செவ்வாய், 26 ஏப்ரல், 2011

மொகாலி மாப்பிள்ளை வல்தாட்டி


கல்யாண சாப்பாட்டை மூக்கு முட்ட ஒரு கை பார்த்துவிட்டு வெளியே வந்தவர்களை சுடச் சுட பிரியாணி விருந்துக்கு கூப்பிட்டால் எப்படி இருக்கும்? அந்த மாதிரி இருக்கிறது கிரிக்கெட் ரசிகர்களின் நிலை! உலக கோப்பையை 28 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா கைப்பற்றியதை கொண்டாடக் கூட அவகாசம் இல்லாமல், ஐபிஎல் டி20 கலாட்டா ஆரம்பித்ததில் கொஞ்சம் தொங்கித்தான் போனார்கள். லீக் ஆட்டங்கள் ஓரளவுக்கு சூடு பிடிக்க ஆரம்பித்திருப்பதால், ஹேங் ஓவர் கொஞ்சம் கொஞ்சமாய் ரிலீசாகத் தொடங்கி இருக்கிறது.
கொல்கத்தா நைட் ரைடர்சுடனான தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சூப்பர் கிங்ஸ் 2 ரன் வித்தியாசத்தில் வென்றது சென்னை ரசிகர்களுக்கு டபுள் போனசாக அமைந்தது. கேப்டன் டோனியின் கூலான அணுகுமுறை மீண்டும் பாராட்டுகளை அள்ளியது. அனிருதாவின் அதிரடியில் அப்பா ஸ்ரீகாந்த்தை பார்க்க முடிந்தது ஸ்வீட் சர்ப்ரைஸ். உள்ளூர் ஆட்டத்தில் சமாளித்தாலும், மொகாலியில் கிங்ஸ் லெவனிடம் சூப்பர் கிங்ஸ் பாச்சா பலிக்கவில்லை.
முதல் பந்தில் அனிருதா… அடுத்த பந்தில் ரெய்னா… இருவரும் தங்க முட்டை போட்டு திரும்பினாலும் விஜய், பத்ரியின் அமர்க்களமான ஆட்டத்தில் ஸ்கோர் எகிறியது. டோனியும் தன் பங்குக்கு விளாச 188 ரன் சேர்ந்தபோது, வெற்றிக்கு இது போதும் என்றுதான் தோன்றியது. ஆனால், கிங்ஸ் லெவன் தொடக்க வீரர் பால் வல்தாட்டி சிஎஸ்கே பந்துவீச்சை வாட்டி வதைத்துவிட்டார். என்ன நடக்குது என்பதை புரிந்து கொள்வதற்கு முன்பாகவே கேம் ஓவர்! 52 பந்தில் ஐபிஎல் 4வது சீசனின் முதல் சதத்தை விளாசிய வல்தாட்டி, 120 நாட் அவுட் ஸ்கோருடன் ஆட்டநாயகன் விருதையும் ஆரஞ்சு தொப்பியையும் அபகரித்துக் கொண்டார். யாருப்பா இந்த வல்தாட்டி என்று புருவம் உயர்த்தாதவர்களே இல்லை.
அந்த அற்புதமான ஆட்டத்துக்கு பின்னே ஒரு அயராத போராட்டம் இருந்திருக்கிறது. சச்சின், காம்ப்ளி என்று பள்ளிச் சிறுவர்களை சாதனையாளர்களாக அடையாளம் காட்டிய மும்பை ப்ராடக்ட்தான் இவரும். இர்பான், பார்திவ் ஆகியோரோடு 2002 இந்திய இளைஞர் அணியில் இடம் பிடித்தவருக்கு, சீனியர் அணியிலும் சீட் நிச்சயம் என்ற நிலையில் ஒரு விபத்து அந்த கனவை கலைத்தது துரதிர்ஷ்டத்தின் உச்சம் என்றுதான் சொல்ல வேண்டும். நியூசிலாந்தில் விளையாடியபோது எதிர்பாராத விதமாக வலது கண்ணை தாக்கிய பந்து பார்வையை பறிக்கும் அளவுக்கு பலமான சேதத்தை ஏற்படுத்த கலங்கிப் போனார் வல்தாட்டி.. காயம் குணமாகி பார்வை சீராவதற்குள் மூன்று ஆண்டுகள் ஓடிவிட்டன. கிரிக்கெட் வாழ்க்கை அவ்வளவுதான் என்று நொறுங்கிப் போயிருந்தவருக்கு ஐபிஎல் வடிவில் மறுவாழ்வு கிடைத்திருக்கிறது.
கடந்த ஆண்டு மும்பை அணிக்காக ரஞ்சி டி20ல் விளையாடியபோது இவர் அடித்த சிக்சரில் ஸ்டேடியத்துக்கு வெளியே நிறுத்தியிருந்த காரின் கண்ணாடி அவுட்!, ராஜஸ்தான் ராயல்ஸ், ஏர் இந்தியா என்று ஆடிக் கொண்டிருந்தவர் இந்த முறை கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டாலும், பெரிய எதிர்பார்ப்பு எதுவும் இல்லை. சிஎஸ்கேவுக்கு எதிரான ஆட்டத்துக்குப் பிறகு எல்லாமே தலை கீழாகி இருக்கிறது. இந்த சீசன் முழுவதும் வல்தாட்டி மீது வெளிச்ச வட்டம் வீசிக் கொண்டுதான் இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
உலக கோப்பை ஹீரோ யுவராஜ் தலைமையில், புதிதாய் வந்த புனே வாரியர்ஸ் ஃபுல் த்ராட்டிலில் உருமிக் கொண்டிருக்கிறது. முதல் ஆட்டத்தில் கிங்ஸ் லெவனையும் அடுத்து கொச்சி டஸ்கர்சையும் புரட்டி எடுத்த புனே இன்னும் பல ஆச்சரியங்களைத் தரும் என்றே தோன்றுகிறது. குறிப்பாக, உத்தப்பா சிக்சர்கள் கொள்ளை அழகு!
இளைஞர்களுக்கு சவால் விடும் சச்சின், ஷேன் வார்ன் ஆட்டம் செமத்தியான ட்ரீட். வார்னர், வேணுகோபால் கொஞ்சம் மிரட்டினாலும் சேவக் அதிரடி எடுபடாததால் சோளக்கொள்ளை பொம்மையாக டேர்டெவில்ஸ். ‘ஐபிஎல் டி20ல் ஆடியது போதும்… இங்கிலாந்து டூருக்கு தயாராகணும், சீக்கிரம் வந்து சேருங்க’ என்று இலங்கை வீரர்களுக்கு அந்நாட்டு வாரியம் அழைப்பு விடுத்திருப்பதால் டென்ஷன். மலிங்காவின் யார்க்கர் இல்லாவிட்டால் மும்பை இந்தியன்ஸ் பல் பிடுங்கிய பாம்பாகி விடும். சங்கக்கரா, ஜெயவர்தனே, தில்ஷன் என்று 10 வீரர்கள் ஒரே நேரத்தில் ஜகா வாங்கினால் எப்படி சமாளிப்பது என்று எல்லா அணிகளும் தலையை பிய்த்துக் கொண்டிருக்கின்றன.
நல்ல வேளையாக, வங்கதேச ஒருநாள் தொடர் முடிந்து ஆஸ்திரேலிய வீரர்கள் வந்து கொண்டிருப்பது கொஞ்சம் தெம்பூட்டியுள்ளது. ஏற்கனவே உற்சாகமாக இருக்கும் ராஜஸ்தான் ராயல்ஸ், வாட்சனின் வரவால் துள்ளிக் குதிக்கிறது. 15 சிக்சர் உலக சாதனையோடு வந்திருக்கிறார். அதே வேகத்தில் ஆடினால் எதிரணி பந்துவீச்சு அதோகதிதான்!
ஐபிஎல் வாய்ப்பை பயன்படுத்தி மீண்டும் இந்திய அணியில் இடம் பிடித்துவிட வேண்டும் என்று நிறைய வீரர்கள் உயிரைக் கொடுத்து விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். புனே, மும்பை, ராஜஸ்தான் முன்னணியில் இருந்தாலும், இன்னும் நிறைய லீக் ஆட்டங்கள் இருப்பதால் எல்லா அணிகளுமே நம்பிக்கையோடுதான் உள்ளன.

பா.சங்கர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக