ஊக்கமருந்து சோதனையில் சிக்கிய
நட்சத்திர வீராங்கனை மரியா ஷரபோவா சமீபத்தில் சஸ்பெண்ட் செய்யப்பட்டது டென்னிஸ் அரங்கையே
அதிரவைத்தது. கடந்த ஜனவரியில் நடந்த ஆஸ்திரேலிய ஓபன் போட்டியின்போது நடத்தப்பட்ட பரிசோதனையில்,
தடைசெய்யப்பட்ட மெல்டோனியம் என்ற மருந்தை அவர் உட்கொண்டது உறுதி செய்யப்பட்டது. அமெரிக்காவின்
லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் செய்தியாளர்களை சந்தித்த ஷரபோவா, இதை ஒப்புக் கொண்டதுடன் நடந்த
தவறுக்கு முழு பொறுப்பேற்பதாகவும் தெரிவித்தார். ஒரு வாரத்துக்கு இடைக்கால தடை விதித்த
சர்வதேச டென்னிஸ் கூட்டமைப்பு, அவருக்கான முழு தண்டனை விவரத்தை விரைவில் அறிவிக்க உள்ளது.
இதயக் கோளாறு, மனச் சோர்வு உள்ளிட்ட பல நோய் அறிகுறிகளுக்கு மருந்தாக மெல்டோனியம் உபயோகிக்கப்படுகிறது.
அடிக்கடி உடல்நலக் குறைவு ஏற்பட்டது, ஈசிஜி பரிசோதனையில் இதயக் கோளாறு இருக்க வாய்ப்புள்ளதாக
தெரிந்தது, பெற்றோருக்கு நீரிழிவு நோய் இருப்பது உள்பட பல்வேறு காரணங்களுக்காக டாக்டர்களின்
பரிந்துரையுடன் இந்த மருந்தை கடந்த பத்து ஆண்டுகளாக உட்கொண்டு வருவதாக ஷரபோவா தெரிவித்துள்ளார்.
தடை செய்யப்பட்ட ஊக்கமருந்துகள் பட்டியலில் இந்த ஆண்டுதான் மெல்டோனியம் சேர்க்கப்பட்டுள்ளது.
இது குறித்து உலக ஊக்கமருந்து தடுப்புக் கழகம் அனுப்பிய மின்னஞ்சல் தகவலை தான் முழுவதுமாகப்
படிக்கத் தவறியதே தவறுக்கு முக்கிய காரணம் என்று அவர் தற்போது விளக்கமளித்துள்ளார்.‘எனது
ஒப்புதல் வாக்குமூலத்தை ஊடகங்கள் ஊதிப் பெரிதாக்கியதுடன் தவறான தகவல்களை வெளியிட்டு
வருகின்றன. எனக்கு ஐந்து முறை எச்சரிக்கை விடுக்கப்பட்டதாக வெளியான செய்தியில் துளி
கூட உண்மையில்லை. வீரர், வீராங்கனைகளுக்கு பொதுவாக அனுப்பப்பட்ட அறிவுறுத்தல் கடிதம்
எளிதில் படிக்கக் கூடியதாக இருக்கவில்லை.அந்த மின்னஞ்சலை படிக்க பிரத்யேகமான இணையதள
இணைப்பு, பயனீட்டாளர் பெயர், கடவுச்சொல், அதிலிருந்து பல்வேறு பக்கங்களுக்கு சென்று
குறிப்பிட்ட இணைப்பை கிளிக் செய்து... புரிந்துகொள்ளக் கடினமான மருத்துவ/ தொழில்நுட்ப
தகவல்களை முழுவதுமாகப் படித்தால் மட்டுமே விதிமுறைகளில் செய்யப்பட்ட மாற்றங்கள் பற்றி
ஓரளவாவது தெரிந்துகொள்ள முடியும். சோம்பல் காரணமாக அந்த மெயிலை அலட்சியப்படுத்தியது
இவ்வளவு பெரிய சிக்கலில் முடியும் என்று கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. அதற்காக பொறுப்பை
தட்டிக் கழிக்க மாட்டேன். என்ன தண்டனை என்றாலும் ஏற்றுக் கொள்வேன். ஆனால், எனது ரசிகர்களை
ஏமாற்ற விரும்பவில்லை. மீண்டும் டென்னிஸ் களத்தில் இறங்க அனுமதிப்பார்கள் என்ற நம்பிக்கை
உள்ளது’ என்கிறார் ஷரபோவா. 500 கோடி ரூபாய் மதிப்பிலான விளம்பர ஒப்பந்தங்களுக்கு பாதிப்பு
வரும் என்பதாலேயே, தவறு செய்யாதது போல நடிக்கிறார் என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்படுகிறது.
தடை செய்யப்பட்ட மருந்துகள் பட்டியலில் புதிதாக சில மருந்துகளை சேர்க்கும்போது, வீரர்,
வீராங்கனைகள் அதுபற்றி தெளிவாகத் தெரிந்துகொண்டு அவற்றை தவிர்ப்பதற்கு போதிய கால அவகாசம்
வழங்கப்பட வேண்டும். இந்த விஷயத்தில் அத்தகைய நடைமுறை கடைப்பிடிக்கப்படவில்லை என்பதும்
சிலரது வாதமாக உள்ளது. மருத்துவர்கள், பயிற்சியாளர்கள் தரப்பில் இருந்து அளிக்கப்படும்
விளக்கமும் முக்கியம். விரிவான விசாரணையில் வெளிச்சம் பிறக்கும் என எதிர்பார்க்கலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக