சனி, 22 ஜனவரி, 2011

பயஸ் – பூபதி கொடுத்த டபுள்ஸ் ட்ரீட்


வாவ்… ஒரே டிக்கெட்டில் ரஜினியின் 2 சூப்பர் ஹிட் படம் பார்த்த மகிழ்ச்சியும் திருப்தியும் சென்னை ஓபனில் கிடைத்தது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் இணைந்த லியாண்டர் பயஸ் – மகேஷ் பூபதி ஜோடி பைனலுக்கு முன்னேறியதுமே ரசிகர்களின் ஆர்வமும் உற்சாகமும் றெக்கை கட்டிக் கொண்டது.
ஜன.9 சென்னை ஓபனில் கடைசி நாள். பயஸ் – பூபதியின் டபுள் ட்ரீட்டை எதிர்பார்த்து ரசிகர்கள் குவிந்ததால் நுங்கம்பாக்கம் ஸ்டேடியம் திக்குமுக்காடியது. முதலில் ஒற்றையர் பைனல்ஸ். சுவிஸ் வீரர் வாவ்ரின்காவும் நெதர்லாந்தின் சேவியர் மலிஸேவும் மல்லுகட்டினார்கள். கடந்த ஆண்டு பைனலில் மரின் சிலிக்கிடம் விட்டதை பிடித்துவிட வேண்டும் என்ற வெறியோடு விளையாடிய வாவ்ரின்கா புதிய சாம்பியனாகி கோப்பையுடன் உற்சாகமாக போஸ் கொடுத்தார்.
அடுத்து நாம் ஆவலோடு எதிர்பார்த்த பரபர கிளைமாக்ஸ். பயஸ் – பூபதி இரட்டைக் குழல் துப்பாக்கியாக படபடக்க, ராபின் ஹாஸ் (நெதர்லாந்து) – டேவிட் மார்ட்டின் (அமெரிக்கா) ஜோடி முதல் செட்டில் எதிர்ப்பின்றி சரணடைந்தது. அடுத்த செட்டிலும் நம்மவர்கள் அடித்து நொறுக்கிவிடுவார்கள் என்று நினைத்தால், கதை டிராக் மாறியது. விடாக்கண்டன் கொடாக்கண்டனாக இரண்டு ஜோடியும் போராடியதால் ரசிகர்கள் இருக்கை நுனியில்.
டை-பிரேக்கரில் ராபின் – மார்டின் கை ஓங்கி 2வது செட்டை கைப்பற்ற சமநிலை. மூன்றாவது செட் சூப்பர் டை-பிரேக்கர்… உனக்கா எனக்கா என்று டக் ஆப் வாராக இரண்டு ஜோடியும் தம் கட்டி இழுக்க… ரசிகர்கள் மூச்சு விடவும் மறந்தனர். ஒரு வழியாக 10-7 என்ற கணக்கில் பயஸ் – பூபதி வென்று துள்ளிக் குதித்து மார்போடு மார்பை மோதி தங்கள் டிரேட் மார்க் கொண்டாட்டத்தை வெளிப்படுத்தியபோது ரசிகர்கள் ஆனந்தக் கூத்தாடினர்.
சச்சின் – கங்குலி, பாரதிராஜா – இளையராஜா இப்படி நமக்கு பிடிச்ச கூட்டணியிடம் இருந்து வரும் மாஸ்டர் பீஸ் என்னைக்குமே சலிக்காது இல்லையா. 1997ல் இருந்து 2002 வரை இரட்டையர் பிரிவில் ஆதிக்கம் செலுத்திய பயஸ் – பூபதி பிரிந்தபோது வருத்தப்படாத இந்திய ரசிகர்களே இருக்க முடியாது. அதன் பிறகு நாட்டுக்காக மட்டும் சேர்ந்து விளையாடி வந்தவர்கள், ஈகோ கிளாஷை ஒதுக்கிவிட்டு புரொபஷனல் போட்டிகளில் மீண்டும் சேர்ந்து விளையாடுவது என்று முடிவு செய்ததுமே, 2வது இன்னிங்சை சென்னையில்தான் தொடங்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தனர்.
இருவருக்குமான சென்னை கனெக்‌ஷன் அவ்வளவு ஸ்ட்ராங். கொல்கத்தாவில் பிறந்த பயஸ், சென்னை கிறிஸ்டியன் காலேஜ் மேல்நிலைப் பள்ளி மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது. சென்னை ஓபன் இரட்டையர் பட்டத்தை இந்த ஜோடி 5வது முறையாக வென்றதில் அவர்களை விட ரசிகர்களுக்குத்தான் அதிக மகிழ்ச்சி.
’ஒன்பது ஆண்டு இடைவெளிக்குப் பிறகு மீண்டும் ஜோடி சேர்ந்து சென்னை ஓபன் பட்டத்தை ஐந்தாவது முறையாக வென்றுள்ளது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. கடந்த ஆண்டு இங்கு டேவிஸ் கோப்பை போட்டியிலும் வென்றோம். சென்னை ரசிகர்களின் அன்பையும் ஆதரவையும் எங்களால் மறக்கவே முடியாது’ என்று நெகிழ்ந்தார் பயஸ். அதை அப்படியே வழிமொழிந்தார் பூபதி.

பா.சங்கர்

(குங்குமம் இதழில் வெளியானது)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக