செவ்வாய், 9 ஏப்ரல், 2013

மயிலைக்கு வந்த மண்வாசம்...


மயிலாப்பூர் அறுபத்து மூவர் உற்சவம். ஊரே களைகட்டி இருந்தது. சினிமாவுக்கு செட் போட்ட மாதிரி, அப்படியே ஒரு அக்மார்க் கிராமத்து திருவிழா காட்சி கண் முன்னே விரிந்தது.

உயர உயரமாக கொம்புகள் நட்டு தோரணம் கட்டியிருந்தார்கள். ஐந்து அடிக்கு ஒரு அன்னதானம் நடந்து கொண்டிருந்தது. சுடச்சுட வெஜிடபிள் பிரிஞ்ஜி, சாம்பார் சாதம், தயிர் சாதம், சர்க்கரைப் பொங்கல், வெண் பொங்கல், சுண்டல், மோர், பானகம், ரஸ்னா, இஞ்சி டீ, பிஸ்கட், சாக்லேட், சூப்… என்று வகை வகையாய் கூப்பிட்டு கூப்பிட்டு கொடுத்துக் கொண்டிருந்தார்கள். கூச்சம் பார்க்காமல் கூட்டத்தோடு கூட்டமாய் எல்லா ஐட்டங்களையும் ஒரு வாய் பார்த்தபடி நான்கு மாட வீதியையும் வலம் வந்தோம்.

சாலை ஓரங்களில் தினுசு தினுசாய் கடைகள் முளைத்திருந்தன. குழந்தைகளுக்கான விளையாட்டுப் பொருட்கள்தான் அதிகம். பனை ஓலை விசிறி, மத்து, பானை, சட்டி, கருங்கல் உலக்கை - குழவிக்கு சரியான மவுசு! மஞ்சள் வெயில் மாலையில் பாசி மணி மாலைகள் வைர வைடூரியமாய் ஜொலித்தன. குவியல் குவியலாய் உண்டிவில்.

குருவிக்காரர்கள் நிறைய பேர் கடை விரித்திருந்தார்கள். பச்சை குத்தும் இடத்தில் இளைஞர் கூட்டம் மொய்த்தது. டிராகன், சூரியன், சிங்கம் என்று வித விதமாய் அட்டையில் அச்சு செய்து வைத்திருந்தார்கள். டாட்டூ போடுவதற்காக சிறிய மோட்டாரில் சுழலும் ஊசி. பேட்டண்ட் வாங்காத அதிநவீன உள்ளூர் தயாரிப்பு! சத்தமே இல்லாமல் இயங்கியது. மீசை முளைக்காத சிறுவன், கை தேர்ந்த கலைஞனாய் பச்சை குத்திக் கொண்டிருந்தான். முகம் சுளித்தபடி வலியை பொறுத்துக் கொண்டு, தோள் பட்டையில் சிரிக்கும் சூரியனை ஆவலுடன் பார்த்தார் வாலிபர்.

டிராகன் படம் குத்துப்பா என்று குத்துக்காலிட்டு உட்கார்ந்த ஒருவர், உஷாராக ‘காசு எவ்ளோ’ என்று கேட்டார். எரனூறு ரூபா என்ற பதிலைக் கேட்டதும் பதற்றத்துடன் கையை பறித்துக் கொண்டு நடையை கட்டினார். குறைந்தபட்சம் நூறு ரூபாய் வாங்கினார்கள். ஊசியைக் கழுவிய மாதிரி தெரியவில்லை. ஆர்வக் கோளாறில் குத்திக் கொள்பவர்கள், நீக்க வேண்டும் என்றால் லேசர் ட்ரீட்மெண்ட்டுக்கு ஆயிரக் கணக்கில் செலவழிக்க வேண்டியிருக்கும் என்பதை நினைவில் கொள்க.

நேரம் ஆக ஆக… கூட்டம் கூடிக் கொண்டே போனது. நாம் நடக்கவே வேண்டாம். அப்படியே தள்ளிக் கொண்டுபோய் சேர்த்துவிடுவார்கள் போல. இதற்கு மேல் தாக்குப்பிடிக்க முடியாது என்று அப்படியே ஓரம்கட்டி ஒதுங்கி கரை சேர்ந்தோம். எங்கு பார்த்தாலும் சாப்பிட்டு போட்ட காகிதத் தட்டுகள். பலரும் உணவுப் பொருட்களை வீணடித்திருந்தார்கள். அடுத்த ஆண்டாவது பத்து அடிக்கு ஒரு குப்பைக் கூடை வைக்க வேண்டும் என்று உத்தரவு போட வேண்டும். 

ஒரே நாளில் ஓவராய் சாப்பிட்டதில் தெப்பக்குள மீன்கள் நீந்த முடியாமல் திணறிக் கொண்டிருந்தன. அலுவலகத்தின் அரை மணி நேர தேநீர் இடைவேளையில் புஷ்ப பல்லக்கு, லட்ச தீபம், கிரிவலம், மசானக் கொள்ளைக்கு நிகரான ஒரு விழாக்கோலத்தை சென்னையில் பார்க்க முடிந்த திருப்தியுடன் திரும்பினோம்.

எழுத்து, படங்கள்: பா.சங்கர்   
   
 
 

இண்டர்வியூ


பிரபல பள்ளியில் எல்கேஜி சேர்வதற்காக தந்தையுடன் வரும் சிறுவன்.

இண்டர்வியூவுக்காக பிரின்சிபால் அறை முன்பாக காத்திருக்கிறார்கள்.

பியூனிடம் சிறுவன்: அங்கிள் பிரின்சிபால் சார் உள்ள இருக்காரா?

பியூன்: இன்னும் வரல.

சிறுவன்: இண்டர்வியூ பத்து மணிக்குன்னு லெட்டர் அனுப்பியிருக்கீங்க. நாங்க ஷார்ப்பா வந்துட்டோம். பிரின்சி என்னடான்னா இன்னும் வரல்லேங்கறீங்க. பங்சுவாலிட்டினா என்னன்னு அவருக்கு தெரியாதா?

பியூன்: இன்னா சார் பொடியன் இந்த பேச்சு பேசறான்… நீங்க சும்மா இருக்கீங்க.

அப்பா: ராஜா கீப் கொயட்.

ராஜா: சாரி டாட். அங்கிள் நீங்க எதுக்கு தேவையில்லாம டென்ஷன் ஆகறீங்க. நான் பிரின்சி ஏன் லேட்டுன்னுதானே கேட்டேன். எங்க அப்பா அப்ளிகேஷன் வாங்க எவ்வளவு கஷ்டப்பட்டார் தெரியுமா?

அப்பா: யெஸ் பிரதர். ராத்திரியில இருந்து காலைல வரைக்கும் ஸ்கூலுக்கு வெளியதான் படுத்துக் கிடந்தேன். வீட்டுல பேசிக்கிறோம் இல்ல. பையன் எல்லாத்தையும் கவனமாக கேட்டு வச்சுப்பான். அதான்.

பியூன்: எல்லா பேரண்ட்சுமே அப்படிதான் சார் காத்துகிட்டு இருந்து பார்ம் வாங்குறாங்க. நாங்களா வந்து கியூவுல நில்லுங்கன்னு சொன்னோம்.

அப்பா: சீட் கெடைக்கணுமேங்கிற கவலதான். வேற என்ன…

பியூன்: சரி… சரி… பேசாம கொஞ்ச நேரம் உட்காருங்க. சார் இப்போ வந்துருவார்.

அப்பா: இந்த வருஷம் எவ்ளோப்பா வாங்குறாங்க?

பியூன்: ஒரு ரூபா வரைக்கும் போகுதுன்னு சொல்றாங்க. அதுக்கே கெடைக்கலையாம். நீங்க எதுக்கும் இன்னும் கொஞ்சம் அதிகமா கொடுக்கறதா சொல்லுங்க.

ராஜா: ஜஸ்ட் ஒன் ருபீயா அங்கிள். அத நானே கொடுத்துடறேன்.

பியூன்: ஏங்க இவன வீட்ல எப்படீங்க சமாளிக்கறீங்க? டீச்சருங்க என்ன பாடு படப் போறாங்களோ…

அப்பா: அதுக்கப்புறம் ஃபீஸ் வேற இருக்கே.

பியூன்: அட என்னங்க நீங்க… இதுக்கே பயப்பட்டா எப்படி? ஒவ்வொருத்தர் ரெண்டு மூனு பசங்கள படிக்க வெக்கறாங்களே! அவங்கள்ளாம் என்ன பண்ணுவாங்க யோசிச்சு பாருங்க.

அப்பா: அதான் டொனேஷன் எல்லாம் கொடுக்கறோம் இல்ல. அப்புறம் எதுக்கு இண்டர்வியூ அது இதுன்னு டார்ச்சர் பண்றீங்க?

பியூன்: அடடா… என்ன எதுக்குங்க நீங்க டார்ச்சர் பண்றீங்க. எல்லாத்தையும் பிரின்சிபால் கிட்ட கேட்டுக்குங்க. அதோ அவரே வந்துட்டார். வணக்கம் சார்.

எல்லோரும் எழுந்து வணக்கம் சொல்கிறார்கள்.

பிரின்சி: ஒவ்வொருத்தரா அனுப்புப்பா. அதுக்கு முன்னால ஒரு காபி.

பியூன்: ஓகே சார். (காபி எடுத்து வர ஓடுகிறார்)

ராஜா: அங்கிள் ஸ்டிராங்கா மீடியமா லைட்டா… சக்கர போட்டா போடாமயா எல்லாம் கேட்டுக்கிட்டு போங்க. அப்புறமா அதுக்காக லேட் பண்ணிடப் போறீங்க.

பியூன்: அதெல்லாம் எங்களுக்குத் தெரியும். நீ கொஞ்சம் சும்மா இருந்தா போதும்.

ராஜா: சும்மா இருக்கறது ரொம்ப கஷ்டம் அங்கிள். வடிவேலு ஜோக்லாம் நீங்க பாக்குறது இல்லயா?

பியூன்: டேய் வாணாம்… சார் இவன் மட்டும் இந்த ஸ்கூல்ல சேர்ந்தா… நான் வேலய விட்டே போய்டுவேன் நெனைக்கிறேன். ராசி பலன்ல இன்னிக்கு நேரம் சரியில்லே. சிறு உபாதைகள் வந்து நீங்கும்னு போட்டுருந்தான். அது இவ்ளோ சிறுசா (ராஜாவைக் காட்டி) இருக்கும்னு தெரியாம போச்சு.

ராஜா: ஏன் அங்கிள் இப்படி மூட நம்பிக்கைல மூழ்கிக் கெடக்கறீங்க. நல்லது நெனச்சா நல்லதே நடக்கும் தெரியுமா?

பியூன்: கடவுளே இவனுக்கு அட்மிஷன் கெடைக்க கூடாது. வேண்டிக் கொண்டே பிரின்சிக்கு காபி கொடுத்துவிட்டு வருகிறார்.

பிரின்சி அறையில் இருந்து மணி அடிக்கிறது.

பியூன்: சார் நீங்க மொதல்ல போயிட்டு வந்துருங்க. அப்பதான் இவன்கிட்டயிருந்து நான் தப்பிக்க முடியும்.

ராஜாவும் அவன் அப்பாவும் பிரின்சி ரூமுக்குள் நுழைகிறார்கள்.

இருவரும் கோரசாக: வணக்கம் சார்.

பிரின்சி: வணக்கம். வாங்க. உட்காருங்க. காபி சாப்பிடறீங்களா?

ராஜா: நான் பூஸ்ட்தான் குடிப்பேன் சார்.

பிரின்சி: சிரித்துக் கொண்டே… ஓ அதான் உன்னோட எனர்ஜி சீக்ரெட்டா? எங்க சார் உங்க ஒய்ப் வரலையா?

அப்பா: இல்ல சார். அவங்களுக்கு டெலிவரி டைம்… அதான் கூட்டிட்டு வர முடியல.

பிரின்சி: ஓகே ஓகே அவங்களும் கிராஜுவேட்தானே?

அப்பா: யெஸ் சார். எம்பிஏ முடிச்சிருக்காங்க.

பிரின்சி: வெரி குட். அப்பதான் வீட்டுல நல்லா சொல்லிக் கொடுக்க முடியும் இல்லயா. அதுக்குதான் பேரண்ட்ஸ் ரெண்டு பேரும் டிகிரி வாங்கியிருக்கணும்கறதுல கண்டிப்பா இருக்கோம்.

ராஜா: அப்போ டீச்சருங்க நல்லா சொல்லிக் கொடுக்க மாட்டாங்களா சார்?

பிரின்சி: நாட்டி பாய். கொஞ்சம் அதிகமா பேசுவான் போல… பசங்க டிவி பாத்து கெட்டுப் போயிடறாங்க.

ராஜா: ரொம்பவே அதிகமா பேசுவேன் சார். ஆனா டிவி கொஞ்சமாத்தான் பார்ப்பேன்.

பிரின்சி: அதுக்கே இப்படியா? போதும்பா போதும். ஏபிசிடி ஒன் டூ த்ரீ எல்லாம் தெரியுமா?

ராஜா: ஒன் போர் த்ரீ கூட தெரியும் சார்.

பிரின்சி: அது என்னப்பா ஒன் போர் த்ரீ?

ராஜா: ஐ லவ் யூ சார். இது கூடவா ஒங்களுக்கு தெரியாது.

பிரின்சி: அடக் கடவுளே… இந்த காலத்து பசங்க கிட்ட பேசவே கூடாது போல. சரி குறள் ஏதாவது தெரியுமா?

ராஜா: பல குரல் தெரியும் சார்.

பிரின்சி: எங்க சொல்லு பார்க்கலாம்.

ராஜா: கண்ணா லட்டு திண்ண ஆசையா…

(எம்ஜிஆர், சிவாஜி, நம்பியார், கமல், ரஜினி என பல குரலில் மிமிக்ரி செய்து காட்டுகிறான்)

அதிர்ச்சியில் உறைந்துபோன பிரின்சி… தம்பி நான் கேட்டது இந்தக் குரல் இல்லப்பா… திருக்குறள் தெய்வப் புலவர் திருவள்ளுவர் எழுதின குறள்ள்ள்ள்…

ராஜா: ஓ அதுவா? உங்க குரல் உச்சரிப்பு கொஞ்சம் சரியில்ல சார். அதான் கொஞ்சம் மிஸ் ஆயிடுச்சு.

இப்போ குறள் சொல்றேன் பாருங்க…

 

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி

பகவன் முதற்றே உலகு

பிரின்சி: பலே… வாயாடியா இருந்தாலும் படு சுட்டியா இருக்கானே. சரி கடி ஜோக் ஏதாவது சொல்லு பார்க்கலாம்.

ராஜா: கடியில பல வகை இருக்கு சார். காக்கா கடியா மாங்கா கடியா இல்ல காது கடியா?

பிரின்சி: ஒரு கடியும் வேணாம். இப்பவே சேம் பிளட் கதையா ஆயிடும் போல இருக்கு… காதை தொட்டுப் பார்த்துக் கொள்கிறார்.

ராஜா: இல்ல சார் இதுக்கு மட்டும் ஆன்சர் சொல்லுங்க பார்க்கலாம்.

பிரின்சி: சரி கேளு…

ராஜா: ஃபிரம் சிக்ஸ் டூ சிக்ஸ்டி… இத தமிழ்லே டிரான்ஸ்லேட் பண்ணுங்க பார்க்கலாம்?

பிரின்சி: அலட்சியமாக சிரித்துக் கொண்டே…. ஆறிலிருந்து அறுபது வரை… எப்பூடி  (பெருமையாகப் பார்க்கிறார்)

ராஜா: தப்பு சார்… அது இல்ல

பிரின்சி: சரி நீயே சொல்லு பார்க்கலாம்.

ராஜா: விடுநர் – ஆறு…. பெறுநர் – அறுபது

வியர்த்து போன முகத்தை கர்சீப்பால் துடைத்துக் கொள்கிறார் பிரின்சி.

ராஜா: போதுமா சார். இல்ல இன்னும் ஒரு ஜோக் சொல்லட்டுமா?

பிரின்சி: இல்ல இல்ல இதுவே அதிகம். சார் நீங்க நாளைக்கு வந்து கேபிடேஷன் பீஸ் கட்டிட்டு போங்க. டியூஷன் பீஸ் எல்லாம் அடுத்த வாரம்  கூட கட்டலாம். சொல்லியபடியே மணி அடிக்க, பியூன் ஓடி வருகிறார்.

ராஜா: தேங்க் யூ சார்… சீ யூ பை பை.

பிரின்சி: கூலா குடிக்க ஏதாவது கொடுப்பா.

பியூன்: என்ன சார் ராஜா டார்ச்சர் பண்ணிட்டானா? நக்கலாகக் கேட்க… பிரின்சி ஙே என விழிக்கிறார்.

அப்பாவுடன் வீட்டுக்கு கிளம்பும் ராஜா: டாடி சொல்றேன்னு தப்பா நெனச்சுக்காதீங்க. எனக்கு இந்த ஸ்கூல் வேண்டாம். அந்த ஒரு லட்சத்த பிக்சட்ல போடுங்க. நான் கவர்ன்மெண்ட் ஸ்கூல்லயே சேர்ந்து படிக்கிறேன்.

அப்பா: அதாண்டா நானும் யோசிக்கிறேன். சரி வா அம்மாகிட்ட பேசி பார்க்கலாம்.
பா.சங்கர்
 

 

ஸ்டைல் மன்னன் ஷிகார் தவான்


அறிமுக டெஸ்டிலேயே அதிவேக சதம் விளாசி, உலக சாதனையுடன் விஸ்வரூபம் எடுத்திருக்கிறார் இந்திய அணி தொடக்க வீரர் ஷிகார் தவான் (27). இவரது அதிரடி ஆட்டத்தால் தான் மொகாலி டெஸ்டில் இந்தியாவின் சாதனை வெற்றி சாத்தியமாகியது என்பதில் சந்தேகமே இல்லை.

தவானின் ருத்ரதாண்டவத்தை பார்க்கும்போது, சேவக்தான் இடது கை ஆட்டக்காரராக களமிறங்கி ஆடிக் கொண்டிருக்கிறாரோ என்ற பிரமையை ஏற்படுத்தியது. ஆஸி. பந்துவீச்சாளர்களுக்கும் அதே பிரமிப்புதான். செய்வதறியாமல் வேடிக்கை பார்ப்பதை தவிர வேறு வழியில்லாமல் நிலைகுலைந்து போனார்கள்.

 
அப்படி ஒரு அதிரடி தொடக்கம் கிடைத்ததால் தான், முதல் இன்னிங்சில் இரு அணிகளுமே 400+ ரன் குவித்தும் நான்கு நாட்களில் முடிவு கிடைத்தது. ஒரே இன்னிங்சில் கோடிக்கணக்கான ரசிகர்களின் உள்ளங்களை கொள்ளையடித்துவிட்டார். இத்தனை நாளாய் எங்கே இருந்தார் என்று தலையை பிய்த்துக்கொள்ளும் ரசிகர்களுக்காக, தவமாய் தவமிருந்த தவானின் கதை இதோ…  
டெஸ்ட் அரங்கில் எப்போதோ கால் பதித்திருக்க வேண்டியவர். 2004ல் தாக்காவில் நடந்த இளைஞர் உலக கோப்பை போட்டியில் (யு-19) இவர் குவித்த 505 ரன் (சராசரி 84.16, சதம் 3) சாதனையை இன்று வரை யாரும் முறியடிக்கவில்லை. அதே தொடரில் விளையாடிய தினேஷ் கார்த்திக், ராபின் உத்தப்பா, சுரேஷ் ரெய்னா, ஆர்.பி.சிங், ரோகித் ஷர்மாவுக்கெல்லாம் வாய்ப்பு கிடைத்தாலும் இவருக்கு மட்டும் அந்த அதிர்ஷ்டம் வாய்க்கவே இல்லை.
ஒருநாள், டி20ல் கிடைத்த சில வாய்ப்புகளில் சொதப்பியதால் தேர்வுக் குழுவினர் கண்டுகொள்ளவில்லை. இத்தனைக்கும் ரஞ்சி சீசனில் அடித்து நொறுக்கிக் கொண்டுதான் இருந்தார். கடந்த ஆண்டு 4 சதங்களுடன் 833 ரன் விளாசினார். ஐபிஎல் போட்டியிலும் கிறிஸ் கேல் (733), கம்பீருக்கு (590) அடுத்தபடியாக மூன்றாவது இடம் (569). சேவக், கம்பீர் என்று இரண்டு அனுபவ தொடக்க வீரர்கள் முதல் 2 இடங்களையும் ஆக்கிரமித்து இருந்ததுதான் இவரது துரதிர்ஷ்டம்.
இருவருமே பார்மை இழந்து தடுமாறி அணியில் இருந்து வெளியேற்றப்பட்ட நிலையில்தான், மொகாலியில் தவானுக்கு கிடைத்தது அந்த அரிய வாய்ப்பு. சரியாய் பயன்படுத்தி சாதித்து விட்டார்.
டெல்லி கிரிக்கெட் வட்டாரத்தில் தவான் என்றாலே தனி மதிப்புதான். சேவக், கம்பீர், கோஹ்லி, உன்முக்த் என்று எத்தனை நட்சத்திரங்கள் ஜொலித்தாலும், இவருக்கு என்று தனி ரசிகர் பட்டாளம். பயிற்சிக்கு வரும்போது கை இல்லாத பனியன், ஷார்ட்ஸ் அணிந்து 1000 சிசி - 25 லட்சம் ரூபாய் பைக்கில் அலட்சியமாக வந்து இறங்குவார். ஸ்டாலோன், அர்னால்டு மாதிரி அமர்க்களமான உடற்கட்டு, தோள்களில் வசீகரமான டாட்டூ, கூலிங் கிளாஸ் அணிந்து மீசையை முறுக்கிவிட்டபடி வரும் ஸ்டைல் எல்லாமே அவரை ஒரு சூப்பர் ஸ்டாராக அடையாளம் காட்டும்.
தோற்றம் ஒரு பக்கம் இருந்தாலும் களத்தில் இவர் காட்டும் அதிரடி ஆட்டம் இன்னும் மிரட்டலாக இருக்கும். டெல்லி அணி சக வீரர்களே ஒருவித மிரட்சியோடு ‘கபார்’ என்றுதான் (ஷோலே வில்லன் அம்ஜத்கானின் பெயர்) அழைப்பார்கள். அமர்க்களமான ஆட்டத் திறன் இருந்தாலும் அலட்சியம், பொறுப்பு இல்லாமல் தேவையற்ற ஷாட் அடித்து விக்கெட்டை இழப்பது இவரது பலவீனமாக இருந்தது.
கேர்பிரீயாக சுற்றித் திரிந்தவரை மாற்றியது மனைவி ஆயிஷா முகர்ஜியும் 2 மகள்களும் தான் (முதல் கணவருக்கு பிறந்தவர்கள்). பெங்காலி – இங்கிலாந்து பெற்றோருக்கு பிறந்த ஆயிஷா, குழந்தைகளுடன் மெல்போர்னில் வசித்தாலும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் இந்தியா வந்துவிடுகிறார். குழந்தைகள் மீது தவானுக்கு கொள்ளை பிரியம். அவர்களுக்காகவே கையில் பச்சை குத்திக் கொண்டாராம்.
‘ஆயிஷா என்னை முழுவதுமாக மாற்றிவிட்டார். வெற்றியை விட தோல்விகள் தான் ஒரு மனிதனை முழுமையாக்குகின்றன என்பதை எனக்கு உணர்த்தியவர்’ என்கிறார் பெருமையாக. பேஸ்புக்கில் பார்த்து, நட்பு கோரி, பழகி மலர்ந்த இணைய காதல்! மனைவி வந்த நேரம் தவானுக்கு ஒர்க் அவுட் ஆகியிருக்கிறது. அமர்க்கள ஆட்டம் தொடரும் என எதிர்பார்க்கலாம்.
பா.சங்கர்