் சர்வதேச தீர்ப்பாயத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டிருந்தது. வழக்கை விசாரித்த தீர்ப்பாயம், தடையை நீக்க மறுத்து ரஷ்யாவின் மனுவை தள்ளுபடி செய்துள்ளது. சம்பந்தப்பட்ட 68 பேருக்கு மட்டுமில்லாமல் ஒட்டுமொத்த ரஷ்ய அணியையும் ரியோ ஒலிம்பிக்சில் பங்கேற்க அனுமதிக்கக் கூடாது என்று அமெரிக்கா, கனடா, ஜெர்மனி, ஜப்பான் நாடுகள் ஏற்கனவே வலியுறுத்தி இருந்த நிலையில், இங்கிலாந்து ஒலிம்பிக் கமிட்டியும் அதற்கு ஆதரவு தெரிவித்துள்ளது.இந்த சர்ச்சையில் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் முடிவு மிகவும் பரபரப்பாக எதிர்பார்க்கப்படுகிறது. தவறு செய்த வீரர், வீராங்கனைகள் மீது தாராளமாக நடவடிக்கை எடுங்கள். ஒட்டுமொத்தமாக ரஷ்ய அணியை தடை செய்தால், எந்த தவறும் செய்யாத அப்பாவி வீரர், வீராங்கனைகள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். ஆண்டுக் கணக்கில் கடுமையாகப் பயிற்சி செய்து ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ளத் தயாராக இருக்கும் அவர்களின் எதிர்காலமே இதனால் வீணாகிவிடும். அடுத்த ஒலிம்பிக் போட்டிக்குள் அவர்கள் இருக்கும் இடம் தெரியாமல் போய்விடுவார்கள் என்கிறார்கள் நடுநிலையாளர்கள்.‘திறமையான எங்கள் அணியை முடக்கிவிட்டு, ஒலிம்பிக் பதக்கங்களை தட்டிச் செல்ல சர்வதேச சதி நடக்கிறது. இப்படி குறுக்கு வழியில் பெறும் பதக்கங்கள் உண்மையான வெற்றிக்கு சான்றாக முடியாது’ என குமுறுகிறார் போல்வால்ட் நட்சத்திர வீராங்கனை இசின்பயேவா. ஊக்கமருந்து சோதனையில் சிக்கிய வீரர், வீராங்கனைகளிடம் இருந்து பெறப்பட்ட மாதிரிகளை மாற்றி, மருத்துவ பரிசோதனை அறிக்கைகளை திருத்தி எழுதுவதற்கு அரசாங்கமே ஆதரவாக இருந்தது என்ற குற்றச்சாட்டை அவ்வளவு எளிதாக அலட்சியப்படுத்திவிட முடியாது. தண்டனை கடுமையாக இருந்தால் தான் மீண்டும் இது போன்ற தவறுகள் நடக்காது. ‘ரஷ்ய அணிக்கு தடை என்ற முடிவு துரதிர்ஷ்டவசமானது தான். ஆனால், விதிமுறைகளை கடைப்பிடிப்பது அதைவிட முக்கியம்’ என்கிறார் ஒலிம்பிக் தடகள நட்சத்திரம் உசேன் போல்ட். ஊக்கமருந்து உபயோகிக்காதவர்கள், ரஷ்யா சார்பில் களமிறங்காமல் தனிப்பட்ட முறையில் எந்த நாட்டையும் சேராத வீரர், வீராங்கனைகளாக பங்கேற்க அனுமதிக்கலாம் என்ற ஆலோசனையும் பரிசீலிக்கப்பட்டு வருகிறது.சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் செயற்குழு கூட்டத்தில் இந்த சர்ச்சைக்கு நல்ல முடிவு கிடைக்கும் என எதிர்பார்க்கலாம். 

பாதுகாப்பது கடமை

ரியோ ஒலிம்பிக் போட்டி நெருங்கிவிட்டது. உலகம் முழுவதும் ஆயிரக்கணக்கான வீரர், வீராங்கனைகள் பதக்க வேட்டைக்கு தயாராகி வருகிறார்கள். அதே சமயம், பிரேசில் நாட்டை அச்சுறுத்தி வரும் ஸிகா வைரஸ் தாக்குதல், ஒலிம்பிக் போட்டியையும் வெகுவாகப் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.உயிரை பறிக்கும் அளவுக்கு வீரியம் மிக்கது அல்ல என்றாலும், இந்த வைரஸ் தொற்று ஏற்பட்டவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகள் மூளை வளர்ச்சி குன்றி சிறிய தலைகளுடன் பிறக்கும் என்பதால் பிரேசில் செல்வதா... வேண்டாமா? என்ற தயக்கம் எல்லோரையுமே தொற்றிக் கொண்டுள்ளது.கனடா நாட்டு டென்னிஸ் வீரர் மிலோஸ் ரயோனிச், ரோமானிய வீராங்கனை சிமோனா ஹாலெப் இருவரும் ஸிகா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ரியோ ஒலிம்பிக்சில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர். ‘இது மிகவும் கடினமான முடிவு. குடும்பத்தினர் மற்றும் பயிற்சியாளர்களுடன் தீவிரமாக ஆலோசித்த பிறகு, உடல்நலனை கருத்தில் கொண்டு இந்த முடிவை எடுத்துள்ளேன். கனமான இதயத்துடன் ரியோ ஒலிம்பிக் போட்டியில் இருந்து விலகுகிறேன்’ என்று தெரிவித்திருக்கிறார் ரயோனிச்.‘டென்னிசில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு எனக்கென ஒரு குழந்தை, குடும்பம் வேண்டும் என விரும்புகிறேன். பிரேசில் பயணத்தால் அந்த கனவு கலைந்துவிடுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் ரியோ ஒலிம்பிக்சில் பங்கேற்க முடியாது’ என்கிறார் ஹாலெப்.அமெரிக்காவின் ஜான் ஐஸ்னர், ஆஸ்திரேலியாவின் டாமிக், கிர்ஜியோஸ், ஸ்பெயினின் பெலிசியானோ லோபஸ்... என்று விலகிய டென்னிஸ் வீரர்களின் பட்டியல் நீள்கிறது. கோல்ப் விளையாட்டில் உலகின் டாப் 4 வீரர்கள் ஏற்கனவே ரியோ பயணத்தை ரத்து செய்துவிட்டார்கள். இன்னும் எத்தனை பேர் விலகப் போகிறார்கள் என்று தெரியவில்லை. ‘எந்தவித அச்சமும் இல்லாமல் எங்கள் நாட்டுக்கு வாருங்கள். ரியோ ஒலிம்பிக்சில் பங்கேற்கும் வீரர், வீராங்கனைகள், பார்வையாளர்களில் ஒருவருக்கு கூட ஸிகா வைரஸ் தொற்று ஏற்பட வாய்ப்பு இல்லை. அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்திருக்கிறோம்’ என்று உறுதியளிக்கிறார் பிரேசில் சுகாதாரத் துறை அமைச்சர் ரிகார்டோ பாரோஸ். ஆண்டின் தொடக்கத்தில் ஸிகா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3000-3500 என இருந்தது. தற்போது அது 30க்கும் கீழாக குறைந்துவிட்டது. கொசுக்களை அழிக்கவும், மீண்டும் பெருகாமல் தடுக்கவும் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குளிர்காலம் தொடங்கியுள்ளதும் சாதகமாக உள்ளது என்கிறார்கள் ரியோ வாசிகள். 

திறமைக்கு மகுடம்

கோபா அமெரிக்கா நூற்றாண்டு விழா போட்டித் தொடர், ஐரோப்பிய சாம்பியன்ஷிப்... ஒரே சமயத்தில் இரண்டு பெரிய கால்பந்து போட்டித் தொடர்கள் நடந்தது உலகம் முழுவதும் ரசிகர்களை திக்குமுக்காட வைத்துவிட்டது. இந்த கால்பந்து ஜுரம் இந்தியாவையும் விட்டுவைக்கவில்லை. சுமார் மூன்று வார காலம் தூக்கத்தை தொலைத்து திகட்டத் திகட்ட பார்த்து ரசித்தார்கள்.லீக் சுற்று மற்றும் நாக் அவுட் ஆட்டங்களில் அனல் பறந்தாலும், அர்ஜென்டினா - சிலி அணிகளிடையே நடந்த கோபா அமெரிக்கா இறுதிப் போட்டியின் முடிவு பெனால்டி ஷூட் அவுட் மூலமாக நிர்ணயிக்கப்பட்டது சற்று ஏமாற்றமாகவே இருந்தது. இதற்காகவா இத்தனை போராட்டம் என்ற சலிப்பும் விரக்தியும் அடி மனதை அறுப்பதை தவிர்க்க முடியவில்லை. உலக கோப்பை, ஒலிம்பிக், கோபா அமெரிக்கா, யூரோ போன்ற தொடர்களில் சாம்பியன் யார் என்பதை தீர்மானிக்க ‘பெஸ்ட் ஆப் த்ரீ’ அடிப்படையில் இறுதிப் போட்டியை நடத்துவதே நியாயமாக இருக்கும்.ஸ்பெயினின் லா லிகா சாம்பியன்ஷிப்பில் நடத்துவது போல உள்ளூர்/வெளியூர் என இரண்டு போட்டிகளிலும் சேர்த்து அதிக கோல் அடிக்கும் அணிக்கு கோப்பையை வழங்குவது மிகப் பொருத்தமானது. ரசிகர்களுக்கு தனிப்பட்ட விருப்பு வெறுப்பு இருந்தாலும், எல்லா வகையிலும் திறமையான அணிக்கு சாம்பியன் பட்டம் கிடைக்க வேண்டும் என்பதே விளையாட்டின் அடிப்படை அம்சம். பெனால்டி ஷூட் அவுட்டில் அது தீர்மானிக்கப்படும்போது, திறமையை விட அதிர்ஷ்டத்தின் பங்கு அதிகமாகி விடுகிறது. மின்னல் வேக ஷாட்டை விநாடிக்கும் குறைவான நேரத்தில் கணித்து தடுக்க வேண்டிய கட்டாயம் கோல் கீப்பருக்கு. பந்தை வலைக்குள் திணிக்க வேண்டுமே என்ற பதற்றமும், மன அழுத்தமும் ஷாட் அடிப்பவருக்கு. இப்படி ஒட்டுமொத்த அணியின் தலையெழுத்தையும் ஒருசில வீரர்களின் கையில் ஒப்படைப்பது நியாயமாகப் படவில்லை. காலம் காலமாக கால்பந்து போட்டி இப்படித்தானே நடக்கிறது? உண்மைதான். ஆனால், அதில் மாற்றம் செய்வதற்கான தருணம் வந்துவிட்டதாகவே தோன்றுகிறது. கிரிக்கெட் என்றாலே டெஸ்ட் போட்டி என்ற நிலை மாறி, ஒருநாள் போட்டி, டி20 என்று வந்த பிறகு அதன் வளர்ச்சியும் ஈர்ப்பும் பிரமிக்க வைக்கிறதே.கடைசி வரை சமநிலை நீடித்து இழுபறியாக அமையும் கால்பந்து போட்டிகளில் பெனால்டி ஷூட் அவுட்டுடன், தலா 5 கார்னர் கிக், பிரீ கிக் வாய்ப்புகளையும் சேர்த்து வழங்கினால் திறமையான அணிக்கு வெற்றி உறுதி என்பதோடு இதில் ஏற்படும் பரபரப்பு மற்றும் விறுவிறுப்பு ரசிகர்களுக்கு விருந்தாகும். பரீட்சார்த்தமாக முயற்சிப்பதில் பாதகம் ஏதுமில்லை. சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு தாராளமாக பரிசீலிக்கலாம்.

பக்குவம் தேவை

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு கடுமையான போட்டி இருந்த நிலையில், அனைத்து வகையிலும் பொருத்தமான அனில் கும்ப்ளேவிடம் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது வரவேற்கத்தக்க முடிவு. குறிப்பாக, இளம் வீரர் விராத் கோஹ்லி தலைமையிலான இந்திய டெஸ்ட் அணிக்கு, கும்ப்ளேவின் அனுபவம் வாய்ந்த ஆலோசனைகளும் வழிகாட்டுதலும் மிக உதவிகரமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.முன்னாள் கேப்டன்கள் கங்குலி, சச்சின் மற்றும் முன்னாள் பேட்டிங் நட்சத்திரம் வி.வி.லஷ்மண் ஆகியோர் அடங்கிய தேர்வுக் குழுவினரின் பரிந்துரை அடிப்படையில் கும்ப்ளேவுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த முடிவு எல்லோருக்கும் மகிழ்ச்சி, திருப்தி அளித்திருந்தாலும், பதவிக்கான போட்டியில் பங்கேற்று முடிவுக்காக ஆவலோடு காத்திருந்த ரவி சாஸ்திரிக்கு பெருத்த ஏமாற்றம்.  நேர்காணலில் தான் பங்கேற்றபோது, தேர்வுக் குழுவில் இடம்பெற்றிருந்த கங்குலி வேண்டுமென்றே வெளியேறி தன்னை அவமதித்துவிட்டதாக சாஸ்திரி குற்றம்சாட்டியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தலைமை பயிற்சியாளரை தேர்வு செய்வது போன்ற முக்கியமான கூட்டத்தில் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும் என்ற அடிப்படையான விஷயம் கூட கங்குலிக்கு தெரியவில்லை என்று தாக்கினார். இதற்கு பதிலளித்த கங்குலி, ‘நேர்காணலின் முக்கியத்துவத்தை நன்கு அறிந்த ரவி சாஸ்திரி கொல்கத்தாவுக்கு நேரில் வந்து கலந்து கொண்டிருக்க வேண்டும். அதை விடுத்து, பாங்காக்கில் சுற்றுலா போன இடத்தில் இருந்து ஸ்கைப் மூலமாக ஆன்லைனில் பங்கேற்பது எந்த வகையில் நியாயம். கிணற்றுத் தவளை போல ஏதேதோ உளறுகிறார்’ என்று பதிலடி கொடுக்க, முன்னாள் கேப்டன்களின் மோதலில் அனல் பறக்கிறது.ஏகத்துக்கு கடுப்பான சாஸ்திரி, சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் கிரிக்கெட் கமிட்டி செய்தித் தொடர்பாளர் பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். சொந்த காரணங்களுக்காகவே அவர் பதவி விலகியிருப்பதாகக் கூறினாலும், இந்த குழுவுக்கு கும்ப்ளே தலைவராக இருப்பதால் தான் இந்த முடிவை எடுத்திருக்கிறாரோ என்ற சந்தேகம் எழுவதை தவிர்க்க முடியவில்லை. இந்திய அணியின் கேப்டன், உயர் செயல்பாட்டு இயக்குனர், வர்ணனையாளர் உள்பட பல பொறுப்பான பதவிகளில் இருந்தவர் இப்படி பொறுமை இழந்து வார்த்தைகளை கொட்டுவது சரியல்ல. கங்குலியும் கூட இந்த விஷயத்தை இன்னும் கொஞ்சம் பக்குவமாக கையாண்டிருக்கலாம். இந்த ஈகோ மோதலால், அவர்கள் மீதான மதிப்பு, மரியாதை சேதாரமாகி இருக்கிறது என்பதே உண்மை. ‘பயிற்சியாளர் யார் என்பது முக்கியமல்ல. இன்று நான், நாளை வேறு யாரோ ஒருவர். இதில் வீரர்களின் நலனும், அணியின் வெற்றியுமே முக்கியம்’ என்று இந்த சர்ச்சைக்கு கும்ப்ளே முற்றுப்புள்ளி வைத்தது அவரது முதிர்ச்சியை காட்டுகிறது.