சனி, 22 ஜனவரி, 2011

தாதா வீரர்களுக்கு கல்தா


சாதா வீரர்களுக்கு அள்ளித் தா! 
அதிர வைத்த ஐபிஎல் பார்முலா

இந்தியன் பிரிமியர் லீக் டி20 நான்காவது சீசனுக்கான வீரர்கள் ஏலம், பெங்களூரில் ஏகத்துக்கு சூடு கிளப்பியது. அணி உரிமையாளர்கள் விஜய் மல்லையா, நீதா அம்பானி, ஷில்பா ஷெட்டி, பிரீத்தி ஜிந்தா என்று பிரபலங்கள் குவிய மீடியா பரபரத்தது.
மொத்தம் 350 வீரர்கள்… இரண்டு ரவுண்டு. தொடக்க வீரர் கவுதம் கம்பீருக்கு ஏக கிராக்கி. கடும் போட்டிக்கிடையே கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 11.4 கோடிக்கு கம்பீரை வாங்கியது. யூசுப் பதான், உத்தப்பாவுக்கு தலா 9.66 கோடி!
கங்குலி, லாரா, ஜெயசூரியா, கிறிஸ் கேல்… 1.8 கோடி ஒருதரம்… 1.8 கோடி ஒருதரம்… ஏலம் நடந்த அரங்கில் மயான அமைதி; ஒருத்தரும் வாயை திறக்கவில்லை. பெயரைக் கேட்டாலே அதிருதில்ல வகை வீரர்களை சீண்ட ஆளில்லை. என்ன நடக்கிறது என்று யாருக்குமே புரியவில்லை.
சவுரவ் திவாரி, இர்பான் பதான், அஷ்வின், பத்ரிநாத், தினேஷ் கார்த்திக்… இளம் இந்திய வீரர்களை கொஞ்சம் கூட தயங்காமல் கோடிகளைக் கொட்டி அள்ளினார்கள் அணி உரிமையாளர்கள். டேனியல் கிறிஸ்டியன்… யாரோ ஆஸ்திரேலிய ஆல்-ரவுண்டராம்! ஐதராபாத் அணி 4.14 கோடிக்கு ஏலம் எடுக்க, நமக்கு தலையை பிய்த்துக் கொள்ளலாம் போல இருந்தது.
4.14 கோடியா? எனக்கே எனக்கா! என்று டேனியல் ஆனந்த அதிர்ச்சியில் மூர்ச்சை போட்டுவிட்டாராம். பெய்லி, பிளெஸ்ஸி என்று நாக்கு சுளுக்கிக் கொள்ளும் பெயர்களை எல்லாம் பரபரப்பாக வாங்கிய அணிகள் நியூசி. ஆல்-ரவுண்டர் ரைடர், முகமது கைப் போன்றவர்கள் மறு ஏலம் விடப்பட்டபோது தயங்கித் தயங்கி வாங்கின. வேணுகோபால் ராவுக்கு 3.22 கோடி!
கடந்த சீசனில் வெறும் 18 லட்சத்துக்கு வாங்கப்பட்ட சவுரவ் திவாரிக்கு இந்த முறை கிடைத்தது 7.6 கோடி! கங்குலியை கழட்டி விடலாம் என்று கணக்கு போட்ட ஷாருக்கான், ஆப்பு அசைத்த குரங்காய் அல்லாடிக் கொண்டிருக்கிறார். கொதித்துப் போன கொல்கத்தா ரசிகர்கள் கொடி பிடிக்க, ‘கங்குலி இல்லாமல் கொல்கத்தா அணி இல்லை. நாடு திரும்பியதும் அவருடன் இது பற்றி பேசுவேன்’ என்று ஷாருக் ஜகா வாங்கி இருக்கிறார். ஆலோசகர், நிர்வாகி என்று இறங்கி வர கங்குலிக்கு விருப்பம் இல்லை. களமிறங்க அனுமதித்தால் மட்டுமே வெள்ளைக் கொடி என்பதில் உறுதியாக இருப்பதாகத் தெரிகிறது.
அணிகளால் தக்கவைத்துக் கொள்ளப்பட்ட சச்சின், டோனி, சேவக்குக்கு தலா 8.1 கோடிதான் பேசப்பட்டிருந்தது. கம்பீருக்கே 11.04 கோடி என்றால் எங்களுக்கு? என்று இந்த வீரர்கள் கேட்டால் நியாயம் தானே! அதை விட அதிகமாகவே தருகிறோம் என்று இவர்களுக்கு உறுதி அளிக்கப்பட்டிருக்கிறதாம்.
ஏலம் முடிந்து அணிகள் பற்றிய நிலை இப்போதுதான் மெல்ல தெளிவாக ஆரம்பித்திருக்கிறது. நிறைய தலைகள் அங்கும் இங்குமாக மாறி இருப்பதால் முழுமையாகக் கணிக்க முடியவில்லை. பஞ்சாப் கிங்ஸ் லெவன் கேப்டனாக கில்கிறிஸ்ட்டுக்கு வாய்ப்பு கிடைக்கும் எனத் தெரிகிறது. முரளிதரன் இல்லாதது நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்சுக்கு பெரிய இழப்புதான். இம்முறை கொச்சி அணிக்காக கையை சுழற்ற உள்ளார் முரளி.
கடந்த பைனல்சில் விளையாடிய வீரர்களில் 10 பேர் அணியில் நீடிப்பதால் சிஎஸ்கே உற்சாகமாகவே உள்ளது. ஹில்பென்ஹாஸ், பிராவோ, ரந்திவ் வரவும் பலத்தை அதிகரித்துள்ளது. அடுத்து சச்சின் டெண்டுல்கரின் மும்பை இந்தியன்ஸ் முழுமையான அணியாக தோன்றுகிறது. சர்ச்சை வீரர்கள் ஹர்பஜனும், ஆண்ட்ரூ சைமண்ட்சும் ஒரே அணியில் விளையாட இருப்பது ஆச்சரியமான விஷயம். தென் ஆப்ரிக்காவின் டேவிட் ஜேக்கப்ஸ், நியூசிலாந்தின் ஜேம்ஸ் பிராங்க்ளின் அதிரடி மும்பைக்கு கூடுதல் பலம் சேர்க்கும். டி20ல் காலி பெருங்காய டப்பாக்களுக்கு இடமில்லை, பெர்பார்மன்ஸ்தான் முக்கியம் என்று அணி உரிமையாளர்கள் கோடிட்டுக் காட்டியுள்ளதால், கோடிக் கணக்கில் விலை போயுள்ள வீரர்கள் உயிரைக் கொடுத்து விளையாடுவார்கள் என்று நம்பலாம். இல்லை என்றால் அடுத்த சீசனில் காணாமல் போய் விடுவோம் என்பதை எல்லோருமே உணர்ந்திருக்கிறார்கள். ஏலத்தின் சூடு ஆட்டத்திலும் எதிரொலித்தால் ரசிகர்களுக்கு கொண்டாட்டம்தான்.

பா.சங்கர் 

(குங்குமம் இதழில் வெளியானது)

பயஸ் – பூபதி கொடுத்த டபுள்ஸ் ட்ரீட்


வாவ்… ஒரே டிக்கெட்டில் ரஜினியின் 2 சூப்பர் ஹிட் படம் பார்த்த மகிழ்ச்சியும் திருப்தியும் சென்னை ஓபனில் கிடைத்தது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் இணைந்த லியாண்டர் பயஸ் – மகேஷ் பூபதி ஜோடி பைனலுக்கு முன்னேறியதுமே ரசிகர்களின் ஆர்வமும் உற்சாகமும் றெக்கை கட்டிக் கொண்டது.
ஜன.9 சென்னை ஓபனில் கடைசி நாள். பயஸ் – பூபதியின் டபுள் ட்ரீட்டை எதிர்பார்த்து ரசிகர்கள் குவிந்ததால் நுங்கம்பாக்கம் ஸ்டேடியம் திக்குமுக்காடியது. முதலில் ஒற்றையர் பைனல்ஸ். சுவிஸ் வீரர் வாவ்ரின்காவும் நெதர்லாந்தின் சேவியர் மலிஸேவும் மல்லுகட்டினார்கள். கடந்த ஆண்டு பைனலில் மரின் சிலிக்கிடம் விட்டதை பிடித்துவிட வேண்டும் என்ற வெறியோடு விளையாடிய வாவ்ரின்கா புதிய சாம்பியனாகி கோப்பையுடன் உற்சாகமாக போஸ் கொடுத்தார்.
அடுத்து நாம் ஆவலோடு எதிர்பார்த்த பரபர கிளைமாக்ஸ். பயஸ் – பூபதி இரட்டைக் குழல் துப்பாக்கியாக படபடக்க, ராபின் ஹாஸ் (நெதர்லாந்து) – டேவிட் மார்ட்டின் (அமெரிக்கா) ஜோடி முதல் செட்டில் எதிர்ப்பின்றி சரணடைந்தது. அடுத்த செட்டிலும் நம்மவர்கள் அடித்து நொறுக்கிவிடுவார்கள் என்று நினைத்தால், கதை டிராக் மாறியது. விடாக்கண்டன் கொடாக்கண்டனாக இரண்டு ஜோடியும் போராடியதால் ரசிகர்கள் இருக்கை நுனியில்.
டை-பிரேக்கரில் ராபின் – மார்டின் கை ஓங்கி 2வது செட்டை கைப்பற்ற சமநிலை. மூன்றாவது செட் சூப்பர் டை-பிரேக்கர்… உனக்கா எனக்கா என்று டக் ஆப் வாராக இரண்டு ஜோடியும் தம் கட்டி இழுக்க… ரசிகர்கள் மூச்சு விடவும் மறந்தனர். ஒரு வழியாக 10-7 என்ற கணக்கில் பயஸ் – பூபதி வென்று துள்ளிக் குதித்து மார்போடு மார்பை மோதி தங்கள் டிரேட் மார்க் கொண்டாட்டத்தை வெளிப்படுத்தியபோது ரசிகர்கள் ஆனந்தக் கூத்தாடினர்.
சச்சின் – கங்குலி, பாரதிராஜா – இளையராஜா இப்படி நமக்கு பிடிச்ச கூட்டணியிடம் இருந்து வரும் மாஸ்டர் பீஸ் என்னைக்குமே சலிக்காது இல்லையா. 1997ல் இருந்து 2002 வரை இரட்டையர் பிரிவில் ஆதிக்கம் செலுத்திய பயஸ் – பூபதி பிரிந்தபோது வருத்தப்படாத இந்திய ரசிகர்களே இருக்க முடியாது. அதன் பிறகு நாட்டுக்காக மட்டும் சேர்ந்து விளையாடி வந்தவர்கள், ஈகோ கிளாஷை ஒதுக்கிவிட்டு புரொபஷனல் போட்டிகளில் மீண்டும் சேர்ந்து விளையாடுவது என்று முடிவு செய்ததுமே, 2வது இன்னிங்சை சென்னையில்தான் தொடங்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தனர்.
இருவருக்குமான சென்னை கனெக்‌ஷன் அவ்வளவு ஸ்ட்ராங். கொல்கத்தாவில் பிறந்த பயஸ், சென்னை கிறிஸ்டியன் காலேஜ் மேல்நிலைப் பள்ளி மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது. சென்னை ஓபன் இரட்டையர் பட்டத்தை இந்த ஜோடி 5வது முறையாக வென்றதில் அவர்களை விட ரசிகர்களுக்குத்தான் அதிக மகிழ்ச்சி.
’ஒன்பது ஆண்டு இடைவெளிக்குப் பிறகு மீண்டும் ஜோடி சேர்ந்து சென்னை ஓபன் பட்டத்தை ஐந்தாவது முறையாக வென்றுள்ளது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. கடந்த ஆண்டு இங்கு டேவிஸ் கோப்பை போட்டியிலும் வென்றோம். சென்னை ரசிகர்களின் அன்பையும் ஆதரவையும் எங்களால் மறக்கவே முடியாது’ என்று நெகிழ்ந்தார் பயஸ். அதை அப்படியே வழிமொழிந்தார் பூபதி.

பா.சங்கர்

(குங்குமம் இதழில் வெளியானது)

ஞாயிறு, 16 ஜனவரி, 2011

இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

அனைவருக்கும் அன்பு பொங்கல்/புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

பொங்கலையொட்டி, தினகரன் அலுவலக ஊழியர்களிடையே துறை சார்ந்த கிரிக்கெட் போட்டிக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். மைதானமே கதி என்று விளையாடிக் கொண்டிருந்த  நாட்கள் மனதில் மின்னல் அடிக்க, ஆர்வக் கோளாறில் உற்சாகமாய் பங்கேற்றோம்.
அரை இறுதியில் தோல்வியை தவிர்க்க முடியவில்லை. பல ஆண்டு இடைவெளிக்குப் பிறகும் ஆட்டத் திறமை அடியோடு காணாமல் போகாமல், ஓரளவு சிறப்பாகவே விளையாட முடிந்ததில் மகிழ்ச்சியும் திருப்தியும் மனதில் அலையடித்தது.
அலுவலக உதவியாளர்கள் அணி...முழுக்க முழுக்க இளைஞர் பட்டாளம்! துடிப்புடன் விளையாடி சன் குழும கோப்பையுடன் முதல் பரிசாய் ரூ.30 ஆயிரம் தட்டிச் சென்றது. மறுநாள்தான் பிரச்னையே ஆரம்பம். அலுவலகம்... கம்ப்யூட்டரில் லொட் லொட்...வீடு...டிவி, லேப்டாப்...உடற்பயிற்சிக்கு நேரமே ஒதுக்காமல் வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருந்துவிட்டு, திடீரென களத்தில் இறங்கி அலட்டிக் கொண்டதில் அங்கங்கே தசைப்பிடிப்பு. நடக்க முடியவில்லை...உட்கார்ந்தால் எழுந்திருக்க முடியவில்லை. ஒருவழியாய் பொங்கல் பூஜையை முடித்து, அப்படியே படுத்துக் கிடந்தேன்.
மாலை 5 மணிக்கு பூங்காவில் சென்னை சங்கமம். நாட்டுப்புறக் கலைஞர்களின் அற்புதமான நிகழ்ச்சிகள்...காணத் தவறாதீர்கள் என்று ஒலிபெருக்கியில்  அலறிக் கொண்டிருந்தார்கள்.

கால் வலியையும் பொருட்படுத்தாமல் மெல்ல இறங்கிச் சென்றேன். கரகாட்டம், கொக்காலிக்கட்டை (கால்களில் கட்டைகளைக் கட்டி உயரத்தை அதிகரித்துக் கொண்டு செய்யும் சாகசம்), பறையாட்டம் என்று அமர்க்களப்படுத்தினார்கள். குழந்தைகளும் பெரியவர்களுமாய் திரண்டு கண்டு களித்ததைப் பார்க்க பரவசமாக இருந்தது.



சனி, 1 ஜனவரி, 2011

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்!



அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதில் மிகுந்த மகிழ்ச்சி. கடந்த ஆண்டின் கடைசி நாளான நேற்று ஆன்மிகக் கவிஞரும் பாடகருமான திரு. பித்துக்குளி முருகதாஸ் அவர்களை மயிலாப்பூரில் உள்ள அவரது இல்லத்தில் சந்திக்கும் அரிய வாய்ப்பு கிடைத்தது.
சுமார் இரண்டு மணி நேரம் அவருடன் பேசிக் கொண்டிருந்தது மறக்க முடியாத அனுபவம். இந்த மாதம் 25ம் தேதி 93வது வயதில் அடியெடுத்து வைக்க உள்ள இவர், கன்னியாகுமரியில் இருந்து கைலாயம் வரை (14,000 கி.மீ.) இரண்டு முறை பாதயாத்திரை சென்றிருக்கிறார்.
*  7 வயதில் பழநி மலைக் குகையில் யோகா பயிற்சி.
* 11 வயதில் அந்நிய துணி பகிஷ்கரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு சிறைவாசம்.
* ஓட்டலில் சர்வர் வேலை.
* 15 வயதில் வீட்டை விட்டு வெளியேறி பா(ர)த யாத்திரை.
*  ஜாலியன்வாலாபாக் படுகொலையை கண்டித்து மறியல் செய்து, தடியடி வாங்கி,மீண்டும் 6 மாத சிறை.
* முருக பக்தராய், கவிஞராய், பாடகராய் உலகப் புகழ்.
* தென் ஆப்ரிக்காவில் அதிபர் நெல்சன் மண்டேலா முன்னிலையில் இசை நிகழ்ச்சி நடத்தி, அவரது பாராட்டுதல்களைப் பெற்றது.
இப்படி ஏராளமான சுவையான தகவல்களை உற்சாகமாகப் பகிர்ந்து கொண்டார்.

அவரது வாழ்க்கைப் பயணத்தின் அத்தனை சுவடுகளையும் இணையதளத்தில் விரிவாகப் பதிக்கும் முயற்சியில் லஷ்மண் ஸ்ருதி முனைப்புடன் இறங்கியிருக்கிறது. அந்தாதி வடிவிலான சுயசரிதை, எழுதிய பிற புத்தகங்கள், பாடல்கள், புகைப்படங்கள், வீடியோ... என்று தொகுப்பதற்கு ஏராளமாய் இருக்கிறது. பக்கங்கள் தயாரானதும் பரிமாறிக் கொள்வோம்.

பா.சங்கர்