ஞாயிறு, 29 ஏப்ரல், 2018

ஆஸ்திரேலியர்களை ஈர்க்கும் ஏஎப்எல் காந்தம்!



இந்தியாவில் விளையாட்டு ரசிகர்களை அதிகம் கவர்ந்த லீக் போட்டித் தொடர் என்றால் ஐபிஎல் டி20 என்று பொடிசுகள் கூட பளிச்சென்று பதில் சொல்லிவிடும். அந்த அளவுக்கு ஐபிஎல் கொடிகட்டிப் பறக்கிறது.
ஆஸ்திரேலியாவில் பிக் பாஷ் டி20 லீக் நடத்தப்பட்டாலும், மவுசு என்னமோ கால்பந்து விளையாட்டுக்கு தான். நாம் வழக்கமாக விளையாடும் கால்பந்து என்று நினைத்துவிடாதீர்கள். முட்டை வடிவில் இருக்கும் பந்தை வைத்துக் கொண்டு முட்டி மோதுவதைத்தான் ஆஸ்திரேலியன் புட்பால் லீக் (ஏஎப்எல்) என்று அழைக்கிறார்கள். இதே வகையை சேர்ந்த ரக்பி, ஃபூட்டி போட்டிகளின் விதிமுறைகளில் மட்டும் சில சிறிய வித்தியாசங்கள்.
ஏஎப்எல் தொடரை நடத்த ஆரம்பித்து 120 ஆண்டுகளுக்கும் மேலாகிறது. 1897ல் இருந்து 1989 வரை விக்டோரியன் புட்பால் லீக் ஆக இருந்து, பின்னர் ஏஎப்எல் ஆக மாறியிருக்கிறது. ஒவ்வொரு சீசனிலும் மொத்தம் 18 அணிகள் மல்லுக்கட்டுகின்றன. வார இறுதி நாட்களில் நடக்கும் போட்டிகளை பார்க்க திருவிழாக் கூட்டம் போல திரள்கிறார்கள். கைக் குழந்தைகளோடு கூட கிளம்பி வந்துவிடுவதை பார்க்க முடிகிறது.

தாத்தாவும் பேரனும் விளையாட்டு நுணுக்கங்களை விவாதிக்கிறார்கள். ஒவ்வொரு வீரரின் புள்ளிவிவரமும் நா நுனியில் விளையாடுகிறது. கால்பந்து, கைப்பந்து, கூடைப்பந்து, கபடி, மல்யுத்தம் என பல விளையாட்டுகளின் கதம்பம் தான் இந்த ஏஎப்எல்.
வீரர்களுக்கு உடல்தகுதி மிக முக்கியம். தலா 20 நிமிடங்கள் கொண்ட 4 பகுதியாக போட்டி நடக்கிறது. ஒவ்வொரு அணியிலும் தலா 18 வீரர்கள் மற்றும் 3 மாற்று வீரர்கள். பெரிய மைதானத்தில் பந்தயக் குதிரைகளாக ஓடிக் கொண்டே இருக்க வேண்டும் என்பதால் சுழற்சி முறையில் வீரர்களை மாற்றிக் கொண்டே இருக்கிறார்கள். நான்கு கோல் கம்பங்கள். நடுவே ஓங்கி உயர்ந்து நிற்கும் இரண்டு கம்பங்களுக்கு இடையில் எந்த ஒரு வீரரின் மீதும் படாமல் பந்தை உதைத்தால் அதிகபட்சமாக 6 புள்ளிகள் வழங்கப்படுகிறது. அதன் இருபுறமும் உள்ள கோல் பகுதியில் பந்து சென்றால் ஆறுதலாக ஒரு புள்ளி கிடைக்கும். பந்தை வேறு வீரருக்கு பாஸ் செய்ய ஒரு கையின் உள்ளங்கையில் வைத்து மறு கையை இறுக்கிமூடி குத்த வேண்டும். பந்தை கையில் வைத்துக் கொண்டு அதிகபட்சமாக 15 மீட்டர் வரை ஓடலாம். அதற்குள்ளாக வேறு ஒருவருக்கு பாஸ் செய்தாக வேண்டும். எதிரணி வீரரை சமாளிக்க தோள்பட்டை வரை பிடித்து அமுக்கி மடக்கலாம். கழுத்து தலைப்பகுதியில் கை வைக்கக் கூடாது.

வீரர்கள் காயம் அடைவதற்கான வாய்ப்பு மிக அதிகம். ஏஎப்எல் வீரர்களால் களத்தில் சராசரியாக 3 ஆண்டுகள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடிகிறது. வீரர்களின் சம்பளத்துக்கும் உச்சவரம்பு இருக்கிறது. நட்சத்திர வீரர்கள் சீசனுக்கு 5 கோடி வரை சம்பாதிக்கிறார்கள். வீரர்களுக்கான பயிற்சி வசதிகள் கிளாஸ். காப்பீடு, ஓய்வூதியம் போன்ற அம்சங்களிலும் கூடுதல் கவனம் செலுத்துகிறார்கள்.
ஒவ்வொரு கிளப்பும் தொடர்ச்சியாக வீரர்களை தயார் செய்துகொண்டே இருக்கின்றன. வேறு விளையாட்டுகளில் சாதித்தவர்கள், சர்வதேச விளையாட்டு வீரர்களுக்கு குறைந்த அளவில் வாய்ப்பு கிடைக்கிறது. இந்தியாவில் கபடி வீரர்கள் நல்ல உடல்தகுதியுடன் திடகாத்திரமாக இருப்பதை பார்த்து அவர்களுக்கு ஏஎப்எல் விளையாட்டை அறிமுகம் செய்யும் முயற்சி நடந்து கொண்டிருக்கிறது. கொல்கத்தா, கோழிக்கோடு போன்ற நகரங்களில் இந்த விளையாட்டு ஏற்கனவே காலூன்றி இருக்கிறது. மேற்கு வங்கம், கேரளா, மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட், தமிழகம் வரை கிளை பரப்பியிருக்கிறது ஏஎப்எல் என்ற தகவல் வியப்பூட்டுகிறது. கொல்கத்தாவை சேர்ந்த சுதிப் சக்ரவர்த்தி இந்த விளையாட்டால் ஈர்க்கப்பட்டு இந்திய அணியின் கேப்டனாக உயர்ந்ததுடன், விளையாட்டு மேலாண்மை மற்றும் அறிவியலில் பட்டம் பெற்று மெல்போர்னில் ஏஎப்எல் கிளப் நிர்வாகியாக பணியாற்றுகிறார்.


இந்தியாவில் மட்டுமல்ல, உலக நாடுகள் அனைத்திலும் ஏஎப்எல் விளையாட்டை பிரபலப்படுத்தியாக வேண்டும் என்ற வேட்கை பிளஸ் உத்வேகத்தை ஆஸ்திரேலியர்களிடம் உணர முடிகிறது.
ஒவ்வொரு கிளப்பும் நிரந்தர உறுப்பினர்களை சேர்ப்பதில் கூடுதல் அக்கறை செலுத்துகின்றன. உறுப்பினர்களுக்கு சலுகை கட்டணத்தில் டிக்கெட், சீருடை, தொப்பிஎன்று வாரி வழங்குகிறார்கள். தற்போது மகளிர் அணிகள், கிளப்புகளுக்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். அரசின் ஆதரவும் அமோகமாக இருக்கிறது.
கிரிக்கெட், ஹாக்கி, நீச்சலில் கொடிகட்டிப் பறக்கும் ஆஸ்திரேலியர்களின் முதல் காதல் என்றால் அது ஏஎப்எல் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஏஎப்எல் சாம்பியன் அணியுடன் உலக அணி மோதும் காட்சிப் போட்டிகளை, இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடத்தவும் திட்டம் வைத்திருக்கிறார்கள்.


- ஷங்கர் பார்த்தசாரதி

(தினகரன் நாளிதழில் வெளியானது)

விளையாட்டுக் கல்வியில் மிரட்டும் விக்டோரியா பல்கலைக்கழகம்



விளையாட்டு தொடர்பான கல்வி, மருத்துவம் இரண்டிலும் ஆஸ்திரேலியர்கள் முன்னோடிகள் என்றால் மிகையல்ல. உலக அளவில் நட்சத்திர வீரர், வீராங்கனைகள் காயம் அடைந்தால், சிகிச்சைக்காக ஆஸ்திரேலியா பறப்பது வாடிக்கை.
இலங்கை அணி முன்னாள் சுழற்பந்து நட்சத்திரம் முத்தையா முரளிதரன் பந்தை எறிவதாகப் புகார் எழுந்தபோது ஆஸ்திரேலியாவில் நடத்தப்பட்ட அதிநவீன சோதனையில் தான், இயற்கையிலேயே அவரது வலது முழங்கை சற்று வளைந்திருக்கிறது என்பது தெரிய வந்தது. அவரது பந்துவீச்சு பாணி முறையானது என்றும் சான்றிதழ் அளிக்கப்பட்டது.
மெல்போர்னில் உள்ள விக்டோரியா பல்கலைக்கழகத்திலும் விளையாட்டுக் கல்வி மற்றும் மருத்துவ ஆராய்ச்சிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். அங்குள்ள வசதிகளை சுற்றிப் பார்த்தபோது, ஏதோ சயன்ஸ்-பிக்ஷன் திரைப்படத்துக்கான அரங்குக்குள் நுழைந்தது போலவே இருந்தது. மோஷன் கேப்சர் தொழில்நுட்பத்துக்கான உணர்வு கருவிகளை உடல் முழுவதும் பொருத்திக் கொண்டு ஓடிக் கொண்டிருக்கிறார் ஒரு ஆராய்ச்சி மாணவி. கம்ப்யூட்டர் திரையில் அவரது அசைவுகள் அனைத்தும் ஒரு உயிருள்ள ரோபோவாக நம் கண் முன்னே விரிகிறது.
முன்னணி வீரர், வீராங்கனைகள் இங்கு வந்து சோதனை எலிகளைப் போல தங்களை ஆராய்ச்சிக்குட்படுத்திக் கொள்வதை பார்க்க முடிகிறது. ஆஸ்திரேலியாவின் அத்தனை விளையாட்டு சங்கங்களுடனும் இதற்காக ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள். ஒருவர் டிரெட்மில்லில் ஓடிக் கொண்டிருக்கிறார். இன்னொருவர் சைக்கிள் சக்கரத்தை முழு வேகத்தில் மிதித்துக் கொண்டிருக்கிறார். குறிப்பிட்ட வீரரின் அதிகபட்ச தாங்கும் திறன், அவரது தசைகளின் இயக்கம், வெவ்வேறு வெப்ப நிலைகளில் உடலின் செயல்பாடு என மிக நுணுக்கமாக கவனித்து அளவீடுகளைப் பதிவு செய்கிறார்கள்.
இங்கு நடக்கும் ஆராய்ச்சிகளின் தகவல் பதிவுகளுடன் செயற்கை நுண்ணறிவு மற்றும் ரோபோட்டிக்ஸ் சேர்ந்தால் ஓராயிரம் உசேன் போல்ட்டுகளை உருவாக்கி விடுவார்கள் போலிருக்கிறது.
இந்த ஆராய்ச்சிகளின் பலன்களாக, பந்தின் போக்கை கணிக்கும்பால் ட்ரேக்கிங்’, மட்டையில் பட்டதா இல்லையா? என்பதை தீர்மானிக்க உதவும்ஸ்நிக்கோ மீட்டர்போன்ற தொழில்நுட்பங்களைச் சொல்லலாம். 
சீனாவை சேர்ந்த ஆராய்ச்சி மாணவர், முதியவர்கள் தடுமாறி கீழே விழுந்துவிடுவதை தவிர்க்கும் வகையில் ஷூக்களுக்குள் வைத்துக் கொள்ளும் பாதப் பட்டைகளை உருவாக்கி இருக்கிறார். இதற்கான பேட்டன்ட் உரிமையையும் பெற்றுள்ள அவர், விரைவில் ஆன்லைன் விற்பனையை தொடங்கப் போவதாக உற்சாகத்துடன் தெரிவித்தார்.
விக்டோரியா பல்கலையில் இந்திய மாணவர்களும் கணிசமாகப் படித்து வருகிறார்கள். ஆண்டுக்கு ஆண்டு இந்த எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. https://www.vu.edu.au என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் மாணவர் சேர்க்கைக்கான அனைத்து விவரங்களையும் தெரிந்து கொள்ளலாம்.

- ஷங்கர் பார்த்தசாரதி
(தினகரன் நாளிதழில் வெளியானது)