எதிர்பார்த்தது போலவே ஐபிஎல் 4வது சீசன் சூடு பிடித்துவிட்டது. கடைசி ஓவர் கடைசி பந்து வரை வெற்றி கண்ணாமூச்சி ஆடும் ஆட்டங்கள், ரசிகர்களை பேச வைத்திருக்கின்றன. இலங்கை வீரர்களுக்கான கெடு மே 18 வரை நீட்டிக்கப்பட்டிருப்பதால் அணிகளின் உரிமையாளர்கள் ரிலாக்ஸ் ஆகியிருக்கிறார்கள்.
கோப்பைக்கான ரேசில் டேர்டெவில்ஸ், ராயல் சேலஞ்சர்சுக்கு ஸ்டார்ட்டிங் டிரபுள். சாம்பியன் சிஎஸ்கே, டெக்கான், புனே, ராயல்ஸ் மிதவேகத்தில் மிதக்க… மும்பை, நைட் ரைடர்ஸ், கிங்ஸ் லெவன், கொச்சி டஸ்கர்ஸ் அணிகள் பறந்து கொண்டிருக்கின்றன. லொக்க பிளேயர்சா செலக்ட் பண்ணியிருக்காங்க… கொச்சி அணி தேறாது என்று கணித்தவர்கள் எல்லாம் கப்சிப்! கடந்த சீசனில் தடை விதிக்கப்பட்ட ரவீந்திர ஜடேஜா, ஆல்ரவுண்டராக ஜொலித்து வட்டியும் முதலுமாய் வசூலித்துக் கொண்டிருக்கிறார். சிக்சர் மன்னர்களில் இவருக்கு தனி இடம் நிச்சயம்.
அதிக ரன் குவிப்புக்கான ஆரஞ்சு தொப்பியை கைப்பற்றுவதில் மும்பை கேப்டன் சச்சின் - பஞ்சாப் ஓபனர் வல்தாட்டி இடையே ஏற்பட்டிருக்கும் போட்டி வெகு சுவாரசியம். கில்கிறிஸ்ட் ராசியில் வெற்றிகள் குவிவதால் பிரீத்தி ஜிந்தாவுக்கு செம குஷி! பஞ்சாப் – ராஜஸ்தான் மோதிய லீக் ஆட்டம் ஆஸி. உள்ளூர் கிளப் போட்டி போல இருந்தது.
ராயல்ஸ் கேப்டன் ஷேன் வார்ன் பந்துவீச்சை கிங்ஸ் லெவனின் ஷான் மார்ஷ் போட்டுத் தாக்கியது அமர்க்களமாக இருந்தது. காதலர் வார்ன் (41) ஆட்டத்தை பார்ப்பதற்காக நடிகை எலிசபத் ஹர்லி (45) தனது மகன் டேமியனுடன் மொகாலி வந்திருந்தார். வார்னின் திருவிளையாடல்களால் ஹர்லிக்கு காதல் கசந்துவிட்டது என்று கசிந்த தகவல் காற்றில் கரைந்து காணாமல் போனது. வார்ன் முதல் மனைவி சைமன் கல்லஹனின் குழந்தைகள் புரூக், சம்மர், ஜாக்சன் மூவரும் ஹர்லியோடு அமர்ந்து ஆட்டத்தை ரசித்தது ஆச்சரியம்.
பிங்க் டாப்ஸ், நீல நிற ஜீன்ஸ், கை நிறைய தங்க வளையல்கள் என்று அம்சமாக இருந்தார் ஹர்லி. ராயல்ஸ் கை ஓங்கிய போதெல்லாம் ஹர்லி கைகளை உயர்த்தி ஆர்ப்பரித்தது கண் கொல்லும் காட்சி! ‘முதல் முறையாக கிரிக்கெட் போட்டியை நேரில் பார்த்து ரசித்தேன். மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. அவரோட ராயல்ஸ் டீம் ஜெயித்திருந்தால் இன்னும் கொண்டாட்டமாக இருந்திருக்கும். அடுத்த ஆட்டத்தில் அது நடக்கும் என நம்புகிறேன்’ என்றார் உற்சாகமாக. வார்ன் முகத்தில் பொலிவு கூடியிருப்பதற்கான ரகசியம் விளங்கிவிட்டது!
இலங்கை வீரர்கள் மே 5க்குள் பேக்கப் ஆகிவிடுவார்களே… மாற்று வீரர்களுக்கு எங்கே போவது என்று நகத்தை கடித்துக் கொண்டிருந்த அணிகளுக்கு, மே 18 வரை ஐபிஎல் போட்டியில் ஆடலாம் என்று அந்நாட்டு வாரியம் அனுமதித்திருப்பது பெரிய ரிலீப். ஜெயவர்தனே ரிலீவானால் டஸ்கர்ஸ் அணியில் சேர்ந்து கொள்ளலாம் என்ற கங்குலியின் கனவு கலைந்தது துரதிர்ஷ்டம். எப்படியாவது கங்குலிக்கு வாய்ப்பு கொடுத்துவிட வேண்டும் என்று கொச்சி உரிமையாளர்களும் முயற்சி செய்து கொண்டேதான் இருக்கிறார்கள். யாராவது காயம் அடைந்தால் கங்குலிக்கு ஆதாயம்!
வெஸ்ட் இண்டீஸ் தேர்வுக் குழுவினர் அலட்சியப்படுத்திய ஆத்திரத்தில், அடுத்த பிளைட் பிடித்து பெங்களூர் வந்துவிட்டார் கிறிஸ் கேல். அணியில் சேர்க்கவில்லை என்றால் வீட்டில் உட்கார்ந்திருக்க வேண்டியதுதானே… எப்படி ஐபிஎல் டி20 ஆடப் போகலாம்? என்று வெ.இ. வாரியம் அங்கலாய்க்கிறது. ‘நீங்களும் சேர்க்க மாட்டேங்கறீங்க. சீனியர்ஸ் சர்வான், சந்தர்பாலையே சேர்த்துக்கல. என்னோட எதிர்காலம் என்னாகறது. ஐபிஎல்ல விட்டா எனக்கு யாரை தெரியும்… வேற எங்கே போவேன்’ என்று கலாய்க்கிறார் கேல். அவரது வருகையால் ராயல் சேலஞ்சர்ஸ் கொஞ்சம் தெம்பாகி இருக்கிறது.
‘இந்த முறை சாம்பியன் யார் என்பதை கணிப்பது அவ்வளவு சுலபம் இல்லை. போட்டி மிகவும் கடுமையாக இருக்கிறது. கடைசி லீக் ஆட்டம் வரை நாக் அவுட் சஸ்பென்ஸ் நீடிக்கும் என நினைக்கிறேன். கொச்சி, புனே என புதிதாய் இரண்டு அணிகள் வந்திருப்பதால் நெருக்கடி அதிகரித்திருக்கிறது. லீக் சுற்றில் சென்னை அணி எப்போதுமே கொஞ்சம் தடுமாற்றத்துடந்தான் ஆடும். போகப் போகப் பாருங்க… சூப்பரா ஆடி அமர்க்களப்படுத்தி விடுவோம்’ என்று நம்பிக்கையோடு சொல்கிறார் சுழல் நட்சத்திரம் அஸ்வின்.
சச்சின் – ராயுடு, கில்கிறிஸ்ட் – வல்தாட்டி, சேவக் – வார்னர் ஜோடிகளின் அதிரடி ஆட்டம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. முதல் இரண்டு ஜோடியும் சூப்பர் டூப்பர் ஹிட். வார்னர் வெளுத்துக் கட்டினாலும், சேவக் கை பிடிக்காததால் டேக் ஆப் ஆக முடியாமல் ரன்வேயிலேயே ஊர்ந்து கொண்டிருக்கிறது டேர்டெவில்ஸ். இன்னும் எக்கச்சக்க லீக் ஆட்டங்கள் எஞ்சியிருப்பதால் எந்த அணியையுமே ஒதுக்கிவிட முடியாது. எல்லோருக்கும் வாய்ப்பு இருக்கிறது.
பா.சங்கர்