சனி, 21 ஏப்ரல், 2018

பந்தை சேதப்படுத்தியது மன்னிக்க முடியாத குற்றம் - கேஸ்பர் பேட்டி




ஆஸ்திரேலியாவின் கோல்டு கோஸ்ட் நகரில் நடைபெறும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டித் தொடரையொட்டி தேர்வு செய்யப்பட்டிருந்த சர்வதேச செய்தியாளர் குழுவினருக்காக ஆஸி. முன்னாள் வேகப் பந்துவீச்சாளர் மைக்கேல் கேஸ்பரோவிச்சுடன் ஒரு நேருக்கு நேர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்தியாவில் இருந்து சென்ற 6 பேரில் தினகரன் நாளிதழின் விளையாட்டுப் பிரிவு செய்தி ஆசிரியரான எனக்கும் வாய்ப்பு கிடைத்திருந்தது. குழுவில் இடம் பெற்ற ஒரே தமிழ் செய்தியாளர் என்பதில் கொஞ்சம் பெருமை எக்கச்சக்க மகிழ்ச்சி.
நட்சத்திர அந்தஸ்து ரெஸ்டாரென்ட், மதிய உணவு சாப்பிட்டபடியே எங்களின் கேள்விக் கணைகளை எதிர்கொண்டார். நிச்சயம் அவரை சங்கடப்படுத்தும் என்பதை அறிந்திருந்தாலும், பந்தை சேதப்படுத்திய சர்ச்சையில் சிக்கியதால் தடையை எதிர்கொண்டிருக்கும் ஸ்மித், வார்னர், பேங்க்ராப்ட் பற்றிய கேள்வியை தவிர்க்க முடியவில்லை.

பேட்ஸ்மேன்களைத் தனது யார்க்கர்களாலும், இன்/அவுட் ஸ்விங்கர்களாலும் அலைக்கழித்துப் பழக்கப்பட்ட கேஸ்பர், மிக இயல்பாகவே இந்தக் கேள்வியை கையாண்டார்.
அரசு தரப்பு நெருக்கடி காரணமாகவே ஸ்மித், வார்னருக்கு தடை விதிக்கப்பட்டதாகக் கூறுவதை ஏற்க முடியாது. ஆஸ்திரேலியாவின் பெருமைக்கும், பாரம்பரியத்துக்கும் அவப் பெயர் ஏற்படுத்தியதை அவ்வளவு எளிதாக எடுத்துக் கொள்ள முடியுமா என்ன? பிரதமர் மட்டுமல்ல… மக்களின் உணர்வுகளுக்கும் மதிப்பளித்தே ஓராண்டு தடை விதிக்கப்பட்டுள்ளது. இது சற்று கடுமையான தண்டனை தான் என்றாலும், அவசியமான ஒன்று. மற்ற வீரர்களுக்கு இது ஒரு எச்சரிக்கை மணி. அவ்வளவுதான்.
ஓராண்டு தடை என்பது சற்று அதிகப்படியானது என்ற எண்ணம் எல்லோருக்குமே உள்ளது. ரிவர்ஸ் ஸ்விங்குக்கு ஒத்துழைக்க வேண்டும் என்பதற்காக பந்தை சேதப்படுத்துவது ஒன்றும் புதிதல்ல. பல முன்னுதாரணங்கள் இருந்தாலும், அதில் இருந்து பாடம் கற்றுக் கொள்ளாதது ஸ்மித், வார்னர் செய்த மிகப் பெரிய தவறு. இளம் வீரர் பேங்க்ராப்ட் எடுப்பார் கைப்பிள்ளையாக செயல்பட்டிருப்பதால் அவரை மன்னித்துவிடலாம். ஆனால், அணியை வழிநடத்தவேண்டிய கேப்டனும், துணை கேப்டனும் இதில் சம்பந்தப்பட்டதை ஜீரணிக்க முடியவில்லை.
அசார், ஜடேஜா, குரோனி தொடங்கி சாந்தகுமாரன் ஸ்ரீசாந்த் வரை எத்தனையோ பேர் இப்படி தேவையில்லாத சர்ச்சையில் சிக்கி புகழின் உச்சியின் இருந்து அதளபாதாளத்தில் விழுந்த வரலாற்றை படித்த பிறகும், இப்படியொரு முட்டாள் தனத்தை செய்ததற்கான பலனைத் தான் மூவரும் அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். தவறு செய்தால் தண்டனை நிச்சயம் என்று தெரிந்த பிறகும், உலகில் தவறுகள் தொடர்ந்து கொண்டிருப்பதற்கு மனித இயல்பு தான் காரணம்.
நன்மைக்கும் தீமைக்கும் இடையே ஒரு மெல்லிய கோடுதான் இருக்கிறது. அந்த எல்லையை தாண்டும்போது எல்லாமே தலைகீழாகி விடும்… என்று தத்துவ மழை பொழிந்தார் ஆஸ்திரேலிய அணியின் கம்பேக் கிங். மனிதர் கிட்டத்தட்ட பத்து முறை உள்ளே/வெளியே ஆடியிருக்கிறார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு, ஐபிஎல் தொடருக்கு அண்ணனான ஐசிஎல் போட்டியில் விளையாடி இருக்கிறார்.சில போட்டிகளுக்கு வர்ணனையாளராக செயல்பட்டவர், எம்பிஏ படித்துவிட்டு விளையாட்டுத் தொடர்பான வர்த்தகத்தில் கால் பதித்திருக்கிறார். தனது கிரிக்கெட் அனுபவங்கள் மூலமாக இளைய தலைமுறையினருக்கு பயனுள்ள ஆலோசனைகளை வழங்கி வரும் கேஸ்பருக்கு வாழ்த்துகள் கூறி விடைபெற்றோம்.    

- ஷங்கர் பார்த்தசாரதி
(குங்குமம் வார இதழில் வெளியான நேர்காணல்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக