சனி, 16 ஏப்ரல், 2011

ஆஸ்திரேலிய ஆதிக்கத்துக்கு ஆப்பு!


உலக கோப்பையில் ஆஸ்திரேலிய அணியின் 13 ஆண்டு கால ஆதிக்கம் முடிவுக்கு வந்துள்ளது. தொடர்ந்து நான்காவது முறையாக சாம்பியன் பட்டத்தை வெல்லும் கனவுடன் இருந்த கங்காருகளுக்கு நாக் அவுட் சுற்றில் மரண அடி கொடுத்தது டோனி அண்ட் கோ.
ஹாட்ரிக் சாம்பியன் என்ற அந்தஸ்து, ஒருநாள் போட்டிகளில் நம்பர் 1 அணி, உலக கோப்பையில் தொடர்ச்சியாக 29 ஆட்டங்களில் தோல்வியை சந்திக்காத அணி… என்று காலரைத் தூக்கிவிட்டுக் கொண்டு களமிறங்கியது ஆஸ்திரேலியா. ஏ பிரிவில் 5 லீக் ஆட்டங்களில் 4 வெற்றி ஒரு போட்டி மழையால் ரத்து என தனது தோல்வி இல்லா பயணத்தின் எண்ணிக்கையை 34 ஆட்டங்களாக ஆஸி. அதிகரித்தபோது, இந்த முறையும் கோப்பையை தூக்கிக் கொண்டு ஓடி விடுவார்களோ என்று உண்மையிலேயே பீதியைக் கிளப்பினார்கள்.
பாகிஸ்தான் அணியுடனான லீக் ஆட்டத்தில் ஆஸி.யின் வெற்றி நடைக்கு முட்டுக்கட்டை போடப்பட்டது. இருந்தாலும், கால் இறுதியில் சாம்பியனை சமாளிக்குமா இந்தியா? என்ற கேள்வி ரசிகர்களின் வயிற்றில் புளியைக் கரைத்தது நிஜம். அகமதபாத்தில் நடந்த போட்டியில் பார்மில் இல்லாத பாண்டிங் சதம் அடித்தாலும் மற்ற வீரர்களை பெரிய ஸ்கோர் அடிக்க விடாமல் இந்திய பவுலர்கள் கட்டுப்படுத்தினர். சேசிங்கில் சச்சின், கம்பீர் உறுதியாக ஆடினாலும் ஒரு கட்டத்தில் அடுத்தடுத்து விக்கெட் சரிந்தபோது ஆஸி.க்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருந்தது.
ஆனால், நடப்பு தொடரில் மகத்தான ஆல்ரவுண்டராக ஜொலித்து வரும் யுவராஜ் கொஞ்சம் கூட அலட்டிக் கொள்ளாமல் வெற்றியை வசப்படுத்தியதுடன் 4வது முறையாக ஆட்டநாயகன் விருதை தட்டிச் சென்றார். அவருக்கு அருமையாக கம்பெனி கொடுத்த ரெய்னாவின் பங்கும் அற்புதமானது. இந்த வெற்றியால், கடந்த 13 ஆண்டுகளாக உலக கோப்பையில் ஆஸி. அணி செலுத்தி வந்த ஆதிக்கத்துக்கு முடிவு கட்டப்பட்டுள்ளது.
நட்சத்திர வீரர்களான கில்கிறிஸ்ட், மெக்ராத், வார்ன், ஹேடன் ஆகியோர் ஓய்வு பெற்றதில் இருந்தே ஆஸி. அணியின் பிடி தளரத் தொடங்கிவிட்டது. பேட்டை ரவுடி போல அமர்க்களம் செய்து கொண்டிருந்த அந்த அணியையும் வீழ்த்த முடியும் என்று உலகுக்கு உணர்த்தியதே இந்தியாதான். பல தொடர்களில் பதிலடி கொடுத்து தண்ணி காட்டியதுடன், ஆஸ்திரேலியாவின் பாரம்பரியமான முத்தரப்பு தொடரில் முதல் முறையாக தோல்வியைப் பரிசளித்து அசத்தியது இந்தியா.
இதைத் தொடர்ந்தே மற்ற அணிகளும் ஆஸ்திரேலியாவை எதிர்த்து அடிக்க ஆரம்பித்தன. சமீபத்தில் நடந்த ஆஷஸ் தொடரில் ஆஸ்திரேலியாவை இங்கிலாந்து புரட்டி எடுத்தது குறிப்பிடத்தக்கது. உலக கோப்பை தோல்வியை அடுத்து ஆஸ்திரேலிய ஆதிக்கம் முழுமையாக முடிவுக்கு வந்துவிட்டது.

பா.சங்கர் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக