ஞாயிறு, 29 ஏப்ரல், 2018

ஓடி விளையாடு பாப்பா… ஆஸி. பதக்கங்களை அள்ளும் ஓபன் சீக்ரெட்




கோல்டு கோஸ்ட் காமன்வெல்த் விளையாட்டு போட்டியில், ஆஸ்திரேலியா 80 தங்கம் உட்பட 198 பதக்கங்களை அள்ளி முதலிடம் பிடித்தது. இந்திய வீரர், வீராங்கனைகளும் சிறப்பாக செயல்பட்டு 66 பதக்கங்களுடன் 3வது இடம் பிடித்தாலும், ஆஸ்திரேலியா நம்மை விட 3 மடங்கு அதிகம் சாதித்திருக்கிறது.
ஏன் இந்த இடைவெளி? எதில் நாம் பின்தங்கி இருக்கிறோம் என்ற கேள்விகளுக்கான விடைஉள்ளங்கை நெல்லிக்கனி போல் அத்தனை ரகசியமாய் ஒளிந்திருக்கிறது! ஆஸ்திரேலிய வெளியுறவு மற்றும் வர்த்தகத் துறையால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சர்வதேச செய்தியாளர் குழு சார்பில் பிரிஸ்பேன், கோல்டு கோஸ்ட், மெல்போர்ன், சிட்னிஎன்று சுற்றிப் பார்த்ததில் ஒரு விஷயம் அப்பட்டமாய் விளங்கியது.
ஓடி விளையாடு பாப்பாஎன்ற நமது மகாகவியின் கவிதை வரிகள் தான், ஆஸ்திரேலிய அரசின் தாரக மந்திரமாய் நாடு முழுவதும் மூலை முடுக்கெல்லாம் ஓங்கி ஒலித்துக் கொண்டிருக்கிறது. இங்கே நமது குழந்தைகளைப் படிபடி…. என்று பத்துக்கு பத்து அறையில் முடக்கிக் கொண்டிருக்கிறோம். அங்கே விளையாடுவிளையாடு என்று வெளியே விரட்டிக் கொண்டிருக்கிறார்கள். இதுதான் வித்தியாசம்.
குழந்தைகள் மொபைல், டேப்ளட், லேப்டாப், டிவி என்று நாள் முழுவதும் ஏதாவது ஒரு திரையை பார்த்துக் கொண்டு நேரத்தைக் கழிப்பதுடன், பீட்ஸா, பர்கர், கூல்டிரிங்க் என்று மோசமான உணவுப் பழக்கமும் சேர்ந்து உடல் பருமன் பாதிப்பால் அவதிப்படுவதை தவிர்க்கும் முயற்சியாகவும் இதை பார்க்கலாம். ஆரோக்கியமே ஆஸ்தி என்பதை ஆஸ்திரேலியர்கள் நன்கு உணர்ந்திருக்கிறார்கள்.
விளையாடுவதால் குழந்தைகள் நல்ல உடல்தகுதியுடன் ஆரோக்கியமாக இருக்கிறார்கள். சுறுசுறுப்பாக இருப்பதுடன் நோய்களால் பாதிக்கப்படும் வாய்ப்பும் குறைந்துவிடுகிறது. மருத்துவச் செலவு மிச்சம். சரியாகச் சொல்வதென்றால் ஒட்டு மொத்த தேசமும் ஓடிக் கொண்டிருக்கிறதுவிளையாடிக் கொண்டிருக்கிறது.
இதை தெளிவாகப் புரிந்து கொண்ட அரசு, விளையாட்டுக்கான அடிப்படைக் கட்டமைப்புகள், பயிற்சி வசதிகள், திறமையான பயிற்சியாளர்களை உருவாக்க சிறப்புக் கல்வித் திட்டங்கள், கல்லூரிகள்என்று விரிவாகத் திட்டமிட்டுதாராளமாய் நிதி ஒதுக்கி தொலைநோக்குப் பார்வையுடன் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
அது மட்டுமல்லாது வீரர், வீராங்கனைகள் தேர்வில் மிகக் கடுமையான கட்டுப்பாடுகளையும் கடைப்பிடிப்பதால் தான் அவர்கள் சொல்லி அடித்துக் கொண்டிருக்கிறார்கள். எம்எல்ஏ, எம்பி மகன் என்பதால் தகுதியில்லாத வீரருக்கு வாய்ப்பு என்ற பேச்சுக்கே அங்கு இடமில்லை.
இதெல்லாம் நேற்று திட்டமிட்டு இன்று நிகழ்ந்த மாயாஜாலம் அல்ல. புத்தாயிரமாண்டில் சிட்னி ஒலிம்பிக் போட்டியை நடத்தும் வாய்ப்பு கிடைத்த உடனேயே, 1996ல் தொடங்கிய நெடிய பயணத்தின் வெற்றி வரலாறு அது. கட்டமைப்புகளை உருவாக்குவதை விட அவற்றை பராமரிப்பதில் அதிக கவனம் செலுத்துகிறார்கள். ஆர்வமுள்ள வீரர், வீராங்கனைகள் அந்த வசதிகளைப் பயன்படுத்துவதிலும் எந்தவித பாகுபாடும் காட்டப்படுவது இல்லை.
நாம் கோட்டை விடுவது இதில் தான். பல கோடி ரூபாய் செலவில் கட்டப்படும் ஸ்டேடியத்தில் அரசியல் பிரமுகர்களின் இல்லத் திருமண விழா, இசை நிகழ்ச்சிகள், இன்ன பிற பொழுதுபோக்குகளுக்கு எல்லாம் இடம் கொடுத்து பாழடிக்கிறோம். பராமரிப்பு இல்லாமல் வீணாகிப் போன உபகரணங்களை வைத்துக் கொண்டு, நமது அணியினர் பதக்கங்களை அள்ளிக் குவிக்க வேண்டும் என்று ஆசைப்படலாமா?
டெல்லியில் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி நடந்த பிறகு, அங்குள்ள ஸ்டேடியங்களைப் பயன்படுத்த வீரர், வீராங்கனைகள் மிகப் பெரிய போராட்டமே நடத்த வேண்டியிருந்தது. இவ்வளவி பிரச்னைகளையும் தாண்டி பதக்க வேட்டையில் சாதித்திருக்கும் நமது இளைஞர்களை பாராட்டியே தீர வேண்டும்.
ஆஸ்திரேலியாவைப் போல வசதியும், வாய்ப்பும் கிடைத்தால்நம்ம பசங்கஅத்தனை பதக்கங்களையும் ஒட்டு மொத்தமாக அள்ளிக் கொண்டு வந்துவிடுவார்கள் என்று அடித்துச் சொல்லலாம்.
அரசியல் தலையீடு, ஒதுக்கப்படும் நிதியில் ஊழல், வீரர்கள் தேர்வில் முறைகேடு போன்ற புல்லுருவிகளையும் களையெடுத்தால் மட்டுமே இது சாத்தியமாகும்.

- ஷங்கர் பார்த்தசாரதி
(தினகரன் நாளிதழில் வெளியானது)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக