பன்னிரு திருமறை எனப்படும் திருஞானசம்பந்தர் அருளிச் செய்த தேவாரப் பதிகங்களை இசையுடன் பாடுவதிலும், கற்பிப்பதிலும் சிறந்து விளங்கும் சைதை நடராஜன் அவர்களின் இசைத் தொண்டு ஈடு இணையற்றது. தமிழக அரசு கலைமாமணி விருது வழங்கி கவுரவித்துள்ள இந்த இசைக் கலைஞரிடம் பயின்றவர்கள், தங்கள் குருவிடம் வைத்துள்ள அன்பும் அபிமானமும் வியக்க வைக்கிறது.
90 வயதை நெருங்கிக் கொண்டிருக்கும் சைதை நடராஜன், இன்றும் தனது இசைப் பணியினை கொஞ்சமும் தொய்வில்லாமல் தொடர்ந்து கொண்டிருக்கிறார் என்றால், அதற்கு முழுமுதற் காரணம் அவரது மாணவர்கள். எந்தவித பலனையும் எதிர்பாராமல், ஒரு குழந்தையைப் போல அவரை அரவணைத்து பராமரித்து வருவது பிரமிப்பூட்டுகிறது.
நமது பாரம்பரியமான தெய்வீக தமிழிசைப் பாடல்கள் அழிந்து விடாமல் அடுத்த தலைமுறைக்கு கொண்டு சேர்க்கும் பணியில் அயராது உழைத்து வரும் இந்தக் கலைஞர்களின் தன்னலமற்ற சேவையை பாராட்ட வார்த்தைகள் இல்லை. வாரந்தோறும் திரு.சைதை நடராஜன் அவர்களின் இல்லத்திலும், சிஷ்யர்களின் இல்லங்களிலும் இசை வகுப்புகளை நடத்தி பக்திப் பரவசத்தில் ஆழ்ந்து வருகின்றனர். அப்படியொரு இனிய இசை வகுப்பில் அவர்களை சந்தித்தது மறக்க முடியாத அனுபவம். திரு. சைதை நடராஜன் மற்றும் அவரது குழுவினரின் தெய்வீக தமிழ் இசைப்பணி என்றென்றும் தொடர வேண்டும்.
பா.சங்கர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக