சனி, 26 மே, 2012

உலுக்கி எடுக்குது ஸ்பாட் பிக்சிங்

வெற்றிக்கு, கடைசி பந்தில் 5 ரன் வேண்டும். பவுண்டரி அடித்தால் கூட போதாது என்ற நிலையில் அமர்க்களமான சிக்சர் தூக்கிய பிராவோவின் அசகாய ஷாட்டை கூட ஸ்பாட் பிக்சிங் சர்ச்சையால் சந்தேகக் கண் கொண்டு பார்க்கும் நிலை ஏற்பட்டுள்ளது. கடைசி ஓவர், கடைசி பந்து வரை நகம் கடிக்க வைக்கும் பரபரப்பான ஆட்டங்கள் எல்லாமே திட்டமிட்டு அரங்கேறும் நாடகம் என்று ரசிகர்கள் வேதனையுடன் விவாதிப்பது, ஐபிஎல் போட்டியின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கி உள்ளது.
தொடக்கத்தில் டல் அடித்த ஆட்டங்கள் போகப் போக சூடு பிடித்து அனல் பறக்க…, மேட்ச் பிக்சிங்காக இருக்குமோ என்று லேசாகப் புகைய ஆரம்பித்தது. அது எப்படி சொல்லி வைத்த மாதிரி எல்லா ஆட்டமும் கடைசி பந்து வரை ஹிட்ச்காக் த்ரில்லராய் அமைய முடியும்? பாதாளம் நோக்கி பாய்ந்து கொண்டிருந்த டிவி பார்வையாளர் ரேட்டிங்கை தூக்கிப் பிடிக்கத்தான் இப்படி செய்கிறார்கள் என்று அரசல் புரசலாக பேச்சு அடிபட்டது.
ஐபிஎல் முதல் சீசனில் 5, 2வது சீசனில் 6, அப்புறம் 2, 3 என்று இருந்த கடைசி பந்து த்ரில்லர் ஷோ… இந்த முறை இரட்டை இலக்கத்தை எட்டியிருக்கிறது என்ற புள்ளி விவரம் எரிகிற கொள்ளியில் எண்ணெய் ஊற்றுகிறது. இப்படி ஏற்கனவே சந்தேகத் தீயில் வெந்து கொண்டிருந்த ரசிகர்கள், ஸ்பாட் பிக்சிங் சூதாட்டம் அமோகமாக நடப்பதை ஒரு டிவி சேனல் அம்பலப்படுத்தியதில் சாம்பலாகிப் போயிருக்கிறார்கள்.
அந்த சேனல் விரித்த வலையில் ஸ்ரீவஸ்தவா, சுதிந்திரா, அமித் யாதவ், மோனிஷ் மிஷ்ரா, அபினவ் பாலி ஆகிய 5 வீரர்கள் சிக்கியது ஐபிஎல் அஸ்திவாரத்தையே ஆட்டம் காண வைத்துள்ளது. ஒரு நோ பால் போட பத்து லட்சம் ரூபாய் என்றால், கடைசி பந்தில் புல் டாஸ் போட எத்தனை கோடி கேட்பார்கள்/கொடுப்பார்கள் என்ற கேள்வி எழுவதை தவிர்க்க முடியவில்லை. ஐபிஎல் போட்டி மட்டுமல்ல, ரஞ்சி டிராபி போன்ற உள்ளூர் போட்டிகளைக் கூட இந்த சூதாட்ட ஆக்டோபஸ் ஆக்கிரமித்திருக்கிறது.
வெளி நாட்டு கேப்டன் ஒருவருக்கும் இதில் தொடர்பு இருக்கிறது என்கிறார்கள். சர்வதேச போட்டியில் ஆடாத வீரருக்கு அதிகபட்சமாக 30 லட்சம்தான் கொடுக்க முடியும். ஆனால், அணி ஓனர்கள் மீட்டருக்கு மேலே போட்டுக் கொடுக்கிறார்கள் என்பதும் அதிர்ச்சியை அதிகப்படுத்தியிருக்கிறது. கிங்ஸ் லெவன் வீரர் ஸ்ரீவஸ்தவாவுக்கு 70 லட்சம் பிளாக்கில் கிடைத்திருக்கிறதாம். மாடல் அழகிகள், நடிகைகள் என்று மொடாக் கணக்கில் தேன் குடித்த நரிகளாய் வீரர்கள் போதையில் போடும் ஆட்டம் இது என்ற கூடுதல் தகவல் கிரிக்கெட்டை கேவலப்படுத்துவதாக உள்ளது.
இப்போதுதான் தூக்கம் கலைந்து எழுவது போல நடிக்கும் ஐபிஎல் நிர்வாகம், 5 வீரர்களையும் சஸ்பெண்ட் செய்து விசாரணைக்கும் உத்தரவிட்டுள்ளது. ஸ்பாட் பிக்சிங் சர்ச்சையில் சிக்கிய பாகிஸ்தான் வீரர்கள் கம்பி எண்ணியதை பார்த்த பிறகும், இளம் வீரர்கள் இப்படி பணத்துக்காக விளையாட்டை விலை பேசியிருப்பதை ஜீரணிக்க முடியவில்லை.
ஸ்டேடியத்துக்கு வெளியே பறக்கும் வானளாவிய சிக்சர், அப்படியே பாய்ந்து பறந்து பிடிக்கும் அசாத்தியமான கேட்ச் எல்லாமே பொய்யாக இருக்குமோ? என்ற நினைப்பு மனதை ரணகளமாக்குகிறது. ஐபிஎல் போட்டியை கிரிக்கெட் வாரியம் நடத்தக் கூடாது என்று மத்திய அமைச்சர் மாக்கன் கூறுவது நியாயமானது என்றே தோன்றுகிறது. உலகின் பணக்கார விளையாட்டு அமைப்பு என்று பீற்றிக் கொண்டால் மட்டும் போதாது. நேர்மையான, வெளிப்படையான நிர்வாகம் நடப்பதை உறுதி செய்ய, தகவல் அறியும் உரிமை சட்ட வரம்புக்குள் வாரியம் வர வேண்டும் என்று மாக்கன் நெற்றியடி அடித்திருக்கிறார்.
சூதாட்ட பூதம் கிளம்பியதில், பிளே ஆப் சுற்றுக்கான எதிர்பார்ப்பு போயே போச்சு. சென்னை போராடி ஜெயித்தால் கூட, எல்லாம் ஏற்கனவே பிக்ஸ் செஞ்சுட்டாங்கப்பா என்று சிலர் அங்கலாய்க்கும்போது அவர்களுக்கு பதிலடி கொடுக்க வார்த்தை வர மாட்டேன் என்கிறது.
மும்பை கிரிக்கெட் சங்க நிர்வாகிகளையும், கிரிக்கெட் வாரியத்தையும் கொல்கத்தா அணி ஓனர் நடிகர் ஷாருக் போதையில் வசை பாடியதாகக் கிளம்பிய சர்ச்சையும் தன் பங்குக்கு ஐபிஎல் இமைஜை டேமேஜ் ஆக்கியிருக்கிறது. வாங்கடே ஸ்டேடியத்தில் ஷாருக் ஆயுசுக்கும் கால் வைக்கக் கூடாது என்று தடை போட்டிருக்கிறார்கள். கேலரியில் புகை விட்ட வழக்கோடு இதுவும் சேர்ந்து கொள்ள… ஷாருக் முகத்தில் கரி மேக்கப்பின் கனம் கூடிக் கொண்டே போகிறது. இன்னும் ஒரு வாரத்தை எப்படி ஓட்டப் போகிறார்களோ?.
பா.சங்கர்


1 கருத்து: