டெல்லியில் சூப்பர்
டெமோ!
ஐபிஎல் 5வது சீசன்
எதிர்பார்த்ததை விடவும் கொஞ்சம் அதிகமாகவே களைகட்டியிருக்கிறது. கடைசி ஓவர்…கடைசி பந்து
வரை நகம் கடிக்க வைத்த ஆட்டம், சிக்சர் மழை, முனாப்புக்கு அபராதம், ஹர்பஜனுக்கு எச்சரிக்கை,
ஷாருக் மீது வழக்கு, சின்னசாமி ஸ்டேடியத்தில் தீ விபத்து… என்று பரபரப்புக்கு பஞ்சம்
இல்லை.
கை விரலில் ஏற்பட்ட
காயத்தால் சச்சின் விளையாடாவிட்டாலும் மும்பை இந்தியன்ஸ் முழு வேகத்தில் முன்னேறிக்
கொண்டிருக்கிறது. ரவுண்டு கட்டி அடிக்கும் போலார்டு, அவருக்கு ஈடு கொடுக்கும் ராயுடு,
மலிங்கா – முனாப் வேகக் கூட்டணி முன்பாக ராஜஸ்தான் ராயல்சின் போராட்டம் வீணானது. சார்ஜர்ஸ்
வசமிருந்த வெற்றியை கடைசி பந்தில் அமர்க்களமான சிக்சர் விளாசி தட்டிப் பறித்த ரோகித்
ஷர்மாவின் ஆட்டமும் அற்புதம். அதே சமயம் ஆக்ரோஷம் அளவுக்கு மீறாமல் பார்த்துக் கொள்வதும்
அவசியம். நடுவருடன் வாக்குவாதம் செய்த முனாப்புக்கு அபராதம், கேப்டன் ஹர்பஜனுக்கு எச்சரிக்கை
எல்லாம் இந்தியன்சுக்கு பெருமை சேர்ப்பதாக இல்லை. ஜோசியம் பார்த்ததில் 60 சதவீதத்துக்கும்
மேல் அம்பானி அணிக்கே சாதகமாக இருக்கிறதாம்.
நடப்பு சாம்பியன்
சூப்பர் கிங்ஸ் இன்னும் த்ராட்டிலில் கை வைக்கவில்லை. பசங்களுக்கு முதலில் ஓட கற்றுக்
கொடுக்க வேண்டும்! இல்லாவிட்டால் ஓடாமல் இருக்கவாவது!! டெல்லியில் சிஎஸ்கே ரன் அவுட்
ஆனது ரொம்பவே கேவலமாக இருந்தது. கேப்டன் டோனி பேட்டிங் வரிசையில் கொஞ்சம் முன்னே வந்து
முனைப்புடன் விளையாடினால் பின்னடைவை சரி செய்யலாம். தும்பை விட்டு வாலைப் பிடிக்க நினைத்தால்
முதலுக்கே மோசம்தான். முரளி விஜய் ஏதோ மந்திரித்து விட்ட ஆடு மாதிரியே தெரிகிறார்.
சிங்கமாய் சிலிர்த்தெழாவிட்டால் அசிங்கமாகி விடும்.
பீட்டர்சன், ஜெயவர்தனே
வரவால் டேர்டெவில்ஸ் அலம்பல் கொஞ்சம் அதிகமாயிருக்கிறது. பார்மில் இல்லாத சேவக் கூட
சென்னை பவுலிங்கை பதம் பார்த்தார். பந்துக்கு பந்து ஸ்விட்ச் ஹிட் அடித்து அலட்டினார்
பீட்டர்சன். போகப் போக டெவில்ஸ் அட்டகாசம் தாங்க முடியாது என்றே தோன்றுகிறது.
பெங்களூரில் நைட்
ரைடர்ஸ் ஆட்டம் கம்பீரமாக இருந்தது. காலிஸ், கம்பீர், பிஸ்லா தவிர்த்து மற்றவர்கள்
சிங்கிள் டிஜிட்டில் ஜகா வாங்கினாலும் பவுலிங், பீல்டிங்கில் ஜமாய்த்தார்கள். புன்னகை
மன்னன் பாலாஜி விக்கெட்டுகளை அள்ளி கண்களை நிறைத்தார். கேல், கோஹ்லி, டிவில்லியர்ஸ்
பாச்சா பலிக்காததால் ராயல் சவால் எடுபடவில்லை. நைட் ரைடர்ஸ் ஓனர் நடிகர் ஷாருக், ஜெய்ப்பூர்
சவாய் மான்சிங் ஸ்டேடியத்தில் ரிலாக்சாக புகைத்தது பற்றி எரிய ஆரம்பித்திருக்கிறது.
பொது இடத்தில் புகைத்த ஷாருக் மீதும், ஸ்டேடியத்துக்குள் சிகரெட் பாக்கெட்டை அனுமதித்த
போலீசார் மீதும் வழக்கு போட்டிருக்கிறார்கள்.
புற்றுநோய் சிகிச்சை
வெற்றிகரமாக முடிந்து நாடு திரும்பினாலும் சீசன் 5ல் யுவராஜ் அதிரடியை பார்க்கும் வாய்ப்பு
இல்லை. இருந்தாலும் புனே அணியை உற்சாகப்படுத்த வந்த உலக கோப்பை நாயகனுக்கு ரசிகர்கள்
உற்சாக வரவேற்பு அளித்து அசத்திவிட்டார்கள். சொந்தமாக ஒரு ஸ்டேடியம், வழிநடத்த கொல்கத்தா
இளவரசர் கிடைத்த பூரிப்பில் புனே வாரியர்ஸ் ‘துடிக்குது புஜம்… ஜெயிப்பது நிஜம்’ என்று
தாக்குதலுக்கு தயாராகி இருக்கிறது. இதே வேகத்தில் போனால் இவர்களைத் தடுத்து நிறுத்துவது
சிரமம்தான்.
பஞ்சாப், ஐதராபாத்
அதள பாதாளத்தில் இருந்தாலும் ஒரு சில வெற்றிகளில் நிலைமை தலை கீழாகிவிடும் என்பதால்
நம்பிக்கையோடு நகர்கின்றன. ரன் குவிப்பில் ராயல்ஸ் வீரர்கள் ரஹானே, ஓவைஸ் ஷா, மும்பை
இந்தியன்ஸ் போலார்டு, ரோகித், ராயுடு பாய்ச்சல் பலமாக இருக்கிறது. விக்கெட் வேட்டையில்
மும்பையின் முனாப், மலிங்கா, போலார்டு ஆதிக்கம் கொடி கட்டி பறக்கிறது.
என்னதான் ஆட்டங்கள்
சுவாரசியமாக இருந்தாலும், முதல் வாரத்தில் பார்வையாளர்களின் எண்ணிக்கையும் டிவி ரேட்டிங்கும்
இறங்கு முகம்தான் என்கிறார்கள். ஐபிஎல் வரலாற்றில் இதுவே குறைந்தபட்சம் என்ற தகவல்
விளம்பரதாரர்களையும் யோசிக்க வைத்துள்ளது. குறைந்த பந்தில் சதம், ஹாட்ரிக் அசத்தல்
என்று சாதனைகள் அணிவகுத்தால் சூடு பிடித்துவிடும். ஐபிஎல் போட்டிகளுக்கு பின்னால் எத்தனை
கடின உழைப்பு இருக்கிறது, ரசிகர்கள் ஏன் பைத்தியம்
பிடித்து அலைகிறார்கள் என்பதை ஆவணப் படமாக்குவதற்காக இங்கிலாந்தில் இருந்து ஒரு டீம்
வந்திருக்கிறது. இந்த 90 நிமிட டாக்குமென்டரியை டிவியிலும் தியேட்டரிலும் திரையிடப்
போகிறார்களாம்.
பா.சங்கர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக