ஞாயிறு, 29 மே, 2016

சாதனை கை கூடுமா?

ரபேல் நடால்... டென்னிஸ் ரசிகர்களின் அபிமான வீரர்கள் பட்டியலில் மறக்க முடியாத பெயர். களிமண் தரை மைதானத்தில் நடக்கும் பிரெஞ்ச் ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் போட்டியில் 9 முறை சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்தவர். பத்தாவது முறையாக கோப்பையை கைப்பற்றி மகத்தான சாதனை படைப்பார் என்ற எதிர்பார்ப்புடன் காத்திருந்த ரசிகர்களுக்கு பெருத்த ஏமாற்றம். இடது கை மணிக்கட்டில் ஏற்பட்ட காயம் காரணமாக 3வது சுற்றிலேயே விலக வேண்டி வந்தது துரதிர்ஷ்டவசமானது. முதுகு வலியால் அவதிப்பட்டு வரும் சுவிஸ் நட்சத்திரம் ரோஜர் பெடரர் பிரெஞ்ச் ஓபனில் இருந்து ஏற்கனவே விலகிவிட்ட நிலையில், தற்போது நடாலும் இல்லை என்பதில் அனைவருக்குமே வருத்தம் தான். கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் பெடரர் 17 பட்டங்களும், நடால் 14 பட்டங்களும் வென்றுள்ளனர். கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக இருவருக்கும் இடையே நிலவிய கடும் போட்டி, டென்னிஸ் விளையாட்டுக்கே பெருமை சேர்க்கும் விதமாக இருந்தது என்றால் மிகையல்ல. இவர்களுக்கு இணையானது, தற்போதைய நம்பர் 1 வீரர் ஜோகோவிச் பங்களிப்பும்.ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்ச் ஓபன், விம்பிள்டன், யுஎஸ் ஓபன் என நான்கு கிராண்ட் ஸ்லாம் போட்டிகளிலும் பட்டம் வெல்லும் கேரியர் கிராண்ட் ஸ்லாம் எனும் சாதனையை பெடரர், நடால் வசப்படுத்திய நிலையில், ஜோகோவிச்சுக்கு மட்டும் அது எட்டாக் கனியாகவே இருந்து வருகிறது. இரண்டு மகத்தான வீரர்களின் கடும் போட்டிக்கு இடையில் ஆஸி. ஓபனில் 6 முறை, விம்பிள்டன் 3, அமெரிக்க ஓபனில் 2 என 11 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்றிருந்தாலும், பிரெஞ்ச் ஓபனில் மட்டும் அவரால் இதுவரை சாதிக்க முடியவில்லை. நடாலின் அசைக்க முடியாத ஆதிக்கம் தான் இதற்கு முக்கிய காரணம்.பெடரர், நடால் இருவருமே இல்லாததால் இம்முறை கேரியர் கிராண்ட் ஸ்லாம் சாதனை ஜோகோவிச்சுக்கு கை கூடுவதற்கான வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. மற்ற இரண்டு வீரர்களும் காயத்தால் அவதிப்பட்டு வரும் நிலையில், நல்ல உடல்தகுதியுடன் உச்சகட்ட பார்மில் இருக்கும் ஜோகோவிச் பிரெஞ்ச் ஓபன் கோப்பையையும் முத்தமிடுவார் என எதிர்பார்க்கலாம்.

யாருக்கு வாய்ப்பு?

பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனிரோ நகரில் நடக்க உள்ள ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க இந்திய மல்யுத்த வீரர்கள் சுஷில் குமார், நர்சிங் யாதவ் இருவரும் மல்லுகட்டுகின்றனர். இந்தியாவுக்காக தனிநபர் பிரிவில் இரண்டு ஒலிம்பிக் பதக்கம் வென்ற ஒரே வீரர் என்ற பெருமைக்குரியவர் சுஷில். அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் கடந்த ஆண்டு நடந்த உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் தொடரின் ஆண்கள் 74 கிலோ எடை பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற நர்சிங் யாதவ், ரியோ ஒலிம்பிக்சில் இந்தியாவுக்கான ஒதுக்கீட்டு இடத்தை உறுதி செய்தவர். துரதிர்ஷ்டவசமாக, தோள்பட்டையில் காயம் ஏற்பட்டதால் சுஷில் குமாரால் அந்த போட்டியில் களமிறங்க முடியாமல் போனது.தற்போது காயம் குணமடைந்து முழு உடல்தகுதியுடன் இருக்கும் சுஷில், ரியோ ஒலிம்பிக்சில் பங்கேற்க தனக்கே வாய்ப்பு வழங்க வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருக்கிறார். ‘ஒலிம்பிக் போட்டியில் மீண்டும் இந்தியா சார்பில் களமிறங்க மிகவும் ஆவலாக இருக்கிறேன். மூன்றாவது முறையாக ஒலிம்பிக் பதக்கம் வென்று சாதனை படைப்பதே என் லட்சியம். அதற்காக கடும் பயிற்சி மேற்கொண்டு வருகிறேன். தகுதிப் போட்டிக்கு ஏற்பாடு செய்தால் நர்சிங் யாதவுடன் மோத தயார். யார் ஜெயிக்கிறோமோ அவரை ரியோ அனுப்பி வையுங்கள்என்று பகிரங்கமாக சவால் விடுத்துள்ளார். இது குறித்து மத்திய விளையாட்டுத் துறை அமைச்சகம் மற்றும் இந்திய மல்யுத்த கூட்டமைப்புக்கு ஏற்கனவே கடிதம் அனுப்பியுள்ள அவர், பிரதமர் மோடிக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளதால் பிரச்னை தீவிரமாகி இருக்கிறது.அவரது கோரிக்கையை ஏற்பது பற்றி மல்யுத்த கூட்டமைப்பு நிர்வாகிகளும் தீவிரமாக ஆலோசித்து வருகிறார்கள். ஒலிம்பிக் தகுதி ஒதுக்கீட்டை உறுதி செய்த எனக்கே வாய்ப்பு வழங்க வேண்டும் என்கிறார் நர்சிங் யாதவ். அது தான் வழக்கமான நடைமுறையும் கூட. 2004 ஒலிம்பிக் போட்டிக்கு முன்பாக யோகேஷ்வர் தத்துடன் தகுதி போட்டிக்கு ஏற்பாடு செய்ய உத்தரவிட வேண்டும் என்று கோரி கிர்பா சிங் என்ற வீரர் நீதிமன்றத்தை நாடியபோது, அவரது மனு தள்ளுபடி செய்யப்பட்ட முன்னுதாரணமும் உள்ளது என்கிறார் ஒரு நிர்வாகி.சுஷில், நர்சிங் இருவருமே திறமையான வீரர்கள் தான். இந்த தர்மசங்கடமான நிலையில், மல்யுத்த கூட்டமைப்பு சரியான முடிவை எடுக்கும் என எதிர்பார்க்கலாம்.

ஏமாற்றும் முயற்சி

வாக்குப் பதிவுக்கு இன்னும் ஒரு வாரமே பாக்கி. தமிழக தேர்தல் களத்தில் அனல் பறக்கிறது. திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கை மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது. குறிப்பாக, விவசாயக் கடன் ரத்து, மின் கட்டணத்தை மாதாந்திர அடிப்படையில் வசூலிப்பது மற்றும் பால் விலை லிட்டருக்கு 7 ரூபாய் குறைக்கப்படும் என்ற அறிவிப்புகள்.தேர்தல் தொடர்பான நடைமுறைகளில் எப்போதும் முந்திக் கொண்டு அறிவிப்புகளை வெளியிட்டு, அதை தன்னம்பிக்கையின் அடையாளமாக முத்திரை குத்திக் கொள்ளும் அதிமுக தலைமை, இம்முறை தேர்தல் அறிக்கை வெளியிட காட்டிய தயக்கமும் கால தாமதமும் ஏதோ பெரிதாக சொல்லப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.ஆனால், பிரத்யேகமான குழு அமைத்து, பல நாள் யோசித்து அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் உருப்படியாக எதுவுமே இல்லை. திமுக அறிக்கையின் நல்ல அம்சங்களை அப்பட்டமாக நகல் எடுத்தவர்கள், செயல்படுத்த முடியாத சில கவர்ச்சி திட்டங்களை சேர்த்து தூண்டில் புழுவாக்க முயற்சித்திருக்கிறார்கள்.சென்னையில் ஓடப்போவதாக அறிவித்த மோனோ ரயிலுக்கு, கடந்த ஐந்து ஆண்டுகளில் டெண்டரை கூட இறுதி செய்ய முடியவில்லை. இந்த நிலையில் சென்னை, திருச்சி, மதுரை, கோவையிலும் மோனோ ரயில் சேவை என்ற அறிவிப்பு நல்ல நகைச்சுவை.100 யூனிட் மின்சாரம் இலவசம், மகளிர் ஸ்கூட்டர் வாங்க 50 சதவீத மானியம்என்ற அறிவிப்பும் இதே ரகம் தான். மின் பயனீட்டு அளவை மாதாந்திர அடிப்படையில் கணக்கிட்டால் கிடைக்கும் பலன் பல மடங்கு அதிகம் என்பதை மக்கள் தெளிவாக உணர்ந்திருக்கிறார்கள். ஆயிரக்கணக்கான கோடிகளை விழுங்கிய விலையில்லா மிக்சி, கிரைண்டர், மின்விசிறிகள் யாருக்கும் பிரயோஜனமில்லாமல் காயலாங்கடைகளை அலங்கரித்துக் கொண்டிருக்கின்றன. இவற்றை கொள்முதல் செய்ததில் கோடி கோடியாய் சுருட்டியிருக்கிறார்கள் என்று வெளியாகியுள்ள தகவல், வயிறெரியச் செய்கிறது. மாநகரப் பேருந்துகளில் மாதாந்திர பயண அட்டை 600 ரூபாய் என்றிருந்ததை 1000 ரூபாயாக அதிகரித்ததில், 5 ஆண்டுகளில் 24,000 ரூபாய் நஷ்டம். பால் விலை லிட்டருக்கு 5 ரூபாய் அதிகரித்ததாக வைத்துக் கொண்டால் கூட பத்தாயிரம் காலி. சென்னையில் இருந்து குடும்பத்தோடு மதுரை, நெல்லை, கோவை என்று ஊருக்கு போய் வந்ததில் சில ஆயிரங்கள். மின் கட்டணத்தை தாறுமாறாக ஏற்றியதால் ஒரு முப்பதாயிரம். இப்படி ஒவ்வொரு குடும்பத்திடம் இருந்தும் குறைந்தபட்சம் ஒரு லட்சம் ரூபாயில் இருந்து 2 லட்சம் ரூபாய் வரை பிடுங்கியிருக்கிறது இந்த அரசு. விண்ணை முட்டும் விலைவாசியில் சேமிப்பு என்ற வார்த்தையே சேதாரமாகி இருக்கிறது. உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு பயணிக்க வேண்டிய அளவுக்கு ஓட்டை உடைசல் பேருந்துகள். குண்டும் குழியுமான சாலைகள். சரியான கழிப்பறை வசதி இல்லை. அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தாமல் பேருந்து நிறுத்தங்களில் இலவச வை-பை வசதி போன்ற வெற்று அறிவிப்புகள், மக்களை ஏமாற்றும் முயற்சி என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

நல்ல நடவடிக்கை

பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனிரோ நகரில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டிக்காக இந்திய அணி தீவிரமாகத் தயாராகி வருகிறது. பல்வேறு பிரிவுகளில் பங்கேற்க கணிசமான வீரர், வீராங்கனைகள் தகுதி பெற்றிருப்பது நம்பிக்கை அளிக்கிறது. இந்திய அணிக்கு இளைஞர்களிடையே ஆதரவை அதிகரிக்கவும், ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் இந்த போட்டி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும் பாலிவுட்
நடிகர் சல்மான் கான் நல்லெண்ணத் தூதராக நியமிக்கப்படுவதாக இந்திய ஒலிம்பிக் சங்கம் அறிவித்தது.இந்த அறிவிப்புக்கு மல்யுத்த வீரர் யோகேஷ்வர் தத், தடகள நட்சத்திரம் மில்கா
சிங் உள்பட விளையாட்டுத் துறை பிரபலங்கள் பலர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஒலிம்பிக் போன்ற மிகப் பெரிய போட்டிக்கு நல்லெண்ணத் தூதரை நியமிக்கும்போது, விளையாட்டில் மகத்தான சாதனையாளர்களாக விளங்குபவர்களை தேர்வு செய்ய வேண்டும் என்பதே அவர்களின் ஆதங்கம். ‘விளையாட்டு வீரர்களின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்படும் திரைப்படங்கள் எங்களிடம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவது இல்லை. மக்களின் மனநிலையில் இருந்து எங்களின் மனநிலை முற்றிலுமாக மாறுபட்டது. ஒரு நடிகருக்கு பதிலாக விளையாட்டு வீரர் ஒருவரை தூதராக தேர்வு செய்திருந்தால் பொருத்தமாக இருந்திருக்கும். உதாரணமாக, ஒலிம்பிக்ஸ் தனிநபர் பிரிவில் இந்தியாவுக்காக முதல் தங்கப் பதக்கம் வென்ற பிந்த்ரா போன்ற வீரரே இதற்கு நூறு சதவீதம் சரியான நபராக இருந்திருப்பார்என்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கேப்டன்

கவுதம் கம்பீர் கருத்து தெரிவித்திருந்தார். பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்ப்பு வலுக்கவே, சல்மான் கானுடன் இணைந்து அபினவ் பிந்த்ராவும் ஒலிம்பிக் நல்லெண்ணத் தூதராக செயல்படுவார் என அறிவித்துள்ள இந்திய ஒலிம்பிக் சங்கம், இந்த வரிசையில் கிரிக்கெட் நட்சத்திரம் சச்சின் டெண்டுல்கர், இசையமைப்பாளர் .ஆர்.ரகுமான் ஆகியோரையும் சேர்க்க முயற்சி மேற்கொண்டுள்ளது. சரியான நேரத்தில் மேற்கொள்ளப்பட்ட, வரவேற்கத்தக்க நல்ல முடிவு. இது போன்ற முக்கியமான நியமனங்களில் முதலிலேயே தீவிரமாக ஆலோசித்து, பல தரப்பு கருத்தையும் அறிந்தபிறகு தகுதியான நபரை தேர்வு செய்தால் தேவையற்ற சர்ச்சைகளை தவிர்க்க முடியும். தூதர்களை நியமிப்பதில் காட்டும் வேகத்தை, சரியான வீரர், வீராங்கனைகளைத் தேர்வு செய்து ஊக்குவிப்பதில் காட்டினால் ஒலிம்பிக் பதக்க வேட்டையில் இந்தியா மற்ற அணிகளுக்கு சவாலாக   விளங்கலாம்.

போற்றிக் கொண்டாடுவோம்

ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க தகுதி பெற்ற முதல் இந்திய ஜிம்னாஸ்டிக் வீராங்கனை என்ற வரலாற்று சாதனையை படைத்திருக்கிறார், திரிபுரா மாநிலம் அகர்தலாவை சேர்ந்த 22 வயது தீபா கர்மார்கர். அது மட்டுமல்ல, 52 ஆண்டுகளுக்குப் பிறகு ஒலிம்பிக் ஜிம்னாஸ்டிக்சில் களமிறங்கப் போகும் முதல் இந்தியர் என்ற பெருமையும் அவருக்கே கிடைத்துள்ளது. பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனிரோ நகரில் நடந்த தகுதிச் சுற்று போட்டியில், மொத்தம் 52.698 புள்ளிகள் பெற்ற தீபா ஒலிம்பிக் வாய்ப்பை உறுதி செய்துள்ளார். மிகக் கடினமான புரோடுனோவா வால்ட் சாகசத்தில் அபாரமாக செயல்பட்ட அவர் 15.066 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து தங்கப் பதக்கம் வென்றது கூடுதல் போனஸ்.ஒலிம்பிக்சில் இதுவரை 11 இந்திய வீரர்கள் மட்டுமே பங்கேற்றுள்ளனர். 1952ல் 2, 1956ல் 3, 1964ல் 6 வீரர்கள்... அவ்வளவு தான். அப்போது தகுதிச் சுற்று போட்டிகள் எல்லாம் கிடையாது. பங்கேற்க விரும்பும் அணிகள், தாங்களாகவே தேர்வு செய்து அனுப்பினால் போதும். கடுமையான போட்டி நிலவும் தற்போதைய சூழலில், தீபா படைத்திருப்பது மகத்தான சாதனை என்பதில் சந்தேகமில்லை.வாழ்த்து மழையில் நனைந்து கொண்டிருக்கிறார் சாதனை வீராங்கனை. ஆறு வயது சிறுமியாக ஜிம்னாஸ்டிக்ஸ் பயிற்சியை தொடங்கியவர், இரண்டு முறை தேசிய விளையாட்டுப் போட்டியில் 5 தங்கப் பதக்கங்களை வென்று சாதனை படைத்திருக்கிறார். 2014ம் ஆண்டு நடந்த கிளாஸ்கோ காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் வெண்கலப் பதக்கம். கடந்த ஆண்டு நவம்பரில், உலக ஜிம்னாஸ்டிக்ஸ் சாம்பியன்ஷிப் பைனலுக்கு முன்னேறிய முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையும் இவருக்கே சொந்தம். அந்த போட்டியில் 5வது இடம் பிடித்து நூலிழையில் பதக்க வாய்ப்பை நழுவவிட்டார். அதில் பதக்கம் வென்றிருந்தால், அப்போதே ரியோ ஒலிம்பிக்சுக்கு தகுதி பெற்றிருக்கலாம்.இந்திய ஜிம்னாஸ்டிக்ஸ் சங்கத்தில் நிலவும் நிர்வாகக் குளறுபடிகள் காரணமாக பயிற்சியில் சற்று பின்னடைவு ஏற்பட்டிருந்தாலும், அதை பொருட்படுத்தாமல் லட்சிய வெறியுடன் தகுதிச் சுற்றில் அசத்தியுள்ள தீபா தனது அடுத்த இலக்கு ஒலிம்பிக் பதக்கமே என்பதில் உறுதியாக இருக்கிறார். மத்திய அரசின் ஒலிம்பிக் பதக்க வேட்டை திட்டத்தின் கீழ் ரூ.30 லட்சம் நிதியுதவிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. ரியோ ஒலிம்பிக்சுக்கு குறைந்த அவகாசமே இருந்தாலும், தீவிரமாக பயிற்சி செய்து இலக்கை எட்டுவார் என நம்பலாம்.

தோல்வியால் துவள வேண்டாம்

உலக கோப்பை டி20ல் இந்திய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறாதது, ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சொந்த மண்ணில் நடக்கும் தொடர் என்பதால் டோனி தலைமையிலான அணி மீது அதிக எதிர்பார்ப்பு இருந்ததில் ஆச்சரியமில்லை. ஆஸ்திரேலியாவில் நடந்த 20 ஓவர் போட்டி தொடரில் 3-0 என்ற கணக்கில் அபாரமாக வென்ற போதே, உலக கோப்பை இந்தியாவுக்கு தான் என்பதே பலரது கணிப்பாக இருந்தது. அதைத் தொடர்ந்து இலங்கை அணிக்கு எதிரான தொடரில் வென்றதும், ஆசிய கோப்பையை கைப்பற்றியதும் நம்பிக்கையை அதிகரித்தது. அதற்கேற்ப, இளம் வீரர் விராத் கோஹ்லியின் சிறப்பான ரன் குவிப்பு இந்திய அணிக்கு அசுர பலத்தை அளித்தது. வங்கதேசத்திடம் சற்று தடுமாறினாலும், பாகிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு எதிராகப் பெற்ற அபார வெற்றிகள் நியூசிலாந்து அணியிடம் அடைந்த ஆரம்ப அதிர்ச்சியை அடியோடு மறக்க செய்தன. மும்பை வாங்கடே மைதானத்தில் நடந்த அரை இறுதியில், கோஹ்லியின் அதிரடி ஆட்டத்தால் இந்தியா 192 ரன் குவித்தபோது வெற்றி நிச்சயம் என்றே தோன்றியது. வெஸ்ட் இண்டீசின் அதிரடி வீரர் கிறிஸ் கேல் சொற்ப ரன்னில் வெளியேறியதும், நமது அணி பைனலுக்கு முன்னெறிவிட்டதாகவே முடிவு செய்து ரசிகர்கள் ஆனந்தக் கூத்தாடினர். ஆனால், வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் சிம்மன்ஸ், ரஸ்ஸல் இருவரும் அதிரடியாக விளையாடி நம்ப முடியாத வகையில் வெற்றியை பறித்துவிட்டனர். டாசில் தோற்றது, இரவு நேரப் பனி காரணமாக இந்திய ஸ்பின்னர்களின் பந்துவீச்சு எடுபடாதது, சிம்மன்ஸ் மூன்று முறை ஆட்டமிழக்கும் அபாயத்தில் இருந்து அதிர்ஷ்டவசமாக தப்பிப் பிழைத்தது... என இந்திய அணியின் தோல்விக்கு காரணங்களை அடுக்கிக் கொண்டே போகிறார்கள். அரை இறுதி வரை முன்னேறியும், 2வது முறையாக சாம்பியன் பட்டம் வெல்லும் வாய்ப்பு பறிபோனதில் பெருத்த ஏமாற்றமே. எனினும், இதை கவுரவமான தோல்வி என்றே சொல்ல வேண்டும். 193 ரன் என்பது அத்தனை எளிதான இலக்கு அல்ல. இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் டி20 போட்டியில் விளையாடிய அனுபவம், வெஸ்ட் இண்டீஸ் வீரர்களுக்கு சாதகமாக அமைந்துவிட்டது. இந்த தோல்விக்காக அணியில் அதிரடி மாற்றங்களை செய்யத் தேவையில்லை என்றாலும், தவறுகளை திருத்திக் கொண்டு ஆட்டத் திறனை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துவது அவசியம். அணியின் இயக்குனர்/பயிற்சியாளர் ரவி சாஸ்திரியின் ஒப்பந்தம் முடிவுக்கு வருவதால், புதிய பயிற்சியாளராக ராகுல் டிராவிட் பொறுப்பேற்கும் வாய்ப்பும் உள்ளது. நம்பிக்கையுடன் விளையாடினால், இந்தியா நம்பர் 1 அணியாக தொடர்ந்து நீடிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

வீராங்கனைகளுக்கும் பங்கு

இண்டியன் வெல்ஸ் ஓபன்... அமெரிக்காவில் நடக்கும் பிரபல டென்னிஸ் போட்டி. இந்த தொடரின் இயக்குனரும் தலைமை செயலதிகாரியுமான ரேமண்ட் மூர், டென்னிஸ் வீராங்கனைகளுக்கு எதிராக சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்து கடும் கண்டனத்துக்கு ஆளாகி இருக்கிறார். ஆண்கள் பிரிவில் இருக்கும் அளவுக்கு மகளிர் டென்னிஸில் போட்டி அத்தனை கடுமையாக இல்லை. அப்படி இருந்தும் பெயர், புகழ், பணம் என எல்லாவற்றையும் எளிதாகப் பெற்றுவிடுகிறார்கள். வீராங்கனைகளால் டென்னிசுக்கு எந்த பிரயோஜனமும் இல்லை என்பதே ரேமண்ட் மூரின் கண்டுபிடிப்பு!கையில் மைக் கிடைத்த உற்சாகத்தில், ‘வீராங்கனைகள் அதிர்ஷ்டசாலிகள். அவர்கள் எந்த முடிவையும் எடுக்கத் தேவையில்லை, எந்த பொறுப்பும் இல்லை. வீரர்களின் தோள்களில் சவாரி செய்கிறார்கள். ஆண்கள் பிரிவு ஆட்டங்களால் தான் டென்னிஸ் தொடர்ந்து வளர்ச்சி அடைந்து வருகிறது. நான் ஒரு வீராங்கனையாக இருந்தால் பெடரர், நடால் போன்ற மகத்தான வீரர்களை படைத்ததற்காக தினந்தோறும் மண்டியிட்டு தொழுது கடவுளுக்கு நன்றி செலுத்துவேன்’ என்று தத்துவ முத்துக்களை உதிர்த்தார்.அவரது இந்த கருத்துக்கு செரீனா வில்லியம்ஸ், மார்டினா நவ்ரத்திலோவா உள்பட வீராங்கனைகள் பலரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ‘எங்களுக்கும் ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். களத்தில் நாங்களும் கடுமையாகவே உழைக்கிறோம். எந்த வீரருக்காகவும் மண்டியிட்டு நன்றி தெரிவிக்க வேண்டிய அவசியம் இல்லை’ என்று செரீனா காட்டமாக பதிலடி கொடுத்தார். ‘மூர் உளறிக் கொட்டுகிறார். அவரை அடக்கி வைக்காவிட்டால் இண்டியன் வெல்ஸ் போட்டியை வீராங்கனைகள் புறக்கணிப்பார்கள்’ என்று மிரட்டினார் முன்னாள் பிரபலம் நவ்ரத்திலோவா.சர்ச்சை வலுக்கவே, தனது பதவியை ராஜினாமா செய்து ஓரங்கட்டிக் கொண்டார் மூர். பிரச்னை இத்தோடு முடியவில்லை. ‘மூரின் கருத்து தவறானது என்றாலும், ஆண்கள் மற்றும் மகளிர் பிரிவு சாம்பியன்களுக்கு சம அளவு பரிசுத் தொகை வழங்குவது சரியல்ல. வீரர்கள் மோதும் ஆட்டங்களையே ரசிகர்கள் அதிக அளவில் பார்க்கிறார்கள். எனவே, எங்களுக்கு தான் அதிக பரிசுத் தொகை கொடுக்க வேண்டும்’ என்று இண்டியன் வெல்ஸ் ஓபனில் 5வது முறையாக சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்த நம்பர் 1 வீரர் நோவாக் ஜோகோவிச் கூறியதும் சர்ச்சையை கிளப்பியது.ஆண்கள் மற்றும் மகளிர் பிரிவு போட்டிகள் சேர்த்து நடத்தப்படும் தொடர்களில் இரு பிரிவு சாம்பியன்களுக்கும் சம அளவு பரிசுத் தொகை அளிப்பது என்பது ஏற்கனவே நன்கு ஆலோசித்து எடுக்கப்பட்ட முடிவு. அதில் மாற்றம் செய்வது என்ற பேச்சுக்கே இடமில்லை... என்று பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது டென்னிஸ் சங்கம். டென்னிஸ் விளையாட்டின் வளர்ச்சியில் நவ்ரத்திலோவா, கிறிஸ் எவர்ட், ஸ்டெபி கிராப், செரீனா போன்ற வீராங்கனைகளின் பங்களிப்பை யாராலும் மறுக்க முடியாது. ரேமண்ட் மூர் போன்றவர்களின் விமர்சனங்களை பொருட்படுத்த வேண்டியதில்லை.

சுவாரசியமான ஆட்டம்

உலக கோப்பை டி20 தொடர் எதிர்பார்த்ததை விடவும் சுவாரசியமாகவே தொடங்கி இருக்கிறது. கோப்பையை வெல்ல அதிக வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்ட இந்திய அணி, முதல் லீக் ஆட்டத்தில் நியூசிலாந்திடம் மண்ணைக் கவ்வியதை யாரும் எதிர்பார்த்திருக்க முடியாது. ஆடுகளத்தின் தன்மைக்கு ஏற்ப வலுவான சுழல் கூட்டணியை அமைத்த நியூசிலாந்து அணியின் வியூகமும், அடுத்தடுத்து சில விக்கெட்டுகள் சரிந்ததால் ஏற்பட்ட நெருக்கடியும் இந்திய பேட்ஸ்மேன்களை சரணடைய வைத்துவிட்டன. இருபது ஓவர் போட்டிகளில் நியூசிலாந்தை வென்றதில்லை என்ற மோசமான வரலாற்றை நமது வீரர்களால் மாற்றி எழுத முடியாததில் ரசிகர்களுக்கு தான் பெருத்த ஏமாற்றம்.இங்கிலாந்து அணிக்கு எதிராக வெஸ்ட் இண்டீசின் கிறிஸ் கேல் விளாசிய சதம் சரியான விருந்து. டி20 உலக கோப்பையில் அதிவேக சதம், 2 சதம் அடித்த முதல் வீரர், அதிக சிக்சர்கள் விளாசிய வீரர்கள் பட்டியலில் முதலிடம் என்று பல சாதனைகள் அவரது வசமாகி உள்ளன. ஐபிஎல் தொடரில் விளையாடிய அனுபவமும் அவருக்கு கை கொடுக்கிறது. இந்திய ஆடுகளங்களின் தன்மையை நன்றாக அறிந்தவர் என்பதால், இவரது அதிரடியை கட்டுப்படுத்துவது எந்த அணிக்கும் மிகப் பெரிய சவால் தான்.தென் ஆப்ரிக்கா நிர்ணயித்த 230 ரன் கடின இலக்கை இங்கிலாந்து விரட்டிப் பிடித்த சாகசமும் ரசிகர்களை அதிசயிக்க வைத்தது. வெற்றிகரமான சேசிங், ஒரே போட்டியில் 459 ரன் குவிப்பு என்று சாதனைகளின் அணிவகுப்புக்கு பஞ்சமே இல்லை. இவையெல்லாவற்றையும் விட, கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இந்தியா - பாகிஸ்தான் மோதிய ஆட்டத்துக்கு தான் மிகப் பெரிய எதிர்பார்ப்பு. உலக கோப்பையில் பாகிஸ்தானிடம் தோற்றதே இல்லை என்ற புள்ளி விவரம் இந்திய அணிக்கு உற்சாகம் அளிக்க, கொல்கத்தா மைதானத்தில் இந்தியாவுக்கு எதிராக விளையாடிய நிர்ணயிக்கப்பட்ட ஓவர் போட்டிகள் அனைத்திலும் வெற்றி என்ற புள்ளி விவரம் பாகிஸ்தான் தரப்புக்கு உத்வேகமாக அமைந்தது. போட்டியின் முடிவு எப்படி இருந்தாலும், கிரிக்கெட் விளையாட்டின் மீதான ஆர்வத்தையும் ஈடுபாட்டையும் அதிகரிக்க இது போன்ற மோதல்கள் அவசியம். வெற்றி, தோல்வி என்பதையும் தாண்டி, திறமை வெளிப்பாட்டின் உச்சம் தரும் அந்த சுவாரசியத்துக்கு ஈடு இணை இல்லை. உலக கோப்பையில் எஞ்சியுள்ள ஆட்டங்கள் இதை விடவும் சூடான, சுவையான விருந்தாக அமையட்டும்.

யாரிடம் தவறு?

ஊக்கமருந்து சோதனையில் சிக்கிய நட்சத்திர வீராங்கனை மரியா ஷரபோவா சமீபத்தில் சஸ்பெண்ட் செய்யப்பட்டது டென்னிஸ் அரங்கையே அதிரவைத்தது. கடந்த ஜனவரியில் நடந்த ஆஸ்திரேலிய ஓபன் போட்டியின்போது நடத்தப்பட்ட பரிசோதனையில், தடைசெய்யப்பட்ட மெல்டோனியம் என்ற மருந்தை அவர் உட்கொண்டது உறுதி செய்யப்பட்டது. அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் செய்தியாளர்களை சந்தித்த ஷரபோவா, இதை ஒப்புக் கொண்டதுடன் நடந்த தவறுக்கு முழு பொறுப்பேற்பதாகவும் தெரிவித்தார். ஒரு வாரத்துக்கு இடைக்கால தடை விதித்த சர்வதேச டென்னிஸ் கூட்டமைப்பு, அவருக்கான முழு தண்டனை விவரத்தை விரைவில் அறிவிக்க உள்ளது. இதயக் கோளாறு, மனச் சோர்வு உள்ளிட்ட பல நோய் அறிகுறிகளுக்கு மருந்தாக மெல்டோனியம் உபயோகிக்கப்படுகிறது. அடிக்கடி உடல்நலக் குறைவு ஏற்பட்டது, ஈசிஜி பரிசோதனையில் இதயக் கோளாறு இருக்க வாய்ப்புள்ளதாக தெரிந்தது, பெற்றோருக்கு நீரிழிவு நோய் இருப்பது உள்பட பல்வேறு காரணங்களுக்காக டாக்டர்களின் பரிந்துரையுடன் இந்த மருந்தை கடந்த பத்து ஆண்டுகளாக உட்கொண்டு வருவதாக ஷரபோவா தெரிவித்துள்ளார். தடை செய்யப்பட்ட ஊக்கமருந்துகள் பட்டியலில் இந்த ஆண்டுதான் மெல்டோனியம் சேர்க்கப்பட்டுள்ளது. இது குறித்து உலக ஊக்கமருந்து தடுப்புக் கழகம் அனுப்பிய மின்னஞ்சல் தகவலை தான் முழுவதுமாகப் படிக்கத் தவறியதே தவறுக்கு முக்கிய காரணம் என்று அவர் தற்போது விளக்கமளித்துள்ளார்.‘எனது ஒப்புதல் வாக்குமூலத்தை ஊடகங்கள் ஊதிப் பெரிதாக்கியதுடன் தவறான தகவல்களை வெளியிட்டு வருகின்றன. எனக்கு ஐந்து முறை எச்சரிக்கை விடுக்கப்பட்டதாக வெளியான செய்தியில் துளி கூட உண்மையில்லை. வீரர், வீராங்கனைகளுக்கு பொதுவாக அனுப்பப்பட்ட அறிவுறுத்தல் கடிதம் எளிதில் படிக்கக் கூடியதாக இருக்கவில்லை.அந்த மின்னஞ்சலை படிக்க பிரத்யேகமான இணையதள இணைப்பு, பயனீட்டாளர் பெயர், கடவுச்சொல், அதிலிருந்து பல்வேறு பக்கங்களுக்கு சென்று குறிப்பிட்ட இணைப்பை கிளிக் செய்து... புரிந்துகொள்ளக் கடினமான மருத்துவ/ தொழில்நுட்ப தகவல்களை முழுவதுமாகப் படித்தால் மட்டுமே விதிமுறைகளில் செய்யப்பட்ட மாற்றங்கள் பற்றி ஓரளவாவது தெரிந்துகொள்ள முடியும். சோம்பல் காரணமாக அந்த மெயிலை அலட்சியப்படுத்தியது இவ்வளவு பெரிய சிக்கலில் முடியும் என்று கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. அதற்காக பொறுப்பை தட்டிக் கழிக்க மாட்டேன். என்ன தண்டனை என்றாலும் ஏற்றுக் கொள்வேன். ஆனால், எனது ரசிகர்களை ஏமாற்ற விரும்பவில்லை. மீண்டும் டென்னிஸ் களத்தில் இறங்க அனுமதிப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது’ என்கிறார் ஷரபோவா. 500 கோடி ரூபாய் மதிப்பிலான விளம்பர ஒப்பந்தங்களுக்கு பாதிப்பு வரும் என்பதாலேயே, தவறு செய்யாதது போல நடிக்கிறார் என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்படுகிறது. தடை செய்யப்பட்ட மருந்துகள் பட்டியலில் புதிதாக சில மருந்துகளை சேர்க்கும்போது, வீரர், வீராங்கனைகள் அதுபற்றி தெளிவாகத் தெரிந்துகொண்டு அவற்றை தவிர்ப்பதற்கு போதிய கால அவகாசம் வழங்கப்பட வேண்டும். இந்த விஷயத்தில் அத்தகைய நடைமுறை கடைப்பிடிக்கப்படவில்லை என்பதும் சிலரது வாதமாக உள்ளது. மருத்துவர்கள், பயிற்சியாளர்கள் தரப்பில் இருந்து அளிக்கப்படும் விளக்கமும் முக்கியம். விரிவான விசாரணையில் வெளிச்சம் பிறக்கும் என எதிர்பார்க்கலாம்.

அமைச்சரின் ‘விளையாட்டு’

விளையாட்டு விடுதி மாணவிகளிடம் சம்பந்தப்பட்ட துறையின் அமைச்சரே படு கேவலமாக நடந்துகொண்டுள்ளது தமிழக அரசுக்கே தலைக்குனிவை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்ட விளையாட்டு விடுதியில் இரவு நேரத்தில் ஆய்வு நடத்த சென்ற அமைச்சர் சுந்தர்ராஜன், அங்கிருந்த மாணவிகளிடம் அநாகரீகமான கேள்விகளைக் கேட்டு சங்கடப்படுத்தியதுடன் தொட்டுப் பேசி அத்துமீறியிருப்பதை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது.இரவு நேரத்தில் ஆய்வு செய்ய சென்றதே தவறு எனும்போது, விடுதிக் காப்பாளரோ பெண் அதிகாரிகளோ உடன் வராத நிலையில் மாணவிகளிடம் அருவருக்கத்தக்க வகையில் நடந்து கொண்டிருக்கிறார் அமைச்சர். ஒரு மாணவியிடம் உன்னிடம் எத்தனை சட்டை உள்ளது என்று கேட்டபடி, இடுப்பைத் தொட்டு மேலாடையை இழுக்கிறார். மற்றொரு மாணவி உடல் பருமனாக இருப்பதை சுட்டிக் காட்டி உன்னை பார்த்தால் ஹாக்கி விளையாடுவது போல தெரியவில்லையே என்று கிண்டல் செய்வதுடன், நீ குண்டாகி இருப்பது உன் தாய்க்கு தெரியுமா? என்கிறார். அந்த மாணவி என் தந்தைக்கு தான் தெரியும் என்று சொல்ல, உன் அம்மா அப்பாவோடு சேர்ந்து வாழவில்லையா? என்று வாய்கூசாமல் கேட்பதுடன், இன்னொரு மாணவி அப்பா இறந்துவிட்டதாகக் கூற... ஓடிப்போய் விட்டாரா? என்று கொச்சைப்படுத்தும் விதமாக கேலி செய்கிறார்.அவரது வக்கிரமான கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் அப்பாவி மானவிகள் அவமானத்தில் தலை கவிழ்கின்றனர். ஒரு நாளைக்கு சாப்பாட்டுக்காக 250 ரூபாய் கொடுக்கிறோம். ஒரு மெடல் கூட வாங்க வக்கில்லை... உங்களுக்கெல்லாம் சோறு போட்டு ஹாஸ்டலில் தங்கவைத்து 900 ரூபாய்க்கு ஷூ வாங்கிக் கொடுப்பதில்  என்ன பிரயோஜனம்... என்று அந்தப் பிஞ்சு மனங்களை தன் கொடூரமான வார்த்தைகளால் குத்திக் கிழித்திருக்கிறார் அமைச்சர் சுந்தர்ராஜ். ஏற்கனவே, பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை விளையாட்டில் ஈடுபடுத்துவது வெகுவாகக் குறைந்து வருகிறது. அதிலும் பெண் குழந்தைகள் என்று வரும்போது, அது மிக அரிதான விஷயமாகிவிடுகிறது. எத்தனையோ தடைகளைத் தாண்டி விளையாட்டுப் பள்ளி விடுதிகளில் சேர்ந்து படிக்கும், பயிற்சி பெறும் வீராங்கனைகளை ஊக்கப்படுத்த வேண்டிய அமைச்சரே இத்தனை கீழ்த்தரமாக நடந்து கொண்டிருப்பது வேதனையளிக்கிறது.சமூக வளைத்தளங்களின் தயவில் இந்த அத்துமீறல் வீடியோ வைரலாகப் பரவி வரும் நிலையில், சம்பந்தப்பட்ட அமைச்சர் பதவியில் நீடிப்பது தமிழகத்துக்கே தலைக் குனிவு தான்.