சனி, 26 மே, 2012

உலுக்கி எடுக்குது ஸ்பாட் பிக்சிங்

வெற்றிக்கு, கடைசி பந்தில் 5 ரன் வேண்டும். பவுண்டரி அடித்தால் கூட போதாது என்ற நிலையில் அமர்க்களமான சிக்சர் தூக்கிய பிராவோவின் அசகாய ஷாட்டை கூட ஸ்பாட் பிக்சிங் சர்ச்சையால் சந்தேகக் கண் கொண்டு பார்க்கும் நிலை ஏற்பட்டுள்ளது. கடைசி ஓவர், கடைசி பந்து வரை நகம் கடிக்க வைக்கும் பரபரப்பான ஆட்டங்கள் எல்லாமே திட்டமிட்டு அரங்கேறும் நாடகம் என்று ரசிகர்கள் வேதனையுடன் விவாதிப்பது, ஐபிஎல் போட்டியின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கி உள்ளது.
தொடக்கத்தில் டல் அடித்த ஆட்டங்கள் போகப் போக சூடு பிடித்து அனல் பறக்க…, மேட்ச் பிக்சிங்காக இருக்குமோ என்று லேசாகப் புகைய ஆரம்பித்தது. அது எப்படி சொல்லி வைத்த மாதிரி எல்லா ஆட்டமும் கடைசி பந்து வரை ஹிட்ச்காக் த்ரில்லராய் அமைய முடியும்? பாதாளம் நோக்கி பாய்ந்து கொண்டிருந்த டிவி பார்வையாளர் ரேட்டிங்கை தூக்கிப் பிடிக்கத்தான் இப்படி செய்கிறார்கள் என்று அரசல் புரசலாக பேச்சு அடிபட்டது.
ஐபிஎல் முதல் சீசனில் 5, 2வது சீசனில் 6, அப்புறம் 2, 3 என்று இருந்த கடைசி பந்து த்ரில்லர் ஷோ… இந்த முறை இரட்டை இலக்கத்தை எட்டியிருக்கிறது என்ற புள்ளி விவரம் எரிகிற கொள்ளியில் எண்ணெய் ஊற்றுகிறது. இப்படி ஏற்கனவே சந்தேகத் தீயில் வெந்து கொண்டிருந்த ரசிகர்கள், ஸ்பாட் பிக்சிங் சூதாட்டம் அமோகமாக நடப்பதை ஒரு டிவி சேனல் அம்பலப்படுத்தியதில் சாம்பலாகிப் போயிருக்கிறார்கள்.
அந்த சேனல் விரித்த வலையில் ஸ்ரீவஸ்தவா, சுதிந்திரா, அமித் யாதவ், மோனிஷ் மிஷ்ரா, அபினவ் பாலி ஆகிய 5 வீரர்கள் சிக்கியது ஐபிஎல் அஸ்திவாரத்தையே ஆட்டம் காண வைத்துள்ளது. ஒரு நோ பால் போட பத்து லட்சம் ரூபாய் என்றால், கடைசி பந்தில் புல் டாஸ் போட எத்தனை கோடி கேட்பார்கள்/கொடுப்பார்கள் என்ற கேள்வி எழுவதை தவிர்க்க முடியவில்லை. ஐபிஎல் போட்டி மட்டுமல்ல, ரஞ்சி டிராபி போன்ற உள்ளூர் போட்டிகளைக் கூட இந்த சூதாட்ட ஆக்டோபஸ் ஆக்கிரமித்திருக்கிறது.
வெளி நாட்டு கேப்டன் ஒருவருக்கும் இதில் தொடர்பு இருக்கிறது என்கிறார்கள். சர்வதேச போட்டியில் ஆடாத வீரருக்கு அதிகபட்சமாக 30 லட்சம்தான் கொடுக்க முடியும். ஆனால், அணி ஓனர்கள் மீட்டருக்கு மேலே போட்டுக் கொடுக்கிறார்கள் என்பதும் அதிர்ச்சியை அதிகப்படுத்தியிருக்கிறது. கிங்ஸ் லெவன் வீரர் ஸ்ரீவஸ்தவாவுக்கு 70 லட்சம் பிளாக்கில் கிடைத்திருக்கிறதாம். மாடல் அழகிகள், நடிகைகள் என்று மொடாக் கணக்கில் தேன் குடித்த நரிகளாய் வீரர்கள் போதையில் போடும் ஆட்டம் இது என்ற கூடுதல் தகவல் கிரிக்கெட்டை கேவலப்படுத்துவதாக உள்ளது.
இப்போதுதான் தூக்கம் கலைந்து எழுவது போல நடிக்கும் ஐபிஎல் நிர்வாகம், 5 வீரர்களையும் சஸ்பெண்ட் செய்து விசாரணைக்கும் உத்தரவிட்டுள்ளது. ஸ்பாட் பிக்சிங் சர்ச்சையில் சிக்கிய பாகிஸ்தான் வீரர்கள் கம்பி எண்ணியதை பார்த்த பிறகும், இளம் வீரர்கள் இப்படி பணத்துக்காக விளையாட்டை விலை பேசியிருப்பதை ஜீரணிக்க முடியவில்லை.
ஸ்டேடியத்துக்கு வெளியே பறக்கும் வானளாவிய சிக்சர், அப்படியே பாய்ந்து பறந்து பிடிக்கும் அசாத்தியமான கேட்ச் எல்லாமே பொய்யாக இருக்குமோ? என்ற நினைப்பு மனதை ரணகளமாக்குகிறது. ஐபிஎல் போட்டியை கிரிக்கெட் வாரியம் நடத்தக் கூடாது என்று மத்திய அமைச்சர் மாக்கன் கூறுவது நியாயமானது என்றே தோன்றுகிறது. உலகின் பணக்கார விளையாட்டு அமைப்பு என்று பீற்றிக் கொண்டால் மட்டும் போதாது. நேர்மையான, வெளிப்படையான நிர்வாகம் நடப்பதை உறுதி செய்ய, தகவல் அறியும் உரிமை சட்ட வரம்புக்குள் வாரியம் வர வேண்டும் என்று மாக்கன் நெற்றியடி அடித்திருக்கிறார்.
சூதாட்ட பூதம் கிளம்பியதில், பிளே ஆப் சுற்றுக்கான எதிர்பார்ப்பு போயே போச்சு. சென்னை போராடி ஜெயித்தால் கூட, எல்லாம் ஏற்கனவே பிக்ஸ் செஞ்சுட்டாங்கப்பா என்று சிலர் அங்கலாய்க்கும்போது அவர்களுக்கு பதிலடி கொடுக்க வார்த்தை வர மாட்டேன் என்கிறது.
மும்பை கிரிக்கெட் சங்க நிர்வாகிகளையும், கிரிக்கெட் வாரியத்தையும் கொல்கத்தா அணி ஓனர் நடிகர் ஷாருக் போதையில் வசை பாடியதாகக் கிளம்பிய சர்ச்சையும் தன் பங்குக்கு ஐபிஎல் இமைஜை டேமேஜ் ஆக்கியிருக்கிறது. வாங்கடே ஸ்டேடியத்தில் ஷாருக் ஆயுசுக்கும் கால் வைக்கக் கூடாது என்று தடை போட்டிருக்கிறார்கள். கேலரியில் புகை விட்ட வழக்கோடு இதுவும் சேர்ந்து கொள்ள… ஷாருக் முகத்தில் கரி மேக்கப்பின் கனம் கூடிக் கொண்டே போகிறது. இன்னும் ஒரு வாரத்தை எப்படி ஓட்டப் போகிறார்களோ?.
பா.சங்கர்


கரீபிய சிக்சாசுரன்!


ஐபிஎல் சீசன் 5 இறுதிக் கட்டத்தை நெருங்கிவிட்டது. ரைடர்சும் டெவில்சும் அரை இறுதி வாய்ப்பை உறுதி செய்துவிட்ட நிலையில்… சார்ஜர்ஸ்,  வாரியர்ஸ் மூட்டை கட்ட தயாராகிவிட்டார்கள். மற்ற இரண்டு இடங்களுக்குத்தான் குடுமிப்பிடி சண்டை நடக்கிறது. ஐந்து அணிகள் அடித்துக் கொள்வதால் ஒரே களேபரம்.
மும்பை இந்தியன்சுடன் வாங்கடே மைதானத்தில் நடந்த போட்டியில் சிஎஸ்கே ஆட்டம் நல்லாத்தான் போய்க்கிட்டிருந்தது. கடைசி 3 பந்தில் 14 ரன் தேவை என்பதால் சென்னை ரசிகர்கள் தெம்பாக இருந்தார்கள். ஹில்பென்ஹாஸ் ‘எப்படி யார்க்கர் போடுகிறேன் என்று மட்டும் பாருங்க’ என்று அலட்டலாகப் போட வேய்ன் ஸ்மித் சிக்சர், பவுண்டரி, பவுண்டரி என்று அசால்ட்டாகத் தூக்கி வெற்றியைத் தட்டிப் பறித்தார்.  
நம்ப முடியாத அசாத்தியமான விஷயத்தை ஜஸ்ட் லைக் தட் செய்து காட்டிய ஸ்மித், ‘சிங்கிள் எடுத்து எங்கிட்ட ஸ்டிரைக் கொடுங்க மத்தத நான் பாத்துக்கிறேன் என்று ஆர்.பி.சிங்கிடம் சொன்னேன். வாய்ப்பு கிடைத்தால் மூன்று பந்தையும் விளாச முடியும் என்ற நம்பிக்கை இருந்தது’ என்று ஏதோ அல்வா சாப்பிட்ட மாதிரி சொன்னார். மிச்சம் மீதி இருக்கிற எல்லா ஆட்டத்திலும் ஜெயித்தால்தான் பிளே ஆப் வாய்ப்பு என்ற நெருக்கடியில் சிஎஸ்கே விழி பிதுங்கிக் கொண்டிருக்கிறது.
இந்த போட்டி முடிந்த சில மணி நேரத்தில், பெங்களூரில் ஒரு கொல வெறி அரங்கேறியது. கடைசி 3 ஓவரில் 39 ரன் தேவை… சேலஞ்சர்ஸ் கதை கந்தல் என்று 99.00 சதவீதம் பேர் பெட் கட்டத் தயாராக இருந்தார்கள். ஸ்டார் பவுலர் ஸ்டெயினை விரட்டி விரட்டி அடித்தார் டிவில்லியர்ஸ். அடுத்து வந்த ஆனந்த ராஜனும் அவரது ஆக்ரோஷத்துக்கு முன் நொந்த ராஜன் ஆனார். இப்படியா அடிப்பார்கள்? வில்லியர்ஸ் விளையாட்டாய் விளாசியது 17 பந்தில் 47 ரன் மட்டுமே! கடைசி 3 ஓவரை போடச் சொல்லக் கூடாது என்று ஒப்பந்தத்திலேயே எழுதி வாங்கிக்கலாமா என்று சில பவுலர்கள் யோசிப்பதாகக் கேள்வி.
நைட் ரைடர்சுக்கு எதிராக ஈடன் கார்டனில், கங்குலியின் வாரியர்ஸ் களமிறங்கிய போட்டியில் கொல்கத்தா இரண்டுபட்டது! எதிர்பார்த்ததற்கும் மேலாகவே விறுவிறுப்பாக இருந்த போட்டியில் கம்பீர் அணி கம்பீரமாக வெற்றி பெற்றாலும், கங்குலியின் போராட்டம் ரசிகர்களைக் கொள்ளை அடித்தது. ரைடர்ஸ் ஓனர் ஷாருக் கானும் கங்குலியை கட்டியணைத்து பாராட்டி பழைய கசப்பான மெமரியை டெலீட் செய்தார்.
ஆட்டத்துக்கு ஆட்டம் கிறிஸ் கேல் அட்டகாசம் உச்சத்துக்கு போய்க் கொண்டிருக்கிறது. மும்பை இந்தியன்சை அப்படியே சாப்பிட்டார் இந்த கரீபிய சிக்சாசுரன்! 5வது சீசனில் 500 ரன் கடந்த முதல் வீரர் என்ற பெருமையுடன் சேவக் வசமிருந்த ஆரஞ்சு தொப்பியையும் அபகரித்தார். சேலஞ்சர்சின் வெற்றிக்குப் பின்னால் கேப்டன் வெட்டோரியின் தியாகம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. பார்மில் உள்ள முரளிக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்பதற்காக பெஞ்ச்சில் உட்கார முன்வந்த அவரது பெருந்தன்மை பிரமிக்க வைக்கிறது.
வாட்சன், டெய்ட் வாய்த்த மகிழ்ச்சியில் ராஜஸ்தான் ராயல்சை கையில் பிடிக்க முடியவில்லை. ஏற்கனவே ரஹானே, டிராவிட், ஷா என்று மிரட்டிக் கொண்டிருந்தவர்களுக்கு வாட்சனின் ஆல் ரவுண்ட் ஆட்டம் வரப்பிரசாதமாகிவிட்டது. ‘பாயின்ட்ஸ் டேபிள பாக்காதீங்க, ஆட்டத்துல மட்டும் கவனம் வைத்தால் போதும்’ என்பதே ராயல்ஸ் வீரர்களுக்கு கேப்டன் டிராவிட் வழங்கும் மந்திர ஆலோசனை. சூப்பர் கிங்சுக்கும் இது ஒர்க் அவுட் ஆகும் என்றாலும், அவசியம் இருக்குமா?
இந்த சீசனுக்கு இப்படி ஒரு வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கவே இல்லை என்று பூரிக்கிறார் ஐபிஎல் தலைவர் ராஜிவ் சுக்லா. டிக்கெட் கலெக்‌ஷனிலேயே அணி ஓனர்கள் கணிசமாக கல்லா கட்டுவார்கள் என்று கணக்கு சொல்கிறார். நெட்டில் பார்ப்பவர்களின் எண்ணிக்கையும் எகிறி இருக்கிறதாம்.
சுற்றுச் சூழல் அமைச்சக அனுமதி கிடைக்காததால் சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் 3 கேலரிகள் காலியாக இருப்பது பிரச்னையாகி உள்ளது. உள்ளூர் அணியும் சொதப்புவதால் பைனலை இங்கிருந்து மாற்றப் போகிறார்கள் என்றும் தகவல் கசிந்தது. அதெல்லாம் இல்லை, இறுதிப் போட்டி இங்குதான் நடக்கும் என்று தமிழ்நாடு கிரிக்கெட் சங்க நிர்வாகம் அடித்துச் சொன்னாலும், வாரியம் வாய் திறக்காததால் எதுவும் நடக்கலாம். 
பா.சங்கர்



வி லவ் இந்தியா…


உருகுகிறார் காலிஸ் காதலி
மிச்சம் மீதம் இருக்கும் ஆட்டங்களில் கட்டாயம் ஜெயித்தால்தான் அரை இறுதியில் அடி வைக்க முடியும் என்ற இக்கட்டான நிலையை நோக்கி அணிகள் அணிவகுக்கின்றன. குழப்பமான புள்ளி, ரன் ரேட் கணக்குகளை கூட்டிக் கழித்துப் பார்த்து டேலி ஆகாமல் ரசிகர்கள் மண்டை காயத் தொடங்கியிருக்கிறார்கள். சூப்பர் கிங்ஸ் சொதப்பல் கிங்ஸாகிவிட்டதால், அக்னி நட்சத்திர கொதிப்பில் கொஞ்சம் கூலான விஷயங்களாகப் பார்ப்போம். கிட்டத்தட்ட இரண்டு மாத தொடர் என்பதால் வெளிநாட்டு வீரர்கள் எல்லாம் மனைவி அல்லது காதலி சகிதமாகவே இந்தியா வந்திருக்கிறார்கள். விளையாட்டுக்கு விளையாட்டு! கோடிக் கணக்கில் சம்பளம், நாடு முழுக்க டூர், நட்சத்திர ஓட்டல்கள், விவிஐபி கவனிப்பில் வீரர்களை விடவும் அவர்களின் இதய ராணிகள் அதிக உற்சாகமாக இருக்கிறார்கள்.
காதலின் கலைக் கோயிலான தாஜ்மகாலுக்கு கேர்ள் பிரண்ட் டேனியல் ஸ்வார்ட்டுடன் சென்று சுற்றிப் பார்த்த தென் ஆப்ரிக்க வீரர் டி வில்லியர்ஸ், அதன் அழகிலும் பிரம்மாண்டத்திலும் மயங்கி அங்கேயே தனது காதலை உறுதி செய்திருக்கிறார். ‘காஸ்ட்லியான வைர மோதிரத்தை போட்டு, மண்டியிட்டு… கைகளை விரித்து வில்லியர்ஸ் ஐ லவ் யு சொன்னதை என்னால் நம்பவே முடியவில்லை. கனவு போலவே இருக்கிறது’ என்று ஆனந்தத்தில் கண்கள் விரிய ஆச்சரியப்படுகிறார் ஸ்வார்ட்.
நைட் ரைடர்சுக்காக ஆடும் நட்சத்திர ஆல் ரவுண்டரான ஜாக் காலிசும் தனது காதலி ஷமோன் ஜார்டிமுடன் வந்திருக்கிறார். இருவரும் 5 ஆண்டுகளாகக் காதலித்துக் கொண்டே இருக்கிறார்கள். விரைவில் திருமணம் என்று முடிவு செய்துவிட்டார்களாம். தேதி குறிக்கவில்லை என்றாலும், ஒரு விஷயத்தில் ஷமோன் உறுதியாக இருக்கிறார். திருமணத்தின் ஒரு பகுதி இந்தியாவில்தான்… அதுவும் கிராமத்துப் பின்னணியில் பாரம்பரியமான அம்சங்களோடு அமர்க்களப்படுத்தி விட வேண்டும் என திட்டமிட்டிருக்கிறார்களாம். பிரபல மாடலும் நடிகையுமான ஷமோனுக்கு இந்தியா என்றால் கொள்ளை பிரியம். ‘இந்தியா பற்றி நிறைய படித்திருக்கிறேன். அதன் கலாச்சாரம், நட்புணர்வுடன் பழகும் மக்கள், அழகான கோயில்கள் எனக்கு ரொம்பவும் பிடிக்கும். எல்லா இடங்களையும் சுற்றிப் பார்த்துவிட ஆசை. குறிப்பாக கிராமங்களுக்கு அதிகம் செல்ல வேண்டும் என திட்டமிட்டிருக்கிறேன். காலிஸ் மிகச் சிறந்த மனிதர். எப்படிப்பட்ட நெருக்கடியாக இருந்தாலும் நகைச்சுவையாக ஏதாவது பேசி கூல் செய்துவிடுவார். அவரை விட்டு ஒரு நிமிஷம் கூட இருக்க முடியாது. எங்கள் திருமணத்தை இந்தியாவில், அழகான கிராமத்துப் பின்னணியில் நடத்த வேண்டும் என்று அவரிடம் சொன்னேன். உடனே ஒப்புக் கொண்டார்’ என்று பூரிக்கும் ஷமோன், வாய்ப்பு கிடைத்தால் மாடலிங் செய்யவும் நடிக்கவும் தயார் என்கிறார். எல்லா வுட் டைரக்டர்களும் கால்ஷீட்டுக்காக கியூவில் நிற்பதும், ரசிகர்கள் கோயில் கட்ட இடம் தேடுவதும் நிஜமானால் ஆச்சரியப்படாதீர்கள். அம்மணி அத்தனை அழகு!
ஐதராபாத் பிரியாணி, இட்லி, வடை, பொங்கல், சாம்பார் என்று கலந்து கட்டும் ஷமோனுக்கு கேரளா பக்கம் போய் மீன் கறியை ஒரு கை பார்க்கவும் ஆசையாம்.
என்ன ரிலாக்சாகி விட்டீர்களா? ஆட்டத்துக்கு வருவோம். டேர்டெவில்ஸ் இப்படி போட்டுத் தாக்கும் என்று யாரும் கனவில் கூட நினைத்திருக்க முடியாது. புள்ளிப் பட்டியலில் கம்பீரமாக முன்னேறிக் கொண்டிருக்கிறது. அந்த அணிக்கு அரை இறுதி வாய்ப்பு உறுதி என்று அடித்துச் சொல்லலாம்.  கேப்டன் சேவக் தொடர்ச்சியாக 5 அரைசதம் விளாசி டி20ல் புதிய உலக சாதனை படைத்திருக்கிறார்.
ஆரஞ்சு தொப்பிக்கான ரேசில் அனல் பறக்கிறது. ரஹானே, கேல், கம்பீர், சேவக் நூலிழை வித்தியாசத்தில் மாறி மாறி முன்னோடிக் கொண்டிருக்கிறார்கள். டெக்கான் சார்ஜர்ஸ் கூட கவுரவமாக சில வெற்றிகளை தன் கணக்கில் ஏற்றியிருக்கிறது.
பெருங் காய லிஸ்டில் ஜான்சன், ஸ்ரீசாந்த், கூப்பர். ஸ்விட்ச் ஹிட் புகழ் பீட்டர்சன் வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கு தயாராவதற்காக நாடு திரும்பிவிட்டார். அவர் இல்லாவிட்டாலும் டேர்டெவில்ஸ் பேட்டிங் மிரட்டலாகவே இருக்கிறது. பீட்டர்சன் போய் வார்னர் வந்திருப்பதும் மற்ற அணிகளுக்கு வார்னிங் சிக்னல் கொடுக்கிறது. 
உள்ளூர் ஆட்டங்கள் அவ்வளவாகக் கை கொடுக்காததால் சாம்பியன் சூப்பர் கிங்ஸ் இடியாப்ப சிக்கலில். ஹாட்ரிக் வெற்றி ஜாக்பாட் அடித்தால்தான் உள்ளே நீடிக்கலாம்.
-    பா.சங்கர்  

ஒரே ஓவரில் மேட்ச் ஓவர்


ஐபிஎல் 5வது சீசன் அரை கிணறு தாண்டிவிட்டது. முதல் நான்கு இடங்களைப் பிடிக்க அணிகள் முட்டி மோதுகின்றன. ஒவ்வொரு ஆட்டத்துக்கும் நிலைமை மாறிக் கொண்டே இருப்பதால் சுவாரசியம் பொங்கி வழிகிறது. வருண பகவான் கைங்கரியத்தில் சார்ஜர்சும் பிள்ளையார் சுழி போட்டிருக்கிறது.
டேர்டெவில்ஸ் பெயருக்கேற்ப மிரட்டிக் கொண்டிருக்கிறது. கேப்டன் சேவக் பார்முக்கு வந்திருப்பதில் மற்ற அணி பவுலர்கள் ஆடிப் போயிருக்கிறார்கள். ஓவராய் சீன் போட்ட கங்குலியின் வாரியர்சை புனேவில் வைத்தே புரட்டி எடுத்தார் சேவக். டெல்லியின் ஓட்டத்தை தடுப்பது அத்தனை சுலபமில்லை என்றே தோன்றுகிறது.
தொடர்ச்சியாக 5 தோல்வியால் துவண்டு போயிருந்த டெக்கான் சார்ஜர்ஸ்,  மழையின் தயவில் முதல் புள்ளி கிடைத்ததில் கண் விழித்திருக்கிறது. மற்ற அணிகளை விட குறைவான ஆட்டத்தில் விளையாடி இருப்பதால் ஐதராபாத் இனி நிமிர்ந்து நின்றாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
நாற்பதாவது வயதில் அடியெடுத்து வைத்திருக்கும் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின், மும்பை இந்தியன்சுடன் பிறந்த நாளை எளிமையாகக் கொண்டாடினார். அடுத்த நாள் கிங்ஸ் லெவனுடன் நடந்த ஆட்டத்தில் சச்சின், பிராங்க்ளின், ரோகித் சிறப்பாக விளையாடினாலும் அடுத்தடுத்து விக்கெட் சரிந்ததால் பஞ்சாப் கை ஓங்கியது. தோல்வி நிச்சயம் என்று முடிவுகட்டி மும்பை முகாம் மூட்டைகட்ட தொடங்கிய நிலையில்தான் அந்த அதிசயம் அரங்கேறியது.
சாவ்லா வீசிய 19வது ஓவரில் கிங்ஸ் லெவன் சொந்த காசில் சூனியம் வைத்துக் கொண்டது. ராபின் பீட்டர்சன் அமர்க்களமாக ரிவர்ஸ் ஸ்வீப், ஸ்விட் ஹிட் அடிக்க, களத்தில் இருப்பது இங்கிலாந்தின் கெவின் பீட்டர்சனோ என்ற சந்தேகம் ஏற்பட்டது. வெற்றிகரமாக காப்பி அடித்த மகிழ்ச்சியில் அடுத்து ஒரு சிக்சரையும் தூக்கினார் ராபின். அந்த ஓவரின் கடைசி 2 பந்தையும் ராயுடு பறக்கவிட, வயிற்றுக்குள் இருந்த வெற்றியை வாந்தி எடுத்தது பஞ்சாப்! ஒரே ஓவரில் சாவ்லா 27 ரன் வாரிக் கொடுக்க ஒட்டு மொத்த உழைப்பும் வீண். கடைசி ஓவரில் அசார் முகமது பிரம்மப்பிரயத்தனம் செய்தாலும், ராயுடு அலட்டிக் கொள்ளாமல் பவுண்டரி அடித்து அமர்க்களம் செய்தார். நம்ப முடியாத வெற்றியில் மும்பை இந்தியன்ஸ் ஆனந்தக் கூத்தாட, சாவ்லா பிரமை பிடித்து நின்றது பார்க்கவே பரிதாபமாக இருந்தது.
ஆட்டத்தின் திருப்புமுனையாக அமைந்த ஸ்விட்ச் ஹிட் பற்றி ராபினிடம் கேட்க, ‘ஏற்கனவே பல முறை இந்த ஷாட் அடித்திருக்கிறேன். இதற்காக பயிற்சி செய்தது இல்லை’ என்று படு கூலாக பதிலளித்தார்.
காயத்தால் களமிறங்க முடியாமல் வேடிக்கை பார்த்த கேப்டன் கில்கிறிஸ்ட், எல்லோரும் திட்டித் தீர்த்த சாவ்லாவுக்கு ஆதரவாக ஆறுதல் வார்த்தை கூறியது எல்லோரும் படிக்க வேண்டிய கிரிக்கெட் பாடம். ‘சாவ்லா சிறப்பாகவே பந்து வீசினார். ஸ்விட்ச் ஹிட் அவ்வளவு ஈஸியா அடிச்சுட முடியாது. நம்பிக்கையோடு விளையாடிய பீட்டர்சனை நாம் பாராட்ட வேண்டும்’ என்று தத்துவ முத்து உதிர்த்தார் கில்லி.  
பெங்களூரில் சூப்பர் கிங்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் மோதலுக்காக ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்க, வானம் பொத்துக் கொண்டு ஊற்றியதில் வாணவேடிக்கை வாய்ப்பு நமத்துப் போனது. ஒரு புள்ளி கிடைத்ததில் இரு அணிகளுக்குமே பரம திருப்தி. ரஹானேவிடம் இருந்து ஆரஞ்சு தொப்பியை அபகரிக்கும் வாய்ப்பு தற்காலிகமாக நழுவியதால் டுபிளெஸ்சிஸ் முகத்தில் மட்டும் ஏமாற்றம்.
ஈடன் கார்டனில் கொட்டிய மழையில் ஐதராபாத்துக்கு ஒரு புள்ளி சார்ஜ் ஏறியது. மற்ற அணிகளை விட குறைவான ஆட்டங்களிலேயே விளையாடி உள்ளதால் இனி சார்ஜர்ஸ் ஸ்பீடு எடுத்தாலும் ஆச்சரியம் இல்லை. உண்மையில், களத்தில் உள்ள 9 அணிகளுக்குமே இன்னும் அரை இறுதி வாய்ப்பு இருக்கத்தான் செய்கிறது.
டிவி ரேட்டிங் நாளுக்கு நாள் இறங்கு முகமாக இருந்தாலும், சீசன் 5 அமோக வெற்றி என்று அடித்துச் சொல்கிறார் ஐபிஎல் தலைவர் ராஜீவ் சுக்லா. பத்தாவது அணியாய் எங்களை சேர்த்துக் கொள்ளுங்கள் என்று கோரிக்கை வைத்திருக்கிறார் ஜம்மு காஷ்மீர் விளையாட்டு அமைச்சர்.
அடுத்த வாரம் புள்ளிக் கோலம் கொஞ்சம் தெளிவாகி விடும். டோனியின் அத்ர்ஷ்ட மீண்டும் நிரம்பத் தொடங்கியிருப்பதால், சாம்பியன் சூப்பர் கிங்ஸ் பற்றி மட்டும் எந்தக் கணிப்பும் கூறாதிருப்பது உத்தமம்.
-    பா.சங்கர்



ரசிகர்களுக்கு ஹெல்மட் கட்டாயம்


ஜெய் ஜக்கம்மா! கடைசி பந்தில் சிக்சர், ஒரே ஓவரில் 6 பவுண்டரி, சீசன் 5ல் முதல் சதம் என்று நாம் ஆசைப்பட்டதெல்லாம் ஒரே வாரத்தில் நடக்க ஆட்டங்களில் அனல் பறக்கிறது. புள்ளி பட்டியலில் முன்னேற அணிகள் முண்டியடிக்கின்றன.
ரஹானே தயவில் ராஜஸ்தான் ராயல்ஸ் ராஜ நடை போடுகிறது. ரன் குவிப்பில் தொடர்ந்து முதலிடத்தில் இருப்பதுடன் சீசனின் முதல் சதம் விளாசிய வீரர், ஐபிஎல் வரலாற்றில் ஒரே ஓவரில் 6 பவுண்டரி விளாசிய முதல்வர்! என்று அசத்தும் ரஹானேவின் தலையை ஆரஞ்சு தொப்பி அலங்கரிப்பதில் ஆச்சரியம் இல்லை. டி20 உலக கோப்பை போட்டிக்கான இந்திய அணியில் இடம் பிடிப்பார் என்று இப்போதே பேச்சு அடிபடுகிறது. ‘செஞ்சுரியோ… டக் அவுட்டோ, எதுவாக இருந்தாலும் பெரிதாய் அலட்டிக் கொள்வதில்லை. டி20 உலக கோப்பை பற்றியெல்லாம் இப்போது நினைத்து கூட பார்க்கவில்லை. சிறப்பாக விளையாடி ரன் அடிப்பதில் மட்டுமே கவனம். மற்றதை தேர்வுக் குழுவினர் பார்த்துக் கொள்வார்கள்’ என்கிறார். டெஸ்ட் போட்டிகளில் டிராவிட் இடத்தை நிரப்பக் கூடியவராகவும் கணிக்கிறார்கள். காலம் கனியும், கணிப்பும் கை கூடும் என நம்பலாம்.
ராயல் சேலஞ்சர்சின் கிறிஸ் கேல் தனது கைவரிசையை காட்ட ஆரம்பித்துவிட்டார். வாரியர்சின் ராகுல் ஷர்மா ஓவரில் தொடர்ச்சியாக 5 சிக்சர் தூக்கி மிரட்டினார். அந்த ருத்ரதாண்டவத்தில், கேலரியில் இருந்த சிறுமி டியா பாட்டியா மூக்கு உடைந்து ரத்தக்களரியாகிவிட்டது. விஷயத்தை கேள்விப்பட்ட கேல் ரொம்பவே அப்செட் ஆகிவிட்டார். ஆஸ்பிட்டலுக்கு ஓடி டியாவுக்கு ஆறுதல் சொன்ன பிறகுதான் அமைதியானார். ‘அங்கிள்… இதெல்லாம் சப்ப (மூக்கு) மேட்டர்! நீங்க தொடர்ந்து சிக்சர் அடிச்சிக்கிட்டே இருங்க’ என்று அந்த வாண்டு வாழ்த்தியதில் நெகிழ்ந்து போயிருக்கிறார் இந்த வெஸ்ட் இண்டீஸ் ராட்சசன். இவர் ஆடும்போது ஸ்டேடியத்துக்கு வெளியேயும் பீல்டர்களை போடுவதுடன், ரசிகர்களுக்கு ஹெல்மட் கட்டாயம் என்று அறிவித்தால் நல்லது.
நெஹ்ரா வீசிய கடைசி பந்தில் திவாரி சிக்சர் விளாசி வெற்றியை வசப்படுத்த சேலஞ்சர்ஸ் முகத்தில் ஆனந்தம். கங்குலியின் புனே வாரியர்ஸ் நொந்து போனார்கள்.
நடப்பு சாம்பியன் சிஎஸ்கேவுக்கு கெரகம் சரியில்ல போல. கேப்டன் டோனிக்கு காயம் என்று தகவல் கசிய, ரசிகர்கள் கவலையில். இந்த குழப்பம் தீர்வதற்குள்ளாகவே, ஆருயிர் நண்பரை கொள்ளையர்கள் சுட்டுக் கொன்றுவிட்டார்கள் என்ற சேதியால் உடைந்து போன அல்பி மார்க்கெல் அடுத்த பிளைட் பிடித்து ஜோகன்னஸ்பர்க் போய்விட்டார். கடைசி கட்ட லீக் ஆட்டங்களில், விட்டதைப் பிடித்து விடலாம் என்ற நம்பிக்கை இன்னும் ஒட்டிக் கொண்டுதான் இருக்கிறது. அதை வைத்துதான் வாரத்தை ஓட்ட வேண்டும்! பத்து கோடிக்கு நன்றிக் கடனாக தலை முடியில் சிஎஸ்கே பெயரைப் பொறித்துக் கொண்ட ஜடேஜா, அணியின் தலையெழுத்தை மாற்றுவாரா பார்க்கலாம்.
மொகாலியில் நைட் ரைடர்சுடன் நடந்த போட்டியில், கிங்ஸ் லெவன் வீரருக்கு சர்ச்சைக்குரிய வகையில் அவுட் கொடுத்ததை பார்த்து கொதித்து போனார் அணி ஓனர் பிரீத்தி ஜிந்தா. கன்னம் சிவக்க, கண்கள் கலங்க வாதிட்டவரை அமைதிப்படுத்தினார் கேப்டன் கில்கிறிஸ்ட். இப்போதைக்கு பின்தங்கியிருந்தாலும் பஞ்சாப் நிலைமை அத்தனை மோசம் இல்லை. டெக்கான் மட்டுமே ஹாட்ரிக் தோல்வியால் சார்ஜ் இறங்கிக் கிடக்கிறது.
வல்தாட்டி, யூசுப் பதான், முரளி விஜய், கோஹ்லி போன்ற லோக்கல் ஹீரோக்கள் தொடர்ந்து பிளாப் கொடுத்து ஏமாற்றிக் கொண்டிருக்க தென் ஆப்ரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் கொடுத்த காசுக்கு வஞ்சனை இல்லாமல் உழைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஐபிஎல் ஆட்டத்தால் தனக்கு இங்கிலாந்து அணியில் நிரந்தர இடம் கிடைக்கும் என்று கணக்கு போடுகிறார் ராயல்ஸ் வீரர் ஓவைஸ் ஷா. ஆரஞ்சு தொப்பிக்கான போட்டியில் 2வது இடத்தில் இருப்பவரின் ஆசை நியாயமானதே.
கென்ய அணிக்காக உலக கோப்பையில் விளையாடிய தன்மே மிஷ்ரா, டெக்கான் சார்ஜர்ஸ் அணியில் இந்திய வீரராக விளையாட அனுமதிக்கப்பட்டது சர்ச்சையை கிளப்பியது. அணியில் ஏற்கனவே 4 வெளிநாட்டு வீரர்கள் இடம் பெற்றிருந்த நிலையில் தன்மே மிஷ்ராவை இந்தியராகக் கணக்கு காட்டினார்கள். எந்த நாட்டு குடியுரிமை பெற்றிருந்தாலும், பிறந்த நாட்டுக்காக எப்போது வேண்டுமானாலும் விளையாட சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அனுமதிக்கிறது. அந்த விதியைத்தான் நாங்களும் பின்பற்றுகிறோம் என்கிறது ஐபிஎல் நிர்வாகம். மற்ற அணிகள் எதிர்க்காமல் இருந்தால் இதில் பெரிய பிரச்னை இல்லை. தன்மே மிஷ்ரா அடித்து நொறுக்காமல் இருக்க வேண்டும். அதுதான் முக்கியம்!
கால்வாசி சீசன்தான் காலாவதி ஆகியிருக்கிறது. அடுத்த வாரம் நிலைமை கொஞ்சம் தெளிவாகும் வாய்ப்பு உள்ளது. அது வரை குட்டையை குழப்பிக் கொண்டிருப்போம்.
பா.சங்கர்


ஓட்டத்தில் சொதப்புவது எப்படி?


டெல்லியில் சூப்பர் டெமோ!
ஐபிஎல் 5வது சீசன் எதிர்பார்த்ததை விடவும் கொஞ்சம் அதிகமாகவே களைகட்டியிருக்கிறது. கடைசி ஓவர்…கடைசி பந்து வரை நகம் கடிக்க வைத்த ஆட்டம், சிக்சர் மழை, முனாப்புக்கு அபராதம், ஹர்பஜனுக்கு எச்சரிக்கை, ஷாருக் மீது வழக்கு, சின்னசாமி ஸ்டேடியத்தில் தீ விபத்து… என்று பரபரப்புக்கு பஞ்சம் இல்லை.
கை விரலில் ஏற்பட்ட காயத்தால் சச்சின் விளையாடாவிட்டாலும் மும்பை இந்தியன்ஸ் முழு வேகத்தில் முன்னேறிக் கொண்டிருக்கிறது. ரவுண்டு கட்டி அடிக்கும் போலார்டு, அவருக்கு ஈடு கொடுக்கும் ராயுடு, மலிங்கா – முனாப் வேகக் கூட்டணி முன்பாக ராஜஸ்தான் ராயல்சின் போராட்டம் வீணானது. சார்ஜர்ஸ் வசமிருந்த வெற்றியை கடைசி பந்தில் அமர்க்களமான சிக்சர் விளாசி தட்டிப் பறித்த ரோகித் ஷர்மாவின் ஆட்டமும் அற்புதம். அதே சமயம் ஆக்ரோஷம் அளவுக்கு மீறாமல் பார்த்துக் கொள்வதும் அவசியம். நடுவருடன் வாக்குவாதம் செய்த முனாப்புக்கு அபராதம், கேப்டன் ஹர்பஜனுக்கு எச்சரிக்கை எல்லாம் இந்தியன்சுக்கு பெருமை சேர்ப்பதாக இல்லை. ஜோசியம் பார்த்ததில் 60 சதவீதத்துக்கும் மேல் அம்பானி அணிக்கே சாதகமாக இருக்கிறதாம்.
நடப்பு சாம்பியன் சூப்பர் கிங்ஸ் இன்னும் த்ராட்டிலில் கை வைக்கவில்லை. பசங்களுக்கு முதலில் ஓட கற்றுக் கொடுக்க வேண்டும்! இல்லாவிட்டால் ஓடாமல் இருக்கவாவது!! டெல்லியில் சிஎஸ்கே ரன் அவுட் ஆனது ரொம்பவே கேவலமாக இருந்தது. கேப்டன் டோனி பேட்டிங் வரிசையில் கொஞ்சம் முன்னே வந்து முனைப்புடன் விளையாடினால் பின்னடைவை சரி செய்யலாம். தும்பை விட்டு வாலைப் பிடிக்க நினைத்தால் முதலுக்கே மோசம்தான். முரளி விஜய் ஏதோ மந்திரித்து விட்ட ஆடு மாதிரியே தெரிகிறார். சிங்கமாய் சிலிர்த்தெழாவிட்டால் அசிங்கமாகி விடும்.
பீட்டர்சன், ஜெயவர்தனே வரவால் டேர்டெவில்ஸ் அலம்பல் கொஞ்சம் அதிகமாயிருக்கிறது. பார்மில் இல்லாத சேவக் கூட சென்னை பவுலிங்கை பதம் பார்த்தார். பந்துக்கு பந்து ஸ்விட்ச் ஹிட் அடித்து அலட்டினார் பீட்டர்சன். போகப் போக டெவில்ஸ் அட்டகாசம் தாங்க முடியாது என்றே தோன்றுகிறது.
பெங்களூரில் நைட் ரைடர்ஸ் ஆட்டம் கம்பீரமாக இருந்தது. காலிஸ், கம்பீர், பிஸ்லா தவிர்த்து மற்றவர்கள் சிங்கிள் டிஜிட்டில் ஜகா வாங்கினாலும் பவுலிங், பீல்டிங்கில் ஜமாய்த்தார்கள். புன்னகை மன்னன் பாலாஜி விக்கெட்டுகளை அள்ளி கண்களை நிறைத்தார். கேல், கோஹ்லி, டிவில்லியர்ஸ் பாச்சா பலிக்காததால் ராயல் சவால் எடுபடவில்லை. நைட் ரைடர்ஸ் ஓனர் நடிகர் ஷாருக், ஜெய்ப்பூர் சவாய் மான்சிங் ஸ்டேடியத்தில் ரிலாக்சாக புகைத்தது பற்றி எரிய ஆரம்பித்திருக்கிறது. பொது இடத்தில் புகைத்த ஷாருக் மீதும், ஸ்டேடியத்துக்குள் சிகரெட் பாக்கெட்டை அனுமதித்த போலீசார் மீதும் வழக்கு போட்டிருக்கிறார்கள்.
புற்றுநோய் சிகிச்சை வெற்றிகரமாக முடிந்து நாடு திரும்பினாலும் சீசன் 5ல் யுவராஜ் அதிரடியை பார்க்கும் வாய்ப்பு இல்லை. இருந்தாலும் புனே அணியை உற்சாகப்படுத்த வந்த உலக கோப்பை நாயகனுக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்து அசத்திவிட்டார்கள். சொந்தமாக ஒரு ஸ்டேடியம், வழிநடத்த கொல்கத்தா இளவரசர் கிடைத்த பூரிப்பில் புனே வாரியர்ஸ் ‘துடிக்குது புஜம்… ஜெயிப்பது நிஜம்’ என்று தாக்குதலுக்கு தயாராகி இருக்கிறது. இதே வேகத்தில் போனால் இவர்களைத் தடுத்து நிறுத்துவது சிரமம்தான்.
பஞ்சாப், ஐதராபாத் அதள பாதாளத்தில் இருந்தாலும் ஒரு சில வெற்றிகளில் நிலைமை தலை கீழாகிவிடும் என்பதால் நம்பிக்கையோடு நகர்கின்றன. ரன் குவிப்பில் ராயல்ஸ் வீரர்கள் ரஹானே, ஓவைஸ் ஷா, மும்பை இந்தியன்ஸ் போலார்டு, ரோகித், ராயுடு பாய்ச்சல் பலமாக இருக்கிறது. விக்கெட் வேட்டையில் மும்பையின் முனாப், மலிங்கா, போலார்டு ஆதிக்கம் கொடி கட்டி பறக்கிறது.
என்னதான் ஆட்டங்கள் சுவாரசியமாக இருந்தாலும், முதல் வாரத்தில் பார்வையாளர்களின் எண்ணிக்கையும் டிவி ரேட்டிங்கும் இறங்கு முகம்தான் என்கிறார்கள். ஐபிஎல் வரலாற்றில் இதுவே குறைந்தபட்சம் என்ற தகவல் விளம்பரதாரர்களையும் யோசிக்க வைத்துள்ளது. குறைந்த பந்தில் சதம், ஹாட்ரிக் அசத்தல் என்று சாதனைகள் அணிவகுத்தால் சூடு பிடித்துவிடும். ஐபிஎல் போட்டிகளுக்கு பின்னால் எத்தனை கடின உழைப்பு இருக்கிறது,  ரசிகர்கள் ஏன் பைத்தியம் பிடித்து அலைகிறார்கள் என்பதை ஆவணப் படமாக்குவதற்காக இங்கிலாந்தில் இருந்து ஒரு டீம் வந்திருக்கிறது. இந்த 90 நிமிட டாக்குமென்டரியை டிவியிலும் தியேட்டரிலும் திரையிடப் போகிறார்களாம்.
பா.சங்கர்



ஐபிஎல் சீசன் 5

ஆரம்பிச்சாச்சு சம்மர் கலாட்டா

கிரிக்கெட்டை அழிக்க வந்த குட்டிப் பிசாசு என்று சிலர் கரித்துக் கொட்டினாலும், இந்த அழகான ராட்சசியின் பிடியில் இருந்து விலக யாருக்குத்தான் மனம் வரும்? இங்கிலாந்திலும் ஆஸ்திரேலியாவிலும் கிடைத்த ஊமைக் காயங்களுக்கு ஒத்தடம் கொடுக்க வந்திருக்கிறது ஐபில் 5. டெஸ்டில் உதை வாங்கக் காரணமே இந்த பாழாய்ப் போன ஐபிஎல் வைரஸ்தான் என்றாலும், அதுவே இப்போது மருந்தாகவும் ஆகியிருக்கிறது. ரசிகர்களை விடவும் வீரர்களுக்குதான் இது அதிகம் தேவைப்படுகிறது.விஷம் முறியுமா இல்லை வீரியம் அதிகரிக்குமா? என்று கவலைப்படாமல் வழக்கம்போல கொண்டாடி வைப்போம்.
தொடக்க விழா நடந்த நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் குவிந்த ரசிகர்களின் முகத்தில், ஐபிஎல் காய்ச்சல் அறிகுறி அப்பட்டமாகத் தெரிந்தது. ’மீண்டும் பிறப்பதாக இருந்தால்’… பிரசூன் ஜோஷியின் கவிதையை அமிதாப் வாசிக்கத் தொடங்கியதுமே ஜுர வேகம் சில டிகிரி எகிறியது. ஆடவரெல்லாம் ஆட வரலாம் என்று பிரியங்கா அழைக்க… டிராவிட், கங்குலி வெட்கத்துடன் ஒதுங்க… மும்பை இந்தியன்ஸ் புது கேப்டன் ஹர்பஜன் உற்சாகமாக எழுந்து அட்டகாசமான சிறு நடன அசைவுகளைக் கொடுக்க அரங்கம் அதிர்ந்தது. ஹாட்ரிக் அடிப்பீங்களா? என்று பிரியங்கா பேட்டி எடுக்க ‘மற்ற அணிகளும் வலுவாகவே உள்ளன. மீண்டும் கோப்பையை வெல்ல முயற்சிப்போம்’ என்று புன்னகைத்தார் டோனி.    
பிரபு தேவா, கரீனா கலந்து கட்டி அடித்து அப்ளாசை அள்ளிக்கொண்டு போனார்கள். அலங்கார கட் அவுட்டுடன் அமர்க்களமாக என்ட்ரி கொடுத்த சல்மான் கான் வான்ட்டட்…பாடிகார்டு…ரெடி என்று அசத்தினார். அணிகளின் கேப்டன்கள் அணிவகுத்து சம்பிரதாய உறுதிமொழி ஏற்றனர். அமெரிக்க பாடகி கேட்டி பெர்ரிக்கு சென்னை ரசிகர்கள் கொடுத்த ஆரவார வரவேற்பு ஆச்சரியமாக இருந்தது. அவரது ’பயர் ஒர்க்ஸ்’, ‘கலிபோர்னியா கேர்ள்ஸ்’ பாடல்கள் அந்த வரவேற்பு நியாயமானதுதான் என்பதை நிரூபித்தன. அப்படி ஒரு எனர்ஜி. பாட்டு மட்டுமல்ல, அந்த செர்ரியின் ஆடையும் ஆட்டமும் கூட அட்டகாசம்தான். அவரோடு சிஎஸ்கே வீரர் போலிஞ்சர் அட்டை போல ஒட்டிக் கொண்டு ஆட்டம் போட, மனிதரைப் பிரித்து எடுப்பது பெரும்பாடாக இருந்தது.
நந்தனம் டிரெய்லர் எதிர்பார்ப்பை எக்கச்சக்கமாக எகிற வைக்க, அடுத்து சேப்பாக்கத்தில் மெயின் பிக்சர். முதல் போட்டியிலேயே சாம்பியன் சூப்பர் கிங்சுடன் மும்பை இந்தியன்ஸ் மோதியதால் ரசிகர்கள் ஏகப்பட்ட டென்ஷனோடு வந்திருந்தார்கள். மும்பை வீரர்களின் துல்லியமான பவுலிங் துடிப்பான பீல்டிங்கில் சிஎஸ்கே பெட்டிப் பாம்பாய் அடங்கியது. ரெய்னா மட்டும் கொஞ்சம் பிலிம் காட்டினார். அவரையும் போட்டுக் கொடுத்து அமுக்கிவிட்டார்கள். இந்த ஜடேஜாவுக்கு பத்து கோடியா? கிரிமினல் வேஸ்ட்டுப்பா என்று பொடிசுகள் கூட கமெண்ட் அடித்ததை கேட்க முடிந்தது.
சச்சினுடன் இணைந்து ஐபிஎல் வாழ்க்கையை தொடங்கும் பாக்கியத்தை பெற்ற தென் ஆப்ரிக்க இளம் புயல் லெவி, அழகாக ஒரு அரைசதம் அடித்து மும்பை வெற்றிக்கு அடித்தளம் அமைத்தார். போலிஞ்சர் வீசிய பவுன்சரில் சச்சின் காயம் அடைந்து வெளியேறினாலும் 113 என்ற சொற்பமான இலக்கை எட்டுவதில் மும்பைக்கு எந்த சிரமமும் ஏற்படவில்லை. முதல் வெற்றியை கோட்டை விட்டது சென்னை ரசிகர்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தினாலும், ‘இன்னும் 15 லீக் ஆட்டம் இருக்கு. போன சீசனில் கூட நம்ம பசங்க பின்னாடிதான் சூப்பரா ஆட ஆரம்பிச்சாங்க’ என்று தேற்றிக் கொண்டார்கள். டோனியின் அதிர்ஷ்ட டப்பா காலி ஆயிடுச்சா… மிச்சம் மீதி ஏதாவது இருக்கா என்பது போகப் போகத்தான் தெரியும்.
இலங்கை – இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் – ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர்கள் முடிந்து அந்த வீரர்கள் வரும் வரை இருப்பதைக் கொண்டு சிறப்புடன் ஆடுவதைத் தவிர அணிகளுக்கு வேறு வழியில்லை. கிறிஸ் கேல், சேவக், வல்தாட்டி, யூசுப் பதான் அதிரடி எல்லாம் இனிமேல்தான் வர வேண்டும். இவர்களை ஓரங்கட்டி புது ஹீரோ உருவானாலும் ஆச்சரியம் இல்லை. அதுதான் ஐபிஎல் ஸ்பெஷாலிடி!
சென்னை போட்டிக்கே 22,000 ரசிகர்கள்தான் வந்திருந்தார்கள். செட் மேக்ஸ் விளம்பர நேரத்திலும் 40 சதவீதம் பிரீயாக இருந்ததாகத் தகவல். ரசிகர்களின் ஆர்வம் அதிகரிப்பதும் டிஆர்பி ரேட்டிங் எகிறுவதும் அடுத்து வரும் ஆட்டங்களின் சுவாரசியத்தை பொருத்தே அமையும்.
பா.சங்கர்