விளையாட்டு தொடர்பான கல்வி, மருத்துவம் இரண்டிலும் ஆஸ்திரேலியர்கள் முன்னோடிகள் என்றால் மிகையல்ல. உலக அளவில் நட்சத்திர வீரர், வீராங்கனைகள் காயம் அடைந்தால், சிகிச்சைக்காக ஆஸ்திரேலியா பறப்பது வாடிக்கை.
இலங்கை அணி முன்னாள் சுழற்பந்து நட்சத்திரம் முத்தையா முரளிதரன் பந்தை எறிவதாகப் புகார் எழுந்தபோது ஆஸ்திரேலியாவில் நடத்தப்பட்ட அதிநவீன சோதனையில் தான், இயற்கையிலேயே அவரது வலது முழங்கை சற்று வளைந்திருக்கிறது என்பது தெரிய வந்தது. அவரது பந்துவீச்சு பாணி முறையானது என்றும் சான்றிதழ் அளிக்கப்பட்டது.
மெல்போர்னில் உள்ள விக்டோரியா பல்கலைக்கழகத்திலும் விளையாட்டுக் கல்வி மற்றும் மருத்துவ ஆராய்ச்சிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். அங்குள்ள வசதிகளை சுற்றிப் பார்த்தபோது, ஏதோ சயன்ஸ்-பிக்ஷன் திரைப்படத்துக்கான அரங்குக்குள் நுழைந்தது போலவே இருந்தது. மோஷன் கேப்சர் தொழில்நுட்பத்துக்கான உணர்வு கருவிகளை உடல் முழுவதும் பொருத்திக் கொண்டு ஓடிக் கொண்டிருக்கிறார் ஒரு ஆராய்ச்சி மாணவி. கம்ப்யூட்டர் திரையில் அவரது அசைவுகள் அனைத்தும் ஒரு உயிருள்ள ரோபோவாக நம் கண் முன்னே விரிகிறது.
முன்னணி வீரர், வீராங்கனைகள் இங்கு வந்து சோதனை எலிகளைப் போல தங்களை ஆராய்ச்சிக்குட்படுத்திக் கொள்வதை பார்க்க முடிகிறது. ஆஸ்திரேலியாவின் அத்தனை விளையாட்டு சங்கங்களுடனும் இதற்காக ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள். ஒருவர் டிரெட்மில்லில் ஓடிக் கொண்டிருக்கிறார். இன்னொருவர் சைக்கிள் சக்கரத்தை முழு வேகத்தில் மிதித்துக் கொண்டிருக்கிறார். குறிப்பிட்ட வீரரின் அதிகபட்ச தாங்கும் திறன், அவரது தசைகளின் இயக்கம், வெவ்வேறு வெப்ப நிலைகளில் உடலின் செயல்பாடு என மிக நுணுக்கமாக கவனித்து அளவீடுகளைப் பதிவு செய்கிறார்கள்.
இங்கு நடக்கும் ஆராய்ச்சிகளின் தகவல் பதிவுகளுடன் செயற்கை நுண்ணறிவு மற்றும் ரோபோட்டிக்ஸ் சேர்ந்தால் ஓராயிரம் உசேன் போல்ட்டுகளை உருவாக்கி விடுவார்கள் போலிருக்கிறது.
இந்த ஆராய்ச்சிகளின் பலன்களாக, பந்தின் போக்கை கணிக்கும் ‘பால் ட்ரேக்கிங்’, மட்டையில் பட்டதா இல்லையா? என்பதை தீர்மானிக்க உதவும் ’ஸ்நிக்கோ மீட்டர்’ போன்ற தொழில்நுட்பங்களைச் சொல்லலாம்.
சீனாவை சேர்ந்த ஆராய்ச்சி மாணவர், முதியவர்கள் தடுமாறி கீழே விழுந்துவிடுவதை தவிர்க்கும் வகையில் ஷூக்களுக்குள் வைத்துக் கொள்ளும் பாதப் பட்டைகளை உருவாக்கி இருக்கிறார். இதற்கான பேட்டன்ட் உரிமையையும் பெற்றுள்ள அவர், விரைவில் ஆன்லைன் விற்பனையை தொடங்கப் போவதாக உற்சாகத்துடன் தெரிவித்தார்.
விக்டோரியா பல்கலையில் இந்திய மாணவர்களும் கணிசமாகப் படித்து வருகிறார்கள். ஆண்டுக்கு ஆண்டு இந்த எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. https://www.vu.edu.au
என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் மாணவர் சேர்க்கைக்கான அனைத்து விவரங்களையும் தெரிந்து கொள்ளலாம்.
- ஷங்கர் பார்த்தசாரதி
(தினகரன் நாளிதழில் வெளியானது)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக