சனி, 22 ஜனவரி, 2011

தாதா வீரர்களுக்கு கல்தா


சாதா வீரர்களுக்கு அள்ளித் தா! 
அதிர வைத்த ஐபிஎல் பார்முலா

இந்தியன் பிரிமியர் லீக் டி20 நான்காவது சீசனுக்கான வீரர்கள் ஏலம், பெங்களூரில் ஏகத்துக்கு சூடு கிளப்பியது. அணி உரிமையாளர்கள் விஜய் மல்லையா, நீதா அம்பானி, ஷில்பா ஷெட்டி, பிரீத்தி ஜிந்தா என்று பிரபலங்கள் குவிய மீடியா பரபரத்தது.
மொத்தம் 350 வீரர்கள்… இரண்டு ரவுண்டு. தொடக்க வீரர் கவுதம் கம்பீருக்கு ஏக கிராக்கி. கடும் போட்டிக்கிடையே கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 11.4 கோடிக்கு கம்பீரை வாங்கியது. யூசுப் பதான், உத்தப்பாவுக்கு தலா 9.66 கோடி!
கங்குலி, லாரா, ஜெயசூரியா, கிறிஸ் கேல்… 1.8 கோடி ஒருதரம்… 1.8 கோடி ஒருதரம்… ஏலம் நடந்த அரங்கில் மயான அமைதி; ஒருத்தரும் வாயை திறக்கவில்லை. பெயரைக் கேட்டாலே அதிருதில்ல வகை வீரர்களை சீண்ட ஆளில்லை. என்ன நடக்கிறது என்று யாருக்குமே புரியவில்லை.
சவுரவ் திவாரி, இர்பான் பதான், அஷ்வின், பத்ரிநாத், தினேஷ் கார்த்திக்… இளம் இந்திய வீரர்களை கொஞ்சம் கூட தயங்காமல் கோடிகளைக் கொட்டி அள்ளினார்கள் அணி உரிமையாளர்கள். டேனியல் கிறிஸ்டியன்… யாரோ ஆஸ்திரேலிய ஆல்-ரவுண்டராம்! ஐதராபாத் அணி 4.14 கோடிக்கு ஏலம் எடுக்க, நமக்கு தலையை பிய்த்துக் கொள்ளலாம் போல இருந்தது.
4.14 கோடியா? எனக்கே எனக்கா! என்று டேனியல் ஆனந்த அதிர்ச்சியில் மூர்ச்சை போட்டுவிட்டாராம். பெய்லி, பிளெஸ்ஸி என்று நாக்கு சுளுக்கிக் கொள்ளும் பெயர்களை எல்லாம் பரபரப்பாக வாங்கிய அணிகள் நியூசி. ஆல்-ரவுண்டர் ரைடர், முகமது கைப் போன்றவர்கள் மறு ஏலம் விடப்பட்டபோது தயங்கித் தயங்கி வாங்கின. வேணுகோபால் ராவுக்கு 3.22 கோடி!
கடந்த சீசனில் வெறும் 18 லட்சத்துக்கு வாங்கப்பட்ட சவுரவ் திவாரிக்கு இந்த முறை கிடைத்தது 7.6 கோடி! கங்குலியை கழட்டி விடலாம் என்று கணக்கு போட்ட ஷாருக்கான், ஆப்பு அசைத்த குரங்காய் அல்லாடிக் கொண்டிருக்கிறார். கொதித்துப் போன கொல்கத்தா ரசிகர்கள் கொடி பிடிக்க, ‘கங்குலி இல்லாமல் கொல்கத்தா அணி இல்லை. நாடு திரும்பியதும் அவருடன் இது பற்றி பேசுவேன்’ என்று ஷாருக் ஜகா வாங்கி இருக்கிறார். ஆலோசகர், நிர்வாகி என்று இறங்கி வர கங்குலிக்கு விருப்பம் இல்லை. களமிறங்க அனுமதித்தால் மட்டுமே வெள்ளைக் கொடி என்பதில் உறுதியாக இருப்பதாகத் தெரிகிறது.
அணிகளால் தக்கவைத்துக் கொள்ளப்பட்ட சச்சின், டோனி, சேவக்குக்கு தலா 8.1 கோடிதான் பேசப்பட்டிருந்தது. கம்பீருக்கே 11.04 கோடி என்றால் எங்களுக்கு? என்று இந்த வீரர்கள் கேட்டால் நியாயம் தானே! அதை விட அதிகமாகவே தருகிறோம் என்று இவர்களுக்கு உறுதி அளிக்கப்பட்டிருக்கிறதாம்.
ஏலம் முடிந்து அணிகள் பற்றிய நிலை இப்போதுதான் மெல்ல தெளிவாக ஆரம்பித்திருக்கிறது. நிறைய தலைகள் அங்கும் இங்குமாக மாறி இருப்பதால் முழுமையாகக் கணிக்க முடியவில்லை. பஞ்சாப் கிங்ஸ் லெவன் கேப்டனாக கில்கிறிஸ்ட்டுக்கு வாய்ப்பு கிடைக்கும் எனத் தெரிகிறது. முரளிதரன் இல்லாதது நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்சுக்கு பெரிய இழப்புதான். இம்முறை கொச்சி அணிக்காக கையை சுழற்ற உள்ளார் முரளி.
கடந்த பைனல்சில் விளையாடிய வீரர்களில் 10 பேர் அணியில் நீடிப்பதால் சிஎஸ்கே உற்சாகமாகவே உள்ளது. ஹில்பென்ஹாஸ், பிராவோ, ரந்திவ் வரவும் பலத்தை அதிகரித்துள்ளது. அடுத்து சச்சின் டெண்டுல்கரின் மும்பை இந்தியன்ஸ் முழுமையான அணியாக தோன்றுகிறது. சர்ச்சை வீரர்கள் ஹர்பஜனும், ஆண்ட்ரூ சைமண்ட்சும் ஒரே அணியில் விளையாட இருப்பது ஆச்சரியமான விஷயம். தென் ஆப்ரிக்காவின் டேவிட் ஜேக்கப்ஸ், நியூசிலாந்தின் ஜேம்ஸ் பிராங்க்ளின் அதிரடி மும்பைக்கு கூடுதல் பலம் சேர்க்கும். டி20ல் காலி பெருங்காய டப்பாக்களுக்கு இடமில்லை, பெர்பார்மன்ஸ்தான் முக்கியம் என்று அணி உரிமையாளர்கள் கோடிட்டுக் காட்டியுள்ளதால், கோடிக் கணக்கில் விலை போயுள்ள வீரர்கள் உயிரைக் கொடுத்து விளையாடுவார்கள் என்று நம்பலாம். இல்லை என்றால் அடுத்த சீசனில் காணாமல் போய் விடுவோம் என்பதை எல்லோருமே உணர்ந்திருக்கிறார்கள். ஏலத்தின் சூடு ஆட்டத்திலும் எதிரொலித்தால் ரசிகர்களுக்கு கொண்டாட்டம்தான்.

பா.சங்கர் 

(குங்குமம் இதழில் வெளியானது)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக