செவ்வாய், 28 ஜூன், 2016

நம்பிக்கை நட்சத்திரம்

ரியோ ஒலிம்பிக் போட்டி நெருங்கிவிட்டது. இன்னும் 40 நாளில் உலகின் மிகப் பெரிய விளையாட்டுத் திருவிழா கோலாகலமாகத் தொடங்கிவிடும். பதக்கங்களை அள்ளிக் குவிக்க வீரர், வீராங்கனைகள் தீவிரமாக தயாராகிக் கொண்டிருக்கிறார்கள்.இந்தியா சார்பிலும் கணிசமான எண்ணிக்கையில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளது, புதிய நம்பிக்கையை கொடுத்துள்ளது.

ஆண்கள் ஹாக்கி அணி, டென்னிசில் பயஸ், போபண்ணா, சானியா, பேட்மின்டனில் சாய்னா, ஜிம்னாஸ்டிக்சில் தீபா கர்மாகர் உள்பட பல பிரிவுகளில் பதக்க வாய்ப்பு இருப்பதை மறுக்க முடியாது. இந்த பட்டியலில் என்னையும் சேர்த்துக் கொள்ளுங்கள் என்று உற்சாகமாக சிறகடிக்கிறார் தடகள வீராங்கனை டூட்டீ சந்த்.ஒலிம்பிக்சின் பிரதான போட்டி என்றால் அது 100 மீட்டர் ஓட்டம் தான். அதிவேக வீரர், வீராங்கனையாக யார் தங்கப் பதக்கத்தை தட்டிச் செல்லப் போகிறார்கள் என்பதைத் தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கிறார்கள்.

1980 மாஸ்கோ ஒலிம்பிக் போட்டியின் மகளிர் 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் இந்தியா சார்பில் பி.டி.உஷா பங்கேற்றார். அதன் பிறகு ஒலிம்பிக் 100 மீ. ஓட்டத்துக்கு தகுதி பெற்ற முதல் வீராங்கனை என்ற பெருமை டூட்டீ சந்த்துக்கு கிடைத்துள்ளது.ஏழ்மையான நெசவாளர் குடும்பத்தில் 4வது மகளாகப் பிறந்தாலும், தனது முயற்சியாலும் கடுமையான பயிற்சியாலும் இதை சாதித்திருக்கிறார். கஜகஸ்தானில் நடந்த போட்டியில் பந்தய தூரத்தை 11.30 விநாடிகளில் கடந்து ரியோ ஒலிம்பிக் வாய்ப்பை உறுதி செய்திருக்கிறார். இது மட்டும் போதுமா? பதக்கம் வெல்ல முடியுமா? போன்ற கேள்விகளை ஒதுக்கித் தள்ளி, நம்பிக்கையுடன் முயன்றால் இலக்கை நிச்சயம் எட்ட முடியும்.

மகளிர் 100 மீட்டர் ஓட்டத்திலும் போட்டி கடுமையாகிக் கொண்டே தான் வருகிறது. 1920களில் 14 விநாடிகளில் ஓடியதே உலக சாதனையாக இருந்தது. படிப்படியாகக் குறைந்து தற்போது 11 விநாடிக்கும் குறைவான நேரத்தில் ஓட முடிந்திருக்கிறது. 1988ல் அமெரிக்க வீராங்கனை கிரிபித் ஜாய்னர் 10.49 வீநாடியில் ஓடிக் கடந்த சாதனையை இன்று வரை யாராலும் முறியடிக்க முடியவில்லை. காற்றின் வேகம் அவரது சாதனைக்கு சாதகமாக இருந்ததாக சர்ச்சை எழுந்தாலும், சர்வதேச தடகள கூட்டமைப்பு அந்த சாதனையை அங்கீகரித்தது.

அந்த அதிவேகத்தை எட்ட முடியவில்லை என்றாலும், குறைந்தபட்சம் வெண்கலப் பதக்கம் வென்றாலே டூட்டீ சந்த்தின் பெயர் இந்திய ஒலிம்பிக் வரலாற்றில் பொன்னெழுத்தில் பொறிக்கப்படும் என்பது உறுதி. 

செவ்வாய், 21 ஜூன், 2016

புதிய எழுச்சி

சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடரின் 36 ஆண்டு கால வரலாற்றில் முதல் முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியதுடன், உலக சாம்பியனும் நம்பர் 1 அணியுமான ஆஸ்திரேலியாவுக்கு கடைசி வரை ஈடு கொடுத்த இந்திய அணி வெள்ளி பதக்கத்தை வென்று சாதனை படைத்துள்ளது.

ஹாக்கி விளையாட்டில் இந்திய அணி கொடிகட்டிப் பறந்த காலம் முடிவுக்கு வந்து பல மாமாங்கம் ஆகிவிட்டது. தொடர்ச்சியாக 6 முறை உள்பட ஒலிம்பிக் போட்டியில் 8 தங்கம் வென்ற இந்திய அணி, 1980க்கு பிறகு படிப்படியாக கீழிறங்கி பரிதாபமான நிலையை எட்டியது. 2008ல் நடந்த பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதிபெறக் கூட முடியவில்லை. தேசிய விளையாட்டு என்பதே மறந்துபோகும் அளவுக்கு தோல்வியால் துவண்டுகிடந்த ஹாக்கி அணி, இன்று புதிய எழுச்சியுடன் வெற்றிப் பாதையில் பயணிக்கத் தொடங்கியிருக்கிறது. ஹாக்கி விளையாட்டில் மிகப் பெரிய தொடராகக் கருதப்படும் சாம்பியன்ஸ் டிராபியில், முதல் முறையாக பைனலுக்கு தகுதி பெற்றதே பெரிய சாதனை தான்.

பலம் வாய்ந்த ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக மிகச் சிறப்பாக விளையாடி, ஒரு மணி நேர ஆட்டத்தில் ஒரு கோல் கூட விட்டுக்கொடுக்காமல் தீரமாகப் போராடியதை பாராட்டாமல் இருக்க முடியாது.சமீபத்தில் நடந்த சுல்தான் அஸ்லான் ஷா கோப்பை தொடரில் இரண்டு முறையும், சாம்பியன்ஸ் டிராபி லீக் ஆட்டத்திலும் ஆஸ்திரேலியாவை சந்தித்தபோது ஒரு டஜன் கோல் விட்டுக் கொடுத்திருந்தது இந்திய அணி. ஆனால், இறுதிப் போட்டியில் வியூகத்தை முற்றிலுமாக மாற்றி உலக சாம்பியனை திக்குமுக்காட வைத்துவிட்டது.

சாம்பியன் யார் என்பதை தீர்மானிப்பதற்காக நடத்தப்பட்ட பெனால்டி ஷூட் அவுட்டில், நடுவர்களின் சர்ச்சைக்குரிய முடிவால் வெற்றி வாய்ப்பை இழந்தாலும் இந்திய வீரர்களின் ஆட்டம் ரசிகர்களின் இதயங்களைக் கொள்ளையடிக்கத் தவறவில்லை.எட்டு விநாடிகளில் பெனால்டி ஷூட் அவுட் முயற்சி பூர்த்தியடைய வேண்டும் என்ற விதியை காற்றில் பறக்கவிட்டு, ஆஸ்திரேலிய வீரருக்கு நடுவர்கள் மறுவாய்ப்பு அளித்ததை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது. இந்த தவறான முடிவால் இந்திய வீரர்கள் சோர்வடையத் தேவையும் இல்லை.

இதே எழுச்சியுடன் ரியோ ஒலிம்பிக் போட்டியிலும் விளையாடினால், பதக்கத்தை வசப்படுத்தி தேசத்துக்கு பெருமை சேர்க்க முடியும். 

செவ்வாய், 14 ஜூன், 2016

தேசத்துக்காக விளையாடுங்கள்

ரியோ ஒலிம்பிக்சில் அனுபவ வீரர் லியாண்டர் பயஸ் - ரோகன் போபண்ணா இணைந்து விளையாடுவார்கள் என்று உரிய நேரத்தில் அறிவித்து பெரிய சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது இந்திய டென்னிஸ் சங்கம். சர்வதேச டென்னிஸ் இரட்டையர் தரவரிசை பட்டியலில் 10வது இடம் பிடித்த போபண்ணா, பிரேசில் நாட்டில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டிக்கு நேரடியாக தகுதி பெற்றார். தனக்கு ஜோடியாக விளையாடும் வீரரை தேர்வு செய்யும் உரிமையும் அவருக்கு கிடைத்தது.

யாரை தேர்வு செய்யப் போகிறாரோ என்ற பரபரப்புக்கு இடையே, இளம் வீரர் சாகேத் மைனேனியுடன் இணைந்து ஒலிம்பிக் போட்டியில் களமிறங்க விரும்புவதாக இந்திய டென்னிஸ் சங்கத்துக்கு கடிதம் அனுப்பினார் போபண்ணா.அவரது கோரிக்கையை தொடக்கத்திலேயே நிராகரித்துவிட்ட டென்னிஸ் சங்கம், கடந்த 25 ஆண்டுகளாக சர்வதேச டென்னிசில் தொடர்ந்து முத்திரை பதித்து வரும் பயசுடன் ஜோடி சேர்ந்து விளையாடுங்கள் என அறிவுறுத்தியதுடன், ஒலிம்பிக் போட்டிக்கான அணியையும் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

சாதனை படைக்க வயது ஒரு தடையில்லை என்பதை பலமுறை நிரூபித்திருக்கிறார் பயஸ். சமீபத்தில் நடந்த பிரெஞ்ச் ஓபன் கிராண்ட் ஸ்லாம் போட்டியின் கலப்பு இரட்டையர் பிரிவில் சுவிஸ் வீராங்கனை மார்டினா ஹிங்கிசுடன் இணைந்து சாம்பியன் பட்டம் வென்றது, 42 வயதிலும் அவரது ஆட்டத் திறனும் உடல்தகுதியும் கொஞ்சம் கூட குறையவில்லை என்பதற்கு அத்தாட்சி.தனக்கான இணையை தேர்வு செய்யும் உரிமை போபண்ணாவுக்கு இருந்தாலும், பயசுடன் இணைந்து விளையாடினால் மட்டுமே பதக்க வாய்ப்பு அதிகம் என்று தேர்வுக் குழுவினர் தெளிவு படுத்தியுள்ளனர். மைனேனியுடன் சேர்ந்து விளையாட வேண்டும் என்ற தனது கோரிக்கை நிராகரிக்கப்பட்டதால் போபண்ணா சோர்வடைய வேண்டிய அவசியம் இல்லை. அவரது விருப்பம் நியாயமானதாக இருந்தாலும் கூட,

தேர்வுக் குழுவினரின் கருத்துக்கு மதிப்பளிக்க வேண்டியது அவசியம்.தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்கு இடம் கொடுக்காமல், தாய்நாட்டுக்காக முழு திறமையையும் வெளிப்படுத்தி விளையாடுவதே முக்கியம். கிராண்ட் ஸ்லாம் போட்டிகளின் ஆண்கள் இரட்டையர் பிரிவில் 8, கலப்பு இரட்டையர் பிரிவில் 10 என மொத்தம் 18 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ள பயசின் அனுபவத்துக்கு தற்போதுள்ள வீரர்களில் யாருமே ஈடாக மாட்டார்கள். கருத்து வேறுபாடுகளை ஒதுக்கி வைத்துவிட்டு பயஸ் - போபண்ணா ஒருங்கிணைந்து விளையாடினால் ஒலிம்பிக் பதக்கத்தை நிச்சயம் வசப்படுத்த முடியும். 

செவ்வாய், 7 ஜூன், 2016

மகத்தான வீரர்

முகமது அலி... உலகம் முழுவதும் குத்துச்சண்டை விளையாட்டின் அடையாளமாக உச்சரிக்கப்படும் பெயர். ஹெவி வெயிட் பாக்சிங்கில் மூன்று முறை உலக சாம்பியன் பட்டம், நூற்றாண்டின் தலைசிறந்த விளையாட்டு வீரர் விருது. எதிர்த்து போட்டியிட்ட வீரர்களை நாக்-அவுட் செய்து, ‘அலி தி கிரேட்டஸ்ட்’ என்று தன்னைத் தானே மகத்தான வீரனாகப் பிரகடனப்படுத்திக் கொண்டாலும், களத்திலும் வெளியிலும் தனது துணிச்சலான செயல்பாடுகளால் உண்மையிலேயே மகத்தான வீரராக அனைவராலும் போற்றப்படக் கூடிய நிலையை ஏற்படுத்திக் கொண்டவர்.

ஏழ்மையான பின்னணி, ஒதுக்கப்பட்ட கறுப்பர் இனம் போன்ற தடைக்கற்களை எல்லாம் தகர்த்தெறிந்து, குத்துச்சண்டை களத்தில் தனி முத்திரை பதித்த கிளாசியஸ் கிளே ஜூனியர், பின்னர் இஸ்லாமிய மதத்தை தழுவி முகமது அலியாக மாறினார். கட்டாய ராணுவப் பயிற்சிக்கு மறுப்பு தெரிவித்ததுடன் வியட்நாம் போருக்கு எதிராக கருத்து தெரிவித்ததால் கைது, சிறைவாசம், அமெரிக்காவின் அனைத்து மாகாணங்களிலும் பாக்சிங் உரிமம் பறிப்பு என்று 25வது வயது முதல் 29வது வயது வரை வாழ்க்கையே போராட்டமாக மாறிய நிலையிலும் மன உறுதியை கைவிடாமல் எதிர்நீச்சல் போட்டவர். உச்சநீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட பின்னர், மீண்டும் குத்துச்சண்டை போட்டிகளில் பங்கேற்று வெற்றிகளைக் குவித்த முகமது அலி அமெரிக்க இளைஞர்களின் அபிமான நாயகனாக மாறியதில் வியப்பேதும் இல்லை.

சன்னி லிஸ்டன், ஜோ பிரேசியர், ஜார்ஜ் போர்மேன் போன்ற நட்சத்திர வீரர்களுக்கு எதிராக அவர் பெற்ற வெற்றிகள் இன்றளவும் பிரமிப்போடு பார்க்கப்படுகின்றன. நிறவெறிக்கு எதிராக தனது உணர்வுகளைப் பதிவு செய்யும் வகையில், தான் வென்ற ஒலிம்பிக் தங்கப் பதக்கத்தை ஒஹையோ ஆற்றில் வீசி எறிந்த பேராண்மை மிக்கவர். மின்னல் வேக குத்து, நேர்த்தியான தற்காப்பு வியூகம், நடனம் போலவே நளினமான கால் அசைவு... என்று பாக்சிங் வளையத்தை தெறிக்கவிட்டவருக்கு, நரம்பு மண்டலத்தை பாதித்து படிப்படியாக செயலிழக்கச் செய்யும் பர்கின்சன்ஸ் நோயையும் எதிர்த்து போராட வேண்டிய கட்டாயம் நேர்ந்தது துரதிர்ஷ்டவசமானது.

போட்டியிடப் போகும் வீரருக்கு சவால் விடும் வகையில் முகமது அலி பேசிய சில வார்த்தைகள் சர்ச்சைகளை ஏற்படுத்தினாலும், அவரது புகழை பல மடங்கு அதிகரிக்கக் கூடிய மந்திர வாக்கியங்களாகவே அவை மாறிப் போனது அதிசயம் தான். அந்த மகத்தான வீரர் இன்று மறைந்துவிட்டாலும், குத்துச்சண்டை வரலாற்றிலும் ரசிகர்களின் மனத்திலும் அவரது பெயர் என்றென்றும் நிச்சயம் நிலைத்திருக்கும்.