சனி, 16 ஏப்ரல், 2011

ஸ்பெஷலான ஆளுக்காக விளையாடுறேன்!


பொடி வைக்கிறார் யுவராஜ்…
தாங்க முடியலடா சாமி… இந்தியா ஆடும் ஒவ்வொரு ஆட்டத்தையும் முழுசா பார்த்து முடிக்கறதுக்குள்ள நூறு தடவை செத்து பொழைக்க வேண்டியிருக்கு! ஈசியான ஆட்டத்த கூட பயங்கரமா சொதப்பி, தாங்களும் டென்ஷனாகி ரசிகர்களையும் பாடாய் படுத்தி… திக்கி திணறி ஜெயிச்சாதான் நம்ம பசங்களுக்கு தூக்கமே வரும் போல. ஒரு வழியா கங்காருகளை கைமா பண்ணிவிட்டு அடுத்து பங்காளியை பதம் பார்க்க ரெடியாகிட்டாங்க.
மரணக் கிணறாக வர்ணிக்கப்பட்ட பி பிரிவில் கால் இறுதிக்கு முன்னேறுவதற்குள்ளாகவே முன்னணி அணிகளுக்கு மூச்சு முட்டிவிட்டது. கொடைச்சல் கொடுத்துக்கிட்டிருந்த வங்கதேசம் தன்னோட கடைசி லீக் ஆட்டத்துல தென் ஆப்ரிக்காவிடம் சரணடைந்ததுமே ரூட் கிளியர். சென்னையில் நடந்த போட்டியில் ஜெயித்தால் ஆஸ்திரேலியா, தோற்றால் இலங்கையுடன் மோத வேண்டியிருக்கும் என்று முன்கூட்டியே தெரிந்துதான் இருந்தது. ஆஸ்திரேலியாவை தவிர்ப்பதற்காக வெஸ்ட் இண்டீசிடம் தோற்றால் கூட நல்லதுதான் என்று ரசிகர்கள் கணக்கு போட்டுக் கொண்டிருந்தார்கள். இந்திய வீரர்கள் அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் வெற்றியில் கண்ணும் கருத்துமாக இருந்தார்கள்.
சர்வதேச சதத்தில் சதம் அடிக்கும் வாய்ப்பு பற்றியெல்லாம் கவலைப்படாமல், நடுவரின் தீர்ப்புக்காக காத்திருக்காமல்… மனசாட்சிக்கு மதிப்பு கொடுத்து நடையைக் கட்டிய சச்சினின் மதிப்பு கிரிக்கெட் அரங்கில் இன்னும் ஒரு படி உயர்ந்தது. கிடைத்த வாய்ப்பை உடும்பு மாதிரி பிடித்துக் கொண்டார் அஷ்வின். அதுவும் இன்னிங்ஸ் தொடக்கத்திலேயே புதுப் பந்தை வைத்துக் கொண்டு முன்னணி பேட்ஸ்மேன்களை கட்டுப்படுத்துவது பெரிய விஷயம். வெஸ்ட் இண்டீஸ் பெருசா அலட்டிக் கொள்ளவில்லை.
முதல் கால் இறுதியிலும் படு கேஷுவலாக விளையாடி பாகிஸ்தானிடம் மண்டியிட்டது பெரிய ஏமாற்றம். கேல், போலார்டு அதிரடி எடுபடாவிட்டால் அந்த அணி செத்த பாம்புதான் என்பது உறுதியாகிவிட்டது. ஆட்டத்துக்கு ஆட்டம் விக்கெட்டுகளை அள்ளும் அப்ரிடி இரண்டு கைகளையும் மேலே உயர்த்தி ஆர்ப்பரிக்கும் காட்சி அப்படியே பிரீஸ் ஆகி நிற்கிறது. எல்லாருக்கும் முன்பாக அரை இறுதியில் அடி வைத்து மொகாலியில் காத்துக் கொண்டிருக்கிறது பாகிஸ்தான். அடுத்த குவார்ட்டர் அகமதாபாத்தில்… ஹாட்ரிக் சாம்பியன் ஆஸ்திரேலியாவுடன் மோதப் போகிறோம் என்றதுமே எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாய் எகிறி ரசிகர்களின் படபடப்பு அபாய கட்டத்தை எட்டிக் கொண்டிருந்தது.
பவுன்சர் போட்டு தாக்குவோம் என்று ஆஸி. வேகங்கள் வெளிப்படையாக மிரட்டல் விடுத்துக் கொண்டிருந்தார்கள். வீரர்கள் தேர்வில் பல்வேறு காம்பினேஷன்களை யோசித்து சோசித்து கூல் கேப்டன் டோனி கொதிநிலைக்கே போய்விட்டார். பார்மில் இல்லாத பான்டிங் பார்த்துப் பார்த்து விளையாடி சதம் அடித்தாலும், மற்ற வீரர்களை அடிக்க விடாமல் பார்த்துக் கொண்டார்கள் இந்திய பவுலர்கள். அஷ்வின், ஜாகீர் கூட்டணி நன்றாகவே ஒர்க் அவுட் ஆகிறது. அகமதாபாத் ஆடுகளத்துக்கு 260 பெரிய ஸ்கோர்… இந்தியாவுக்கு நெருக்கடி நிச்சயம் என்று கணிப்பு கந்தசாமிகள் வயிற்றில் புளியைக் கரைத்தார்கள். திக்கு தெரியாமல் திகைத்த சேவக் சீக்கிரமே பெவிலியனுக்கு வழி தேடிக் கொள்ள, சச்சின் பொறுப்பை சுமந்தார். அவரும் கம்பீரும் ஆடிக் கொண்டிருந்தபோது எல்லாமே நல்லாத்தான் போய்க்கிட்டிருந்தது.
அரைசதம் அடித்ததும் சச்சின் கழன்று கொள்ள டென்ஷன் ஏற ஆரம்பித்தது. கோஹ்லி தேவையே இல்லாமல் தூக்கி அடித்து விக்கெட் தானம் செய்து வெறுப்பேற்றினார். யுவராஜ் – கம்பீருக்கு ஓட்டம் ஒர்க் அவுட் ஆகவில்லை. ரன் அவுட் ஆகியே தீர்வது என்று கங்கணம் கட்டிக் கொண்டு செயல்பட்டார் கம்பீர். ஆஸி. வீரர்களே வேண்டாம் என்றால் கூட விடுவதாயில்லை! கண்ணை மூடிக் கொண்டு ஓடி கிணற்றில் விழுந்து மூழ்கினார் கம்பீர். எப்படி நம்ம கட் ஷாட் என்று ஸ்டைலாக ஆட முயன்ற டோனி தலையை தொங்கபோட்டபடி வெளியேற கவுத்துட்டாங்கய்யா கவுத்துட்டாங்க என்று ரசிகர்கள் தொங்க ஆரம்பித்தார்கள்.
சனி பகவானுக்கு நல்லெண்ணெய் விளக்கு போட்டு பார்முக்கு வந்துள்ள யுவராஜ் எதைப் பற்றியும் கவலைப்படவில்லை. இடத்தை தக்கவைத்துக் கொள்ளும் உறுதியுடன் ரெய்னா கம்பெனி கொடுக்க லீ, டெய்ட் வேகத்தை சிதறடித்து வெற்றியை வசப்படுத்திய யுவராஜின் கர்ஜனையில் சர்தார் பட்டேல் ஸ்டேடியம் குலுங்கியது. உலக் கோப்பையில் இருந்து வெளியேற்றப்பட்டோம் என்பதை சாம்பியன் ஆஸ்திரேலியாவால் நம்பவே முடியவில்லை. கங்காருகளின் 13 ஆண்டு ஆதிக்கத்துக்கு முடிவு கட்டியது இந்தியா.
தொடர்ந்து நான்காவது முறையாக ஆட்டநாயகன் விருதுடன் போஸ் கொடுத்த யுவராஜ், ‘எனது வாழ்க்கையில் முதல் முறையாக நிருபர்கள் சந்திப்பில் கைதட்டல் வாங்கியிருக்கிறேன். தோற்றால் வெளியேறி விடுவோமே… எவ்வளவு ஏமாற்றமாக இருக்கும்… என்று மனதில் எத்தனையோ எண்ணங்கள் ஓடிக் கொண்டிருந்தாலும் எல்லாவற்றையும் கட்டுப்படுத்திக் கொண்டு, கடைசி வரை களத்தில் நிற்க வேண்டும்… தூக்கி அடிக்கவே கூடாது… வெற்றியைப் பறித்தே தீர வேண்டும் என்று விளையாடினேன். இந்த உலக கோப்பையில் ஒரு ஸ்பெஷலான நபருக்காக உறுதியுடன் விளையாடி வருகிறேன். இந்தியா பைனலுக்கு முன்னேறினால் ஏப்ரல் 2ம் தேதி அது யார் என்பதை வெளிப்படுத்துவேன்’ என்று புதிர் போட்டார் யுவராஜ். அவரது காதலி என்று சிலரும் சச்சின் என்று பலரும் கணித்திருக்கிறார்கள். இன்னும் இரண்டே ஆட்டம்… இந்தியா கோப்பையை முத்தமிட. கமான் பாய்ஸ்… அட்வான்ஸ் கங்கிராட்ஸ்!

பா.சங்கர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக