செவ்வாய், 21 ஜூன், 2016

புதிய எழுச்சி

சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடரின் 36 ஆண்டு கால வரலாற்றில் முதல் முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியதுடன், உலக சாம்பியனும் நம்பர் 1 அணியுமான ஆஸ்திரேலியாவுக்கு கடைசி வரை ஈடு கொடுத்த இந்திய அணி வெள்ளி பதக்கத்தை வென்று சாதனை படைத்துள்ளது.

ஹாக்கி விளையாட்டில் இந்திய அணி கொடிகட்டிப் பறந்த காலம் முடிவுக்கு வந்து பல மாமாங்கம் ஆகிவிட்டது. தொடர்ச்சியாக 6 முறை உள்பட ஒலிம்பிக் போட்டியில் 8 தங்கம் வென்ற இந்திய அணி, 1980க்கு பிறகு படிப்படியாக கீழிறங்கி பரிதாபமான நிலையை எட்டியது. 2008ல் நடந்த பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதிபெறக் கூட முடியவில்லை. தேசிய விளையாட்டு என்பதே மறந்துபோகும் அளவுக்கு தோல்வியால் துவண்டுகிடந்த ஹாக்கி அணி, இன்று புதிய எழுச்சியுடன் வெற்றிப் பாதையில் பயணிக்கத் தொடங்கியிருக்கிறது. ஹாக்கி விளையாட்டில் மிகப் பெரிய தொடராகக் கருதப்படும் சாம்பியன்ஸ் டிராபியில், முதல் முறையாக பைனலுக்கு தகுதி பெற்றதே பெரிய சாதனை தான்.

பலம் வாய்ந்த ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக மிகச் சிறப்பாக விளையாடி, ஒரு மணி நேர ஆட்டத்தில் ஒரு கோல் கூட விட்டுக்கொடுக்காமல் தீரமாகப் போராடியதை பாராட்டாமல் இருக்க முடியாது.சமீபத்தில் நடந்த சுல்தான் அஸ்லான் ஷா கோப்பை தொடரில் இரண்டு முறையும், சாம்பியன்ஸ் டிராபி லீக் ஆட்டத்திலும் ஆஸ்திரேலியாவை சந்தித்தபோது ஒரு டஜன் கோல் விட்டுக் கொடுத்திருந்தது இந்திய அணி. ஆனால், இறுதிப் போட்டியில் வியூகத்தை முற்றிலுமாக மாற்றி உலக சாம்பியனை திக்குமுக்காட வைத்துவிட்டது.

சாம்பியன் யார் என்பதை தீர்மானிப்பதற்காக நடத்தப்பட்ட பெனால்டி ஷூட் அவுட்டில், நடுவர்களின் சர்ச்சைக்குரிய முடிவால் வெற்றி வாய்ப்பை இழந்தாலும் இந்திய வீரர்களின் ஆட்டம் ரசிகர்களின் இதயங்களைக் கொள்ளையடிக்கத் தவறவில்லை.எட்டு விநாடிகளில் பெனால்டி ஷூட் அவுட் முயற்சி பூர்த்தியடைய வேண்டும் என்ற விதியை காற்றில் பறக்கவிட்டு, ஆஸ்திரேலிய வீரருக்கு நடுவர்கள் மறுவாய்ப்பு அளித்ததை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது. இந்த தவறான முடிவால் இந்திய வீரர்கள் சோர்வடையத் தேவையும் இல்லை.

இதே எழுச்சியுடன் ரியோ ஒலிம்பிக் போட்டியிலும் விளையாடினால், பதக்கத்தை வசப்படுத்தி தேசத்துக்கு பெருமை சேர்க்க முடியும். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக