சனி, 16 ஏப்ரல், 2011

அடுத்தது நாக் அவுட் அமர்க்களம்


கத்துக்குட்டி அணிகளுடன் நடந்த லீக் ஆட்டங்களில் சற்று தடுமாறினாலும், எதிர்பார்த்தது போலவே இந்தியா கால் இறுதிக்கு முன்னேறிவிட்டது. இனி நாக் அவுட் அமர்க்களம்தான். சிம்பிளாகச் சொன்னால்… தொடர்ச்சியாக மூன்று ஆட்டங்களில் வெல்லும் அணி கோப்பையை தூக்கிக் கொண்டு ஓடலாம்!
பெங்களூரில் அயர்லாந்து அணியுடன் நடந்த லீக் ஆட்டத்தில் 207 ரன்னை சேஸ் செய்ய இந்தியா திணறியதில் ரசிகர்களுக்கு செம அதிர்ச்சி. ஆட்டத்தை கடைசி பந்து வரை இழுத்து கடைசியில் கோட்டை விட்டு விடுவார்களோ என்று பீதியை கிளப்பிவிட்டார்கள். யூசுப் பதான் வந்து தனது டிரேட் மார்க் சிக்சர்களை பறக்கவிட்ட பிறகுதான் உயிரே வந்தது. சனி பகவானுக்கு ஸ்பெஷல் பூஜை எல்லாம் செய்து பார்முக்கு வந்த யுவராஜ் ஆல் ரவுண்டராக கை கொடுத்தார். ஒரே ஆட்டத்தில் 5 விக்கெட் மற்றும் அரைசதம் அடித்த முதல் வீரர் என்ற சாதனையையும் படைத்தார். சும்மா சொல்லக் கூடாது… அயர்லாந்து வீரர்கள் பந்துவீச்சிலும் பீல்டிங்கிலும் இந்திய பேட்டிங் ஸ்டார்களுக்கு தண்ணி காட்டிட்டாங்க.
நெதர்லாந்துடன் நடந்த ஆட்டத்திலும் அதே ஸ்கிரீன் பிளேதான்… ரீமேக் படத்தை பார்க்கிற மாதிரியே இருந்துச்சு. இந்த முறை இலக்கு 190 ரன்தான். சேவக்கும் சச்சினும் 20 ஓவர்ல ஆட்டத்த முடிச்சுடற மாதிரி டாப் கியர்ல தொடங்கினாங்க. உலக கோப்பையில் 2000 ரன் என்ற சாதனை மைல் கல்லை சச்சின் ஹாட்ரிக் பவுண்டரியுடன் சர்வ சாதாரணமாகக் கடந்து சென்றார். ‘குரு… என்னோட டர்ன்! இப்ப பாருங்க’ என்று சேவக் அடுத்த ஓவரிலேயே தன் பங்குக்கு ஹாட்ரிக் பவுண்டரி விளாச இந்திய ரசிகர்களுக்கு செம குஷி. தேவையில்லாமல் அவசரப்பட்ட இருவரும் சீலாரின் சுழலில் ஏமாந்தனர். புரமோஷன் கிடைத்த மகிழ்ச்சியில் ஒரு பவுண்டரி, ஒரு சிக்சர் அடித்த பதானும் அதே பவுலரிடம் பலியாக ஆட்டம் ஆமை வேகத்தில் நகர்ந்தது. இந்த முறையும் யுவராஜ் அரைசதம் அடித்து சேதாரம் இல்லாமல் காப்பாற்றினார்.
‘இருந்தாலும் கேப்டன் டோனி இந்த சாவ்லாவுக்கு இவ்ளோ சப்போர்ட் பண்ணக்கூடாதுப்பா! சிக்சர் சிக்சரா போட்டுக் கொடுக்கிறான்… அவன எதுக்கு சேக்குறாங்களோ! என்று புலம்பாத ரசிகர்களே இல்லை. ரெய்னா அல்லது அஷ்வினுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டியது கட்டாயம். தென் ஆப்ரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் என்று பலமான அணிகளுடன் மோதுவதற்கு முன்பாகவே கால் இறுதி வாய்ப்பை உறுதி செய்துவிட்டதால் இனி பல காம்பினேஷன்களை முயற்சிக்கலாம். நாக் அவுட்டில் இதற்கெல்லாம் வாய்ப்பே இருக்காது.
சொந்த மண்ணில் தொடை தட்டிய வங்கதேச அணி, வெஸ்ட் இண்டீசிடம் மண்டியிட்டு மண்ணோடு மண்ணானதில் அந்நாட்டு ரசிகர்கள் கொந்தளித்துவிட்டார்கள். ஆனாலும், வீரர்கள் சென்ற பஸ் மீது கல்வீச்சு, கேப்டன் ஷாகிப் வீட்டை நொறுக்கியது எல்லாம் ரொம்ப ஓவர். நியூசிலாந்தின் ராஸ் டெய்லர் கொடுத்த கேட்ச்சுகளை நழுவவிட்ட விக்கெட் கீப்பர் கம்ரான் அக்மல் மீது கூட பாகிஸ்தான் ரசிகர்கள் ஏகக் கடுப்பில் இருக்கின்றனர். இரட்டை லைப் கிடைத்த மகிழ்ச்சியில் டெய்லர் பின்னி எடுத்துட்டார். அடியா அது… கடைசி 5 ஓவரில் 100 ரன்!
பா.சங்கர் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக