செவ்வாய், 25 அக்டோபர், 2016

நல்ல மாற்றம்

நியூசிலாந்துக்கு எதிராக மொகாலியில் நடந்த 3வது ஒருநாள் போட்டியில், இந்திய அணி கேப்டன் டோனி 4வது வீரராகக் களமிறங்கி ஆச்சரியப்படுத்தினார். தொடக்க காலத்தில், ஒரு சில போட்டிகளில் முன் வரிசையில் இறங்கி தனது அதிரடி ஆட்டத்தால் சலசலப்பை ஏற்படுத்தியவர், அதன் பிறகு பின் வரிசையில் விளையாடுவதை வழக்கமாக்கிக் கொண்டார்.


பரபரப்பான கடைசி கட்டத்தில் கொஞ்சமும் பதற்றம் அடையாமல், சூழ்நிலைக்கேற்ப மிக சாதுர்யமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றியை வசப்படுத்துவதில் தனி முத்திரையும் பதித்தார்.பார்மில் இல்லாதபோது ஏற்படும் தடுமாற்றத்துக்கு டோனி மட்டும் விதிவிலக்கா என்ன?


தொடர்ச்சியாக போட்டிகளில் விளையாடி வருவதால் ஏற்படும் சோர்வும் சேர்ந்து கொண்டதால், சமீபத்திய போட்டிகளில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்க முடியாமல் விமர்சனங்களை எதிர்கொள்ள நேரிட்டது. குறிப்பாக, போட்டியை வெற்றிகரமாக முடிப்பதில் வல்லவர் என்ற தனித்திறன் கேள்விக்குறியானது. டெஸ்ட் போட்டிகளில் கேப்டனாக பொறுப்பேற்ற இளம் வீரர் விராத் கோஹ்லி, வெற்றிகளைக் குவித்து வருவதுடன் தரவரிசையில் இந்திய அணியை மீண்டும் முதலிடத்துக்கு முன்னேற வைத்துள்ளதால் கூடுதல் நெருக்கடி.


இப்படி ஒரு இக்கட்டான நிலையில் தான், மொகாலி போட்டியில் யாரும் எதிர்பாராத வகையில் 4வது வீரராக வந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருக்கிறார். துணை கேப்டன் கோஹ்லியுடன் இணைந்து அவர் 151 ரன் சேர்த்ததே வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது. ஒருநாள் போட்டிகளில் 9,000 ரன் என்ற சாதனை மைல்கல்லை எட்டியது, அதிக சிக்சர்கள் அடித்த இந்திய வீரர்கள் பட்டியலில் சச்சினை முந்தியது என பல சிறப்பான விஷயங்களும் டோனிக்கு பெருமை சேர்த்தன.


‘நீண்ட காலமாக பின் வரிசையில் விளையாடிவிட்டேன். இதனால் ஆட்டத்தின் போக்கை பற்றி கவலைப்படாமல் சுதந்திரமாக விளையாடுவது சிரமமாகிவிட்டது. எனவே தான் ஆட்டத்தை முடிக்கும் பொறுப்பை மற்றவர்களிடம் விட்டுவிட முடிவு செய்தேன். கோஹ்லியுடன் இணைந்து பேட் செய்ததும் பல வகையில் உதவியாக இருந்தது. அணியின் வெற்றிக்காக அவர் முழு அர்ப்பணிப்புடன் விளையாடுகிறார்’ என்று மனம் திறந்துள்ளார் டோனி.


கோஹ்லியின் ஆட்டமும் போட்டிக்கு போட்டி மெருகேறிக் கொண்டே வருகிறது. அடுத்த சாதனை நாயகனாக உருவாகி வருகிறார். கேப்டன், துணை கேப்டன் இருவரும் நல்ல புரிதலுடன் ஒருங்கிணைந்து செயல்படுவது அணியின் நலனுக்கு மிகவும் முக்கியம். தங்களுக்குள் எந்தவிதமான கருத்து மோதலும் இல்லை என்பதை சிறப்பான ஆட்டத்தின் மூலம் இவர்கள் வெளிப்படுத்தி இருப்பது பாராட்டுக்குரியது.

மாற்றம் வருமா?

நடுவரின் முடிவை மறுபரிசீலனை செய்யக் கோரும் டிஆர்எஸ்.. என்ற பெயரைக் கேட்டாலே இந்திய அணிக்கு ஒவ்வாமையில் காது சிவந்து விடும்! அத்தனை அணிகளும் இந்த முறையை அரவணைக்கத் தயாராக இருக்கும்போது, இந்திய கிரிக்கெட் வாரியமும் அணியும் மட்டும் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருவது புரியாத புதிர் தான்.

கடைசியாக 2008ல் இலங்கை சுற்றுப்பயணம் சென்றபோது மட்டும் பச்சைக் கொடி காட்டி இருந்தார்கள். அதன் பிறகு இந்தியா விளையாடிய இருதரப்பு தொடர்களில் டிஆர்எஸ் தலை காட்டியதே இல்லை. கேப்டன் டோனிக்கு இதில் சுத்தமாக நம்பிக்கை இல்லை என்பதே முட்டுக்கட்டைக்கு முக்கிய காரணம்.

டெஸ்ட் போட்டிகளில் இருந்து அவர் ஓய்வு பெற்றுவிட்ட நிலையில், இளம் வீரர் விராத் கோஹ்லி தலைமையில் இந்திய அணி புதிய எழுச்சியுடன் வெற்றிப் பயணத்தை தொடங்கி இருக்கிறது. தரவரிசையில் மீண்டும் முதலிடத்துக்கு முன்னேறி உள்ளதும் அணி மீதான நம்பிக்கையை. எதிர்பார்ப்பை அதிகரித்திருக்கிறது.டிஆர்எஸ் பற்றிய கருத்திலும் மாற்றம் தெரிகிறது.


‘பந்து பயணிக்கும் வேகம், திசை, போக்கை கணிக்க உதவும் ‘ஹாவ்க் ஐ’ தொழில்நுட்பத்தை இன்னும் முழுமையாக நம்ப முடியவில்லை. எங்களுக்கு சில சந்தேகங்கள் இருந்தாலும், அவற்றை தெளிவுபடுத்திக் கொள்வதற்காக பேசத் தயாராக இருக்கிறோம்’ என்று கோஹ்லி சமீபத்தில் தெரிவித்திருக்கிறார். புதிய பயிற்சியாளர் அனில் கும்ப்ளே கூட இதற்கு ஆதரவாக இருப்பதாகவே தெரிகிறது.


நியூசிலாந்து அணியுடன் நடந்து வரும் ஒருநாள் போட்டித் தொடர் முடிந்ததும், இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இந்த தொடரில் டிஆர்எஸ் முறையை கடைப்பிடிக்க வேண்டும் என்று வலியுறுத்துவதற்காக சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் பொது மேலாளர் ஜெப் அலர்டைஸ் இந்தியா வருவதாகவும் தகவல்.

லோதா கமிட்டி பரிந்துரைத்துள்ள சீர்திருத்தங்களை அமல் செய்வது தொடர்பாக சட்ட சிக்கலை எதிர்கொண்டுள்ள பிசிசிஐ, எந்த அளவுக்கு இதில் அக்கறை காட்டும் என்பது கேள்விக்குறி தான். நடுவரின் தவறான கணிப்பால் சம்பந்தப்பட்ட வீரருக்கு தனிப்பட்ட பாதிப்பு என்பதை விட, ஒரு அணியின் வெற்றி வாய்ப்பே பறிபோகும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். தவறை உடனடியாக திருத்திக் கொள்வதற்கான வாய்ப்பை வழங்கும் டிஆர்எஸ் முறையை வரவேற்பதே சரியான முடிவாக இருக்கும்.  

மோதல் போக்கு

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் நிர்வாகத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய சீர்திருத்தங்கள் குறித்து, லோதா கமிட்டி செய்த பரிந்துரைகளை பிசிசிஐ நிராகரித்தது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.

ஐபிஎல் தொடரில் எழுந்த சூதாட்ட சர்ச்சை குறித்து விசாரணை நடத்திய ஓய்வு பெற்ற முன்னாள் நீதிபதி ஆர்.எம்.லோதா தலைமையிலான குழு, கிரிக்கெட் வாரிய நிர்வாகத்தில் உள்ள சீர்கேடுகளை சுட்டிக் காட்டி கடும் கண்டனம் தெரிவித்ததுடன் பல்வேறு சீர்திருத்தங்களை பரிந்துரைத்தது.


கிரிக்கெட் சங்கங்கள் சார்பில் ஒரு மாநிலத்துக்கு ஒரு ஓட்டு மட்டுமே அனுமதி, 70 வயதுக்கு மேற்பட்டவர்கள் நிர்வாகிகளாக நீடிக்கக் கூடாது, அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் பிசிசிஐ நிர்வாகத்தில் இடம் பெறத் தடை, ஆதாயம் தரும் இரட்டைப் பதவி வகிக்கக் கூடாது உள்பட பல்வேறு பரிந்துரைகள் அதில் இடம் பெற்றிருந்தன.

உச்ச நீதிமன்றத்தில் லோதா கமிட்டி சமர்ப்பித்த இந்த பரிந்துரைகளை அமல் செய்யாமல் கிரிக்கெட் வாரியம் இழுத்தடித்து வருகிறது. சர்வாதிகாரமாக நடந்து கொள்ள முயற்சிக்காதீர்கள் என்று உச்ச நீதிமன்றம் கடுமையாக எச்சரித்த நிலையில், சிறப்பு பொதுக் குழுவை கூட்டி ஆலோசித்த பிசிசிஐ ஒரு சில பரிந்துரைகள் தவிர்த்து மற்றவற்றை ஏற்க முடியாது என்று ஒருமனதாக முடிவு செய்துள்ளது.

லோதா கமிட்டி பரிந்துரைகளை அமல்படுத்தினால் கிரிக்கெட் வாரியத்தின் அஸ்திவாரமே ஆட்டம் கண்டுவிடும் என்று உறுப்பினர்கள் அச்சம் தெரிவித்திருக்கிறார்கள். ‘ஐபிஎல் தொடருக்கான அட்டவணையில் மாற்றம் செய்தால் நூறு கோடி ரூபாய் இழப்பு ஏற்படும். இந்த தொடரில் இருந்து கிடைக்கும் வருமானத்தில் தான் முன்னாள் வீரர்களுக்கு உதவித் தொகை வழங்கி வருகிறோம். இதையெல்லாம் லோதா கமிட்டி கருத்தில் கொள்ளவில்லை’ என்கிறார் பிசிசிஐ தலைவர் அனுராக் தாக்கூர்.


சில பரிந்துரைகள் மிகக் கடுமையானவை என்று முன்னாள் கேப்டன்கள் சுனில் கவாஸ்கர், கபில் தேவ் ஆகியோரும் கருத்து தெரிவித்துள்ளனர். நிர்வாகத்தில் பல்வேறு குளறுபடிகள் இருப்பதை உறுதி செய்த பிறகே, சீர்திருத்த நடவடிக்கைகளை லோதா கமிட்டி பரிந்துரைத்துள்ளது. ஒட்டுமொத்தமாக அவற்றை நிராகரிப்பது கிரிக்கெட் வாரியத்தின் நம்பகத்தன்மையை கேள்விக்குறியாக்கி விடும்.

செயல்பாடுகளில் வெளிப்படைத் தன்மை வேண்டும் என்று எதிர்பார்ப்பதை எப்படி குறை கூற முடியும். நியாயமான சீர்திருத்த நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு கொடுக்காமல் மோதல் போக்குடன் நடந்து கொள்வது சரியல்ல. உச்ச நீதிமன்றம் கடுமையான உத்தரவுகளை பிறப்பித்தால், கிரிக்கெட் வாரியம் இதை விட தர்மசங்கடமான நிலைக்கு தள்ளப்படுவது நிச்சயம். 

இது அழகல்ல

ஒருநாள் போட்டிகளில் இருந்து சச்சின் ஓய்வு பெற்றிருக்காவிட்டால், அணியில் இருந்து அவரை அதிரடியாக நீக்கியிருப்போம் என்று தேர்வுக் குழு முன்னாள் தலைவர் சந்தீப் பட்டீல் கூறியது சர்ச்சையை கிளப்பி உள்ளது.ஈடு இணையற்ற சாதனை வீரரான சச்சின் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றபோது, நெருக்கடி காரணமாகவே அந்த முடிவுக்கு தள்ளப்பட்டாரோ என்ற கேள்வி எழுவதை தவிர்க்க முடியவில்லை.

‘சச்சினை சந்தித்து அவரது எதிர்கால திட்டம் குறித்து பேசினேன். ஓய்வு பெறும் எண்ணமில்லை என்றே தெரிவித்தார். ஆனால், தேர்வுக் குழுவில் இது பற்றி தீவிரமாக ஆலோசித்தோம். எங்கள் முடிவை கிரிக்கெட் வாரியத்துக்கும் தெரியப்படுத்தினோம். அதன் பிறகே சச்சின் தனது ஓய்வு அறிவிப்பை வெளியிட்டார். ஒரு வேளை அவர் ஓய்வு பெறும் முடிவை எடுத்திருக்காவிட்டால் அணியில் இருந்து கட்டாயமாக நீக்கியிருப்போம்’ என்று பேட்டி கொடுத்திருக்கிறார் பட்டீல்.

டோனியை கேப்டன் பதவியில் இருந்து நீக்குவது பற்றியும் பல சமயங்களில் ஆலோசித்தோம். 2011ல் உலக கோப்பையை வென்றவர் என்பதாலேயே அவர் கேப்டனாக நீடிக்க அனுமதித்தோம். டெஸ்ட் போட்டிகளில் இருந்து அவர் திடீரென ஓய்வு பெற்றது எங்களுக்கு மிகப் பெரிய அதிர்ச்சியாக இருந்தது என்றும் தெரிவித்திருக்கிறார்.பதவிக் காலம் முடிந்து வீட்டுக்குப் போகும் சமயத்தில் இப்படி பரபரப்பாகப் பேசி மலிவான சுயவிளம்பரம் தேடிக் கொள்ள முயற்சிக்கிறார் சந்தீப் என்று சக தேர்வுக்கு குழு உறுப்பினர் ஒருவர் காட்டமாக பதிலடி கொடுத்திருக்கிறார்.


தேர்வுக் குழுவில் விவாதிக்கப்படும் எதிர்மறையான விஷயங்கள் குறித்து வெளிப்படையாக தெரிவிப்பது சரியல்ல. சம்பந்தப்பட்ட வீரர்களுக்கு அது தர்மசங்கடத்தை ஏற்படுத்துவதுடன், மனதளவில் அவர்கள் பாதிக்கப்படவும் வாய்ப்பு உள்ளதால் ஆலோசனை விவரங்களில் ரகசியம் காப்பது மரபு. அதை பட்டீல் அப்பட்டமாக மீறியிருக்கிறார் என்ற விமர்சனம் எழுந்துள்ளது.


இந்திய கிரிக்கெட்டுக்கு சச்சின், டோனி போன்றவர்களின் பங்களிப்பு மகத்தானது. அவர்களைக் களங்கப்படுத்தும் வகையில் பேசுவது எந்த வகையிலும் ஏற்புக்குரியதல்ல. உண்மையிலேயே துணிவுள்ளவராக இருந்தால், சச்சினிடமே தேர்வுக் குழுவினரின் முடிவு பற்றி தெளிவாகக் கூறி ஓய்வு பெற வலியுறுத்தி இருக்கலாம். வாரியத்துக்கு தெரியப்படுத்தி... ஓராண்டு காலம் காத்திருந்து, சச்சினும் விடைபெற்று சென்று மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு அது பற்றி சொல்லியிருப்பது சந்தீப் பட்டீல் வகித்த தேர்வுக் குழு தலைவர் பதவிக்கு அழகல்ல. 

நல்ல வாய்ப்பு

சொந்த மண்ணில் தொடர்ச்சியாக 13 டெஸ்ட் போட்டிகளில் விளையாடப் போகிறது இந்திய அணி. சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் டெஸ்ட் தரவரிசையில் மீண்டும் முதலிடத்துக்கு முன்னேற அருமையான வாய்ப்பு.சுழற்பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளங்களில் நியூசிலாந்து, இங்கிலாந்து, வங்கதேச அணிகளை வீழ்த்துவது இந்திய அணிக்கு பெரிய சவாலாக இருக்காது.

டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளுக்கே அதிக முக்கியத்துவம் கொடுப்பதாக எழுந்த குற்றச்சாட்டை பொய்யாக்குவதுடன், டெஸ்ட் போட்டிகளில் இந்தியா மீண்டும் உலகின் நம்பர் 1 அணியாக விளங்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.இளம் வீரர் விராத் கோஹ்லியின் துடிப்பான தலைமையும், தலைமை பயிற்சியாளர் அனில் கும்ப்ளேவின் அனுபவமும் இந்திய அணியின் எழுச்சிக்கு உறுதுணையாக இருக்கும்.

ஐசிசி டெஸ்ட் ரேங்கிங்கில் முதலிடத்தில் உள்ள பாகிஸ்தான் அணிக்கும் 2வது இடத்தில் உள்ள இந்தியாவுக்கும் இடையே 1 புள்ளி மட்டுமே வித்தியாசம். நியூசிலாந்துக்கு எதிராக தற்போது நடக்கும் தொடரில் வெற்றியை வசப்படுத்தினாலே இந்தியா எளிதாக நம்பர் 1 ஆகிவிடும். அடுத்தடுத்த தொடர்களிலும் சிறப்பாக விளையாடி முதலிடத்தை தக்கவைத்துக் கொள்வது தான் முக்கியம்.


கோஹ்லி தலைமையிலான இந்திய அணி அடுத்த பத்து ஆண்டுகளுக்கு டெஸ்ட் அரங்கில் ஆதிக்கம் செலுத்தும் என்று முன்னாள் நட்சத்திரங்கள் சச்சின், வி.வி.எஸ்.லஷ்மண் இருவரும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். அந்த நம்பிக்கை பலிக்க வேண்டும் என்றால், வெளிநாட்டு தொடர்களிலும் இந்திய வீரர்கள் தங்கள் திறமையை நிரூபிப்பது அவசியம். சொந்த மண்ணில், சுழலுக்கு சாதகமான ஆடுகளங்களில் மட்டுமே வெற்றி பெற முடியும் என்றால் நம்பர் 1 அந்தஸ்துக்கு அர்த்தம் இருக்காது.

‘டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற, இந்திய அணி சுழற்பந்துவீச்சுக்கு சாதகமான மைதானங்களை மட்டுமே நம்பியிருக்கும் நிலையை கேப்டன் கோஹ்லி - பயிற்சியாளர் கும்ப்ளே கூட்டணி கட்டாயம் மாற்ற வேண்டும். ஒரேயடியாக சுழலுக்கு சாதகமான பிட்ச் அமைப்பது சில சமயம் நமக்கே ஆபத்தாகி விடும். பேட்ஸ்மேன்கள், பந்துவீச்சாளர்கள் என இரு தரப்புக்குமே திறமையை நிரூபிக்க சரி சமமான வாய்ப்பு கொடுப்பதுதான் உண்மையான டெஸ்ட் போட்டி’ என்கிறார் அனுபவ வீரர் ஹர்பஜன் சிங்.

ஆக்ரோஷமான தாக்குதல் ஆட்டத்தில் அதிக நம்பிக்கை வைத்துள்ள கேப்டன் கோஹ்லி, எந்த வகையான சவாலுக்கும் ஈடு கொடுப்பார் என்றே தோன்றுகிறது. சச்சின், லஷ்மண் கூறியுள்ளது போல, டெஸ்ட் அரங்கில் இந்திய அணி நீண்ட காலத்துக்கு ஆதிக்கம் செலுத்தும் என நிச்சயம் நம்பலாம்.

பழிதீர்க்கும் முயற்சி?

விளையாட்டும் ஊக்கமருந்து சர்ச்சையும் பிரிக்க முடியாததாகிவிட்டன. ஊக்கமருந்து உபயோகிப்பதால் கிடைக்கும் கூடுதல் ஆற்றல், நேர்மையான வீரர், வீராங்கனைகளின் வெற்றி வாய்ப்பை தட்டிப் பறித்துவிடுவதை எந்த வகையிலும் ஏற்க முடியாது.

பரிசோதனையில் சிக்குவது எத்தனை பெரிய நட்சத்திரமாக இருந்தாலும், தக்க தண்டனையை அனுபவித்தே தீர வேண்டும்.ரஷ்யாவில் விளையாட்டுத் துறை நிர்வாகிகளும், மருத்துவ நிபுணர்களும் கை கோர்த்து ஊக்கமருந்து உபயோகத்தை மிக சாமர்த்தியமாக யாரும் கண்டுபிடிக்க முடியாத வகையில் அரங்கேற்றி வந்தது அம்பலமானதால், அந்த நாட்டை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகளுக்கு ரியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க அனுமதி மறுக்கப்பட்டது.

ரஷ்ய டென்னிஸ் நட்சத்திரம் மரியா ஷரபோவா கூட ஊக்கமருந்து சர்ச்சையில் சிக்கி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.நாங்கள் மட்டும் தான் தவறு செய்கிறோமா... அமெரிக்கா என்ன யோக்கியமா? என்று கேட்கும் வகையில், உலக ஊக்கமருந்து தடுப்பு நிறுவனம் ‘வாடா’ இணையதளத்தில் ஊடுருவிய  ரஷ்யாவை சேர்ந்த மென் பொறியாளர்கள், அமெரிக்க டென்னிஸ் நட்சத்திரங்கள் செரீனா வில்லியம்ஸ், வீனஸ் வில்லியம்ஸ், ஜிம்னாஸ்டிக் வீராங்கனை சிமோன் பைல்ஸ், கூடைப்பந்தாட்ட வீராங்கனை எலினா டெல் டன் ஆகியோர் பற்றிய ரகசிய ஆவணங்களை திருடி வெளியிட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அவர்களும் தடை செய்யப்பட்ட ஊக்கமருந்துகளை உபயோகித்துள்ளனர். எனவே அவர்களது பதக்கங்களை பறிப்பதுடன் சாதனைகளையும் ரத்து செய்ய வேண்டும் என்பது ரஷ்ய தரப்பு வாதம். ‘ரியோ ஒலிம்பிக்சில் அமெரிக்கர்கள் சிறப்பாக விளையாடினார்கள். ஆனால், நேர்மையாக அல்ல’ என்று கிண்டலடிக்கிறது ‘பேன்சி பியர்ஸ்’ என்ற ரஷ்ய இணையதளம்.இதற்கு ‘வாடா’ கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

‘விளையாட்டு வீரர், வீராங்கனைகள் பல்வேறு உடல்நல பாதிப்புகளுக்காக குறிப்பிட்ட சில மருந்துகளை உரிய அனுமதி பெற்று உபயோகிப்பது வழக்கமான நடைமுறை தான். அமெரிக்க வீராங்கனைகள் தங்களின் சிகிச்சை விவரங்களை முறையாக பதிவு செய்துள்ளனர். அவர்களது சாதனைகளை களங்கப்படுத்துவது, ரஷ்யாவின் கோழைத்தனமான பழிதீர்க்கும் முயற்சி’ என்கிறார் அமெரிக்க ஊக்கமருந்து தடுப்பு நிறுவன தலைமை செயலதிகாரி டிராவிஸ் டைகார்ட்.செரீனா, வீனஸ், பைல்ஸ் ஆகியோரும் தாங்கள் ஊக்கமருந்து உட்கொண்டதில்லை என்று உறுதியாக தெரிவித்துள்ளனர்.


இது போன்ற சர்ச்சைகளை தவிர்க்க ‘வாடா’ அமைப்பு தனது பரிசோதனை முறைகளில் வெளிப்படைத்தன்மையை கையாள வேண்டும். சோதனை முடிவுகளை உடனுக்குடன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடுவதும் அவசியம். 

பத்தரை மாற்று தங்கம்

பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனிரோ நகரில் நடைபெற்று வரும் மாற்றுத் திறனாளிகளுக்கான பாராலிம்பிக் போட்டியில், தங்கப் பதக்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்திருக்கிறார் மாரியப்பன் தங்கவேலு.இவர் தமிழகத்தை சேர்ந்தவர் என்பதில் நமக்கு கூடுதல் பெருமை.

ஆண்கள் உயரம் தாண்டுதலில் 1.89 மீட்டர் தாண்டி முதலிடம் பிடித்திருக்கிறார் மாரியப்பன். உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த வருண் சிங் வெண்கலம் வென்றிருக்கிறார். ஊனம், ஏழ்மை, ஏளனம் போன்ற தடைக்கற்களை தகர்த்தெறிந்து சிகரத்தை எட்டியிருக்கும் இந்த வீரர்களின் சாதனை, ‘முயற்சி திருவினையாக்கும்’ என்பதை அழுத்தம் திருத்தமாக நிரூபித்திருக்கிறது.

பாராலிம்பிக் போட்டியில் கிடைத்த தங்கம் என்று இதை குறைத்து மதிப்பிடுவது கூடாது. உலக அளவில் மிகச் சிறந்த வீரர்களின் கடுமையான போட்டியை சமாளித்து மாற்றுத் திறனாளியான மாரியப்பன் வென்றுள்ளது பத்தரை மாற்றுத் தங்கம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இவரது மகத்தான வெற்றி, அனைத்து இளைஞர்களுக்கும் ஒரு முன்னுதாரணமாக, உந்துசக்தியாக இருக்கும்.

காதல் என்ற பெயரில் பெண்களை வெட்டிச் சாய்த்து, அமிலம் ஊற்றி சிதைத்து, பின்னர் தண்டனைக்கு பயந்து தற்கொலை செய்துகொள்ளும் போக்கு தமிழகத்தில் அதிகரித்து வருகிறது. இது தொடர்பான சமீபத்திய நிகழ்வுகள் அவநம்பிக்கையையும் விரக்தியையும் அளித்த நிலையில், இளைஞர்கள் தங்களின் ஆற்றலை ஆக்கசக்தியாக, குடும்பத்துக்கும் நாட்டுக்கும் பெருமை சேர்க்கும் வகையில் பயன்படுத்த வேண்டியதன் அவசியத்தை மாரியப்பனின் வெற்றி உணர்த்துகிறது.

சாதனை வீரருக்கு பாராட்டு, வாழ்த்துகளுடன் கோடிக் கணக்கில் ரொக்கப் பரிசுகளும் குவிகின்றன. வென்றவர்களை பாராட்டுவதும், கவுரவிப்பதும் நமது கடமை. அப்போது தான் மாரியப்பன், வருண் போல நாமும் சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் இளைஞர்களை கடுமையாக முயற்சிக்கத் தூண்டும்.

நாடு முழுவதும் விளையாட்டு போட்டிகளுக்கான அடிப்படை கட்டமைப்பை மேம்படுத்துவதுடன், திறமையான சிறுவர் சிறுமியரை தேர்வு செய்து உணவு, உடை, கல்வி, பயிற்சி என அனைத்து வசதிகளையும் அளிக்க வேண்டும். அவர்களுக்கான வேலை வாய்ப்பையும் உறுதி செய்து, எதிர்காலம் பற்றிய கவலையை போக்க வேண்டியதும் அவசியம்.

வெற்றியாளர்களை தோளில் தூக்கிக் கொண்டாடும் அதே சமயம், தோற்றவர்கள் துவண்டு விடாமல் முனைப்புடன் தங்கள் முயற்சியை தொடர ஆதரியுங்கள். ஒலிம்பிக்ஸ் முடிந்து பரபரப்பு ஓய்ந்ததும் விளையாட்டுத் துறை அமைச்சகம், அதிகாரிகள், நிர்வாகிகள் வழக்கம் போல தூக்கத்தில் ஆழ்ந்துவிடாமல், 2020ஐ மனதில் வைத்து ஆக்கபூர்வ நடவடிக்கையில் இறங்குவார்கள் என எதிர்பார்க்கலாம்.

இவ்வளவு தாமதம் ஏன்?

லண்டன் ஒலிம்பிக் போட்டியின் ஆண்கள் 60 கிலோ பிரீஸ்டைல் மல்யுத்தத்தில் பங்கேற்ற இந்திய வீரர் யோகேஷ்வர் தத் 3வது இடம் பிடித்து வெண்கலப் பதக்கம் வென்றிருந்தார்.
அந்த போட்டியில் வெள்ளி வென்ற ரஷ்ய வீரர் பெசிக் குடுகோவிடம் நடத்தப்பட்ட சோதனையில் அவர் தடை செய்யப்பட்ட ஊக்கமருந்து உட்கொண்டிருந்தது உறுதி செய்யப்பட்டது. ரியோ ஒலிம்பிக் போட்டிக்கு முன்பாக நடத்தப்பட்ட மறு பரிசோதனையில் தான் இது தெரியவந்தது.

இதையடுத்து, 2வது இடத்துக்கு முன்னேறிய யோகேஷ்வர் வெள்ளிப் பதக்கம் பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்பாராத இந்த பதக்க உயர்வால் ஆனந்த அதிர்ச்சியில் இருக்கும் யோகேஷ்வருக்கு இன்னும் ஒரு இனிய செய்தி கிடைத்திருக்கிறது.
தங்கப் பதக்கம் வென்றிருந்த அஜர்பைஜான் வீரர் தோக்ருல் அஸ்கரோவும் ஊக்கமருந்து சோதனையில் பிடிபட்டிருக்கிறார். இதனால் யோகேஷ்வரின் வெள்ளிப் பதக்கம் தங்கமாக மாறவும் வாய்ப்பு இருக்கிறதாம்.ரியோ ஒலிம்பிக்சில் முதல் சுற்றிலேயே வெளியேற நேரிட்டதால் ஏமாற்றத்தில் இருந்த யோகேஷ்வருக்கு திடீர் ஜாக்பாட். இந்த மகிழ்ச்சியை கொண்டாடுவதற்கும் காத்திருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது தான் கொடுமை.

யோகேஷ்வரின் ரத்த மாதிரியை மீண்டும் பரிசோதனைக்குட்படுத்தி அதில் அவர் தடை செய்யப்பட்ட ஊக்கமருந்து எதையும் உட்கொள்ளவில்லை என உறுதியானால் மட்டுமே பதக்க உயர்வு வழங்கப்படும் என உலக ஊக்கமருந்து தடுப்பு நிறுவனம் ‘வாடா’ தெரிவித்துள்ளது. 2012ல் நடந்த ஒலிம்பிக் போட்டிக்கு இன்னும் கூட ஊக்கமருந்து சோதனை நடத்திக் கொண்டிருப்பது நல்ல வேடிக்கை.

வெள்ளிப் பதக்கம் வென்ற ரஷ்ய வீரர் குடுகோவ் கார் விபத்தில் சிக்கி இறந்துவிட்டார். அடுத்த ஒலிம்பிக் கூட நடந்து முடிந்துவிட்டது. பரிசோதனை முடிவுகளை உறுதி செய்ய இவ்வளவு கால தாமதம் ஏற்படுவதை தவிர்க்க வேண்டியது அவசியம். நேர்மையான வீரருக்கே வெற்றியும் பதக்கமும் கிடைப்பதை உறுதி செய்வது முக்கியம் தான். அதே சமயம், அந்த வெற்றியால் கிடைக்கும் மகிழ்ச்சி, புகழ், பரிசுகளை அந்த வீரர், வீராங்கனைகள் உடனடியாக அனுபவிக்கவும் வகை செய்ய வேண்டும்.

போட்டிகள் முடிந்த இரண்டு ஆண்டுகளுக்குள்ளாவது ஊக்கமருந்து பரிசோதனைகள் அனைத்தையும் முடித்து வெற்றியாளர்களை இறுதி செய்யும் வகையில் விதிமுறைகளில் மாற்றம் தேவை. சோதனை முறைகளையும் நவீனப்படுத்தலாம். காலம் கடந்து கிடைத்த பதக்கம் என்றாலும், சாதனை வீரர் யோகேஷ்வரை உரிய வகையில் பாராட்டி கவுரவிப்பதும், ரொக்கப் பரிசுகள் வழங்கி வாழ்த்துவதும் அரசின் கடமை.