இந்தியாவின் 28 ஆண்டு கால கனவு நனவாகி இருக்கிறது. ரன் குவிப்பில் இமாலய சாதனைகளை படைத்திருந்தாலும், உலக கோப்பையை வென்ற பெருமை மட்டும் கண்ணாமூச்சி ஆடியதால் ஏமாற்றத்தில் இருந்த சச்சின் கடைசி வாய்ப்பில் அதை முத்தமிட்ட மகிழ்ச்சியில் திளைக்கிறார். கோப்பையை சச்சினுக்காக வெல்வோம் என்று சபதமிட்டு விளையாடிய சக வீரர்கள் சொன்னதை செய்து காட்டியிருக்கிறார்கள். ஒட்டு மொத்த தேசமும் இந்த வெற்றியில் பூரித்து, நெஞ்சு நிமிர்த்தி பெருமிதத்துடன் வாழ்த்திக் கொண்டிருக்கிறது. இந்த வெற்றி எதிர்பார்த்ததுதான் என்றாலும், அது கை கூடிய விதம் உணமையிலேயே திகிலானது.
போட்டி தொடங்குவதற்கு முன்பாகவே, கோப்பையை வெல்ல அதிக வாய்ப்புள்ள அணியாக இந்தியாவை முத்திரை குத்திவிட்டார்கள். லீக் சுற்றில் கொஞ்சம் தடுமாறியபோது அந்த கணிப்பு தவறானதோ… என்ற சந்தேகம் எழுப்பப்பட்டது. முக்கியமான நாக் அவுட் சுற்றில் 4 முறை சாம்பியன் பட்டம் வென்ற ஆஸ்திரேலியா, பங்காளி பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா பைனலுக்கு முன்னேறியதும் அணியின் ரேட்டிங் மீண்டும் எகிறியது. அதிசயமாக பந்துவீச்சிலும் பீல்டிங்கிலும் அபார முன்னேற்றம். எப்படியாவது கோப்பையைக் கைப்பற்றிவிட வேண்டும் என்ற வெறி வீரர்களின் துடிப்பான பீல்டிங்கிலேயே தெரிந்தது.
இறுதிப் போட்டியில் முதலில் சிறப்பாகப் பந்துவீசி இலங்கையை கட்டுப்படுத்தியவர்கள் கடைசி கட்ட ஓவர்களில் சொதப்பி பெரிய ஸ்கோர் அடிக்கவிட்டபோது கொஞ்சம் ஏமாற்றமாக இருந்தது. கடினமான துரத்தலின் தொடக்கத்திலேயே அதிரடி வீரர்கள் சேவக், சச்சின் விடைபெற்றுக் கொள்ள வெற்றி கேள்விக்குறியானது! அப்படி இருந்தும் இந்தியா கோப்பையை வசப்படுத்தியது எப்படி? பழைய அணிகளுக்கும் டோனி அண்ட் கோவுக்கும் அதுதான் வித்தியாசம். சச்சின் அவுட் என்றாலே மற்ற வீரர்களுக்கு கை கால் நடுங்கத் தொடங்கிவிடும். அப்படியே மந்திரித்துவிட்டவர்களைப் போல பெவிலியனுக்கும் விக்கெட்டுக்கும் இடையே அணிவகுப்பு நடத்துவார்கள்.
ஆனால், இப்போதைய அணி எந்த நெருக்கடிக்கும் தயாராக இருந்தது. அவர்கள் போனால் என்ன… நாங்கள் இருக்கிறோம். எங்களால் எதுவும் முடியும் என்ற தன்னம்பிக்கை பொங்கி வழிய கம்பீர் – கோஹ்லி, கம்பீர் – டோனி, டோனி – யுவராஜ் என்று பார்ட்னர்ஷிப் போட்டு போராடி அசத்தியதை மறக்கவே முடியாது.
பார்மில் இல்லாததால் அணியில் இருந்தே தூக்கப்பட்டு, ஒருமுகமான பங்களிப்பு இல்லாமல் ஏனோதானோ என்று செயல்படுவதாகக் குற்றம்சாட்டப்பட்ட யுவராஜ், ஆல் ரவுண்டராக ஜொலித்து 4 ஆட்டநாயகன் விருதுகளை அள்ளியது மட்டுமல்ல தொடர்நாயகன் விருதையும் வென்று அமர்க்களப்படுத்தினார். கடந்த 20 இன்னிங்சில் பெரிதாய் ஸ்கோர் அடிக்காமல் லொட்டு லொட்டு என்று டிபன்ஸ் பழகிக் கொண்டிருந்த டோனி, திடீரென தனது பழைய அதிரடி ஆட்டத்துக்கு மாறி அட்டகாசம் செய்தது கண் கொள்ளா காட்சியாக இருந்தது. இப்படி ஒரு மிகப் பெரிய போட்டிக்காகத்தான் அவ்வளவு பொறுமையாக டோனி கொக்கு காத்துக் கொண்டிருந்தது போல.
இந்திய வீரர்களின் கூட்டு முயற்சிதான் வெற்றிக்கு காரணம். அணி ஒரு சில வீரர்களை மட்டுமே சார்ந்திருந்த காலம் மலையேறிவிட்டது. உலக கோப்பையில் அதை அழுத்தம் திருத்தமாக நிரூபித்திருக்கிறார்கள். ரன் குவிப்பில் சச்சின், சேவக், கம்பீர், யுவராஜ், கோஹ்லி, டோனி… பந்துவீச்சில் ஜாகீர், முனாப், ஹர்பஜன், அஷ்வின், நெஹ்ரா… மற்றும் எல்லா வீரர்களின் துடிப்பான பீல்டிங்கும்தான் கோப்பையை 2வது முறையாக வசப்படுத்த உதவியுள்ளது. எல்லாவற்றுக்கும் மேலாக கேப்டன் டோனியின் தன்னம்பிக்கையும், வித்தியாசமான வியூகங்களும், அதிர்ஷ்டமும் இந்த வெற்றியில் பெரும் பங்கு வகிக்கின்றன. மனம் தளராத உறுதியான போராட்டத்தால் தேசத்துக்குப் பெருமை சேர்த்துள்ள வீரர்களை வாழ்த்துவோம்.
பா.சங்கர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக